பிப்., 17 ரத சப்தமி
பிள்ளைகள் இல்லாவிட்டால், முதியோர் இல்லங்களில் சேர்ந்து கடைசி காலத்தை ஓட்ட வேண்டியது தான். பிள்ளைகள் இருந்தும், முதியோர் இல்லத்தில் காலம் கழிக்கும் பெற்றோர் எத்தனையோ பேர் இருக்கின்றனர். பிதாமகர் பீஷ்மரின் வரலாறு தெரிந்தவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். அவர் உயிர் துறந்த தினம் ரதசப்தமி.
சூரியன், தன் வடதிசை பயணத்தை துவங்கியது தை மாதத்தில். அவருக்குரிய திதி சப்தமி. தை மாதம் வளர்பிறை சப்தமியை ரத சப்தமியாகக் கொண்டாடுவதுண்டு. இவ்வாண்டு, காலச்சூழ்நிலையின் காரணமாக, மாசி மாதத்தில் இந்த நிகழ்வு வருகிறது. ஒரு வருடத்தை உத்தராயணம், தட்சிணாயணம் என்று இரண்டாகப் பிரிப்பர். சூரியனின் வடதிசை பயணக் காலமே, <உத்தராயணம். இதில் தை முதல் ஆனி வரையுள்ள ஆறுமாதம் அடங்கும். இந்த காலத்தில், தொடர்ச்சியாக சுபநிகழ்ச்சிகள் செய்வதுண்டு.
பிதாமகர் பீஷ்மர் மகா தியாகி. சந்தனு மகாராஜாவுக்கும், கங்காதேவிக்கும் பிறந்தவர். இவரது நிஜப்பெயர், காங்கேயன். இவருக்கு இளவரசு பட்டம் சூட்டினார் சந்தனு. ஒருசமயம், மச்சகந்தி என்ற பெண்ணை சந்தித்தார் சந்தனு. அவள் மேல் ஆசை கொண்டு, திருமண விருப்பத்தை அவளது தந்தையிடம் தெரிவித்தார்.
அவரோ, "உன் மூத்தாள் மகனுக்கு பட்டம் சூட்டாமல், என் மகளுக்கு பிறக்கும் குழந்தைக்கு பட்டம் சூட்டுவதானால், திருமணத்துக்கு சம்மதிக்கிறேன்...' என்றார். சந்தனு திரும்பி விட்டார். ஆனால், மச்சகந்தியை மறக்க முடியாமல் மெலிந்து போனார். இந்த விவரம், காங்கேயனுக்கு தெரிந்து விட்டது.
"அப்பா... எனக்கு பட்டம் வேண்டாம். நீங்கள் மச்சகந்தியை மணந்து கொள்ளுங்கள். அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கே பட்டம் சூட்டுங்கள்...' என்று விட்டுக் கொடுத்தார். ஆனாலும், மச்சகந்தியின் தந்தை சம்மதிக்கவில்லை.
"காங்கேயனுக்கு திருமணம் நடந்து, அவனுக்கு பிறக்கும் குழந்தைகள் அரசபதவி கேட்டால் என்ன செய்வது? தாத்தா சொத்தில் பேரன்களுக்கு பங்கு உண்டல்லவா?' என்றார்.
உடனே காங்கேயன், "அப்படியானால், நான் இப்பிறவியில் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்...' என்று உறுதியளித்தார்.
அவரது தியாகம் கண்டு உலகமே அசந்து போனது. "தந்தையின் ஆசையை நிறைவேற்ற, இந்த பிள்ளை இத்தகைய தியாகம் செய்தானே...' என புகழ்ந்தது. வானிலிருந்து "பீஷ்மா... பீஷ்மா...' என குரல் எழுந்தது. "பீஷ்மர்' என்றால், "யாரும் செய்ய முடியாத தியாகத்தைச் செய்தவர்' என்று பொருள்.
இந்த தியாகத்தால் நெகிழ்ந்து போன சந்தனு மன்னன், "மகனே... நீ தீர்க்காயுளுடன் இருப்பாய். நீ விரும்பும் நாளில் தான், இந்த உயிர் உன்னை விட்டு பிரியும்...' என்று வரமளித்தார்.
மச்சகந்திக்கும், சந்தனுவுக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளே திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோர். பாண்டுவின் பிள்ளைகள் பாண்டவர் என்றும், திருதராஷ்டிரன் பிள்ளைகள் கவுரவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், பீஷ்மர் செஞ்சோற்று கடனுக்காக கவுரவர் பக்கம் நின்றார். போரில் காயமடைந்த அவர், தன் உயிரை விட தீர்மானித்தார்.
உத்தராயண காலத்தில் உயிர் விடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பதால், அந்த காலம் வரும் வரை காயத்துடன் போராடினார். ரதசப்தமி நாளில், அவர் உயிர் விட்டார்.
பீஷ்மர், "பிதாமகர்' என்று அழைக்கப்படுகிறார். "பிதாமகர்' என்றால், "தாத்தா!' அவருக்கு குழந்தைகள் இல்லை. குழந்தை இல்லாதவர்கள், தர்ப்பணம் முதலியன இல்லாமல் மேலுலகம் செல்ல இயலாது என்பர். அதன் காரணமாக, அவருக்கு நாம் எல்லாருமே தர்ப்பணம் செய்ய வேண்டும். நமக்கு பெற்றவர்கள் இருந்தாலும் கூட, பீஷ்மருக்காக தர்ப்பணம் செய்வதே முறை. இதனால் தான் ரதசப்தமி நன்னாளை, "பீஷ்ம தர்ப்பண நாள்' என்று அழைப்பர்.
ஒரு தகப்பனின் நியாயமற்ற ஆசையை நிறைவேற்றக் கூட, பீஷ்மர் மிகப்பெரிய தியாகம் செய்தார். ஆனால், இன்றைய உலகத்தில், பெற்றவர்களைக் கவனிக்க மனமில்லாமல், பணமே பிரதானமெனக் கருதி, அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கின்றனர். இனியேனும், பெற்றோர் மீது அன்பு செலுத்துவீர்களா பிள்ளைகளே!
***
தி. செல்லப்பா