அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 மார்
2013
00:00

அம்மா எனக்கு வயது 30. நான் பிளஸ்2, டைப்பிங் முடித்துள்ளேன். என் கணவருக்கு வயது 38. அரசு வேலை. எங்களுக்கு திருமணம் முடிந்து ஆறு வருடம் ஆகிறது. ஒரே பையன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். அதிபுத்திசாலி. அப்பா - அம்மா மீது மிகுந்த பாசத்துடன் இருப்பான்.
என் கணவருக்கு தூரத்து சொந்தமான அக்காவுக்கு திருமணம் ஆகி, 10 வருடங்கள் ஆகின்றன. அவருடைய கணவருக்கு வேலை இல்லை. இரண்டு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். என் கணவர் திருமணத்திற்கு முன்பிருந்தே அக்காவின் குடும்பத்துக்கும் பண உதவி செய்துள்ளார்.
திருமணம் முடிந்த பிறகும் உதவி செய்தார். நானும் இது பற்றி எதுவும் கேட்பதில்லை. என் மீதும், என் குழந்தை மீதும் பிரியமாக இருந்ததால், திருமணத்திற்கு பிறகு பண உதவி குறைந்தது. இதனால், ஆத்திரமடைந்த அவர் அக்கா, என்னை அவரிடம் இருந்து பிரிக்க திட்டமிட்டார். எங்களுடனேயே அவருடைய குடும்பத்தையும் இணைத்து, ஒரே குடும்பமாக இருப்போம் என்று நயவஞ்சகமாக பேசி உள்ளே நுழைந்து விட்டார்.
என்னுடைய பிறந்த வீடு ஏழ்மையில் இருந்தது. அங்கு இருந்து எந்த உதவியும் எனக்கு இல்லை. இதை பெரிதுபடுத்தாத என் கணவரிடம், இல்லாததையும், பொல்லாததையும் கதை கட்டிவிட்டு, என்னிடம் சண்டை போடச் சொல்வார். நானும் பதிலுக்கு, "உங்கள் அக்காவின் பேச்சைக் கேட்டு என்னிடம் சண்டை போடாதீர்கள்...' என்று பேசுவேன். இப்படியாக சிறு சிறு சண்டை வந்து, அடி, உதை என்று என் உடம்பில் காயம்படும்படி சண்டை வலுத்தது.
என் பிள்ளை மேல் பாசமாக இருப்பது போல் நடித்து, "பாருடி... ஒரு நாளாவது என் பிள்ளைக்கு இப்படி சோறு போட்டிருப்பியா?' என்று பிள்ளைப் பாசத்தையும் சந்தேகப்பட வைத்தார். என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார் என் கணவர். சாப்பாடு கூட அவருடைய அக்காதான் போடுவார். என் மேல் வெறுப்பு அதிகமானது. நான் நடைப்பிணமானேன். வெளியில் யாருடனும் பேசக் கூடாது. வீட்டு வேலைகளை செய்ய வேண்டும். என்னிடம் வரும்போது நான் கொஞ்சி மகிழ வேண்டும். மற்ற நேரங்களில் அவர்களோடுதான் இருக்க வேண்டும்.
நான் ஏதாவது எதிர்த்து பேசினால், "உன் அப்பன் வீட்டிலிருந்து அரிசி, பருப்பு வாங்கி வா...' என்றும், "10 ஆயிரம் ரூபாய் வாங்கி வா...' என்றும் அடித்து கொடுமைப்படுத்துவார். நான் ஒரு அடிமையாக இருக்க வேண்டும் என்கின்றனர். என் கணவர் பேசும் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியாது. அவ்வளவு அசிங்கமாக பேசுகிறார். அவர் அக்காவுக்கு இப்பொழுது சந்தோஷம் தாங்கவில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறார்.
"என்னை விவாகரத்துசெய்து விடுங்கள். எதற்கு இப்படி கொடுமைப்படுத்துகிறீர்கள்?' என்று கேட்டால், "நான் உன்னை கட்டிப் போட்டா இருக்கேன், நீயாக என்னை விவாகரத்து செய்து ஓடி போ...' என்று அடிக்கிறார்.
இந்த பிரச்னையிலிருந்து மீள எனக்கு வழி சொல்லுங்கள். போலீசுக்கு போகலாம் என்றால், எனக்கு எந்த உதவியும் கிடையாது. ஆள் பலமோ, பண பலமோ கிடையாது. என் கணவர் வீட்டில் ஆள் பலம் அதிகம். என்னுடைய இந்த பிரச்னைக்கு வழி சொல்லுங்கள். என் கணவரை இழந்த நான், என் பிள்ளையையும் இழக்க விரும்பவில்லை, எனக்கு வேலையும் இல்லை. என் கணவரை பிரிந்து என் பிள்ளையுடன் தனியாக வாழ நினைக்கிறேன். அதற்கு என்ன வழி. அரசாங்க உதவி எனக்கு கிடைக்குமா? என் பிள்ளையை நானே நல்ல முறையில் வளர்க்க ஆசைப்படுகிறேன். எனக்கு நல்ல வழி கூறுங்கள்.
இப்படிக்கு
உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —
உன் கடிதம் கண்டேன்.
கூடாரத்துக்குள், ஒட்டகத்துக்கு இடம் கொடுத்தவன் கதையை நீ கேள்விபட்டிருப்பாயே... அது போலத்தான் இதுவும். சரி... அதற்காக நீ ஏன் விவாகரத்து செய்ய வேண்டும்? உன் கணவரின் ஒன்றுவிட்ட அக்காவா... யாரவள்... முதலில் அவளையும், அவள் குடும்பத்தையும் வெளியேற்றும் வழியைப் பார்.
வழக்கறிஞரைப் பார்த்தால், உடனே விவாகரத்துக்கு வழக்குப் போடத் தான் என்று யார் சொன்னது? உன் உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும், நீ அந்தப் பெண்ணின் மீதும், உன் கணவர் மீதும் வழக்குப் போடலாம். உனக்கு உரிமை இருக்கிறது.
"அதெல்லாம் அவளை வெளியே துரத்த முடியாது... அவளுடன் சேர்ந்துதான் நீ இருந்தாக வேண்டும்...' என்று உன் கணவர் கூறினாலோ அல்லது "நான் உன்னை, "டைவர்ஸ்' பண்ண மாட்டேன்... நீ வேண்டுமானால் கோர்ட்டுக்குப் போ...' என்று கூறினாலோ, ஒரு வழக்கறிஞரை வைத்து, விவாகரத்து இல்லாமல் தனியாகப் பிரிந்து வாழப் பார்.
அதாவது, உன் கணவர், அந்த மகராசியுடனேயே இருக்கட்டும். நீயும், உன் பையனும் தனியாக இருக்க வீடு பார்த்துக் கொடுத்து, சாப்பாடு, வாடகை, குழந்தைக்குப் பள்ளிச் செலவு ஆகியவற்றை அவர் ஏற்றுக் கொள்ளட்டும். எக்காரணத்தைக் கொண்டும் குழந்தையை விட்டுக் கொடுக்காதே. தனியாகப் போய் இருப்பதற்கு ஆகும் செலவை, மாதா மாதம் உன் வழக்கறிஞரிடம் கொடுத்து விடச்சொல். பலர், ஆரம்பத்தில், "அதெல்லாம், நானே நேரில் கொண்டு வந்து கொடுக்கிறேன்...' என்பர்.
இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு மெதுவாக நிறுத்தி விடுவர். அப்பொழுது மறுபடியும் வழக்கறிஞரைத் தேடி ஓட வேண்டும். இப்படி, நேரே கோர்ட்டிலோ, வழக்கறிஞரிடமோ பணத்தை உன் கணவர் ஒப்படைத்து, அவர்கள் மூலமாகப் பெற்றால், நடுவில் பணம் கொடுப்பது நின்றாலும், உடனே ஒரு கடிதத்தை உனக்காக உன் சார்பில் வழக்கறிஞர் அனுப்புவார்.
இதற்காக நீ பணம் செலவழிக்க வேண்டியது இல்லை.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பெண்களுக்கான இலவச சட்ட உதவி மையம் இருக்கிறது. அதன் மூலம் ஏற்பாடு செய்யலாம். இதை எதற்காக கூறுகிறேன் என்றால், இப்படி விவாகரத்து இல்லாமல் மனைவி, குழந்தையைப் பராமரிக்க ஒரு மனிதன், அதற்கு ஆகும் செலவைக் கொடுத்தே ஆக வேண்டும். இது அதிக நாளைக்கு முடியாது... எத்தனை நாளைக்குத்தான் உன் புருஷன் இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய முடியும்?
எப்படியும் அக்கா குடும்பம்தான் வேண்டும் என்று அவர் தீர்மானித்தால், அவரே, உன்னை விவாகரத்து செய்வதாக, தன் சொந்த செலவில் வழக்கு போட வேண்டும். அப்பொழுது, உன் கணவர் சார்பில் உனக்கு வக்கீல் நோட்டீஸ் வரும். அதில் இல்லாதப் பொல்லாத காரணங்களை எல்லாம் காட்டி (பல சமயங்களில், மனைவி மூளை சரியில்லாதவள் என்றும், வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருக்கிறாள் என்றும் நான் கூசாமல் பழி சுமத்துவர்.) உன்னை கோர்ட்டுக்கு அழைப்பர்.
ஆனால், நீ மட்டும் உறுதியாக இருக்க வேண்டும். நீதிபதி, உன்னைப் பார்த்து, "நீ என்ன சொல்கிறாய்?' என்று கேட்டால், "எனக்கு விவாகரத்தில் விருப்பமில்லை. அவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன். இவ்வளவு வருடங்கள் அன்பாகச் சேர்ந்தும் வாழ்ந்தோம். அவருடைய தமக்கையை வீட்டை விட்டு அனுப்பச் சொல்லுங்கள். நான், என் குழந்தை, அவர் மூவரும் சேர்ந்து வாழ வழி செய்யுங்கள்...' என்று திடமாய், உறுதியாய் கூறு.
ஒரு பெண்ணிடமிருந்து வற்புறுத்தியோ, பலாத்காரப்படுத்தியோ, விவாகரத்துக்கு கையெழுத்து வாங்க முடியாது. அப்படி வாங்க வேண்டுமென்றால், நான் முன் கூறியது போல அபாண்டங்களைச் சுமத்தி, அதை நிரூபித்து, பின்னரே வாங்க முடியும். இதெல்லாம் ஒரு பக்கமிருக்க, உன் கணவரும், நாத்தியும், உன்னை பிறந்த வீட்டிற்குப் போய், அரிசி, பருப்பு, பத்தாயிரம் ரூபாய் பணம் வாங்கி வரச் சொல்லி அடித்தனர் என்று எழுதியிருக் கிறாயே... என்ன பெண்ணம்மா நீ? இந்த காலத்தில், நல்ல மாதிரியானக் கணவர், மாமியார், மாமனார்களையே, வரதட்சணைக் கொடுமை செய்ததாகக் கூறி பல பெண்கள் போலீசில் புகார் கொடுத்து விடுகின்றனர்.
பெண்களுக்காக பல சலுகைகளை நம் சட்டம் அளித்திருக்கிறது கண்ணம்மா. அநியாயங்களும், அநீதிகளும் ஏற்படும்போது, தாராளமாக இந்த சட்டத்தையும், காவல் துறையையும் நீ நாடலாம். நம் நன்மைக்காக உள்ள சுதந்திரத்தை நாம் தவறான முறையில் உபயோகப்படுத்திக் கொள்ளக்கூடாது.
இனியொரு முறை அடித்தாலோ அல்லது "பெற்றோரிடம் போய் விடு. அதைக் கொண்டா இதைக் கொண்டா...' என்று உன் கணவரும், நாத்தியும் உன்னைச் சித்ரவதை செய்தால், "விருட்'டென எழுந்திரு. புடவையை உதறி, முந்தானையை இறுகக்கட்டு. குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொள். முன் ஜாக்கிரதையாய், வீட்டு வாசலுக்கு வந்து நின்று, அக்கம் பக்கத்திலுள்ளவர்களின் காதில் விழும்படியாக இரைந்து சொல்: "என்ன ஓட ஓட விரட்டறீங்க... நான் இப்பவே போலீசுக்குப் போய், உங்க ரெண்டு பேர் மேலயும், வரதட்சணை கேட்டு, அடிச்சு கொடுமைப்படுத்தறதா புகார் கொடுக்கப் போறேன். கைக்கு காப்பு வரும். தயாரா இருங்க...'
— இப்படிச் சொல்லி விட்டு, "விடு விடு'வெனப் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் நடையைக் கட்டு. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதைப் புரிந்து கொள்வர். யோசிக்காதே... பயப்படாதே... செய்... இதற்குப் பிறகு என்ன நடக்கிறதோ... எழுது. வேலையோ, அடைக்கலமோ பார்த்துக் கொள்ளலாம். முதலில் ஒண்ட வந்ததை அடித்து விரட்டு. பயந்து சாகாதே. வாழ்வது ஒரு தடவைதான். மரணம் பற்றி சிந்திப்பது அபத்தம். வாழ்வதற்காக போராடலாம். என் வாழ்த்துகள்.
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (29)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arun - chennai,இந்தியா
22-மார்ச்-201314:35:04 IST Report Abuse
Arun நான் மடையன் சார், ஒரு சகோதரி தன் குறையை சொல்லி அழும்போது சொல்லும் விஷயம் தான் முக்கியமே தவிர புள்ளிவிவரங்கள் அவ்வளவு தேவை இல்லை. உங்களுக்கும் அந்த பெண்ணின் கணவனுக்கும் பெரிய வித்யாசம் கிடையாது. சகோதரியே... நீ உன் கணவனுடன் சந்தோசமாக வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்...
Rate this:
Share this comment
Cancel
ramya - chennai,இந்தியா
22-மார்ச்-201311:21:40 IST Report Abuse
ramya அன்புள்ள அம்மாவிற்கு வணக்கம், நான் ஒரு முதுகலை பட்டதாரி என் வயது 23. என் அப்பா என்னுடைய சிறு வயதிலயே காலமானார். அதன்பின் என் அம்மா தான் என்னயும் என் தம்பியும் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார். எனக்கும் என் தம்பிக்கும் என் அப்பாவின் நினைவே வராமல் பார்த்துக்கொண்டார். வசதியாக வளர்த்தார். என் அம்மா என் மேலும் என் தம்பி மேலும் மிகவும் அன்பாக இருபார். நாங்கள் என்னுடைய பாட்டி விட்டில் தான் இருக்கிறோம். என் பிரச்சனை என்வென்றால் நான் UG படிக்கும் போது என்னுடன் படிக்கும் ஒருவருக்கும் எனக்கும் காதல் மலர்ந்தது. அவர் மிகவும் நல்லவர். நாங்கள் காதலிக்கும் போதே 2 தீர்மானங்கள் எடுத்தோம். ஒன்று இரு வீட்டாரின் சமததுடன் தான் திருமணம் செய்ய வேண்டும் மற்றொன்று என்ன காரணத்துக்காகவும் தற்கொலை செய்ய கூடாது என்று முடிவு செய்தோம். நான் காதலிப்பது என் விட்டிற்கு தெரிந்தது படிக்கும் சமயத்தில் காதல் தவறு உன் குடும்பதிக்கு ஒத்துவராது என்று கூறினார். பின் நாங்கள் இருவரும் விட்டிற்கு தெரியாமல் பேசினோம். இரண்டு வருடம் இந்த விசயம் விட்டிற்கு தெரியாது. எனக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். நான் உண்மையை கூரினேன். அவரும் என் விட்டிற்கு வந்தார். அம்மா ஜாதகம் பார்த்தார். ஜாதகம் பொறுத்த வில்லை. நாங்கள் திருமணம் செய்தால் சீக்கிரம் பிரிந்துவிடுவோம் என்று கூறினர். பயமாக இருகிறது அம்மா. நானும் அவரும் வேறு வேறு சாதி. அவர் வசதியில் எங்களை காட்டிலும் குறைந்தவர். மற்றும் அவர் என்மேல் உள்ள பாசம். நானும் அவரும் எந்த தவறும் செய்ய வில்லை. ஆனால் அம்மா ஜாதகத்தை நினைத்து பயபடுகிறார். என்னால் அம்மாவையும் விட முடியாது அவரையும் விட முடியாது. அவர் இப்போது வீடு கட்டி வருகிறார். அம்மா அவரை மறந்துவிடு இல்லாவிட்டால் உன் வாழ்கை பாதியிலேயே முடித்துவிடும் என்று கூறுகிறார். 2 மாதத்தில் அவரை மறந்து வேறு திருமணம் செய்ய வேண்டும் என்று அம்மா கூறுகிறார். மிகவும் வருத்ததுடன் இருகிறேன். என் பதிவை இதில் சொன்னதிற்கு மன்னிக்கவும் உடனடியாக ஆறுதல் கிடைக்கவே இவ்வாறு செய்தேன்.
Rate this:
Share this comment
காயத்ரி - Chennai,இந்தியா
22-மார்ச்-201323:06:21 IST Report Abuse
காயத்ரி அன்பு ரம்யா, உங்கள் கண்ணியமான காதலுக்காகவே இதை எழுத வேண்டுமென்று தோன்றியது.. காதலிக்கும் போது குறுக்கே வராத ஜாதி, ஜாதகங்கள் மணம் புரிய நினைக்கும் போது வருவது ஏனோ? முன்பின் தெரியாத பழக்கமே இல்லாத ஒருவருடன் ஜாதகப்பொருத்தத்தையும் விசாரிப்புகளையும் வைத்தே பெண்ணைக் கொடுக்கும் பெற்றவர்கள் அதே மகள் மனதிற்குப் பிடித்த நல்ல வரனைக் கொண்டு வந்தால் மறுப்பது ஏனோ? பிள்ளைகளுக்கு அனுபவம் போதாது என்று நினைக்கும் பெற்றவர்களின் கொள்கையும் அவர்கள் நலனில் உள்ள அக்கறையுமே காரணங்களென்று நினைக்கிறேன். ஜாதகங்கள், கட்டங்கள், ஜோசியங்கள் இவை எல்லாமே நூறு சதவிகிதம் உண்மையென்று சொல்ல முடியாது, பொய்யென்று கூறவும் முடியாது.. ஜோசியத்தில் சொல்வது போல நடந்தால் அனைவரும் கோவிலுக்குச் செல்லாமல் ஜோசியரையே வழிபடுவார்களே..இல்லையா? உங்கள் மனதைப் பொறுத்தது..மனப்பொருத்தம் இருந்து விட்டால் மற்ற பொருத்தங்கள் தானாக அமைந்து விடும், பிறந்த ஆண்டு, நேரம் வைத்தே ஜாதகங்கள் கணிக்கப்படுகின்றன..ஆனால் சில நேரங்களில் ஒரு நிமிடம் தாமதமாக பிறந்த நேரம் குறிக்கப்படும் போது ஜாதகமே மாறுகிறது..இல்லையா? மனதில் தான் இருக்கிறது.. தெரியாமல் நடந்த ஒரு விஷயம், என் தங்கைக்கு ஜாதகப்பொருத்தம் பார்க்க பையனின் ஜாதகத்தைக் கொண்டு செல்ல மாற்றித் தம்பியின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள், பத்துக்கு ஒன்பது பொருத்தங்கள், குழந்தைகள் மூன்று என்று அடுக்கிக் கொண்டே போய் விட்டார் ஜோசியர்.. இன்னொரு முறை கீரியும் பாம்புமாய் சண்டையிடும் உறவினத்தம்பதியர் ஜாதகத்தைக் காட்டிய போது இவர்களைப் போல ஒற்றுமையான வள்ளுவன் வாசுகியைப் பார்க்கவே முடியாது, அவர் கண்ணால் சொன்னால் மனைவி தலையால் செய்து முடிப்பார் என்று சொன்னது தான் உச்சகட்டம்(ஒரு வேளை தலையால முட்டி சண்டை போடறதைச் சொல்லிருப்பாரோ?) அரங்கில் சிரிப்பு அடங்க வெகு நேரமானது..நீங்கள் அம்மாவிடம் சொல்லி வேறு ஜோசியரிடம் காட்டிப் பொருத்தம் பார்க்கச் சொல்லலாம்...ஜாதகங்கள் பார்த்து உள்ளங்கள் பொருந்தாத ஜோடிகளும் உண்டு, மனப்பொருத்தத்தில் மணமாக வாழும் தம்பதியரும் உண்டு.. உங்களுக்கு எந்த அளவுக்கு ஜாதகத்தின் மேல் நம்பிக்கை இருக்கிறது, அது தான் முக்கியம், நாளையே திருமண வாழ்வில் பிரச்சினைகள் வந்தால் அடடா அம்மா சொன்னார்களே நாம கேட்கலையே என்று அப்போது அதை நம்பக் கூடாது..உங்களவருடன் மனம் விட்டுப் பேசுங்கள்..அம்மாவிடம் நம்பிக்கையாகப் பேசிப் புரிய வையுங்கள். தெளிவான முடிவு எடுங்கள்..மனதில் காதலும் நிஜத்தில் நெருப்புமாய் பிறருக்காக ஒரு வாழ்க்கை வாழ்வதா? மனமொத்தவருடன் நம்பிக்கையுடன் அடுத்த அடி இட்டு வைப்பதா? உங்கள் கையில்.. அம்மாவும் முக்கியம், உங்கள் காதலரும் முக்கியம் என்று சிந்திப்பது பெருமையாக இருக்கிறது..உங்கள் மலர்மனம் போல் மணவாழ்வு சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்....
Rate this:
Share this comment
Rathi - Coimbatore,இந்தியா
23-மார்ச்-201315:56:49 IST Report Abuse
Rathiஅன்புள்ள ரம்யா, இங்கு என் வாழ்கையே ஓர் உதாரணமாக சொல்கிறேன். எங்கள் காதல் திருமணம் மிகுந்த போராட்டங்களுன் நடந்தது. என் அப்பா ஜாதகம் அமையவில்லை, அவர் 6 மாதத்தில் இறந்துவிடுவார் என்று சொல்லிவிட்டார். I think I better write in English as it flows freely much easier. We are from different es. That was the throbbing period in my life cannot be described in words. You are in a stage that you do not know what to do next. So we took our horoscope and saw few astrologers. Most of them said that we did not have compatibility. Eventually we went to a good astrologer who he divinely mentioned that when minds merged together there is no need to check the compatibility at all with horoscope. There are always exception rules so cannot blindly believe horoscope. We got married 15 years ago, we both are succeeding in our careers and we are blessed with a boy and girl. Touch wood, everything goes well. Even to date, we never went to any astrologer since our marriage except when my in laws wanted to write horoscope for our kids when there were born. If you both you stronger in your mind we can proceed with no hesitation. True love never fails, but be aware there are exceptions always. Good luck and hope everything goes well for you. Rathi...
Rate this:
Share this comment
Cancel
kadavul - Nagpur,இந்தியா
20-மார்ச்-201318:18:47 IST Report Abuse
kadavul எந்த ஒரு அரசு ஊழியரும் தனது குடும்பத்தை நல்ல முறையில் காப்பாற்ற வேண்டும் என்பது அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த பெண்ணின் கணவர் அரசு வேலையில் இருப்பதால், அவர் செய்யும் கொடுமைகள் பற்றி அவரது அலுவலகத்தில் இந்த பெண் புகார் கூறினால் கட்டாயம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதுவே அவருக்கும் அவர் அக்காவிற்கும் இவர் கற்றுத்தரும் மிக நல்ல பாடமாக அமையும்.
Rate this:
Share this comment
Cancel
jenny - sabah,மலேஷியா
19-மார்ச்-201306:19:09 IST Report Abuse
jenny ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மா & மனைவி போல் யாராலும் இருக்க முடியாது ........அதை உணர்ந்து உங்கள் கணவர் வருவார் கவலை வேண்டாம் ...............
Rate this:
Share this comment
Cancel
jenny - sabah,மலேஷியா
19-மார்ச்-201306:16:25 IST Report Abuse
jenny தைரியமாக இருங்கள் சகோதரி ............நல்லதே நடக்கும் .........யார் என்ன சொன்னாலும் மனைவி மேல் அன்பு இருந்தால் எந்த பிரச்னையும் வராது .......அந்த கணவனை விட்டு தனியாக சிறிது காலம் இருங்கள் பிறகு பாருங்கள் உங்கள் கணவர் உங்களை தேடி ஓடி வருவார் .......
Rate this:
Share this comment
Cancel
sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-மார்ச்-201318:56:37 IST Report Abuse
sunil எத்தனையோ பெண்கள் வரதட்சணை கொடுமை என்ற ஆயுதத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். நீங்கள் உண்மையாகவே பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள், இன்னமும் தாமதிக்காமல் போலீசில் புகார் தரவும், அல்லது சகுந்தலா மேடம் சொல்வது போல் குறைந்தது போலீசில் புகார் செய்வேன் என்று மிரட்டவும். கணவர் படிந்துவிடுவார்.
Rate this:
Share this comment
Cancel
Siva Kumar - Chennai,இந்தியா
17-மார்ச்-201318:22:48 IST Report Abuse
Siva Kumar இங்கு எனது கருத்தை பதிப்பதற்கு முன் , திருமதி சகுந்தலா மற்றும் காயத்ரி வெங்கட் கூறிய தீர்வுகளை விட நான் என்ன சொல்வதேன்பதே தெரியவில்லை. இருந்தாலும் இத்தொழிக்கு , ஒன்றை மட்டும் நினைவுபடுத்த விரும்புகின்றேன் . பாரதி கண்ட புதுமை பெண்ணாக மாருவாயக .எழுந்திரு ,விழித்திரு, விவேகனடையுடன் செயல்படு .உன்னால் முடியும் .
Rate this:
Share this comment
Cancel
saleem - wellington,நியூ சிலாந்து
17-மார்ச்-201313:47:08 IST Report Abuse
saleem ஆறு வருடம் நல்ல சந்தோசமாக இருந்த கணவன் மனைவி இடையே இப்போது அடிக்கடி சண்டை வருகிறது என்றால் அக்காவோ அவர் குடும்பத்தாரோ இதற்கு காரணமாக இருக்க மாட்டார்கள் திடிரென மனைவியை கொடுமை படுத்துவது அடிப்பது டிவேஸ் கேட்பது காரணம் உன்னிடம் எதோ தவறு கண்டுபிடித்திருக்கலாம் இல்லையெனில் சந்தேகப்படும்படி நீ நடந்திருக்கலாம் அப்படி இருந்தால் அதை நீனே திருத்தி கொள்ளலாம் இல்லை என்றால் அவருக்கு ஏதாவது பெண்ணுடன் தொடர்பு இருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
17-மார்ச்-201312:17:02 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) இங்கே பலர், விவாகரத்து செய்து விடுங்கள் என்று கூறுகிறார்கள். அப்படி விவாகரத்து செய்வது மிகவும் சுலபம். சேர்த்து வாழ வைப்பதுதான் கடினம். உங்கள் பெற்றோர் எப்பொழுதாவது சண்டைபோட்டுக்கொண்டு விவாகரத்து செய்திருந்தால், உங்கள் மனது எவ்வளவு பாடுபடும் ? அந்த குழந்தையின் எதிர்காலத்தை மனதில்வைத்து, இவ்வாறான அறிவுரைகளை கூறவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்..
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
17-மார்ச்-201312:13:38 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) கணவனை காமத்தின் மூலம் கைக்குள் முடிந்துவைத்த பெண்கள் ஏராளம். பலர் அதனை சுயநலத்திற்காக பயன்படுத்துவார்கள். நீங்கள் அதை உங்கள் குடும்ப நம்மைக்காக பயன்படுத்தி பாருங்கள் சகோதரி. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையென்றால், நீங்கள் மீண்டும் நலமுடன், மனநிறைவுடன் வாழ பகவானை பிரார்த்திக்கிறேன்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.