இது உங்கள் இடம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 பிப்
2013
00:00

சபாஷ்... நல்ல யோசனை!


என் தோழியின் கணவர், அலுவலகத்திற்கு செல்லும் போதெல்லாம், ஏதேனும் ஒரு காரணத்தை வைத்து வெளியே வருவாள் எதிர் வீட்டு பெண். வந்ததும், நைசாக தோழியின் கணவரை பார்ப்பாள்; அவரும் அந்த பெண்ணை பார்த்து, ஒரு வெட்டு வெட்டி விட்டு செல்லத் தவறுவதே இல்லை.
மனதுக்குள் பொருமிய தோழி, விஷயத்தை என்னிடம் கூறினாள். நான் ஒரு யோசனை கூறினேன். அதன்படி, எதிர் வீட்டு பெண்ணின் கணவர், அலுவலகம் செல்லும் போதெல்லாம், வெளியே வந்து நிற்க ஆரம்பித்தாள் தோழி. ஆண் பிள்ளையாயிற்றே, சும்மா இருப்பாரா... "சைட்' அடிக்க ஆரம்பித்து விட்டார் தோழியை. அவ்வளவுதான்! எதிர் வீட்டு பெண்ணை பார்ப்பதே அபூர்வமாகி விட்டது.
"முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்' என்ற உபாயம் பலித்து விட்டது. இப்போது தோழியின் கணவரும், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார். பெண்களே... "சைட்' அடிக்கும் கணவரை திருத்த, சண்டை போட வேண்டாம்; சமயோஜிதமாக சிந்தித்து, செயல் பட்டாலே போதும்!
— ஆ.சுகாசினி, சென்னை.

விவஸ்தை இல்லாமல் விமர்சிக்கும் ஆசாமிகள்!


எனக்கு தெரிந்த ஒருவர், வாரியம் ஒன்றில் பொறுப்பான உத்தியோகத்தில் இருக்கிறார். அவருக்கு தெரிந்தவர்களை எங்காவது சந்திக்க நேர்ந்தால், நலம் விசாரிக்க மாட்டார். "என்னய்யா... முன்னாடி துருத்திக்கிட்டிருந்த பல்லை, இன்னுமா டாக்டர்கிட்ட காட்டி பிடுங்காம இருக்கிற; ரொம்ப அசிங்கமா இருக்கு...' என்று, அவர் குறையை பலர் முன்னிலையில் விமர்சிப்பார். வந்தவர் முகமோ சுருங்கிப் போகும். இதே போல், வேறு ஒருவரை பார்த்து, "என்னடா... உன் தலை மயிர் இப்படி நரைச்சு போச்சு! ஒரேயடியா சுண்ணாம்புத் தலையனாட்டம் ஆயிட்டியே...' என்பார்.
மற்றொருவரின் வழுக்கை தலையை பார்த்து, "என்னப்பா... இப்படி பூராவுமே கொட்டிப் போச்சு! ஹூம்... எண்ணெய் செலவு மிச்சம்...' என்று சொல்லி சிரிப்பார். வந்தவருக்கோ, "இந்த ஆளை ஏன் சந்தித்தோம்' என்று ஆகிவிடும்.
இவரது முரட்டு சுபாவத்தையும், அநாகரிக பேச்சையும் அறிந்த காரணத்தினால், அவரிடம் நேரிடையாக எதுவும் சொல்ல பயப்படுகின்றனர். இப்படி பலர் முன்னிலையில், கேலியும், கிண்டலுமாக பேசுவதால், அவர்களது மனம் எவ்வளவு வேதனைப்படும் என்பதை, இவரைப் போன்ற மரமண்டைகள் எப்போதுதான் உணர்வரோ!
வீ.கார்த்திக் ராஜா, மதுரை.

டாம்பீக கிறுக்குகள்!


சமீபத்தில், ஒரு மண விழாவுக்குச் சென்றிருந்தேன். அனைவரும், பட்டு வேட்டி - ஜிப்பாவும், பட்டுப் புடவையுமாய் குவிந்திருந்தனர். முகத்தில் அப்பிய, "மேக்-அப்'பும், செயற்கை குசல விசாரிப்புகளுமாய் ஓடிக் கொண்டிருந்தது விழா.
அப்போது, அழுக்கு வேட்டி, சட்டையுடன், கரிய நிறத்தில் ஒருவர் வந்தார்.
உள்ளே நுழைந்ததும், "நெடுநெடு'வென வளர்ந்திருந்த ஒருவரை நெருங்கி, வாய் நிறைய சிரிப்புடன், "என்னப்பா... எப்படி இருக்கே... எப்ப ஊர்லேர்ந்து வந்தே...' என ஆர்வமாய் விசாரித்தார். இவரைப் பார்த்ததும், "நெடுநெடு'வின் முகமே மாறிப் போனது. அவரை ஏற, இறங்கப் பார்த்து, "ம்... ம்... நேத்து தான் வந்தேன்...' எனக் கூறி, மொபைல் போனில் பேசுவது போல் பாவனை காட்டி, நகர்ந்தது.
இவர் அதைக் கண்டு கொள்ளாமல், அடுத்தவரை நெருங்கினார்... "எனக்கு பக்கோடா உண்டாபா?' என, உரிமையுடன் அவரிடம் கேட்க, அவர், "அங்கே இருக்கு... கேட்டு வாங்கிக்கோ...' என ஒருமையில் பேசி, அனுப்பி வைத்தார்.
இவர் முகம், லேசாய் வாடியது. பொருட்படுத்தாமல், தட்டில் பக்கோடா வாங்கிக் கொண்டு, ஓரமாய் ஒதுங்கினார்.
ஒரு நிமிடம் கூட ஆகவில்லை... ஒரு வயதான டாம்பீகம், இவர் அருகே வந்து, "ஏம்பா... நீ போய்ட்டு அப்புறமா வாயேன்...' என்றது. இதைக் கேட்டதும், அவர் வாயில் இருந்த பக்கோடா, தொண்டையில் இறங்க மறுத்தது. "கூப்பிட்டாங்க... வந்தேன்...' எனக் கூறியபடியே, தட்டை கீழே வைத்து விட்டு, நடையைக் கட்டினார்!
இவர் யார் என்று விசாரித்த போது, இப்போது டாம்பீகமாய் நிற்கிறாரே, அவர், குடும்பத்தில் சொத்து பிரச்னை ஏற்பட்ட போது, பலரிடமும் பேசி, அனைவரும் ஏற்றுக் கொள்வது போன்ற ஒரு நல்ல தீர்வைச் சொன்ன, படிக்காத மேதை என்றனர்.
இந்த மேதை, இப்போது, அழுக்குச் சட்டையாம், ஆகாத ஜாதியாம் என்று கூறி, ஒதுக்க நினைத்ததை எண்ணி, மனம் வலிக்க, நானும் நடையைக் கட்டினேன்!
பா.மீனா, மாயவரம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BLACK CAT - Marthandam.,இந்தியா
18-பிப்-201310:45:39 IST Report Abuse
BLACK CAT ஆ.சுகாசினி, சென்னை ... நீங்கள் ஒரு கில்லாடி...
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
18-பிப்-201305:58:29 IST Report Abuse
GOWSALYA நண்பர் சுலோச்சனா உங்க முல்லா கதை மிக நன்று.அடுத்து சுகாசினி உங்க மருந்து சரிவராது.....எனக்குப் போட்டியா நீயுமா எனக் கணவன் மேலும் தப்பு செய்ய வாய்ப்புண்டு....2/ சிலருக்குத் தம்மேல இருக்கும் குற்றம்குறை தெரியாது,அடுத்தவாளைப் பற்றிக் குறை சொல்வதில் ஒரு இன்பம்.....இப்போ அனுபவிக்கட்டும்."" வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு """...
Rate this:
Share this comment
Cancel
GUNA - chennai,இந்தியா
18-பிப்-201300:41:32 IST Report Abuse
GUNA சுஹாசினி அவர்களின் யோசனை சரியல்ல. சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ளுவது போன்றது இது. சுஹாசினியின் தோழியிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன் .நீங்கள் வாசலில் நிற்பதையும், எதிர் வீட்டுக்காரர் பார்ப்பதையும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கவனித்திருந்திருந்தால், வெளியே சொல்லாவிட்டாலும் , மனதிற்குள் உங்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைத்திருப்பார்கள் ? அதோடு நில்லாமல்,எதிர் வீட்டுக்காரர் மனதில் "வலை விரிக்கிறாள் " என்று உங்களைப் பற்றிப் பதிந்த எண்ணம் , உங்கள் நோக்கம் நிறைவேறி விட்டதென்று நீங்கள் வெளியில் போய் நிற்பதை நிறுத்திக் கொண்டவுடன் மறைந்து விடுமா?அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பார்க்கக் கூடிய வாய்ப்பில்லை என்று வைத்துக் கொண்டால் இன்னொரு கோணத்தில் இதைப் பார்ப்போம் . பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் நீங்கள், உங்கள் கணவர்,எதிர் வீட்டுப் பெண் ஆகிய மூன்று நபர்கள் . உங்கள் பிரச்சினை தீருவதற்காக உங்கள் பிரச்சினைக்குக் காரணமில்லாத ஒருவரைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவது மிக மிக மட்டமான செயல் .என்ன காரணம் சொல்லியும் நியாயப்படுத்த முடியாத மிகக் கேவலமான செயல் . எந்தவொரு செயலுக்கும் நோக்கம் நியாயமாக இருப்பது மட்டும் போதாது, நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளக் கடைபிடிக்கும் முறையும் நியாயமாக இருக்க வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் வாக்கு.
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
18-பிப்-201300:36:38 IST Report Abuse
Rajesh இந்த கலி காலத்தில் யதார்த்தம், உண்மையான அன்பு மற்றும் பாசம், தூய பக்தி, அறம், நெறி எல்லாம் மிகவும் கம்மி. எனக்கு தெரிந்து என் அனுபவத்தில், வெறும் பணத்திற்கும், படோபமான செயல்களுக்குதான் இப்பொழுதெல்லாம் மதிப்பு மற்றும் மரியாதை. காலம் கலி காலம் வேறென்ன சொல்ல. தயவு செய்து மனிதனை மனிதனாக மதிக்க கற்றுகொள்வோம் மற்றும் நம் சந்ததிகளுக்கு கற்றுகொடுப்போம்.
Rate this:
Share this comment
Cancel
Balagiri - Chennai,இந்தியா
17-பிப்-201323:32:43 IST Report Abuse
Balagiri சுகாசினி நீங்கள் சொல்லும் கருத்தை பார்த்தால் குஷ்பு கற்பு பற்றி அளித்த பேட்டி உண்மைதான் என்று தோன்றுகிறது? முதலில் மணமான பெண் அடுத்தவள் கணவரை சைட் அடித்தாள் எனபது, அதற்கு பழியாக மற்றவள் செய்தது, ஒரு வேளை இந்த ஏட்டிக்கு போட்டி தொடர்ந்திருந்தால் இருவரும் படுக்கையை பகிர்ந்து கொள்வது வரை சென்றிருப்பார்களா?
Rate this:
Share this comment
Cancel
GUNA - chennai,இந்தியா
17-பிப்-201320:54:36 IST Report Abuse
GUNA சுஹாசினி அவர்களின் யோசனை சரியல்ல. சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ளுவது போன்றது இது. உங்கள் தோழி வாசலில் நிற்பதையும், எதிர் வீட்டுக்காரர் பார்ப்பதையும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கவனித்திருந்திருந்தால், வெளியே சொல்லாவிட்டாலும் , மனதிற்குள் உங்கள் தோழியைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைத்திருப்பார்கள் ? அதோடு நில்லாமல்,எதிர் வீட்டுக்காரர் மனதில் "வலை விரிக்கிறாள் " என்று உங்களைப் பற்றிப் பதிந்த எண்ணம் , நீங்கள் வெளியில் போய் நிற்பதை நிறுத்தியவுடன் மறைந்து விடுமா?அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பார்க்கக் கூடிய வாய்ப்பில்லை என்று வைத்துக் கொண்டால் இன்னொரு கோணத்தில் இதைப் பார்ப்போம் . பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் நீங்கள், உங்கள் கணவர்,எதிர் வீட்டுப் பெண் ஆகிய மூன்று நபர்கள் . உங்கள் பிரச்சினை தீருவதற்காக உங்கள் பிரச்சினைக்குக் காரணமில்லாத ஒருவரைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவது மிக மிக மட்டமான செயல் .என்ன காரணம் சொல்லியும் நியாயப்படுத்த முடியாத மிகக் கேவலமான செயல்.
Rate this:
Share this comment
Cancel
Gobinathan Baladhandapani - Madurai,இந்தியா
17-பிப்-201312:41:59 IST Report Abuse
Gobinathan Baladhandapani முதல் கதை ஒரு வேஸ்ட் யோசனை.. திருந்துவதற்கு இது சரியான யோசனை இல்லை.. பக்கத்துக்கு வீடு பெண்ணின் கணவரை தூண்டி விடுவது போல் உள்ளது.. அலுவலகத்தில் இதே வேலையை அவர் செய்தால் இந்த பெண்ணால் என்ன செய்ய முடியும்.. அன்புடன் சொல்லி , குடும்பம் மீது பற்று வர வைக்க வேண்டும்.. பெரும்பாலான ஆண்கள் குழந்தைக்கு பிறகு இது போன்ற விசயங்களில் ஈடுபடுவது இல்லை.. எனவே குழந்தையை வைத்து அவரை திருத்த பார்க்கலாம் .. இரண்டாம் கதை அருமை.. அதே போல் முடி நரைத்து இருக்கும் ஒருவரின் தலையை பார்த்து கொண்டே பேசுவது அந்த நபருக்கு எவ்வளவு சங்கடம் தெரியுமா .. மூன்றாம் கதை கேட்க கஷ்டமா இருந்தாலும் அதுதான் யதார்த்தம்.. கலியுகம்..
Rate this:
Share this comment
Cancel
sulochana kannan - sydney,ஆஸ்திரேலியா
17-பிப்-201306:01:16 IST Report Abuse
sulochana kannan முதல் கதையில் இந்த உத்தி எல்லா இடத்திலும் பலிக்காது. நான் என்னவேணும்னாலும் செய்வேன் நீ செய்யகூடாது என்கிற ஆணுக்கு எப்படி புரிய வைப்பது. ஒழுக்கம் தானாகவே வர வேண்டும். 2) மூன்றாவதில் , முல்லா கதை தான் ஞாபகம் வருகிறது. ஒரு விருந்துக்கு சென்ற முல்லா, அங்கு உடைக்கும், பணத்திற்கும் தரப்படுகிற மரியாதையையும் பார்த்து போய் ஒரு கோட் போட்டுக்கொண்டு வந்தார். உணவுகளை ஒவ்வொன்றாக எடுத்து கோட் பாக்கெட்டில் போட்டபடியே கோட்டே இந்த சாப்பிடு என்று சொல்லிக்கொண்டே போட்டுக்கொண்டு இருந்தார். ஏன் என்று ஒருவர் கேட்க இங்கே மனிதருக்கு இல்லை விருந்து, உடைகளுக்கு த்தானே என்றார். இதுவும் அதேதான். . மனிதம் பணத்தால் சாகடிக்கப்பட்டு விட்டது.
Rate this:
Share this comment
Cancel
காயத்ரி - Chennai,இந்தியா
17-பிப்-201305:06:18 IST Report Abuse
காயத்ரி அணிந்திருக்கும் உடைகள், நகைகளை வைத்து அடுத்தவரை எடை போடுபவர் எப்போது தான் திருந்தப்போகிறார்களோ தெரியவில்லை. நல்ல உள்ளத்தில் தான் எல்லாமே இருக்கிறது..அதே நேரம் இது போன்ற விழாக்களுக்குச் செல்லும் போது ஓரளவு நல்ல ஆடைகளை அணிவது சில தர்மசங்கடங்களில் இருந்து தப்பிக்க இயலும்.
Rate this:
Share this comment
Cancel
.Dr.A.Joseph - London,இந்தியா
17-பிப்-201303:54:53 IST Report Abuse
.Dr.A.Joseph சுகாசினி,சென்னை அவர்களின் யோசனை அபோதைக்கு சரியாகத் தோன்றினாலும் மிகுந்த ஆபத்து மிகுந்தது.கையாள எண்ணுவோர் மிகுந்த கவனமுடன் கையாளவேண்டும்.கார்த்திக் ராஜா,மதுரை அவர்களுக்கு, கவலையே படாதீர்கள் பணி ஓய்வுக்குப்பின் மிகத்தெளிவு பெறுவார்.மீனா,மாயவரம் அவர்களுக்கு,அந்த மனிதரை அவமதித்தவர்கள் தான் "அழுக்கு". இந்த அழுக்கு பணம் படைத்த பலரிடம் உள்ளது.துவைத்தாலும் போகாது.இவர்கள் கால ஓட்டத்தில் காணாமல் போய்விடுவார்கள்.அன்று நான்கு பேர் மத்தியில் அவமானபடுத்த பட்டவர் உங்களால் உலகம் முழுவதும் உள்ள இணைய தள வாசகர்களால் உயர்த்தப்பட போகிறார்.அழுக்குமனிதர்கள் சேற்றில் கால் வைப்பதால் தான் வெள்ளை என எண்ணுகிற மனிதர்கள் சோற்றில் கைவைக்க முடியும்.ஒருவரை அழுக்கு,கருப்பு என ஏளனம் செய்பவர்களுக்கு ஒன்று "நாம் அனைவருமே அழுக்கின் தேக்கங்கள் தான்" ஒருவரை பிடிக்க வில்லை எனில் அழைப்பிதழ் கொடுக்காமல் இருப்பது நல்லது.அழைத்து அவமான படுத்த என்ன அதிகாரம் உள்ளது? நிறைந்த அன்புடன்........................................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.