அண்மையில், சிட்னியில் நைடா கலை அரங்கில் செல்வி நிவேதா சரவணனின் அரங்கேற்றம் நடந்தது. விழாவுக்கு, சிறப்பு விருந்தின ராக பிரபல நாட்டிய குரு, பத்மஸ்ரீ அடையார் லட்சுமண் கலந்து கொண்டார். தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியையும், கவின் கலை ஆய்வு வல்லுனருமான, ஞானா குலேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.
புஷ்பாஞ்சலியுடன், நிகழ்ச்சி இனிதே துவங்கியது. "ஐந்து கரத்தனை' தேவாரத்தை, நாட்டை ராகத்தில், ரூபக தாளத்தில் துவங்கி, விநாயகருக்கு வணக்கம் செலுத்தி, தொடர்ந்து அதே தாளத்தில் அமைந்த கண்ட அலாரிப்பு, கண்டசாபு தாளத்தில், பாத வேலைப்பாடுகளையும், அங்க அபிநயங்களையும் மிக அழகுற வெளிப்படுத்தியது.
அடுத்து வந்த ஜதீஸ்வரம் சரஸ்வதி ராகத்தில், ரூபக தாளத்தில் சுத்த நிருத்தமும், ஜதியும் சேர்ந்து, நல்ல இசைக் கூட்டலுடன், ஜதிக் கோர்வைகள் சிறப்பாக அமைந்து வெளிப்பட்டது, குருவுக்கும், நர்த்தகிக்கும் சிறப்பு சேர்ப்பதாக அமைந்தது. காளி கவுத்துவம் கவுளை ராகத்தில், ஆதி தாளத்தில் அமைந்து நர்த்தகி முகத்தில், நவரசத்தையும் வெளிப்படுத்தியது. நாட்டக்குறிஞ்சி ராகத்தில் வந்த, தில்லை கூத்தன் குறித்த பாபநாசம் சிவனின், 9 ஜதி கூடிய பத வர்ணம் சுத்த நிருத்தம், நிருத்தியம், அபிநயம் ஆகியவை, செவ்வனே அமையப் பெற்று, நிகழ்ச்சியின் உச்சமாக அமைந்தது.
நிவேதா மிகச் சிறப்பாக ஆடியதற்கு, உறுதுணையாக இருந்தது. பாடலைப் பாடிய வெண்கலக்குரலோன் அகிலன் சிவானந்தன் என்றால், மிகையாகாது. தொடர்ந்து, ராக மாலிகாவில் அமைந்த நாச்சியார் திருமொழி, "வாரணம் ஆயிரம்' பாடலில், ஆண்டாள் கண் முன் தோன்றினாள். நிகழ்ச்சியை நிறைவு செய்ய வந்த காளிங்க நர்த்தன, நாட்டை ராக தில்லானா வேகத்துடன், விறுவிறுப்பும் நிறைந்து மகிழ்வித்தது.
நிகழ்ச்சிக்கு இசை கூட்டியவர்கள், அடையார் கோபிநாத் (மிருதங்கம்), ரமணி தியாகராஜன் (புல்லாங்குழல்), கிராந்தி கிரண் முடிகொண்டா (வயலின்) ஆகியோர், குறிப்பாக அகிலன் சிவானந்தனுக்கு தனிக் கச்சேரி செய்யும் அளவுக்கு, திறமை இருப்பது கண்கூடு. குரு சுகந்தி தயாசீலன் மிக சிறப்பாகவும், நேர்த்தியாகவும் நடனம் அமைத்திருந்தார்.
- ஆருத்ரா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.