அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 மார்
2013
00:00

அன்புள்ள அம்மா அவர்களுக்கு,
எனக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் கணவர், சமுதாயத்தில் அனைவரும் மதிக்கக்கூடிய ஒரு பணியில் உள்ளார். இந்தப் பணி என் திருமணத்திற்குப் பிறகுதான் அவருக்குக் கிடைத்தது. ஒரு நல்ல நிலைக்கு வந்தபின், வேறு ஊருக்கு அவருக்கு மாற்றலாகியது. அப்போது அங்குள்ள அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் (விதவை, 2 குழந்தைகளுக்கு தாய்) என் கணவருக்கு பலவித கடிதங்கள் எழுதி, அவரை மயக்கி விட்டாள்.
அவளை பார்ப்பதற்கு முன் வரை அவர், என்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணிடமும் அதிகம் பேசக் கூட மாட்டார். அவள் சாதாரணமாக என் வீட்டிற்கு, மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வந்து என்னிடம் மட்டும் பேசிவிட்டு போவாள். அவள் கஷ்டங்களை கூறுவாள்.
அவள் நல்லவள் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால், நாங்கள் அங்கு வருவதற்கு முன்பே என் கணவரைப் போல் பணியிலிருந்தவரிடம் (திருமணமாகாதவர்) பழகி, திருமணம் வரை சென்று, நின்று விட்டது. அந்த ஆள் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
நான், என் சொந்தங்களைப் பார்க்க வெளியூர் சென்றிருக்கும் போது, என் வீட்டிலேயே, "எல்லா' விஷயங்களும் நடந்துள்ளன. நான் அவள் எழுதிய கடிதங்களைப் பார்த்துவிட்டு அவளை கன்னாபின்னா என்று திட்டி, "இனி, என் வீட்டிற்கு வரக் கூடாது! இந்த மாதிரி கடிதங்கள் எழுதக் கூடாது...' என்று கூறினேன். அதன் பின் எங்கள் வீட்டிற்கு வருவதில்லை.
எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்திருந்தேன். அவளும் வேறு ஊருக்கு மாற்றப்பட்டாள். (என் கணவரின் நண்பர் மூலம்.) ஆனால், அவள் வீட்டை மட்டும் காலி பண்ணவில்லை. சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் வந்து தங்கி விடுகிறாள்.
என் கணவரின் அலுவலக முகவரி மூலமாக கடிதத் தொடர்பு இருந்திருக்கிறது; எனக்கு தெரியாது. ஒருநாள் அலுவலக முகவரிக்கு வந்த கடிதத்தை வீட்டிற்கு வந்து கொடுத்தனர். அதன் மூலம்தான் இன்னும் தொடர்பு உள்ளது என தெரிந்து கொண்டேன்.
என் கணவர் நண்பராகத்தான் அவளிடம் பழகுகிறார் என்று நினைத்திருந்தேன். ஒரு சந்தேகத்தில் அவரிடம் தனியாக விசாரித்தபோது, ஐந்து வருடமாக அவளிடம் எல்லாத் தொடர்பும் இருந்திருக்கிறதென்று தெரிந்தது.
ஊருக்கு அவர் தனியாக செல்லும்போது, நான் எப்போதாவது ஊருக்கு குழந்தைகளுடன் சென்றிருக்கும்போது, பிறகு, அலுவலகம் செல்வதாகக் கூறி, வாரத்திற்கு ஒரு முறை என்று எல்லாம், அவர்கள் பழக்கம் நீடித்துள்ளது.
இது தெரிந்தவுடன், அவள் எதிரிலேயே என் கணவரை கன்னாபின்னாவென்று அடித்து, "என்னிடம் என்ன இல்லை என்று ஓடினாய்?' என்று கேட்டேன். அவள் காலில் விழுந்து, "என் கணவரை விட்டு விடு...' என்று கெஞ்சினேன். பிறகு, "உனக்கு அவர் வேண்டுமென்றால் கூறி விடு, நான் ஒதுங்கிக் கொள்கிறேன்...' என்று கூறினேன். அவள் வேண்டாமெனக் கூறினாள். "அப்படியென்றால், இனி என் வாழ்க்கையில் நீ குறுக்கிடக் கூடாது...' என்று அவளிடம் கூறினேன்.
என் கணவரிடம், "எந்தப் பெண்ணுடனாவது வாழ விருப்பமிருந்தால் என்னிடம் சொல்லி விடுங்கள். நான் சந்தோஷமாக உங்களை விட்டு ஒதுங்கி விடுகிறேன்...' என்று கூறியிருக்கிறேன்.
அதன்பின், ஒரு வருடமாக அவர் எங்கும் தனியாக செல்வதில்லை. அதன்பிறகு அவளை பார்க்கவில்லை என்று கூறினார். அவரும் ஒழுங்காக என்னிடம் நடந்து கொள்கிறார். அலுவலகத்திற்கு பக்கத்திலேயே எங்கள் வீடு உள்ளது. அலுவலகம் சென்றுவிட்டு உடனே வீட்டிற்கு வந்து விடுகிறார்.
ஆனால், பழைய விஷயங்கள் மனதில் வந்து, "இப்படியெல்லாம் என் கணவர் நடந்து கொண்டுவிட்டாரே...' என்று நினைத்து தினமும் அழுகிறேன். இவ்விஷயம், எங்கள் இருவர் குடும்பத்திலும் யாருக்கும் இதுவரை தெரியாது. இந்த விஷயத்தை அவள் கூறிய உடனேயே தற்கொலை செய்து கொள்ள எண்ணினேன். ஆனால், என் குழந்தைகள் அனாதைகளாவதை நான் விரும்பவில்லை. அவர்களுக்காகவே வெளியில் எல்லாரிடமும் சந்தோஷமாக சிரித்துப் பேசி நடித்துக் கொண்டிருக்கிறேன்.
முன்பெல்லாம் என் கணவர் வெளியில் சென்றால், அவர் வீட்டிற்கு வரும் வரை, வண்டியில் செல்வதால் அடிபடாமல் பத்திரமாக வர வேண்டும் என்பதற்காக, "கடவுளே என் புருஷனை காப்பாற்று' என்று என் வாயில் எப்போதும் முனகிக் கொண்டே இருப்பேன்.
ஆனால், இப்போது அந்த மாதிரியெல்லாம் வருவதில்லை. வாழ்க்கை வெறுத்து விட்டது. அவரை விட்டு தனியாக பிரிந்து வாழ வேண்டும் போல் தோன்றுகிறது. ஆனால், அவர் இதுவரை மனம் திறந்து எதுவும் பேசவில்லை. அவரை விட்டு நான் பிரிந்து விட்டால், அவரால் நிச்சயமாக வாழ முடியாது. அது மட்டும் எனக்குத் தெரியும்.
எனக்கு இந்த நினைவிலிருந்து விடுதலை வேண்டும். எப்படி மறப்பது என்று புரியவில்லை. இன்னும் இரண்டு வருடங்களாவது இந்த ஊரில் இருந்தே ஆக வேண்டும். அதன்பிறகு தான் எங்கள் சொந்தங்கள் இருக்கும் ஊர் பக்கம் மாற்றல் வாங்கிச் செல்ல முடியும். அதுவரை எனக்கு பைத்தியம் பிடிக்காமல் இருக்குமா என சந்தேகமாக உள்ளது.
மீண்டும் அவள் என் வாழ்க்கையில் குறுக்கிட்டு விடுவாளோ என பயமாக உள்ளது. இந்த பயமும், பழைய நினைவுகளும் என்னை அலைக்கழிக்கின்றன. இதற்கு தங்களின் ஆலோசனையை அறிய விரும்புகிறேன்.
இப்படிக்கு, வாழ்க்கையை
தவறவிட்ட ஒரு பெண்.


அன்பு மகளுக்கு —
உன் கடிதம் கிடைத்தது. உன்னுடைய மனக்கலக்கமும், பயமும் எனக்கு மிக நன்றாகப் புரிகிறது. எளிதில் சேர்ந்துவிடும் ஆண்கள் இருக்கும் வரையில், அவர்களை தங்களுக்கு சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பவாத பெண்களும் இருக்கத்தான் செய்வர்.
உன் கணவர் உனக்கு இழைத்தது - மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் தான். இல்லையென்று நான் சொல்லவே இல்லை. ஆனாலும் கண்ணம்மா... இதுபோன்ற சபலபுத்திக்காரர்கள் பலர், தங்களது தவறுகளை உணராமல், தங்களது புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்துவர். மனைவிக்குத் தெரியாமல் எப்படி எல்லாம் - எந்தப் பெண்களிடம் எல்லாம் தவறான முறையில் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டுவர். மனம் மாறுவதோ, செய்த தப்புக்காக மனம் திருந்துவதோ, செய்த தவறுக்காக வருத்தப்படுவதோ கிடையாது. மிஞ்சிப் போனால், "நான் அப்படித்தான் இருப்பேன்; இஷ்டமிருந்தால் இரு... இல்லாவிட்டால் அப்பன் வீட்டுக்கு நடையைக் கட்டு' இப்படி சொல்கிறவர்கள் தான் ஏராளம்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பது போல, ஏதோ ஒரு சில மனிதர்கள் தாம் தெரியாத்தனமாய் சகதியில் கால் வைத்து, சிறுமைப்பட்டு விட்டோமே என்று கூசிக் குறுகி விடுவர். தங்களுக்குள்ளேயே நத்தை ஓட்டுக்குள் சுருங்குவது போல் சுருங்கி, தன் மீது வாரி இறைக்கப்பட்ட அவமானக் கறையை துடைப்பதற்காக, மிகுந்த முயற்சிகள் எடுத்துக் கொள்வர்.
நேரத்தோடு வீட்டுக்குத் திரும்புவதும், தொலைபேசியில் யாருடனும் அதிகம் அரட்டை அடிக்காமலும், நண்பர்களின் வீட்டு கல்யாணம், பிறந்தநாள் விழா போன்ற வைபவங்களுக்கு கண்டிப்பாய் மனைவியையும் அழைத்துக் கொண்டு தான் செல்வான்.
காரணம், அவனுக்குள் தன்னை அறியாமலேயே ஒரு பயம், ஒரு மிரட்சி எல்லாம் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஆபீசில் வேலை இருந்து கொஞ்சம், "லேட்' ஆனாலும் கூட, வீட்டிற்கு வந்ததும் வராததுமாய், படபடப்புடன் தான் தாமதமாக வந்ததின் காரணத்தை தகுந்த ஆதாரங்களுடன் மனைவியிடம் நிரூபிக்கப் பார்ப்பான்.
செய்த குற்றம் நினைவுக்கு வரும்போதெல்லாம், அவன் தானே போய் இந்த மனச்சிறைக்குள் அமர்ந்து, கதவையும் தானே இறுக தாளிட்டு குமுறுவான்... கதறுவான்... வெட்கப்பட்டு தனக்குள் அழுவான்.
அப்படி குமுறி, கதறி, வெட்கி அழுபவன்தான் மனிதன். செய்த தவறை உணராதவன் வெறும் பதர்.
உன் கணவர் ஓரளவுக்கு சூடுபட்ட பூனையாகவே இருக்கிறார். மனசுக்குள் வருத்தப்பட்டு பாரம் சுமந்து கொண்டிருக்கிறார். எந்த தவறுக்கும் மன்னிப்பு என்று ஒன்று உண்டல்லவா? மன்னிக்கத் தெரிந்திருப்பதால் தான் இன்றைக்கும் நம் நாட்டில் பல அதிசயங்கள், அரசியலில் இருந்து அடுப்படி வரையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
மனிதன் திருந்துவதற்கு நாம் சந்தர்ப்பம் அளித்தால் மட்டும் போதாது. அப்படித் திருந்தியவனை, மனசார ஏற்றுக்கொள்ள வேண்டும். நடந்து போனவைகளையே நினைத்து நினைத்து மனம் புழுங்கி, நீயும் அவஸ்தைப்பட்டு, உன் கணவரையும் வார்த்தைகளால் குதறி ரணப்படுத்தாதே! ஊர் மாற்றல் கிடைக்கும்போது கிடைக்கட்டும். வீட்டை வேண்டுமானால் மாற்று. கணவரிடம் இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொள்.
நம் மனசுக்குள் கடவுள் இருக்கிறார். அவருக்கு உருவம் கிடையாது. உன்னிடம் இருக்கும் கடவுள் உன்னைப் போலவும், என்னிடம் இருக்கும் கடவுள் என்னைப் போலவும் இருக்கிறார். புரியவில்லையா?
எப்பொழுது நீ தவறு செய்த கணவனையும் புரிந்து கொண்டு அன்பாய் அரவணைக்கிறாயோ, அப்பொழுது நீ தான் தெய்வம். இதைத்தான் கவியரசர், "மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...' என்று எளிமையாக சொல்லியிருக்கிறார். இறந்த காலத்தை அசை போடாதே... கசப்புத்தான் மிச்சமாகும். எதிர்காலத்தைப் பற்றி பயப்படாதே... கவலை தான் மிச்சமாகும். நிகழ்காலத்தில் மட்டுமே வாழப்பார். ஆம்... இந்தத் தருணத்தை எப்படி உபயோகமாக, நல்ல முறையில் சந்தோஷமாக செலவிட முடியுமோ அப்படி செலவிடு.
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (37)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganapathy Kannan - Singapore,சிங்கப்பூர்
26-மார்ச்-201315:32:52 IST Report Abuse
Ganapathy Kannan "எளிதில் சேர்ந்துவிடும் ஆண்கள் இருக்கும் வரையில், அவர்களை தங்களுக்கு சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பவாத பெண்களும் இருக்கத்தான் செய்வர்._சகுந்தலா அம்மையாரின் இந்தக் கருத்தை அப்படியே புரட்டிப்போட்டு, "ஆண்களைத் தங்களுக்கு சாதகமாக உரயோகப்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பவாத பெண்கள் இருக்கும்வரை, எளிதில் சேர்ந்து விடும் ஆண்களும் இருக்கத்தான் செய்வார்கள்" என்று சொன்னாலும, வரிகள் மிகப் பொருத்தமாகத்தானே இருக்கின்றன. கண்டிப்பதிலும் பெண்களின் தலைகோதி, நெற்றியில் முத்தமிடுவதைப் போல் உள்ளது. நெய்க்குத் தொன்னை ஆதாரமா அல்லது தொன்னைக்கு நெய் ஆதாரமா என்று ஒரு சொல் உண்டு. இவரால் அவர் கெட்டாரா அல்லது அவரால் இவர் கெட்டாரா. ஆகவே யார் செய்தாலும் தப்பு தப்புத் தானே. இதில் ஆண் என்ன, பெண் என்ன. இருவரிலும், நன்மையும் தீமையும் உண்டுதான். அன்பின் உருவான பெண்ணை, தன்னை அடிக்குமாறு பல காரியங்கள் செய்த அந்தக் கணவனின் செயல், உறுத்தவில்லை. ஒருதடவை, நம்பிக்கைத் துரோகத்தாலும், திருட்டுத்தனத்தாலும், வெகுண்டு புருசனை அடித்ததை வைத்து, அவள் மிகப்பெரிய ராட்சசி என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. கணவன் மற்றொரு பெண்ணைத் தேடிப்போனதால் தான், பாவம் அந்தப் பெண்மணிக்கு இந்த நிலை. அதிலும் பல தடவை மன்னித்தும் இறுதியில்தான் அடி கொடுத்திருக்கிறார்- அந்தப் பெண் அப்படி என்னதான் பலமாக அடித்திருக்கப் போகிறாள். கட்டிய மனைவியை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தில், மனைவி கணவனை அடித்தது, ஆணாதிக்க உணர்வுக்குக் கோபம் ஏற்படுத்துகிறது. இந்தப் பெண்ணின் தாலியை அறுத்து, விதவைப் பெண்ணுக்கு வாழ்வளிக்க விரும்புவதை நினைக்கையிலே என்ன சொல்வது என்ற புரியவில்லை. ஆனால் மனம் திருந்திய அந்தக் கணவனுக்கு, தற்சமயம் தேவை மனைவியின் அன்புதான் என்பதில் சந்தேகமில்லை. ஜுலியஸ் சீசரைக் கொன்றபின், புருட்டஸ் நிகழ்த்திய உரையில், சீசர் கொல்லப்பட வேண்டியவன் என்று அங்கிருந்த மக்களுக்கு தோன்றும் அளவுக்கு எண்ணத்தை ஏற்படுத்தினான் என்று படித்த நினைவு, இங்குள்ள சில பதிவுகளைப் படிக்கும்போது ஏற்படுகிறது. அதுபோன்று அப்பதிவுகள் நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துமாயின், டெல்லியில் ஒரு குழு நிகழ்த்திய வன்புணர்வைக்கூட, "பாவம் அந்த ஆறு ஆண்களும். அவர்கள்தான் என்ன செய்வார்கள். மது அருந்தியதால் ஏற்பட்ட மயக்கம், அவர்களைக் காமம் கொள்ளத் தூண்டியது. அதன் விளைவாகவே அந்தப் பெண்ணை தொடவேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பாவம் அவர்கள். அந்தப் பெண்தான் அவர்களை எதிர்த்துப் போராடி, அவர்களை மேலும் வெறி கொள்ளச் செய்துவிட்டாள். அவள் எப்படிப் போராடலாம் அந்த தன் நினைவு இழந்த அந்த அப்பாவி ஆண்களிடம். அதனால் தானே அவளைக் கெடுத்து, அவளையும் அவள் திருமணம் செய்துகொள்ள இருந்த நண்பரையும் கொலையும் செய்யும் நிலைக்கு அவர்களைக் கொண்டு போய் விட்டாள். அந்த அப்பாவிகள் தற்போது சட்டத்தின் பிடியில் தண்டனையை எதிர்நோக்கும், கொலைகாரர்களாய் நிற்கும் நிலைக்கு கொண்டு சென்ற, அந்தப் பெண்மணியை மன்னிக்கவே கூடாது. முடிந்தால் அதுபோன்ற சமுதாய உணர்வு அற்ற அந்த மகளைப் பெற்றதற்காக அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்கு வேண்டுமானால் தண்டனை வழங்கலாம். அந்த அப்பாவி காமுகர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் சொல்லும் மக்களே, அந்தப் பெண் செய்ததை ஏன் சுட்டிக் காட்ட மாட்டேன் என்கிறீர்கள்" என்று நியாயமான முறையில் யோசிக்க ஆரம்பித்துவிடுவோமோ என்று நினைத்தால், உண்மையிலேயே பயமாகத்தான் இருக்கிறது. - அன்புடன் கண்ணன்
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
26-மார்ச்-201314:02:38 IST Report Abuse
pattikkaattaan திருமண பந்தத்தில் கணவன் மனைவிக்கும் , மனைவி கணவனுக்கும் கட்டுப்பட்டவர்கள் , கடமைப்பட்டவர்கள் ... இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையான அன்புடனும் , நம்பிக்கையுடனும் நடந்துகொள்ள வேண்டும் ... இந்த பெண் அவள் கணவனை அடித்தது தவறாக தெரியலாம் ... ஆனால் இது அவள் கணவன் மேல் கொண்டுள்ள அளவுகடந்த அன்பின் வெளிப்பாடு ... அவளால் அவள் கணவன் துரோகம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ... மனைவி இவ்வாறு தவறு செய்திருந்தால் , கணவன் மனைவியை அடிக்காமல் பூஜையா செய்திருப்பார் ?... கணவன் தனக்கு மட்டுமே வேண்டும் என்று நினைப்பது சுயநலமா ? எந்த மனைவியும் தன கணவனை அடுத்தவளுக்கு பங்கிட ஒத்துக்கொள்ள மாட்டாள் ... எப்படி இந்த பெண்ணை ராட்சஷி என்று கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை ...கணவனை ஊர் மேய்ந்து வா என்று அனுப்ப வேண்டுமா ?... இவள் தன் கணவன் மீது 100% நம்பிக்கை மற்றும் தன் பொருள் என்ற பற்று (possasive ) இருந்ததால்தான் அவள் இந்த அளவு தடுமாறுகிறாள் ... திரு மீனவன் சொன்னதுபோல் அவள் கணவன்தான் அவளை சரிசெய்ய முடியும் ..
Rate this:
Share this comment
Cancel
anitha - coimbatore,இந்தியா
26-மார்ச்-201313:30:27 IST Report Abuse
anitha தன்னிலை புரிந்துதான் எழுதினிர்களா ராமன்? உங்கள் மனைவி உங்களை விட்டு வேறு ஒருவனை அவர்களுக்கே உண்டான காரணகளுக்காக நினைக்கலாமா? கொலை செய்பவனுக்கு கூட காரணங்கள் உள்ளன. ஒருவனுக்கு ஒருத்தி என்பது அனைவருக்கும் பொருந்தும். மிருகங்களை போல சுய இன்பத்துக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் நாம் ஓட கூடாது என்பது தான் 6ம் அறிவு. அந்த குழந்தைகளை நினைதிர்களா? உங்கள் பதிவினை பார்க்கும் போது மனம் வேதனை அடைகிறது. மன்னிக்கவும். அந்த பெண் அவள்களது கணவனை மன்னிததே பெரிய விஷயம். அம்மா உங்களது பொறுமையும் சரியான செயல்களும் உங்களுக்கு தங்களது வாழ்கையை திரும்ப அளித்துள்ளது, அதை மகிழ்ச்சியாக ஏற்ற்று வாழ என் வணக்கங்கள்....
Rate this:
Share this comment
gulf.yogi @gmail.com - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
26-மார்ச்-201318:28:30 IST Report Abuse
gulf.yogi @gmail.comஒருவருக்கு சப்போர்ட் பண்ணுவதற்கு முன்னாடி அவரோட கமெண்ட்ஸ் ரேட்டிங் பாருங்கள்.....
Rate this:
Share this comment
Cancel
Sam - Dallas,யூ.எஸ்.ஏ
25-மார்ச்-201320:09:30 IST Report Abuse
Sam Please all comments people read Raman's comment too. This lady beating husband infront of others mean, how much this guy was suffer past 15 years, normally at age of 35 - 45 women stronger than man.
Rate this:
Share this comment
Cancel
nagon - india,இந்தியா
25-மார்ச்-201317:25:21 IST Report Abuse
nagon அன்பிற்குரிய ராமன், நீங்க ஒரு பெண்ணாய் இருந்து யோசித்து பாருங்க, தயவு செய்து அன்பர் மீனவனின் வரிகளை மீண்டும் மீண்டும் படித்து தயவு செய்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஒரு மனைவி ஏமாற்றப்படும்போது அவளின் மனம் தான் ஏமாற்றப்பட்டதற்கான காரணம் தேடித் தடுமாறி அலைகிறது. தான் உடல் ரீதியாக அழகாக இல்லையோ என்ற எண்ணமும், தாம்பத்ய உறவில் கணவனின் எதிர்பார்த்தவிதங்களில் நடந்து கொள்ளவில்லையோ என்றும்தான் அவர்களின் மனம் எண்ணுகிறது.ஏமாற்றப்பட்ட மனைவியின் மனம் தன்னையும் கணவன் தவறான உறவுகொண்ட பெண்ணையும் பலமுறை ஒப்பிட்டு அந்தப் பெண்ணிடம் இருக்கும்,ஆனால் தன்னிடம் இல்லாத உடல் மன ரீதியிலான விஷயங்களை ஆலோசிக்கிறது.தன்னிடம் விடுபட்டு போன விஷயங்களை நிரப்பப் போராடுகிறாள் அந்த மனைவி.......................................இந்த வரிகள் 100% உண்மை.............. நல்ல குடும்பபெண் இப்படித்தான் நினைப்பால் இவளும் நினைக்கிறாள். இப்போதைய அவளது போராட்டம் மீண்டும் கணவனுடன் ஒரு காதலியாக இணைய போராடும் மனம்............................. முடிந்தால் அதற்க்கான வழிமுறைகளை கூறுங்கள் தெரிய வில்லை என்றால் தயவு செய்து கருதுகூறி நோகடிக்கதிர்கள்.............................. என்றும் நட்புடன் நகோன்
Rate this:
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
25-மார்ச்-201313:22:05 IST Report Abuse
சகுனி பிரச்சினைகள் தீர்ந்து இப்போ எல்லாம் சுமுகமா போய்க்கிட்டு இருக்கும்போது இந்த பெண்ணின் கவலைகள் தேவை இல்லாதது .......... மனதளவில் இவர் பாதிக்கப்பட்டிருப்பதால் இன்னும் முடிந்த பிரச்சினைகளையே திரும்ப திரும்ப நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார் ..... தற்போது இவருக்கு தேவை மனநிலை சிகிச்சை ...... வழக்கம் போல இந்த முறையும் ஆண்களை வசை பாடியுள்ளார் சகுந்தலா கோபிநாத் ....... ஆனால் அதற்கு காரணம் ஒரு விதவை பெண் என்பதும் அவர் செய்தது தவறு என்றும் எங்கும் சுட்டிக்காட்டப்படவில்லை ....... ஆம்புளைங்கன்னாலே இப்புடி தான் ...... தப்பு செய்யிரதுக்குன்னே பொறந்தவங்க என்று தீர்ப்பு எழுதும் சகுந்தலா, சம்பந்தபட்ட ஆண் தவறு செய்ய (வலை விரித்து குடி கெடுக்க) காரணமாயிருந்த விதவை ஒரு பெண் என்பதால் சப்பென்று தீர்ப்பை முடித்துவிட்டாரா? ....... அல்லது அந்த பெண் இவனை மயக்க என்ன செய்தாலும் ஆண் தான் ஒழுங்காக இருந்திருக்க வேண்டும் என்று எண்ணி அந்த விதவையை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாரா ......... தவறு செய்த ஆணுக்கு திட்டு ........ சரி ...... தவறு செய்ய தூண்டிய பெண் பற்றி ஒரு கமெண்ட்டும் இல்லை ....... நல்ல தீர்ப்பு ........ சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்து யார்? அவருக்கு என்ன தண்டனை ........ ஊர் ஊராக சென்று அவள் இதே வேலையை செய்து கொண்டிருப்பாளா? ..... ஒ ..... பெண்களின் உணர்ச்சிகள் அடக்கமுடியாதவையா? ....... அதனால் அவர் செய்வது சரியா?
Rate this:
Share this comment
Cancel
bhuvana thangavel - Bangalore,இந்தியா
25-மார்ச்-201312:30:27 IST Report Abuse
bhuvana thangavel வணக்கம் , என் தாயும் இத்தகைய வேதனையை தான் அனுபவித்து கொண்டிருகிறாள். 30 yrs of married life thy both have. Mom 55, Dad 65. ஆனால் என் அப்பா செய்த தவறுக்கு வருந்தவில்லை. மிகவும் திமிராக நடந்து கொள்கிறார், அம்மாவும் தான். இருவருக்கும் தினமும் அடிதடி தகராறு. பிள்ளைகள் எங்களுக்கு மன நிம்மதி இல்லை. அவர்கள் இருவரும் தனியாக இருகிறார்கள் ஊரில். என செய்வது. ப்ளீஸ் give some சுக்கெச்டிஒன். (அப்பா retired வித் பென்ஷன். அம்மா house wife. )
Rate this:
Share this comment
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
27-மார்ச்-201312:00:51 IST Report Abuse
சகுனிஎங்கப்பா ஏற்கெனவே இறந்துட்டாரு ........ அதுனால எங்க வீட்ல இந்த பிரச்சினை இல்ல ...... அதுனால உங்களுக்கு நான் எந்த யோசனையும் சொல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கேன் ...... சாரி சும்மா ஜோக் ... வேணும்னா ஒரே ஒரு யோசனை சொல்லலாம் .... ரெண்டு பேரையும் கொஞ்ச காலத்துக்கு பிரிச்சி புள்ளைங்க வீட்ல 6 மாசம் மாத்தி மாத்தி வெச்சிக்குங்க .... அந்த தற்காலிக பிரிவு அவர்களுக்குள் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணலாம் ...... இல்ல அவுங்க ரெண்டு பேரையும் ஷேத்ராடனம் அனுப்பிடுங்க ...... பல கோவில்கள் ...... உமது பெற்றோரின் பிரார்த்தனைகள் ...... பாவமன்னிப்புக்கு வழி கோலும் ...... பல்வேறு இடங்கள் ....... வாழ்க்கை முறைகள் ...... மற்ற பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த அவலங்கள் ......... இதெல்லாம் பார்த்து ........ நாம் எவ்வளவோ தேவலை என்று எண்ணி இவர்களின் நிலை மாறலாம் ........ ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறலாம் ....... ஒன்று சேரலாம் ....... வயதான காலத்தில் ஒருவருக்கொருவர் நாமே துணை ...... எனக்கு உன் அனுசரணை தேவை என்ற எண்ணம் எழலாம் ....... நல்லது நடக்கலாம் ........ அப்படியும் மாறவில்லையா ......... அதன் பின் விதி விட்ட வழி .............
Rate this:
Share this comment
bhuvana thangavel - Bangalore,இந்தியா
03-ஏப்-201313:44:50 IST Report Abuse
bhuvana thangavelதேங்க்ஸ் :)...
Rate this:
Share this comment
Cancel
praven.dr@gmail.com - UK,யுனைடெட் கிங்டம்
25-மார்ச்-201311:21:01 IST Report Abuse
praven.dr@gmail.com She suffers from depression...her husband can do a great help...Convince her to get treatment or she can visit therapist personally. It isn’t always easy to help the depressed person get treatment, but it can be done, and helping can make you both feel better.
Rate this:
Share this comment
Cancel
sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-மார்ச்-201316:31:18 IST Report Abuse
sunil அருமையான ஆலோசனை கொடுத்துள்ளார்கள் சகுந்தலா மேடம், உங்கள் கணவரை மன்னித்து நடந்தவற்றை மறந்து அவரை ஏதாவது புண்ணிய ஸ்தலத்திற்கு கூட்டி சென்று dettol சோப்பு போட்டு குளிக்க வைத்து அவரை உங்கள் மனதிலும் மஞ்சத்திலும் ஏற்றுக்கொள்ளுங்கள். இனிவரும் காலங்கள் சிறக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
27-மார்ச்-201311:53:26 IST Report Abuse
சகுனிகூடவே கொஞ்சம் பினாயில், ஆசிட் இதெல்லாம் கூட போட்டு குளிப்பாட்டலாம் ......... புண்ணிய ஸ்தலம்னு நீங்க சொல்றது அந்த விதவை வீடு இல்லையே?...
Rate this:
Share this comment
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
27-மார்ச்-201319:48:06 IST Report Abuse
HoustonRajaசுனில் - நீங்கள் சொல்வதை விட LIFEBUOY அல்லது HAMAM தான் இது போன்ற பிரிச்சனைகளுக்கு சிறந்தது....
Rate this:
Share this comment
Cancel
A.Mansoor Ali - Riyadh.Athika.,சவுதி அரேபியா
24-மார்ச்-201311:52:01 IST Report Abuse
A.Mansoor Ali உன் கணவனை பொருத்தவரை ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டு தற்போது யோசிக்கிறார்...மனிதன் தவறுவது இயல்பு...யானைக்கும் அடி சறுக்கும்...அந்த வரிசையில் உள்ளவன் தான் உன் கணவன்.எதோ தவறு நடந்து விட்டது..நீ முன்பைவிட இபோதுதான் உன் கணவனுடன் அதிக அன்பை செலுத்த வேண்டும்.இத்தனை அன்பு செலுத்தும் மனைவிக்கா நான் இத்தனை துரோகம் செய்து விட்டேன் என்று நினைக்க வேண்டும்...அவன் செய்த தவறை நினைத்து அவனே திருந்த வேண்டும்..நீ அந்த அளவுக்கு அன்போடும்,பாசத்தோடும் நடந்து கொள்ள வேண்டும்...சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் நான் உங்களுக்கு என்ன குறை வைத்து இருக்கிறேன் ...என்னிடம் இல்லறம் கசக்கிறதா???நான் சமைத்து போடுவது புளிக்கிறதா??என் நடை உடை பாவனை உங்களை வெறுக்க செய்கிறதா? என்ன குறை என்று செல்லமாக கேள்???அவனுக்கு தேவைபடும்போது எல்லாம் அவன் உடலுக்கு நீ விருந்தாகு???அவனுக்கு சலிப்படையும் வரை இல்லறத்தில் இனிமை கொடு. இல்லற சுகம் தெகிட்டும் அளவிற்கு நீ நடந்து கொள்.... உன் கணவன் நல்ல மனிதன் தான் கவலைபடதே....நீயாக உன் மனதை குழப்பி கொள்ளாதே?? உண்மையில் உன் கணவன் காம வெறியில்.தவறு செய்யவில்லை..சந்தர்ப்ப சூல்நிலை அவனை தவற வைத்திருக்கிறது...ஆகவே மன்னிக்கலாம்...மனம்திறந்து பேசு....திருந்துவான்...
Rate this:
Share this comment
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
27-மார்ச்-201311:52:02 IST Report Abuse
சகுனிஆமா ...... அவ கணவனுக்கு வாயில வெரல வெச்சா கூட கடிக்க தெரியாது ....... ஏதோ தெரியாமல் தவறு நடந்துவிட்டது ...... அதுனால நீ நளாயினி மாதிரி உன் புருஷன் எங்க சொல்றானோ அங்க அவன கூடைல வெச்சி தூக்கிட்டு போ ....... மன்சூர் அலிக்கு ரொம்ப தாரள மனசு போலிருக்கு ....... ஏற்கெனவே திருந்திட்டான் சார் ...... எதுக்கு மறுபடியும் அவன மன்னிச்சி ..... மனம் திறந்து பேசி ..... திருத்தனும்? ........... ரொம்ப கொழப்புறீங்க..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.