இயலாமையும், பேராசையும்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 மார்
2013
00:00

மொத்தம் பத்து பேர் வந்திருந்தனர். வந்தவர்களை வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்று, ஹாலில் அமரச் செய்தார் முருகானந்தம். கோரப்பாய்களை போட்டு, அதற்கு மேல் பக்கத்து வீட்டிலிருந்து இரவல் வாங்கிய, ஜமுக்காளத்தை, அழகாய் விரித்து, ஹாலை துப்புரவாய் வைத்திருந்தார்.
அவர்கள், "ப' வடிவத்தில் அமர்ந்ததும், முருகானந்தத்திடம் பரபரப்பு தொற்றிக் கொண்டது. உள்ளறைக்குத் தாவினார்.
""ஜானு... அவங்க வந்துட்டாங்க பாரு. எல்லாம் ரெடியா? தாராவை தயார் படுத்திட்டியா?'' என பரபரத்தார்.
""இதோ ஆச்சுங்க. பஜ்ஜி மட்டும் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. நீங்க பேச்சை ஆரம்பிங்க. அதுக்குள்ளே முடிச்சிடறேன்,'' என்றாள் ஜானகி.
""சீக்கிரம் ஆகட்டும்,'' என்றவாறு மீண்டும் ஹாலுக்கு வந்தார்.
""பயணத்தில் சிரமம் ஒண்ணுமில்லையே?'' கேட்டுக்கொண்டே பையனின் தந்தை, பாலகிருஷ்ணனின் அருகில் அமர்ந்தார்.
""பக்கத்து ஊருதானே... என்ன சிரமம்?'' என்றார் பாலகிருஷ்ணன்.
ஒரு பத்து நிமிடம் பொதுவாகப் பேசினர்.
""சரி... பொண்ணை வரச் சொல்லுங்க நேரமாகுது,'' என பையனின் தாய் பிருந்தா, அவசரப்படுத்த, முருகானந்தம் எழுந்து சென்று, ஜானகியிடம் தெரிவிக்க, காபி தட்டோடு வந்தாள் தாரா.
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான் நிர்மல்.
""பொண்ணை நல்லா பார்த்துக்கடா,'' என்று அவன் காதில் கிசுகிசுத்தார் தாயார்.
சுடச்சுட பஜ்ஜியும் பரிமாறப்பட்டது.
சாப்பிட்டு முடித்ததும், பேச ஆரம்பித்தார் பாலகிருஷ்ணன்.
""இதோ பாருங்க... எங்க பையன், பி.இ., படிச்சு, ஈ.பி.,ல இன்ஜினியரா இருக்கான். அரசு உத்தியோகம்; கை நிறைய சம்பளம். உங்க பொண்ணும் கம்ப்யூட்டர் சைன்ஸ்ல டிகிரி வாங்கியிருக்கா; நாங்க மறுக்கலை. வேலைக்குப் போகாத பொண்ணுதான் வேணும்ன்னு எங்க பையன் ஒத்தைக்கால்ல நின்னதாலதான், உங்க பொண்ணை பார்க்க வந்திருக்கோம்.''
""ஏதோ, என்னால் முடிஞ்ச அளவுக்குப் பொண்ணை படிக்க வெச்சுட்டேன். அவளை வேலைக்கு அனுப்புவதோ, அனுப்பாததோ உங்க விருப்பம்,'' என்றார் பவ்யமாய் முருகானந்தம்.
நிர்மல் காதில் ஏதோ ரகசியம் பேசிய பின், நிமிர்ந்து உட்கார்ந்தார் பாலகிருஷ்ணன்.
தொண்டையை செருமிக் கொண்டே கேட்டார்.
""பையனுக்கு, உங்க பொண்ணை பிடிச்சிருக்காம். அப்ப... மேற்கொண்டு பேசலாமா?''
""ஓ... தாராளமா,'' என்றார் முருகானந்தம்.
""ஐம்பது பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கம்; ஒரு ஸ்கூட்டர் கொடுத்திடுங்க. அதுபோக, சீர் வரிசைக்கான பட்டியல் தனியா வரும். அதுல, எந்தக் குறையும் வராமப் பார்த்துக்கணும்.''
"பகீர்' என்றது, முருகானந்தத்துக்கு.
அவர் மவுனமாய் அமர்ந்திருப்பதைக் கண்ட பாலகிருஷ்ணன், ""என்ன ஒண்ணும் பேசமாட்டேங்கறீங்க?'' என உலுக்கினார்.
""அது வந்துங்க... நீங்க கேக்கற அளவுக்கெல்லாம், எங்களால செய்ய முடியாதுங்களே,'' என இழுத்தார்.
""அப்ப உங்களால எவ்வளவு முடியும்கறதைச் சொல்லுங்க?''
""இருபத்தஞ்சு பவுன் நகை, அம்பது ஆயிரம் ரொக்கம், சீர்வரிசை செய்யறோம். ஸ்கூட்டரெல்லாம் தர முடியாது,'' என சிரமத்துடன் சொல்லி முடித்தார் முருகானந்தம்.
இப்போது, தரகர் காதைக் கடித்தார் பாலகிருஷ்ணன்.
""யோவ்... என்னய்யா இது? நாங்க கேக்கறதை எல்லாம் செய்வாங்கன்னு சொல்லித்தானே, என்னை அழைச்சிட்டு வந்தே? இவங்க என்னடான்னா முடியாதுன்னு சொல்றாங்க?''
""அவசரப்படாதீங்க. கொஞ்சம் பொறுமையா இருங்க... நான் பேசிப் பார்க்கறேன்,'' என்று சொன்ன தரகர் எழுந்து, முருகானந்தத்தை தனியாக தள்ளிக்கொண்டு போனார்.
பின் கட்டிற்கு போனவர், ""இதோ பாருங்க... இப்படிப்பட்ட வரன் அமைய நீங்க கொடுத்து வெச்சிருக்கணும். கொஞ்சத்துல கை நழுவிப் போயிடக் கூடாது. உங்க பொண்ணோட வாழ்க்கை, ஓஹோன்னு இருக்க வேணாமா? எப்பாடுபட்டாவது நீங்க, இதுக்கு ஒப்புக்கிட்டா, பிற்காலத்துல, நீங்க நிம்மதியா இருக்கலாம். சரின்னு சொல்லிடுங்க,'' என, ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார் தரகர்.
யோசித்தார் முருகானந்தம்.
""என்ன யோசனை? ஓ.கே.,ன்னு சொல்லிடுங்க.''
""எதுக்கும் என் வீட்டுக்காரிகிட்ட, ஒரு வார்த்தை கேட்டுடறேனே.''
""சீக்கிரமா கேட்டுட்டு வாங்க. அதுவரை, நான் அவங்களை சமாளிக்கறேன்,'' என்று சொல்லி, தரகர் ஹாலுக்கு போய்விட, பரிதாபமாக உள்ளறைக்குள் நுழைந்தார் முருகானந்தம்.
""ஜானு...''
""தரகர் சொன்னதைக் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன். அவ்வளவெல்லாம் நம்மால முடியுமாங்க? இந்த வரன் வேணாங்க. நம்ம சக்திக்கு ஏத்தாப்ல வேறு இடம் பார்க்கலாங்க.''
ஜானகி சொல்வதிலும் நியாயம் இருந்தது.
ஆனால், வீடு தேடி வந்த இவ்வளவு நல்ல வரனை, சடுதியில் நிராகரிக்க மனம் வரவில்லை முருகானந்தத்துக்கு.
""ஜானு... அவங்க கேக்கற அளவுக்கு இல்லைன்னாலும், இன்னும் கொஞ்சம் கொறைச்சுப் பார்ப்போமே.''
தரகர் போட்ட தூபத்தில், முருகானந்தம் மயங்கிப் போயிருப்பது, அப்பட்டமாய் தெரிந்தது.
""எப்படிங்க முடியும்? நீங்க சொன்னதே அதிகம். அதைச் செய்யவே நம்மால முடியுமாங்கறது சந்தேகம். இந்த நிலைமைல, இன்னும் அதிகமா உங்களால எப்படித் தர முடியும் சொல்<<லுங்க?''
""எப்பாடுப்பட்டாவது, இந்த வரனை பேசி முடிச்சிடலாமுன்னு முடிவு செஞ்சிட்டேன். நீ கவலைப்படாதே ஜானு,'' என்று அவளுடைய பதிலுக்கும் காத்திராமல், ஹாலுக்குள் பிரவேசித்தார் முருகானந்தம்.
அதற்குள் பாலகிருஷ்ணனை, வேறு சில வார்த்தைகளால் மயக்கி வைத்திருந்தார் தரகர்.
மீண்டும் அவரெதிரில் அமர்ந்தார் முருகானந்தம்.
""சொல்லுங்க, என்ன முடிவு எடுத்திருக்கீங்க?''
""நீங்க கேட்டதும் வேணாம். நான் சொன்னதும் வேணாம். முப்பது பவுன் நகை போட்டுடறேன். எழுபத்தையாயிரம் ரொக்கமா கொடுத்திடறேன்,'' என்றார் முருகானந்தம்.
"சடா'ரென தரகரை அழைத்து வெளியேறினார் பாலகிருஷ்ணன்.
ஐந்து நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.
""சரி... ஏதோ தரகர், இவ்வளவு தூரத்துக்குச் சொல்றதனால ஒப்புக்கறேன். இப்போதைக்கு, நாங்க கிளம்பறோம். கூடிய சீக்கிரத்துல, ஒரு நல்ல நாளா பார்த்து, தட்டை மாத்திக்கலாம்,'' என்று பாலகிருஷ்ணன் எழுந்து கொள்ள, அவரைத் தொடர்ந்து வந்தவர்கள், அனைவரும் வெளியேறினர்.
அவர்கள் போனதும், கணவனை பிடித்து உலுக்கினாள் ஜானகி.
""நீங்க பாட்டுக்கு சொல்லிட்டீங்க. எப்படி சமாளிக்கப் போறீங்க?''
""ஜானு... என்னோட பி.எப்., கிராஜுவிட்டி பணம் எல்லாம், அப்படியே பேங்க்ல பத்திரமா இருக்கு. அதோடு, இந்த வீட்டுல பாதிய வித்துடலாமுன்னு தீர்மானிச்சுட்டேன்.''
"திக்'கென அதிர்ந்தாள் ஜானகி.
""நீங்க என்ன சொல்றீங்க... வீட்டை விக்கப் போறீங்களா?''
""பதறாதே ஜானு. முழு வீட்டையுமா விக்கப் போறேன்? பின்கட்டில் பாதி கிரவுண்டு சும்மாத்தானே கிடக்கு? இப்ப இருக்கிற விலைவாசில, எக்கச்சக்கமா விலை போகும். அதை வித்தா, தாராவோட கல்யாணத்தை, "ஜாம் ஜாம்'ன்னு நடத்தலாமே.''
ஜானகிக்கு என்னவோ வீட்டைத் துண்டுபோட மனமே இல்லை. இருந்தாலும், மகளோட வாழ்க்கை நல்ல விதமா அமையணுமே என்கிற, ஒரே காரணத்துக்காகச் சம்மதித்தாள்.
இரண்டு வாரங்கள் ஓடிய நிலையில், வேறு ஓரிடம் நிர்மலைத் தேடி வந்தது.
இந்த பார்ட்டி மிகவும் பசையுள்ளதாய் இருந்தது.
பாலகிருஷ்ணன் கேட்டதைவிட அதிகமாகவே செய்ய, அவர்கள் தயாராக இருந்தனர்.
""ஆகா... இப்படியல்லவா இருக்கணும் இடம்? இவங்க ஏன் கொஞ்சம் முன்கூட்டி வந்திருக்கக் கூடாது?'' என ஆதங்கப்பட்டார் பாலகிருஷ்ணன்.
""இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடலை. நாமதான் இன்னமும் தட்டை மாத்திக்கலையே. பேசாம நாம பார்த்திருக்கிற பெண்ணை நிராகரிச்சுட்டு, இப்ப வந்திருக்கிற, இந்த இடத்தை பேசி முடிச்சிடலாமுங்க,'' என்றாள் பிருந்தா.
""எனக்கும் அதுதான் தோணுது. ஆனா, அவங்க என்ன நினைப்பாங்க?'' என தயங்கினார் பாலகிருஷ்ணன்.
""அவங்க என்ன வேணுமானாலும் நினைச்சுட்டுப் போகட்டும். நம்ம புள்ளையோட வருங்காலம் தானே நமக்கு முக்கியம்?''
""அது சரி பிருந்தா. இவ்வளவு தூரத்துக்கு பேசி முடிச்சிட்ட பின், இப்ப வேண்டாம்ன்னு சொன்னா, தரகர் கூட எகிறுவாரே?''
""அட, என்னங்க நீங்க, ஒரு ஆயிரம், ரெண்டாயிரம்ன்னு தூக்கிப் போட்டா வாங்கிட்டு விலகிடப்போறார் தரகர். அதுக்குப் போய் இப்படி பயந்துக்கிட்டிருந்தா எப்படி?''
""சரி.''
""அப்ப மொதல் காரியமா, இப்பவே போய், அந்த பெண்ணை வேண்டாம்ன்னு சொல்லிட்டு வந்திடுங்க.''
அழைப்பு மணி அடித்துவிட்டுக் காத்திருந்தார் பாலகிருஷ்ணன்.
கதவைத் திறந்த முருகானந்தம், ""அடடா... வாங்க வாங்க,'' என்றவாறு கதவை அகலத் திறந்து வரவேற்றார்.
உள்ளே நுழைந்து நாற்காலியில் அமர்ந்தார்.
அதற்குள் காபி போட அடுக்களைக்குள் நுழைந்தாள் ஜானகி.
எப்படி விஷயத்தை ஆரம்பிப்பது என்கிற யோசனையில் ஆழ்ந்திருந்தார் பாலகிருஷ்ணன்.
""சொல்லுங்க,'' என்று அவரை சுயநினைவுக்குக் கொண்டு வந்தார் முருகானந்தம்.
""வந்து... அதை எப்படி சொல்றதுன்னு தெரியல.''
""அட, சும்மா சொல்லுங்க.''
""அதாவது, நாங்க எத்தனையோ பொண்ணுங்களை பார்க்கிறோம். அதே போல, நீங்க எத்தனையோ வரன்களைத் தேடறீங்க. எது, எப்ப எங்கே பொருந்தும்கறது, அவன் கையில்தான் உள்ளது,'' என்று இருகரம் உயர்த்தி, வானத்தைக் காட்டினார் பாலகிருஷ்ணன்.
""ரொம்ப சரியாச் சொன்னீங்க.''
""இப்பப் பாருங்க, உங்க பொண்ணை பார்த்துட்டு போனோம். ஆனா, வேறு ஓரிடத்திலிருந்து, என் பையனுக்கு பொண்ணு கொடுக்க, ஒத்தைக் கால்ல நிக்கறாங்க,'' என்று சொல்லிவிட்டு, அவர் முகத்தையே பார்த்தார் பாலகிருஷ்ணன்.
ஆனால், என்ன ஆச்சரியம்? முருகானந்தத்தின் முகத்தில், எவ்வித மாற்றமும் இல்லை.
அவர் கோபப்படுவார், கத்துவார் என்றெல்லாம் எதிர்பார்த்து வந்தவருக்கு ஏமாற்றம்.
ஆவி பறக்கும் காபியோடு வந்தாள் ஜானகி.
எவ்வித சலனமுமின்றி, ""காபி எடுத்துக்குங்க,'' என்றார் முருகானந்தம்.
ஒரே குழப்பமாக இருந்தது பால கிருஷ்ணனுக்கு.
""என்னங்க... நான் சொன்னது உங்களுக்கு அதிர்ச்சியா இல்லையா?''
""மொதல்ல காபியை குடிங்க. மத்ததை நிதானமா பேசிக்கலாம்.''
காபியை குடித்து விட்டு, காலி டபராவை ஸ்டூல் மீது வைத்த பாலகிருஷ்ணன், மேல் துண்டால் வாயை துடைத்துக் கொண்டார்.
""நீங்க சொன்னீங்களே... எல்லாம் ஆண்டவன் கையில் இருக்குன்னு, அது நூத்துக்கு நூறு உண்மைங்க.''
""என்ன சொல்றீங்க?''
""நான் கூட, அதை எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு தயங்கிட்டிருந்தேன். நீங்களே வந்து சொன்னப்ப, எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கறது தெரியுமா?''
இப்போது, அதிர்ச்சியாக இருந்தது பாலகிருஷ்ணனுக்கு. முருகானந்தத்தையே வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.
""நீங்க என் பொண்ணை பார்த்துட்டுப்போன அதிர்ஷ்டமோ என்னமோ, பின்னாலயே, வேறு ஒரு வரன் வந்தது. ரொம்ப நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவங்க. பணத்தாசையோ, பொருளாசையோ இல்லாதவங்க. எங்க தாராவை பார்த்ததும், இவதான் அவங்க வீட்டு மருமகள்ன்னு முடிவு செய்துட்டாங்க. பையனுக்கும் பெரிய அரசு உத்தியோகம். பொண்ணு வீட்டாருக்கு, செலவே வைக்க மாட்டேங்கறாங்க. அன்னைக்கு நீங்க... ஒரு வியாபாரம் நடத்துறா மாதிரி, பேசிட்டுப் போனீங்க. அவங்க, அப்படி பேசறதே பாவமுன்னு நினைக்கிறாங்க. இவ்வளவு நல்லவங்களை எப்படி விடுவதுன்னு, நான் தவிச்சுகிட்டு இருந்தப்ப, நீங்களா வந்து, என் வயித்துல பால வார்த்துட்டீங்க போங்க.''
வார்த்தைச் சவுக்கால் சரமாரியான விளாசல்.
திக்கித் திணறிப் போனார் பாலகிருஷ்ணன்.
பேச நா எழவில்லை அவருக்கு.
மெதுவாக எழுந்து நின்றவர், "வருகிறேன்...' என்கிற பாவனையில் தலையை லேசாக அசைத்து, கரம் குவித்து, தெருவில் இறங்கினார்.
ஒன்று மட்டும் அவருக்குத் தெளிவாகப் புரிந்தது. முருகானந்தம், நிர்மலை நிராகரித்தது, அவருடைய இயலாமையால். அவர், தாராவை நிராகரித்தது பேராசையால். மனிதாபிமானம்தான், எத்துணை சக்தி வாய்ந்ததாய் இருக்கிறது? அதற்கு முன் இந்த பொன்னும், பொருளும் எம்மாத்திரம்?
தெருக்கோடியில் திரும்பும்போது, திரும்பிப் பார்த்தார் பாலகிருஷ்ணன்.
வாசலில் கம்பீரமாய் நின்றிருந்தார் முருகானந்தம்.
அவரைப் பார்க்கக்கூட அருகதையற்றவராகக் கூனி, குறுகி தலை கவிழ்ந்து, திராணியின்றி நடக்கத் துவங்கினார் பாலகிருஷ்ணன்.
***

மலர்மதி

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ungalsaadiq - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-மார்ச்-201307:35:10 IST Report Abuse
ungalsaadiq சூப்பர்
Rate this:
Share this comment
Cancel
naresh - chennai  ( Posted via: Dinamalar Android App )
21-மார்ச்-201310:17:09 IST Report Abuse
naresh அருமையான கதை
Rate this:
Share this comment
Cancel
abi - chennai,இந்தியா
20-மார்ச்-201318:48:20 IST Report Abuse
abi இதுக்கு மதமே துணை போஹுதே இது தான் இப்ப பாசியன்
Rate this:
Share this comment
Cancel
sur - Chennai,இந்தியா
20-மார்ச்-201311:05:58 IST Report Abuse
sur இதெல்லாம் எங்க நடக்குது இப்போ ? 20 வருஷம் முன்னாடி எழுதி இருக்க வேண்டிய கதை. இப்போ எல்லாம் யாரு வரதட்சினை குடுத்து கல்யாணம் பண்றாங்க?
Rate this:
Share this comment
Natchammai Mahesh - canton,யூ.எஸ்.ஏ
24-மார்ச்-201302:21:09 IST Report Abuse
Natchammai Maheshஆஸ்திரேலியாவில வேணும்னா இது நடக்காம இருக்கலாம், இந்தியாவில இது இன்னும் நடந்துகிட்டு தாங்க இருக்கு....
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
19-மார்ச்-201301:53:28 IST Report Abuse
GOWSALYA இந்த வரதட்சனை எப்போ இல்லாமல்போகும்?...ஆணையும்,பெண்ணையும்,பெற்றவள் பெண்தானே?......பெண்ணைப் பெற்றவள் பெண்ணாகவும்,ஆண் மேலோகத்திலும் இருந்து குதிக்கவில்லையே......ஆணை எப்படிப் பெற்றோர்கள் செலவுசெய்து படிக்கவைத்தார்களோ,அப்படிதான் பெண்ணின் பெற்றோரும்......இந்த வரதட்சனை என்ற பெயரால் ஆணை சந்தையில் -ஆடு,மாடுகளை விலைபேசி விற்பதுபோல - விற்கிறார்கள்.வெட்கமாக இல்லையா??????
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
17-மார்ச்-201304:30:20 IST Report Abuse
Skv அருமை பெண்ணை பெத்தவங்களே ப்ளீஸ் பென்குட்டிகளை கிணத்துலே தள்ளாதீங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.