வயது ஏற ஏற, உடலும், உள்ளமும் ஓய்வுக்கு ஏங்கும் நிலையில், 73 வயதிலும், வீராங்கனை ஒருவர், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், நடை பந்தயம் என, பல போட்டிகளில், தங்கப்பதக்கங்களை வாங்கி குவித்து வருகிறார்.
கேரளா, ஆலப்புழா அருகே, நூறுநாடு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி, சந்திரமதியம்மா, வயது 73. இவர் சமீபத்தில், எர்ணாகுளம், மகாராஜாஸ் கல்லூரி மைதானத்தில் நடந்த, 35 வயது முதல், 95 வயது வரை உள்ளவர்களுக்காக நடத்தப்பட்ட, 32வது மாநில மாஸ்டர்ஸ் அத்தலிடிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்.
அதில், ஏதாவது மூன்று போட்டிகளில் மட்டுமே ஒருவர் பங்கேற்க முடியும் என்பதால், சந்திரமதியம்மா, நீளம் தாண்டுதல், 5,000 மீட்டர் நடை போட்டி மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவற்றில் கலந்து கொண்டார். இவற்றில், முதலிடம் பெற்று, தங்கப் பதக்கங்களை வென்றார்.
"உடலுக்கும், உள்ளத்திற்கும் ஏது வயது?' என்ற ஆரோக்கியமான கருத்தைக் கொண்ட இவர், தன் சாதனை குறித்து கூறியதாவது:
சிறுவயதில், அரசு பள்ளியில் பயிலும் போதே, விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பேன். அதில், வெற்றியை மட்டும் இலக்காக கொண்டு, கடும் பயிற்சிகளை மேற்கொண்டு, வென்று வந்தேன். இவ்வாறு, விளையாட்டுப் போட்டிகளில், நிறைய தங்கப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வாங்கி குவித்தேன்.
தற்போது வயதாகி வருவதால், மாணவியர், இளம்பெண்கள் பங்கேற்கும் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது. இருப்பினும், என் தகுதிக்கேற்ற, விளையாட்டுப் போட்டிகளில், ஆர்வம் சற்றும் குறையாமல், கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளேன். அதுபோல தான், மகாராஜாஸ் கல்லூரி மைதானத்தில் நடந்த போட்டியிலும் கலந்து கொண்டேன்.
அதில், பல போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம் இருந்தாலும், போட்டி விதிகளின்படி, ஏதாவது மூன்று போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள இயலும் என்பதால், வேறு வழியின்றி, மூன்று போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டேன். நான் பங்கேற்ற, மூன்று போட்டியிலும், தங்கப் பதக்கங்களை வென்றது மகிழ்ச்சியளிக்கிறது.
கடந்தாண்டு இதுபோன்று நடந்த போட்டியில் பங்கேற்று, இரண்டு தங்கங்களையும், ஒரு வெள்ளி பதக்கத்தையும் பெற்றேன். விரைவில், பெங்களூருவில் நடக்க இருக்கும் தேசிய போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என ஆர்வத்துடன், அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். உடலில் வலு இருக்கும் வரை, போட்டிகளில் பங்கேற்று வெல்வேன், என்கிறார், வீராங்கனை சந்திரமதியம்மா.
எந்த சாதனையை நிகழ்த்தவும், வயது ஒரு பொருட்டல்ல, என்பதை, மற்றவர்களுக்கு இவர் நிரூபித்து வருகிறார்.
***
அ.சாந்தப்பன்