ஸ்ரீ பார்த்தசாரதி சபா இசை விழா முடிந்து, நடன விழா, ஆர்.கே.சுவாமி அரங்கில் நடன நிகழ்ச்சிகளை தொகுத்து கொடுத்து வருகிறது. அதில் பல இளம் கலைஞர்களுக்கு ஒரு மணி நேரம் நடனம் ஆட வாய்ப்பு தரப்பட்டுஇருக்கிறது. அந்த வகையில் குரு லாவண்யா சங்கர் தனது அப்யாசா நடனப் பள்ளியின் மூலம் கொடுத்த அற்புதமான படைப்பு மார்கம். லாவண்யா சங்கர் துடிப்பான இளம் நடனக் கலைஞர் யுவகலாபாரதி, நடனமாமணி போன்ற விருதுகளையும் தொலைக்காட்சியில், "ஏ' கிரேடு நடனக் கலைஞராகவும் திகழ்கிறார்.
தனது அப்யாசா நடனப் பள்ளியின் மூலம், கடந்த, 9 ஆண்டுகளில் நல்ல முறையில் பல மாணாக்கியரை உருவாக்கி உள்ளார். மேலும், இவர் கோயமுத்தூரில் இருந்து செயல்படுவதால் பல மாவட்டங்களிலிருந்து இவருக்கு சீடர்கள் அதிக அளவில் உள்ளனர். கே.ஜே.சரசாவின் மூத்த மாணாக்கியரில் இவரும் ஒருவர்.
அன்றைய தனது நடனப் பள்ளி நிகழ்ச்சிக்கு ரசிகர்களுக்கு முதலாவதாக கவுளை ராகத்தில் நிருத்யாஞ்சலியை அருமையான துவக்கத்தை மிக விறுவிறுப்பாக கொடுத்தனர். தொடர்ந்து அன்னமாச்சாரியாரின் மிகப் பிரபலமான ஸ்ரீமந் நாராயணா கீர்த்தனைக்கு மிக அற்புதமாக ஆடி, ரசிகர்களின் நெஞ்சில் வைகுந்தத்தை நிறுத்திவிட்டனர்.
அடுத்து பிரதான உருப்படியாக வர்ணம் பாலமுரளிகிருஷ்ணா இயற்றியது. "அம்மா ஆனந்த தாயினி 'என்று தேவியை முப்பரிமாணங்களில் படைத்தல், காத்தல், அழித்தல் என்று கொடுத்து நம்மை மெய்சிலிர்க்க வைத்து விட்டார். அபயம் என்று அவளை சரணம் புகுந்தால் நம்மை இரு கையால் தாங்கு பவள் என்று ஒவ்வொரு கோணங்களின் முடிவிலும் சொன்ன கருத்து அருமை. அனைத்து ஜதிகளும் மிக அருமையாக கொடுத்து கைத்தடலை பெற்றனர். இதைத் தொடர்ந்து, என்றும் எப்போதும் கேட்டாலும், பார்த்தாலும் ரசிக்கும் ராமாயணம். சுவாதித் திருநாளின், "பாவயாமி ரகுராமம்' ராக மாலிகை பாடல் துவங்கியதுமே, பலர் வாய் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டது.
ராமனின் பிறப்பில் துவங்கி, கடைசியாக அயோத்தி பட்டாபிஷேக கோலத்தில் ராமாயணக் காட்சிகளை மிக விறுவிறுப்பாக தொய்வில்லாமல் மின்னல் வேகத்தில் கொடுத்து அசத்தி விட்டனர். இப்படி பாரம்பரியமிக்க பாடல்கள் என்றென்றும் சிரஞ்சீவியாக இருக்கும் வரை நம் கலைஞர்களுக்கு குறைவு என்றும் வராது என்ற நம்பிக்கையை ஊட்டினர். குரலிசையாளம் கவுசிக் சம்பகேச்வரன் அற்புதமான குரல் வளம். நட்டுவாங்கம் நடன அமைப்பு லாவண்யா சங்கர் மிருதங்கத்தில் விஸ்வநாதன் வயலினில் சதீஷ்குமார் குழலில் நடராஜ் ஆகியோர் நடனத்திற்கு பக்கபலமாக அமைந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.
- ரசிகப்ரியா.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.