சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா, சென்னை சபாக்களில் மட்டுமின்றி, புறநகர் பகுதிகளான பெரம்பூர் வில்லிவாக்கம் மற்றும் கொரட்டூர் பகுதிகளிலும் சிறப்பாக நடந்தது. பெரம்பூர் சங்கீத சபாவில், இசை மழலை ராம்ஜியின், இளம் கலைஞர்களின், இசை நிகழ்ச்சி வில்லிவாக்கம் ராஜாஜி நகரில், சத்குரு சத் சங்கம் ஆதரவில், மூத்த சங்கீத வித்வான்களின் பஞ்சரத்ன இசை நிகழ்ச்சி, கொரட்டூர் கல்சுரல் அகடமி சார்பில், கொரட்டூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில், ஆராதனை விழா ஆகியவை நடந்தன.
கொரட்டூர் விவேகானந்தா பள்ளியில், பஞ்சரத்ன கிருதிகளை மிகச் சிறப்பாக வழங்கிய மூத்த வித்வான் தாம்பரம் சுந்தரேச அய்யர், வயலின் வித்வான் கல்லிடைக்குறிச்சி கைலாசம், மிருதங்க வித்வான் குரோம்பேட்டை சுரேஷ், புல்லாங்குழல் வித்வான் பி.வி.ரமணா ஆகியோருடைய நிகழ்ச்சி களைகட்டி மிகச் சிறப்பாக அமைந்து இருந்தது. நிறைய இசைக் கலைஞர்கள், இந்த ஆராதனையில் கலந்து கொண்டனர்.
அதே நாள் மாலையில், சங்கீத கலாநிதி டி.வி.சங்கர நாராயணனுடைய அருமையான இசை நிகழ்ச்சி நடந்தது. மதுரை மணி பாணியில் பாடினாலே, இசை ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். சுருதி சுத்தம் ஸ்வர சாகசங்கள் சிருங்காரங்களை செய்து கேட்க, திகட்டாத விதத்தில், அவர் பாடுவதை இன்று கூட, ரசிகர்கள் மறக்க முடியவில்லை.
அவருடைய நூற்றாண்டு விழாவும் நடைபெற்று வருகிறது. அமரத்துவம் அடைந்த அவரது சங்கீதத்தை, அவருடைய இசை வாரிசு டி.வி.சங்கர நாராயணன், இந்த நிகழ்ச்சியிலும் பாடினார். "சுடரொளியே போற்றி' என்று கணீரென்று துவக்கி, எந்த இடையூறும் நேரக் கூடாது என்று, கணபதியை வேண்டிப் பாடிய விருத்தம் (அம்சத்வனி) சிறப்பானது.
அம்புஜம் கிருஷ்ணாவின், "இனியாகிலும் நினை மனமே' என்ற அருமையான தமிழ் பாடலையும், தியாகராஜ சுவாமி கனவில், காட்சி தந்த ரகு குல திலகனை நிரவல் செய்த விதம் உயர்வான முறையில் அமைந்திருந்ததோடு, ஸ்வரங்களின் நேர்த்தியான வழங்குமுறை, மனதை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில், அமரர் மதுரை மணியை நினைவூட்டும் வகையில், ராக ஆலாபனைகளான இந்தோளத்தின் அத்தனை அழகையும், உடன் பாடிய டி.வி.எஸ்.,ஸின் மகன் மகாதேவன் சிறப்பாகப்
பாடினார்.
நிகழ்ச்சியின் சிகரமே, பிரதான ராகமாக காம்போதியை பிரமாண்டமாக விரிவுபடுத்திய சங்கர நாராயணனுடைய திறமை அபாரம். மூலை முடுக்கு களில் புகுந்து மதுரத்தைப் பொழிந்த நயமான ஆலாபனையாக இருந்தது. நிறைவாக மதுரை மணி ஆல் டைம் பேமஸ், "எப்போ வாருவாரோ', ஸ்ரீ தீட்சிதருடைய இங்கிலீஷ் நோட் எல்லாமே, ரசிகர்களின் பலத்த கைதட்டல்களுடன் நிகழ்ச்சி படு தூள் என்று கூற வைத்தது. ராஜீவ் (வயலின்) சிறப்பாக இருந்தது, கூடுதல் மெருகு நிகழ்ச்சிக்கு. பாலக்காடு ஹரிநாராயணனின் மிருதங்க வாசிப்பும், வெங்கட்ரமணனின் கஞ்சிராவும் அனுசரணை ததும்ப இருந்த வாசிப்பு, தனி ஆவர்த்தனம் சுவாரசியமாக இருந்தது கேட்க. மதுரை மணியை மீண்டும் நினைவுபடுத்திய இசை நிகழ்ச்சியாக இருந்தது இது.
- மாளவிகா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.