செஞ்சோற்றுக் கடன்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 மார்
2013
00:00

ஊஞ்சலூரிலிருந்து அன்று காலை கிளம்பி, இரண்டு, மூன்று பஸ் மாறி, சென்னை இரும்புலியூரில் இறங்கும் இந்த, 9:00 மணி இரவு வரை, வகையாக சாப்பிட வழியில்லாததால், வயிற்றில் பசியோடுதான் இறங்கினான் தங்கராசு.
""வா... தங்கராசு... பஸ் ரொம்ப லேட்டு போலிருக்கு,'' என்று, செந்தில் அண்ணன் அவனை வரவேற்று, அந்த அசத்தலான பி.எம்.டபிள்யூ., காரில் ஏற்றி, பின்சீட்டில் அவனும் அமர்ந்து கொண்டான்.
""மாணிக்கம்... எனக்கு ஷிப்ட்டுக்கு நேரமாயிடுச்சு. நேரே துரைப்பாக்கத்திலே, என் ஆபீசுலே என்னை டிராப் செய்துட்டு, தம்பியை கொண்டுபோய் வீட்டிலே விட்டுடு,'' என்று பரபரப்பு காட்டினான் செந்தில். தங்கராசுவுக்கு, சென்னை அத்தனை பரிச்சயமானதல்ல.
""தங்கராசு... வீட்டுக்குப் போய் ஓய்வு எடு. அண்ணி வீட்டிலேயிருக்கும்... நீ போனதும், அவங்களும், நைட் ஷிப்ட்டுக்கு கிளம்பிடுவாங்க,'' என்று செந்தில் அண்ணன்... தன்னிடம் கூறியபோது, "இது என்னடா பழக்கமில்லாத சென்னையில், தனிமையாக, அந்த இரவு இருக்க வேண்டுமோ...' என்ற கவலையும், பீதியும் தங்கராசுவை திசை திருப்பி, பசியை மறக்கச் செய்தது.
அன்று அதிகாலையில், தங்கராசு எழும் முன், அவனுடைய அம்மா, பொன்னியரிசியில் வடித்து, பாலை நிறைய ஊற்றி, ஒரு துளி மோரை சேர்த்து, பச்சை மிளகாய், இஞ்சி, கடுகு போட்டு, தாளித்த தயிர்சோற்றை, வடுமாங்காயுடன், ஒரு டப்பாவில் அடைத்து, அதை அவனுக்குத் தெரியாமல் அவனுடைய, பேக்கின் அடியில் வைத்துவிட்டுத்தான், அவனை எழுப்பினாள்.
அவனுக்கு தெரிந்தால், "எங்க போனாலும், சோத்தைக் கட்டி, பையில் தூக்கிட்டு போவாங்களா?' என்று, அவன் மறுத்து பேசுவான் என்பதால், அவனிடம் அதை சொல்லவில்லை. இருந்த அத்தனை பாலையும், தயிர் சோற்றை பிசைய எடுத்துகொண்டதால், பிள்ளைக்கு காபி போட்டு கொடுக்க பால் இல்லையே என்று ஆதங்கப்பட்டாள். பால்காரன் வர நேரமாகும்.
"அட வுடும்மா... போற வழியிலே ஆயிரம் டீக்கடை!' என்று கிளம்பி விட்டான் தங்கராசு.
ஈரோடு பஸ்சிற்காக, ஊஞ்சலூர் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தவனுக்கு, டீக்கடையில் ஒரு காபியோ, டீயோ சாப்பிடலாமென்று தோன்றியது. எதிரிலிருந்த டீக்கடையில், அப்போதுதான், பால்பாக்கெட்டுகள் வந்து இறங்கியிருந்தன. "கற்பூர நாயகியே கனகவல்லி...' என்று, எப்.எம்., ஒலிக்க, கடைக்காரர் பால் காய்ச்சும் பாத்திரத்திற்கு வெகு நிதானமாக பட்டை பட்டையாக விபூதி பூசுவதிலும், சந்தனம், குங்குமம் வைப்பதிலும், காலத்தைக் கடத்தினார்.
"சட்டுபுட்டுன்னு பாலை பிரிச்சி கொட்டி காய்ச்சாம, இப்படி பாத்திரத்துக்கு அலங்காரம் பண்ணிட்டிருக்காரு பாருங்க...' தன்னைப்போல் டீக்காக காத்து நின்ற நாலைந்து பேரிடம் தங்கராசு முணுமுணுத்தது, டீக்கடைக்காரர் காதில் விழுந்தது.
"வெறும் பால் காய்ச்சற பாத்திரமா இதை நினைக்கலே தம்பி... இது சோறு போடற தெய்வம் எனக்கு...' என்று அவர் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தபோது, எதிரில் ஈரோடு பஸ் வந்து நிற்க, தங்கராசு டீயை துறந்து, பஸ்சை பிடிக்க ஓட வேண்டிய
தாயிற்று.
ஆனாலும், அந்த டீக்கடைக்காரர், "சோறு போடற தெய்வம்' என்ற வார்த்தையை பிரயோகம் செய்தது தங்கராசுவிற்கு, அவன் அப்பாவை நினைவுப்படுத்தியது போலானது.
பஸ்சில் ஒரு இருக்கையில் அமர்ந்தவனுக்கு, அப்பா... "சோறு போடற தெய்வம்...' என, அங்கலாய்க்கும் அந்த நஞ்சை நிலம், சாலையை யொட்டி நீண்டு, விரிந்து அவனுடனேயே ஏக்கத்துடன் ஓடி வருவது போல தோன்றியது.
"ஹும், என்ன பெரிய சோறு போடற தெய்வம்?' என்று விரக்தியுடன், அவன் நினைத்துக் கொண்டான்.
விதை விதைப்பதி லிருந்து, கதிர் அறுத்து சாகுபடி செய்யும் வரை, எத்தனை கஷ்டங்கள்? பூச்சியிலிருந்து காப்பாற்றி, தண்ணீரில்லா வறட்சியும் வராமல், ஒரேயடியாக புயல், மழை என பாழாகாமல், ஆயிரம் சாமிகளை வேண்டி, மாதக்கணக்கில் காத்திருந்து, அப்படியும் என்ன கொட்டியாக் கொடுத்து விடுகிறது? ஏதோ அன்றாட ஜீவனத்திற்கு மூன்று வேளை பசியாறும் அளவிற்கு இந்த, "சோறு போடற தெய்வம்' அளந்து கொடுத்து விட்டால், அதுவே பெரிசு என, திருப்திபட்டு கொள்ள வேண்டிய அளவில் தான் விவசாயம், விசுவாசம் காட்டுகிறது.
"இதே பெரியப்பா, எட்டு வருஷத்துக்கு முந்தியே, விவசாயம்ன்னு கட்டிட்டு அழாம, கொஞ்சம் நிலத்தை வித்து, செந்தில் அண்ணனை பணம் கட்டி படிக்க வைச்சார். இப்போ செந்தில், சாப்ட்வேரில், லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறான். அடிக்கடி யு.எஸ்., போயிட்டு வரதா சொல்றான். பெரியப்பாவும் மீதி நிலத்தை பிளாட் போட்டு வித்துட்டு, அந்த பணத்திலேயே பெரிய பங்களா கட்டிட்டு, "ஏசி' கார்ன்னு, இங்கே ஊரிலே ரியல் எஸ்டேட் பிசினஸ்லே கொழிக்கிறாரு...'
பத்தாம் வகுப்பு முடித்தபோதே, அப்பா தன்னை விவசாய மேற்படிப்பு படிக்கும் வகையில், பிளஸ் 2 குரூப்பில் சேரச் சொல்லிக் கொண்டிருந்தார்.
"ஏன் சித்தப்பா... உனக்கு பைத்தியமா?' என்று செந்தில் அண்ணன் தான் அதை தடுத்து, முதல் குரூப்பில் படிக்க வைத்தான். பிளஸ் 2வில் சேர்ந்த போதே, மாரடைப்பில் அப்பா போய் சேர்ந்ததில், அதன் பின், தன் குடும்பத்தின் பொறுப்போடு, குடும்ப நிலத்தின் விவசாயத்தை பெரியப்பா தான் கவனித்து வருகிறார்.
"உன் ஆத்தாவை சம்மதிக்க சொல்லு. அம்புட்டு நிலத்தையும் காசாக்கி பாத்துடலாம். இந்த விவசாயத்தை உங்க அப்பன் சொல்லிட்டு போனானேன்னு, தலைவிதியேன்னு சிரமப்பட்டு செய்ய வேண்டியிருக்கு. இப்போ என்னடான்னா, உங்க ஆத்தா, அவரு தெய்வமா நெனைச்ச பூமின்னு, அதே புலம்பலை புலம்பிட்டிருக்கு...' என்று பெரியப்பா நொந்து கொள்வார். நல்ல வேளையாக, அதற்கென்று ஒரு காரணம், இப்போது கிடைத்து விட்டது. செந்தில் அண்ணன் படித்த, அதே தனியார் பொறியியல் கல்லூரியில், மேனேஜ்மென்ட் கோட்டாவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸ் படிக்க, 7.5 லட்சம் கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. "கட் ஆப்' கவுன்சிலிங் என்றெல்லாம் போகாமல், நேரே கல்லூரியில் சேர்ந்து விடலாம்.
"சின்னம்மா... இது தங்கராசுவோட எதிர்காலம். நிலத்தை விக்கறமேன்னு கவலைப்படாதீங்க. நாலு வருஷத்திலே, என்னை மாதிரி லட்சக்கணக்கா சம்பாதிக்கலாம். கல்லூரியிலேயே, காம்பஸ் இன்டர்வியூக்கு, பெரிய பெரிய கம்பெனிங்க வரும். அதனாலே தான் இத்தனை பணம், இத்தனை டிமாண்ட்...' செந்திலும், அண்ணியும், பெரியப்பாவும் பலமுறை எடுத்துச் சொல்லியும், அம்மாவிற்கு அரை மனது தான். எப்படியோ புரட்டிக் கொண்டு, சென்னைக்கு புறப்பட்டிருந்தான் தங்கராசு. போய், "அட்மிஷன்' கிடைத்தது உறுதியானதும், ஏழு லட்சத்திற்கு நிலத்தை விற்றேயாக வேண்டும். முத்துசாமி கவுண்டரிடம் பேசியும் வைத்து விட்டார் பெரியப்பா.
ஈரோட்டில் இறங்கி, ஓட்டலில் டிபன் சாப்பிடத்தான் நினைத்தான். ஆனாலும், சென்னை செல்லும் பஸ் கிளம்பத் தயாராயிருந்தது. அதை விட்டால், ஒரு மணி நேரம் கழித்துதான் பஸ், என்ற தகவல் தெரிந்ததால், சென்னைக்கு காலாகாலத்தில் போய் சேர்வது தான் சவுகரியமென்று நினைத்தவனாய், பெட்டிக்கடையில் இரண்டு வாழைப்பழத்தையும், தண்ணீர் பாட்டிலையும் வாங்கியபடி பஸ்சில் ஏறி விட்டான்.
பஸ் கிளம்பியதும் செந்திலுக்கு போன் செய்தான்.
"சரி... செங்கல்பட்டு வந்ததும் கால் பண்ணு, நான் இரும்புலியூர்லே வந்து, "பிக்கப்' செய்துக்கிறேன்...' என்றான் செந்தில்.
அதிகாலையில், இன்று போல் எழுந்து பழக்கமில்லாததால், பஸ்சின் தாலாட்டில் தூங்கிப் போனான். விழுப்புரம் தாண்டி, பஸ் ஏதோ ஒரு இடத்தில் நின்றபோது விழிப்பு வந்து, எழுந்தான்.
"பஸ் பத்து நிமிடம் நிற்கும். சாப்பிடறவங்க ளெல்லாம் சாப்டு வரலாம்...' என்ற நடத்துனரின் அறி விப்பு, அவன் பசியை இன்னும் தூண்டி விட்டது.
சுற்றிலும் சிறுநீர் கழிக்கப்பட்ட சூழலில் துர்நாற்றம் வீச, "வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு...' என்று பேரிரைச்சலாக ஸ்பீக்கர் அலற, ஓட்டல் என்று சொல்லப்பட்ட ஆஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட கட்டடத்திற்குள் ஓட்டுனரும், நடத்துனரும் மட்டுமே நுழைந்தனர். மற்றவர்கள் பெட்டிக்கடையில் எதையோ வாங்கி, பகல் வேளை பசியை ஆற்றிக் கொண்டிருந்தனர்.
தங்கராசு மடமடவென உள்ளே நுழைந்தவன், அங்கே அழுக்கேறிய மேஜைகளையும், அதன் மேல் மொய்க்கும் ஈக்களையும் பார்த்ததில், குமட்டிக்கொண்டு வர, வெளியே வந்து விட்டான். வேறு வழியில்லாமல் அசாத்திய விலை சொன்ன இளநீரை குடித்ததோடு, தன் பகல் உணவை முடித்து, வயிற்றை கொஞ்சம் சாந்தப்படுத்திக் கொண்டான்.
விழுப்புரம் தாண்டி பஸ் புறப்பட்டபோது, சாலையின் இருமருங்கிலும் ஒரு காட்சி தொடர்ந்து வந்ததைப் பார்த்து, தங்கராசுவிற்கு அதிசய மாயிருந்தது. வயல் வரப்பெல்லாம் பிளாட்டுகளாக மாறிக் கொண்டிருந்ததே அவன் வியப்புக்கு காரணம்.
அந்த விளம்பரங்களை பார்த்தவனுக்கு, இப்படி தேசிய நெடுஞ்சாலையில், இரு பக்கத்திலும் தொடர்ந்து நகர்களாக, நிலங்கள் பிரிக்கப்பட்டு விற்க தயாராகிக் கொண்டிருப்பது அதிசயமா கவும், கொஞ்சம் அதிர்ச்சியா கவும் கூட இருந்தது.
அவனுடைய மனதில் ஓடிய சிந்தனைகளை பிரதிபலிப்பது போல், பின் சீட்டில் இரண்டு பெரிசுகளின் உரையாடல், இவன் காதில் விழுந்தது.
"பாத்தீங்களா... ரோடு ரெண்டு பக்கத்திலேயும் பிளாட்டா போட்டு விக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஏக்கர், சென்ட்டுன்னு வாங்கின நிலமெல்லாம், சதுர அடி இன்ன விலைன்னு விக்கிற மதிப்பா பெருத்துப் போச்சு...' என்று ஆரம்பித்தார் ஒருவர்.
"ஆமாம்... விவசாய நிலத்தையெல்லாம், இப்படி பிளாட்டா பிரிச்சி விக்க ஒரு கூட்டம் கிளம்பிடிச்சி...' என்றார் மற்றவர்.
"என்ன பண்றது? விவசாயத்திலே பொழப்பு நடத்த முடியறதில்லை... எங்க தஞ்சாவூர், மாயவரம் பக்கமெல்லாம், அவனவன் நிலத்தை வித்துட்டு, சென்னையில போய் செட்டில் ஆயிடறானுங்க. எல்லாருமே கம்ப்யூட்டர் படிச்சுட்டு, கொள்ளையா சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க. விவசாயம்னா என்னன்னு, அடுத்த ஜெனரேஷனுக்கு தெரியப் போறதில்லே...' அவர்கள் பேச்சு தொடர்ந்தது.
இதைப்பற்றி சிந்தித்தபடி தொடர்ந்த பயணம், இரும்புலியூரில் இறங்க, இரவு 9:00 மணியாகி விட்டது.
""என்ன தங்கராசு ஒண்ணும் பேசாம வர்றே? ஓகோ... ஆத்தாவை சம்மதிக்க வைக்கணுமேன்னு கவலையா... பயப்படாதே நான் பார்த்துக்கறேன். நீ வீட்டுக்குப் போய் சாப்டுட்டு தூங்கு. அண்ணியும் ஆபீஸ் கிளம்பிடும். நான் காலையிலே வந்ததும் பேசலாம்,'' என்ற செந்தில், டிரைவரிடம் தங்கராசுவை வீட்டில் கொண்டு விட்டுவிடும்படி சொல்லிவிட்டு, தன் ஆபீசில் இறங்கிக் கொண்டான்.
வழியில் ஏதாவது ஒரு ஓட்டலில் நிறுத்தச் சொல்லி சாப்பிட வேண்டுமென்று தோன்றினாலும், அத்தனை பரிட்சியமில்லாத சூழலில் தங்கராசுவால் முடியவில்லை.
ஒரு அசத்தலான அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் கார் நுழைந்த போது, தங்கராசுவின் பிரமிப்பு, பன்மடங்காயிற்று. நூற்றுக்கணக்கான பிளாட்டுகள் அடுக்கப்பட்டு, ஜிம், நீச்சல் குளம், செக்யூரிட்டி சோதனை என, அத்தனையும் தங்கராசுவை திகைக்க வைத்தன.
""ஐயா... நாலு வருடத்திற்கு முன், 80 லட்சம்ன்னு வாங்கினாரு. இப்போ, 1.5 கோடியிருக்கும்,'' என்று பிளாட்டின் மதிப்பை மாணிக்கம் எடுத்துரைத்தபடி, தங்கராசுவை ஒன்பதாவது மாடிக்கு லிப்டில் அழைத்துச் சென்றான்.
""வா தங்கராசு...'' என்று கதவை திறந்து, வரவேற்றாள், செந்திலின் மனைவி ஜோதி. ஆபீஸ் புறப்பட தயாராய் இருந்தவள் போல உடை உடுத்தியிருந்தாள். வீட்டின் பிரமாண்டம், மலைப்பை ஏற்படுத்த, சுவாதீனமில்லாத அன்னிய உணர்வோடு உள்ளே நுழைந்தான்.
""தங்கராசு... அந்த ரூமிலே உன் பையை வைச்சுட்டு ரெடி ஆயிடு. டின்னருக்கு ஆர்டர் செய்துருக்கேன். வந்ததும் சாப்பிட்டு நானும் ஓடணும். மாணிக்கம்... நீங்க கீழே வெயிட் பண்ணுங்க வந்துடறேன்,'' என்ற அண்ணியின் அவசரத்திற்கு ஈடு கொடுக்க, தன் பையுடன் அறைக்குள் சென்றான்.
"ஏதோ அண்ணி டின்னர் என்று சொல்றாங்களே... என்னவாயிருக்கும்?' என்ற ஆவலை அவனுடைய அகோர பசி தூண்டிவிட்டிருந்தது.
அறைக்குள் சென்றவன், தன் கைலியை எடுக்க பையை துழாவினான். கைலிக்குள் ஏதோ சுற்றப்பட்டு இருப்பது போல் தெரிந்தது. கைலியை வெளியே எடுத்து விரிக்க முற்பட்ட போது, அந்த எவர்சில்வர் டிபன் பாக்ஸ், "ணங்'கென கீழே விழுந்து உருண்டது.
"அட... அம்மா வச்சுருக்கேன்னு சொல்லவே இல்லையே...' என்று தரையில் விழுந்து, பாதி சிதறி, மீதி டப்பாவிற்குள் இருந்த தயிர் சாதத்தைப் பார்த்ததில் ஆவலானான்.
கோரப்பசியோடு இருந்ததால், மற்ற எதுவும் தோன்றாதவனாய், டப்பாவை கையிலெடுத்து, அதிலிருந்த தயிர் சோற்றை, ஒரு கவளம் சாப்பிட பரபரத்தான். ஆனால், அதற்குள், ""என்ன சப்தம் தங்கராசு?'' என்று உள்ளே வந்த ஜோதியின் கண்களில், அவன் கையில் வைத்திருந்த தயிர்சோறு பட்டுவிட்டது.
""ஹை தயிர் சாதமா, சின்னம்மா கொடுத்து விட்டாங்களா? சொல்லவே இல்லே... இப்படி கொண்டா,'' என்று அவனிடமிருந்து அடித்துப் பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டாள். ""எனக்கு ஒரே பசி. ஆர்டர் பண்ணின பீட்ஸா எப்ப வருமோ தெரியலே. சின்னம்மா தயிர் சாதத்தை நான் உருட்டிப் போட்டுட்டு ஆபீஸ் கிளம்பிடறேன்,'' என்றபடி லபக் லபக்கென்று விழுங்கத் துவங்கினாள்.
""நெட்டிலே ஏதாவது மேஞ்சுண்டிரு. பீட்ஸாகாரன் வந்தா மட்டும் கதவை திற,'' என புறப்பட்டு விட்டாள். அவள் சென்றவுடன் வீட்டிலிருந்த தொலைபேசி, ஒலி எழுப்பியது.
""ஜோதி மேடம் வீடா? பீட்ஸா கார்னர்லேர்ந்து பேசறோம். ஆர்டர் டெலிவரி பண்ண முடியாம ஒரு பிராபளம். வெரி சாரி,'' என்றனர். அவனுக்கு விரக்தியால் சிரிப்பு வந்தது.
அறைக்குள் போனவன், கீழே பளபளக்கும் தரையில் சிதறியிருந்த தயிர்சாத பருக்கைகளை சிரத்தையாக சேகரிப்பது போல கூட்டி எடுத்தான். அத்தனையும் தாயன்பின் அடை யாளங்கள்; அன்னை பூமியின் வரங்கள்; அன்னமெனும் வைரங்கள்; கையிலெடுத்து, அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"கம்ப்யூட்டரில் உலகத்தையே பெட்டிக்குள் கொண்டு வரலாம் தான். ஆனால், அந்தப் பெட்டிக்குள் உழுது பயிர் செய்யவா முடியும்? ஒரு பிடி உணவானாலும், அதை உற்பத்தி செய்ய விளைநிலங்களல்லவா அத்தியாவசியமான ஆதாரங்களா கின்றன. சோறு போடும் தெய்வ மான நிலபரப்புகளை பலியாக்கி, கணினி பெட்டி அளவிற்கு சுருக்கிக் கொண்டே போனால், ஒரு கவளம் தானியங்களுக்கு கூட, அடிதடியில் இறங்க வேண்டிய அவலத்தை யல்லவா எதிர்காலம் அனுபவிக்க நேரும். அந்த பாதகத்தை நாமும் ஏன் செய்ய வேண்டும்?'
இன்றைய நிகழ்வுகளால் தூண்டிவிடப்பட்ட சிந்தனைகளோடு, பிரிட்ஜிலிருந்து ஐஸ் வாட்டரை குடித்துவிட்டு, ஒரு தீர்மானத்தோடு படுத்து உறங்கினான்.
""என்ன ஆச்சுன்னு தெரியலே. காலையிலே நான் வந்த உடனேயே கிளம்பத் தயாராயிருந்தான். "நிலத்தை வித்து இத்தனை பணம் கட்டி படிக்கணுமான்னு தோணுச்சு அண்ணா. அதான் கிளம்பறேன். ஊர் பக்கமா ஏதாவது ஒரு காலேஜ் கிடைச்சா, படிச்சுட்டே, விவசாயத்தையும் பாக்கலாம்ன்னு மனசுக்குப் படுது...'ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டான். முட்டாள் பய. அவன் அப்பன் மாதிரியே புத்தி,'' என்று செந்தில், தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்த போது, தங்கராசு தெளிவான புத்தியோடு, ஈரோடு பஸ்சில் ஏறி உட்கார்ந்திருந்தான், செஞ்சோற்றுக் கடன் தீர்க்க!
***

அகிலா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (15)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
09-மார்ச்-201310:21:42 IST Report Abuse
குடியானவன்-Ryot என் எழுவருட MNC வாழ்கையில் பணத்தை பார்த்தேன் ஆனால் சந்தோசத்தை பார்க்கவில்லை, என்மனைவி நமக்கு இந்த வாழ்கை வேண்டாம் என்று சொனார், என் மாமனார் மற்றும் மைத்துனர் என் மனைவியை பார்த்து உனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது உன் கணவன் வேலையை விட சொல்கிறாய் என்றார்கள், அவர்கள் கூரியதையும் மீறி நான் என் வலையை 2011யில் விட்டுவிட்டு என் 15 ஏக்கரில் விவசாயம் செய்துகொண்டிருக்கிறேன், இப்போது அதிகம் பணம் பார்க்கவில்லை ஆனால் அதிகம் நிம்மதி சந்தோசத்தை பார்கிறேன் என் வாழ்கையில். ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்கை முறை மற்றும் சூழ்நிலை இருக்கு அதனால் MNCயில் வேலைபார்ப்பது தவறு என்று சொல்லவில்லை, அந்த MNC வாழ்கை முறை எனக்கு சரிப்பட்டுவரவில்லை அவ்வளவுதான். செய்யும் தொழிலே தெய்வம்....
Rate this:
Share this comment
Cancel
G. Venkittu - Lagos,நைஜீரியா
08-மார்ச்-201316:50:24 IST Report Abuse
G. Venkittu மிக நல்ல கதை. நன்றி
Rate this:
Share this comment
Cancel
jeeva - coimbatore,இந்தியா
08-மார்ச்-201310:24:53 IST Report Abuse
jeeva சரியான கதை இந்த காலத்தில நடக்கும் பிரச்சனைய தெளிவா சொல்லிருக்காங்க அகிலா அவர்கள் ... எனக்கும் விவசாயம் ஆடு மாடுன்னா உயிரு ... ஆனா தங்கராசு அப்பா மாதிரி எங்கப்பா விவசாயம் பண்ண நிலத்தை கொடுத்துட்டு போகல பதிலுக்கு எல்லாத்தையும் வித்து குடிச்சே அழிச்சாரு அது போக நான் ஆசை ஆசையா வளர்த்த 13 மாடுகளையும் வித்து குடிச்சே அழிச்சாரு ... எனக்கு ஆசை இருந்து என்ன பன்ன ...
Rate this:
Share this comment
Cancel
Senthil Kumar Subramanian - Nagasaki,ஜப்பான்
06-மார்ச்-201306:18:45 IST Report Abuse
Senthil Kumar Subramanian மிக அருமையான கதை.. நான் சிறு கதைகள் படித்து பல வருடங்கள் ஆயிற்று...தலைப்பு தான் என்னை படிக்க ஈர்த்தது... படித்து வீண் ஆகவில்லை... தெளிவான கதை... காலத்திற்கு தேவையான கருத்து... நன்றி அகிலா
Rate this:
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
05-மார்ச்-201317:14:11 IST Report Abuse
சகுனி கதாசிரியருக்கு நன்றிகள் பல .......... உங்கள் எழுத்து ....... என் எண்ணமும் கூட ..... ஏன் ....... பல லட்சம் விவசாயிகளின் எதிர்பார்ப்பும் தான் ...... வாழ்க நீவிர் ....... பெருகட்டும் விவசாயம் ........ பட்டினி சாவு குறையட்டும் ......
Rate this:
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
05-மார்ச்-201317:11:58 IST Report Abuse
சகுனி என் சிறு வயதில் கிராமத்தில் வாழும் போது, ஆண்டு விடுமுறைக்கு வரும் பட்டணத்து குழந்தைகள் "நெல்லு எந்த மரத்துல காய்க்குது" என்று கேட்க்கும்போது நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்போம் ...... அவர்களை வயலுக்கு அழைத்து சென்று அங்கே அறுவடைக்கு தயாராய் இருக்கும் முற்றிய கதிர்களை காட்டுவோம் ....... அப்போதும் அவர்கள் அறியாமையினால் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா? ........ இந்த நெல் கதிரெல்லாம் ஒன்னு ஒண்ணா எப்புடி பரிப்பீங்க என்பதுதான் ....... அரிவாளால் சரக் சரக்கென்று அறுத்து காட்டினால் அப்படியே பதறுவார்கள் ....... ஐயோ .... பாதி நெல்மணி மண்ணுல விழுதே என்று ..... ஒரு நெல்லை அரசா ஒரு அரிசிதானே வரணும் .... எப்படி அளவு குறையுது என்று கேள்வி வேறு ........ அவர்களுக்கு ஒவ்வொன்றையும் புரியவைப்பதற்குள் நாங்கள் பட்ட பாடு ........ அது ஒரு பொற்காலம் ...... ஆனால் இன்றைய நிலைமையை கதை ஆசிரியர் கண்முன் நிழலாட வைத்ததில் என் கண்களில் சிறுதுளிகள் ......... நம் மாநில அரசை நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் ........ அம்மா ..... தயவு செய்து விவசாயத்திற்கு தாயுள்ளத்துடன் உயிர் கொடுங்கள் ......... விவசாயியை வாழ விடுங்கள் ........ சோற்றுக்கு அயல் மாநிலத்தை இப்போது நம்பி வாழும் நாம் அயல்நாட்டை பார்த்து கை ஏந்தும் நிலைக்கு கொண்டு சென்று விடாதீர்கள் ......... அந்த பாவப்பட்ட விவசாயிகளின் பாவம் உங்களை சும்மா விடாது ......... உண்மையில் சொத்தை மட்டுமன்றி மனைவியின் தாலியை கூட அடமானம் வைத்து விவசாயம் செய்தே பிழைக்க வேண்டும் என்பவனை நோகடிக்காதீர்கள் ......... அந்த பாவம் உங்களை ஏழேழு தலைமுறைக்கும் துரத்தும் ...... நன்றி .........
Rate this:
Share this comment
Cancel
devavratan - Chennai ,இந்தியா
03-மார்ச்-201321:49:29 IST Report Abuse
devavratan சிந்திக்க தெரியாத இந்தியனையும், இளைஞர்களையும் சிந்திக்க வைக்க வேண்டிய கதை..அல்ல..நிஜம்..செய்யுமா?
Rate this:
Share this comment
lokeshwer - Tirupur,இந்தியா
05-மார்ச்-201311:29:43 IST Report Abuse
lokeshwerசிந்திக்க தெரியாதவர்கள் அல்ல..... சிந்திக்க மறந்தவர்கள்.........
Rate this:
Share this comment
Cancel
Poornima - Singapore,சிங்கப்பூர்
03-மார்ச்-201321:24:10 IST Report Abuse
Poornima அருமையான கதை. எத்தனை பெயர் மனம் மாறுவார்கள் இவர் போல். உணவுக்காக உள்நாட்டு சண்டை வரும் அளவுக்கு நம் நாடு சென்று விட கூடாது என்று மனம் பிரார்த்திக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
govindaraj - Chennai,இந்தியா
03-மார்ச்-201315:01:54 IST Report Abuse
govindaraj "வுழுதுண்டு வாழ்வரே வாழ்வார் மற்றவெரெல்லாம் தொழுதுண்டு பின் செல்வர்" - இது வள்ளுவப் பெறுந்தகையன்னரின் பொய்யாமொழி........மன்னிக்க வேண்டுகிறேன் பொய்த்துவிட்டது- எந்த பொருளையும் வுற்பத்தி செய்பவன் தான் விலையை நிர்ணயம் செய்வான் ஆனால் இங்கே நிலைமை தலை கீழ் காரணம் தெரியவில்லை விவசாய் வுற்பத்தி செய்த பொருளை அவன் தான் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் ஆனால் எவனோ இடைதருகன் விலையை நிர்ணயம் செய்கிறான் ஆனால் அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளில் இந்த மாதிரி போக்கு இல்லை இதை தயை கூர்ந்து தக்க நடவடிக்கை எடுத்து விவசாயத்துறையை காக்கவேண்டும்படி மிக தாழ்மையாக இந்த துறை சம்பந்த பட்ட அதிகாரிகள், மந்திரிகள்., இல்லை இல்லை இதை மாண்புமிகு அம்மா அவர்களே பரிசிலனை செய்து விவசாயிகள் நலம் காக்க விரும்பும் அம்மாவின் அதி தீவர பக்தன்
Rate this:
Share this comment
Muthukarthi - sathyamangalam,இந்தியா
04-மார்ச்-201305:53:43 IST Report Abuse
Muthukarthiசரியாகச்சொன்னீங்க......
Rate this:
Share this comment
Cancel
vanaraja - Cumbum,இந்தியா
03-மார்ச்-201313:50:54 IST Report Abuse
vanaraja இன்னும் கொஞ்ச நாள் பொறுங்கள். ஒவ்வொரு விவசாயியையும் ஒரு கம்பனி தத்தெடுத்து வேண்டியதை கொடுத்து அறுவடையை முழுவதும் அந்த கம்பெனி எடுத்துக்கும். உங்களுக்கு புவ்வா வேனுமின்னா கம்பெனி சைட் ல REGISTER பண்ணி ஒருவாரம் கழிச்சு தான் டெலிவரி. அதுவரைக்கும் பட்டினி தான். பக்கத்துக்கு வீட்டுல எவனும் கடன் கூட தரமாட்டன். எவளவு சம்பாதிச்சாலும் திரும்பவும் போயி பிளாட்டுதான் வாங்குறான். ஒரு பயலும் விவசாய நிலத்தை வாங்க மாட்டேன்கிறான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.