* வானமகள்
வெட்கமில்லாமல்
மின்னலாய் பல் இளித்து
போனாள்...
* வானுயர மாளிகையை
கட்டிய தொழிலாளி
ஒதுங்க இடமின்றி
கட்டட செல்வ செழிப்பை
பறை சாற்ற
நட்ட குரோட்டன்ஸ் வகை
மரங்களுக்கு இடையே
மரமாய் ஒட்டி
அண்ணாந்து பார்த்து
தனக்குள் வியந்தான்...
இது நான் கட்டிய
கட்டடமாக்கும்!
* குடை பழுது நீக்குபவன்
பிறர் மழையில் நனையாமல்
இருக்க,
தன் வயிறு நனைய...
மழையில் நனைந்தபடி குடை
பழுது பார்த்துக் கொண்டிருந்தான்...
* இங்கே,
வேதாந்தம் கூட
சுகமாய் உணரப்படும்...
எதைக் கொண்டு வந்தாய்
இழப்பதற்கு?
* இந்த ஒரு வார்த்தைதான்...
தாய் மடியாய்,
கலர் கலர் கனவுடன்
சுகமாய் தூங்க வைக்கிறது!
* விடியலில் வேதாந்தம்
பசியின் முன்
காணாமல் போக,
எதுவுமே பெரிதாய்
தெரியவில்லை...
* உணவையும்...
ஆறுதல் தரும்
பொய் கனவுகளையும் தவிர!
— எஸ்.ஏ.சரவணக்குமார், திருநின்றவூர்.
* * *