அளப்ப வாயன்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 பிப்
2013
00:00

செந்தூர் என்ற ஊருக்கு இளைஞன் ஒருவன் வந்தான். அவன் பல வண்ண தலைப்பாகை அணிந்து, பெருமிதமாக நடந்து வந்தான். அங்கே ஓரிடத்தில் நிறைய பேர் கூடி இருந்தனர். அவர்கள் அவனை வியப்புடன் பார்த்தனர். அவர்களிடம் சென்ற அவன், ""நான் இந்த உலகத்தையே சுற்றி வருகிறேன். நான் பார்க்காத நாடுகளோ, இடங்களோ இல்லை. அப்படியே இந்த ஊருக்கும் வந்தேன்,'' என்று அளந்தான்.
அவன் பேச்சை நம்பிய அவர்கள் அவனைப் பெருமை யாகப் பார்த்தனர். அவர்களில் ஒருவன், ""நீங்கள் சீன நாடு சென்று இருக்கிறீர்களா? அங்கே உள்ள அரண்மனைக்குச் சென்றீர்களா? அந்த அரண்மனைப் பூந்தோட்டத்தைப் பற்றி எல்லாரும் புகழ்ந்து பேசுகிறார் களே நீங்கள் அந்தப் பூந்தோட்டத்தைப் பார்த்து இருக்கிறீர்களா?'' என்று கேட்டான்.
""நான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். சீன அரண்மனையில் அரசரின் விருந்தினனாக ஒரு மாதம் தங்கி இருந்தேன். நாள்தோறும் அரசருடன்தான் விருந்து உண்டேன். அப்படி ஒரு அழகான அரண்மனையை யாரும் பார்த்திருக்க முடியாது. இந்திரனுடைய அரண்மனை அதன் அழகுக்கு ஈடாகாது. எங்கும் முத்துக்களும், மாணிக்கங்களும் பதிக்கப்பட்டு இருந்தன. கண்ணைக் கவரும் அழகான ஓவியங்கள் ஆங்காங்கே இருந்தன.
நாள்தோறும் அரண்மனைப் பூந்தோட்டத் தில் பொழுதைப் போக்கினேன். அங்கே சென்றால் எனக்கு நேரம் போவதே தெரியாது. எல்லா வகையான அழகிய பூக்களும் அங்கே இருந்தன. அங்கே பூத்திருந்த ஒரு ரோசாப் பூ யானையின் தலையை விட பெரிதாக இருந்தது. சிவப்பு வண்ணத்தில் அழகாகப் பூத்திருந்தது. ஒருமாதம் ஆனாலும் அது வாடாமல் அப்படியே இருந்தது.
பாம்பு படம் எடுப்பதைப் போலவே, ஒரு பூ இருந்தது. இன்னொரு பூ மயிலின் தோகையைப் போலப் பல வண்ணங்களில் இருந்தது. இப்படி விந்தையான பல பூக்களை அங்கே பார்த்தேன். அவற்றை வர்ணிக்கத் தொடங்கினால், ஒரு மாதத்திற்கு மேலாகும்.
நான் அங்கிருந்து புறப்பட்டேன். அரசர் யானைத் தலை ரோசாப் பூவை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார். அந்தப் பூவை என்னால் தூக்கிச் செல்ல முடியவில்லை. மிகுந்த எடையுடன் இருந்தது அது.
"என்ன செய்வது?' என்று சிந்தித்தபடி நடந்தேன்.
என் எதிரில் குதிரையில் ஒருவன் வந்தான். நான் வைத்திருந்த பூவை அவன் வியப்புடன் பார்த்தான். அந்தப் பூவை அவனுக்கு அன்பளிப்பாகத் தந்தேன். மகிழ்ச்சி தாங்க முடியாத அவன் எனக்குப் பலமுறை நன்றி சொன்னான்,'' என்று அளந்தான்.
வாயில் ஈ நுழைவது தெரியாமல், அவன் பேசுவதை, அவர்கள் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
""வேறு எங்காவது நடந்த சுவையான அனுபவங்களைச் சொல்லுங்கள். கேட்க ஆவலாக உள்ளோம்,'' என்றான் அவர்களில் ஒருவன்.
""உலகத்தைச் சுற்றி வரும் போது எனக்கு நிறைய அனுபவங்கள் ஏற்பட்டன. அவற்றைச் சொல்லி முடிக்கப் பல நாட்கள் ஆகும். நீங்கள் கேட்கிறீர்களே என்பதற்காக சிலவற்றைச் சொல்கிறேன்.
""நான் அரேபிய பாலைவனம் சென்றேன். அங்கே கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை மணற்பரப்புதான் தெரிந்தது. எல்லையே இல்லாத கடல் போல அது காட்சி அளித்தது. அந்தப் பாலைவனத்தைக் கடக்க நினைத்தேன்.
நான் தனியே செல்வதைப் பார்த்த சிலர் என்னைத் தடுத்தனர்.
""வழி தெரிந்தவர்களே இந்தப் பாலைவனத்தில் கூட்டமாகத்தான் செல்வர். அப்படியே சென்றாலும் அவர்கள் பாதுகாப்பாகச் சேர்வார்களோ என்பது தெரியாது. பாலைவனத்தில் திசை அறிந்து செல்வது கடினம். நாளை நாங்கள் இங்கிருந்து புறப்பட உள்ளோம். எங்களுடன் வாருங்கள். ஒன்றாகச் செல்லலாம். தனியே செல்ல வேண்டாம். வீணாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளாதீர்!'' என்று அறிவுரை கூறினர்.
நான் அவர்கள் பேச்சைக் கேட்கவில்லை.
""என்னிடமே நான்கைந்து நாட்களுக்கு உணவும், தண்ணீரும் உள்ளது. எந்த ஆபத்து வந்தாலும் சமாளித்துக் கொள்வேன்!'' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.
பாலைவனத்தில் ஏது பாதை? கிழக்குத் திசையில் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு சென்றேன்.
பகல் நேரத்தில் வெயில் நெருப்பைப் போலச் சுட்டெரித்தது. இரவு நேரத்தில் கடுமையான குளிர் வாட்டியது.
இரண்டு நாட்கள் தொடர்ந்து பயணம் செய்தேன். நானும், ஒட்டகமும் மிகவும் களைப்படைந்து விட்டோம். இருந்தும் நான் பயணத்தை நிறுத்தவில்லை.
எங்கள் துன்பத்தை அதிகப்படுத்துவது போலச் சூறாவளிக் காற்று வீசியது. அந்தச் சூறாவளிக் காற்றில் பாலைவன மணல் அப்படியே மேலே எழுந்தது. வானத்தையே மூடியபடி சுழன்று, சுழன்று அடித்தது. வழியே தெரியவில்லை. எங்கும் மணல்தான் தெரிந்தது.
சூறாவளிக் காற்றில் சிக்கிய என் ஒட்டகம் அப்படியே மணலில் படுத்துக் கொண்டது. நான் அதன் வயிற்றின் கீழே முகத்தைப் போர்வையால் மூடியபடி கிடந்தேன்.
எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தேன் என்பது எனக்கே தெரியாது. காற்றின் வேகம் மெல்ல மெல்லக் குறைந்தது. சூறாவளி நின்று விட்டது என்பதை அறிந்தேன். எங்கள் மேல் நான்கடி உயரத்திற்கு மணல் மூடி இருந்தது.
ஒட்டகம் தன் உடலை மெல்ல அசைத்தது. அதன் மேல் இருந்த மணல் சிறிது சிறிதாகச் சரிந்தது.
கால்களை ஊன்றி எழுந்தது. மணல் பரப்பிற்கு மேலே வந்தது.
நான் உயிர் பிழைத்ததை என்னால் நம்பவே முடிய வில்லை. என்ன செய்வது என்று அறியாமல் திகைத் தேன். நடப்பது நடக்கட்டும் என்ற துணிவில் ஒட்டகத்தில் ஏறி அமர்ந்தேன்.
மனம் போன போக்கில் ஒட்டகத்தைச் செலுத்தினேன்.
நான் கொண்டு வந்த உணவும், தண்ணீரும் தீர்ந்து விட்டது. பசியாலும், தாகத்தாலும் துடித்தேன்.
வெயில் கொடுமை தாங்காமல் ஒட்டகம் வழியிலேயே இறந்து விழுந்தது.
அந்தக் கொடிய பாலைவனத்தில் நடக்கத் தொடங்கினேன். வெயில் தாங்க முடியாமல் என் உதடுகள் வெடித்து விட்டன. தள்ளாடிய படியே நடந்தேன். துடிதுடித்து சாகப் போகிறோம் என்பது எனக்குப் புரிந்தது.
தொலைவில் இருந்த பாலைவனச் சோலை ஒன்று எனக்குத் தெரிந்தது. அங்கே செல்ல முடியும் என்று நம்பிக்கையே இல்லை. பாலைவனத்திலேயே மயங்கி விழுந்தேன். எனக்கு நினைவு வந்து கண் விழித்துப் பார்த்தேன். என்னைச் சூழ்ந்து நான்கைந்து பேர் இருந்தனர்.
-1 தொடரும்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.