அன்புள்ள அக்காவிற்கு—
நான் 27 வயது பெண். காதல் திருமணம் செய்து கொண்டேன். கல்லூரி காதல். டிகிரியும், டிப்ளமாவும் முடித்துள்ளேன்; என் கணவர் அரசு அலுவலர். அப்பா இல்லை. அம்மா, தம்பி, தங்கை உண்டு. அம்மா சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
சொந்தபந்தம் இல்லாமல், அடிதடிகளுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், என்னுடைய கணவர் பணப் பேய், ஊர் சுற்றுபவர், குடிகாரன், சிகரட் பிடிப்பவன், ஊதாரி என்பது, கல்யாணம் முடிந்த மூன்றாவது நாள் தான் தெரிய வந்தது.
அப்போதே என் அம்மா வீட்டிற்கு சென்று இருக்கலாம்; என் வீட்டு சூழ்நிலையின் காரணமாக போகவில்லை. ஊரில் அவதூறு பேசுவர். "ஆம்பளை இல்லாத குடும்பம். தம்பிகள் சிறுவர்கள், இவ இஷ்டத்துக்கு கல்யாணம் செய்து மூணாவது நாள் வீட்டிற்கு வந்துவிட்டாள்!' என்று சொல்வர் என நினைத்து போகவில்லை.
இரண்டு வருடம் கழித்துதான், பொம்பளை பொறுக்கி அவன் என்பது தெரிய வந்தது. பின் அவரிடம் கேட்டதற்கு, அம்மா மீதும், சாமி மீதும் சத்தியம் செய்தார். சத்தியம் சர்க்கரை பொங்கலாக மாறி விட்டது. அப்போதிலிருந்து என் கணவர் மீது சந்தேகம் வந்துவிட்டது எனக்கு.
கல்யாணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. ஆஸ்பத்திரியில் சென்று பார்த்ததற்கு, என் கணவர் மீது குறை இருப்பதாக வும், மருந்து உண்டால் சரியாகி விடும் என்று கூறினர்.
ஆனால், இதை பொருட்படுத்தவில்லை அவர்; அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்ல முடியவில்லை. இதையே காரணம் காட்டி, "உன்னை விவாகரத்து பண்ணுவேன்...' என்று மிரட்டுகிறார். நான் எப்படியாவது அவரை திருத்தி வாழ நினைக்கிறேன். அவரோ, என்னை கழற்றி விட வேண்டும் என்று நினைக்கிறார்.
என்னால் வீட்டிற்கு செல்ல முடியாது. கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யும் பாதுகாப்பான இடம் உண்டா? என்னால், இவருடன் வாழ முடியும் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
ஆகவே, எனக்கு என்று ஒரு பாதுகாப்பான இடம் வேண்டும். என் கணவனுடன் சேர்ந்து வாழ எனக்கு பிடிக்கவில்லை. என் அம்மாவிடம் சென்றால், என் வீட்டில் உள்ள அனைவரின் வாழ்க்கையும் என்னால் பாழாகி விடும்.
என்னுடைய வீட்டில் நான் மூத்த பெண். அப்பா இல்லாத வீட்டில், நான் வாழாவெட்டியாக இருக்க விரும்பவில்லை. கணவனிடம் சேர்ந்து வாழ முடியுமா? முடியும் என்றால் நான் எப்படி வாழலாம். எப்படி நடந்து கொள்ள வேண்டும் அல்லது பாதுகாப்பான இடம் எங்குள்ளது? விலாசம் தெரியப்படுத்தவும்.
தினமும் அடி வாங்கி தான் வாழ்க்கை நடத்துகிறேன். ஒவ்வொரு நாளும் சோகத்திலும், துக்கத்திலும் கழிகிறது.
—உங்கள் அறிவுரைக்காக ஏங்கிக் கொண்டு இருக்கும் அன்புத் தங்கை.
அன்புள்ள தங்கைக்கு—
உன் கடிதம் கண்டேன். ஏம்மா... காதல் கல்யாணம் என்று எழுதியிருக்கிறாய். ஆனால், "கணவர் பணப் பேய், ஊர் சுற்றுபவர், குடிகாரர், சிகரட் பிடிப்பவர், ஊதாரி என்பதெல்லாம் தெரியாது... திருமணம் முடிந்த மூன்றாம் நாள்தான் தெரிந்தது!' என்கிறாயே... இந்த இடம் கொஞ்சம் நெருடலாக இல்லை?
பணத்தாசையை மறைத்து, நல்லவர் போல வேடம் போடலாம். ஊர் சுற்றி என்பதும், குடிகாரர் என்பதும், ஊதாரி என்பதும் காதலிக்கும்போது தெரியவில்லையா? அதை விடு... பஸ்சில் யாராவது சிகரட் பேர்வழி - அந்த நேரத்தில் புகைக்காவிட்டாலும் கூட, நம்மைக் கடந்து போகும்போதே நாற்றம் குடலைப் பிடுங்குமே... அந்த நெடி கூடவா காதலிக்கும்போது தெரியவில்லை!
காதலுக்கு கண்தான் இல்லை என்று சொல்லியிருக்கின்றனர். ஆனால், உன் விஷயத்தில் மூக்கும் இல்லை, மூளையும் இல்லை என்பது மிகத் தெளிவாகவே தெரிகிறது.
ஆரம்ப காலத்திலிருந்தே, நீ உன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிற சுயநலவாதியாக இருந்திருக்கிறாய்... உண்மையா, இல்லையா? உனக்கு என்று ஒரு காதலன் கிடைத்த பின், விதவைத்தாய், தம்பி, தங்கை - இவர்கள் யாருடைய நலத்தையும் நினைத்துப் பார்க்காது, காதலித்தவரையே கைப்பிடித்தாய்.
இப்போதோ, "நான் தனியாகத் தங்குவதற்குப் பாதுகாப்பான இடம் வேண்டும்...' என்று எழுதியிருக்கிறாய். பிறந்த வீட்டுக்குப் போனால், "வாழாவெட்டி' என்று மற்றவர்கள் ஏசுவர், பேசுவர் என்கிறாய்.
படித்து பட்டம் வாங்கியிருக்கிறாய் அல்லவா? அந்த பட்டத்தை என்ன செய்தாய்? சட்டம் போட்டு அலங்காரமாய் மாட்டி வைத்திருக்கிறாயா?
இருபத்தியேழு வயசுப் பெண், அதுவும் படித்த, உடம்பில் தெம்பும், ஆரோக்கியமும் உள்ள பெண் - "கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பான இடம் உண்டா?' என்று கேட்டு எழுதியிருக்கிறாயே... உனக்கு எப்படியோ... எனக்கு வெட்கமாக, வேதனையாக இருக்கிறது.
வெளியுலகத்தில் தனி மனுஷிக்குக் கிடைக்கும் அவமானங்களை விட, தற்போதைய பாதுகாப்புக்கு உன் பிறந்த வீடே நல்லது. அதற்கென்று அழுது, மூக்கைச் சிந்தியபடி, பிறந்த வீட்டில் ஸ்திரமாக உட்கார்ந்து விடாதே! யோசி... உனக்கென்று சிந்திக்கவும், செயலாற்றவும், கடவுள் மூளையையும், இளமையையும் கொடுத்திருக்கிறார்.
"கணவனால் கைவிடப்பட்ட...' இந்த நினைப்பைத் தூக்கி உடைப்பில் போடு... நீதான், கணவனைக் கைவிட்டு விட்டு வெளியே வரப்போகிறாய், அவனல்ல. உன்னை விவாகரத்து செய்ய வேண்டியதில்லை அவன்; அதை நீ செய்! கிடைத்த வேலையில் ஒட்டிக் கொள். உனக்கென்று - உன்னுள் சில திறமைகள் இருக்கலாம், இருக்கும்; அதைத் தேடிப் பார்த்து, வளர்த்துக் கொள்ள முயற்சி செய். வேலை என்பது, மற்றவரிடம் கைநீட்டிச் சம்பளம் வாங்குகிற சமாச்சாரமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை; வேலையை நீயே உண்டு பண்ணிக் கொள்!
"கணவனுடன் சேர்ந்து வாழ முடியுமா?' என்று கேட்டிருக்கிறாய். அதே சமயத்தில், "அவனுடன் வாழ விருப்பமில்லை' என்றும் எழுதியிருக்கிறாய். கணவனுடன் வாழ விரும்பினால், முதலில் உன் பக்கமுள்ள தவறுகள், குறைகள் என்னென்ன என்று ஒரு லிஸ்ட் போடு. அவற்றை உன்னால் மாற்றிக் கொள்ள முடியுமா என்று பார்! அதே மாதிரி - கணவனின் குறைகளையும் வரிசையாய் எழுது. திருத்தக்கூடியது ஏதாவது இருக்கிறதா என்று பார்... ஸ்திர புத்தி வேண்டும்!
அதைவிட்டு, அடித்தால் வாங்கிக் கொண்டு, துக்கத்திலும், கண்ணீரிலும் காலத்தை வீணடிப்பது கையாலாகாத்தனம் - அவ்வளவுதான் நான் சொல்வேன்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
U love him but hate his behavior..? I don’t think divorce is a best solution.. Spice It Up,, Obviously, you can't switch partners every time the excitement wanes. But you can change up some of the other factors. like sexual response (Try a different place, a different time, a different position," Horowitz says. Have a morning quickie. Try sex in the shower or in a different room in the house.) advice him too the behavioral issues can also interfere his ability to have sex. Smoking and excessive alcohol consumption can put a damper on sexual response. Even the way he/you exercise can be a factor. For instance, too much time on the bike can lead to problems in bed. take the silent treatment..
படிக்கும் பெண்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள் .படியுங்கள் நன்றாக படியுங்கள் .20 வயது வரை உங்களை வளர்த்தவர்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்ப்படுத்தி தர தெரியாதா .இந்த காதல் கருமம் எல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராது .தூரத்தில் இருந்து பார்க்கும் போது நன்றாகத்தான் இருக்கும் .பக்கத்தில் சென்று பார்த்தால் ஒன்றுமே இருக்காது .நிங்களும் கஷ்ட்டப்பட்டு பெற்றோர்களையும் சங்கடபடுத்தி நிம்மதி இல்லாத வாழ்க்கை தேவையா ?
உங்கள் நலனை விரும்பி தந்தையில்லாத குடும்பத்தை மூத்த மகளான நீங்கள் உதறி சென்றீர்கள்.அது நியாயமில்லை. அதற்காக தாய் வருத்தப்படுவார். ஆனாலும் புறம் தள்ள மாட்டார்.மீண்டும் தாய் வீட்டிற்கு செல்வதில் தப்பில்லை. ஆனால் அவர்களுக்கு பாரமாக இல்லாமல் வேலை ஒன்று தேடிக்கொண்டு உதவிகரமாக இருக்கலாம். காதலித்தவனே மணமுறிவு கேட்டால் நலம் . இடைக்காலத்தில் நல்ல வேலை தேடிக்கொண்டு தாய்க்கு உதவியாக இருந்து தெளிவுடன் நல்ல கணவனை கைப்பிடித்து நலமுடன் வாழ இறையருள் துணை புரியும்.
வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் / கோணங்களிலும் ஒரே அவசரம்..... துல்லியமாக புரிந்துகொள்ள வயதின் பக்குவமோ சூழ்நிலையின் பக்குவமோ புரிதலின்றி ..........இந்திராகாந்தியை கொன்ற பொழுது , ஒரு வாரபதிரிக்கையின் தலையங்கம் - அற்புதமாக சொன்ன ஒரு அற்புத வாசகம் .... பிரச்சினையை தெளிவாக புரிந்து கொள்ளாமல், பிரச்சனையை அணுகி அணுகி, தோல்வி கண்டவர்கள் வரலாற்றில் ஏராளம் ஏராளம்....... ஒரே வழி உன் பிரச்சனைக்கு : நீயே உன்னில் இருந்து வெளியில் நின்று துல்லியமாக மில்லிமீட்டர் மில்லிமீட்டர் ஆக analyse செய்து ஒரு தெளிவான முடிவு எடு.. ஏனெனில், உனக்குள் நிறைய contradiction .... உனக்கு நீயே நீதிபதி ............
சகோதரியே யார் என்ன சொன்னாலும் உன் விதி உன்னிடம் விளையாடி கொண்டு இருக்கிறது.....நல்லதோ..கெட்டதோ...நீ திருமணம் செய்து அவனுடன் இத்தனை வருடம் வாழ்ந்து விட்டாய்....அதுவும் காதல் திருமணம்..நீயே தேடி கொண்டது...உன் அம்மா உன் உடன் பிறப்புகளை மனதில் கொண்டு உன் வாழ்க்கைக்கு எதுவும் தவறான முடிவுக்கு போய் விடாதே.கொஞ்சம் கொஞ்சமாக உன் கணவனை திருத்து... கண்டிப்பாக அவன் திருந்துவான்....இவனை விட மிக பெரிய போக்கரி எல்லாம் திருந்தி வருகிறார்கள்....நீ கவலை படதே நீ அவனுடன் தான் வாழ்வாய் இதில் எந்த மாற்றமும் இல்லை...கடவுள் உனக்கு துணை புரியட்டும்....கண்டிப்பாக உனக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும்....god bless you ...
பல ஆண்கள் பெண்களின் வாழ்கையை இப்படி சீரழிக்கிறார்கள். இந்த பெண்ணுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில், தாய் வீட்டுக்கு போவதே நல்லது. ஊரார் பழிக்க தான் செய்வார்கள். சில காலம் கழித்து, இந்த பெண் பாவம் என்று கருணை காட்டுவார்கள். தாய் வீட்டுக்கு போன பின், மனதை தெளிவாக்கி கொண்டு விட்டு, ஒரு மூன்று மாதம் கழித்து படிப்புக்கு தகுந்த வேலைக்கு அல்லது, மேற்படிப்புக்கு யோசிக்கலாம். இக்கட்டான சூள்நினையில், தாய் தந்தை மற்றும், உடன் பிறந்தவர்கள் மட்டும் தான் உதவுவார்கள். உடனே வேலைக்கு ஏன் போக வில்லை என்பது, அந்த பெண்ணின் உண்மையான மனதை புரியாமல் பேசுவது போல் உள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் இந்த பெண்ணுக்கு confidence இருக்காது. சரியான வேலையும் கிடைக்காது. இங்கு சொன்ன எல்லாம், எனக்கு தெரிந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை அனுபவத்தில் சொல்கிறேன். இந்த பெண்ணை தூற்றாதீர்கள். பெண்கள் சில மோசமான ஆண்களில் கையில் மாட்டி கொண்டால், இப்படி தான் கஷ்ட பட வேண்டும். இனி இந்த பெண்ணை, நீ ஓடி போய் கல்யாணம் செய்தது தவறு என்று கூறுவது தவறு. எல்ல்லாம் நடந்து முடிந்து விட்டது. இனி இந்த பெண் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். தாய் வீட்டுக்கு போன பின், இந்த பெண்ணின் கணவன்,தன் மனைவி வேண்டும் என்றால் திருந்தி வருவான். இல்லை என்றால், வேறு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க கடவுளை வேண்ட வேண்டும். இப்போ இந்த பெண் கோவிலுக்கு அதிகம் போக வேண்டும். தாய் வீட்டுக்கு போனால், இந்த பெண்ணுக்கு எல்லா பிரச்சினையும் சரி ஆகி விடும். தாய் கூட சில சமயம் மனதை புண் படும் படி பேசலாம். சில காலம் எல்லாவற்றையும் பொருத்து கொள்ள வேண்டும்
பொதுவாக இந்த காதல் என்பது ஒரு ஈர்ப்புதான் தேவை முடிஞ்ச பிறகு இது மாதிரிதான் நடக்கும் காதல் திருமணம் செய்தவர்கள் 90 சதவிதம் டிவேஸ் ல தான் முடியுது எல்லாத்துக்கும் சினிமாதான் காரணம் உங்க ரெண்டு பேருக்குள்ளே இவ்ளோ பிரச்சனைகளை வச்சிக்கிட்டு நீங்க சேர்ந்து வாழ்றது வேஸ்ட் விவாகரத்து செய்துவிட்டு மறுமணத்துக்கு முயற்சி செய்யுங்கள்
சலீம், உங்களை குற்றம் சொல்லவில்லை. ஆனால் காதல் திருமணங்கள் எல்லாம் விவாகரத்து என்று நீங்கள் திண்ணமாக கூறுவது தவறு. நிச்சயித்த திருமணங்கள் எல்லாம் நல்ல திருமணங்கள் அல்ல. காதல் திருமணங்களை வரவேற்க்க வேண்டும். இது போன்ற ஒரு சில தோல்விகள் தடை போட கூடாது. பல பெண்களின் வரதட்சினை, அடித்து ஒடுக்குதல் இவை எல்லாம் காதல் திருமணங்களில் அதிகம் எடுபடாது. மோகம் முப்பது நாள் என்பது இரண்டு வகை திருமணகளிலும் உண்மையே. ஆனால் அதனை மீறி ஒருவர மீது ஒருவருக்கு பற்று வருவது காதல் திருமணங்களில் அதிகம், சாத்தியம் அதிகம். ஏன் எனில் அது அவர்கள் விரும்பி ஏற்கும் ஒரு வாழ்க்கை. அதனால் அதனை ரசித்து வாழ அவர்களால் மட்டுமே முடியும்.
இது உண்மை. சில தோல்விகள் - காமத்தை காதல் என்று எண்ணி ஏமாறும் பலர் இதில் சேர்த்தி - இதனை மாற்ற முடியாது....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.