நடனத் துறையில் பல இளம் கலைஞர்கள் தனக்கென தனி முத்திரைப் பதித்து வருகின்றனர். அந்த வகையில் சுதர்மா, நன்கு உழைத்து, கடினப் பயிற்சி எடுத்து நடனத் துறையில் காலூன்றி வருகிறார். சுதர்மாவைப் பொருத்தவரை நடனக் கலைக்கு வேண்டிய அனைத்து அம்சங்களும் இறைவன் அருளால் கிடைக்கப்பட்டு அதை நல்ல முறையில் புரிந்து கொண்டு செயல்படுகிறார். ஒவ்வொரு நடன நிகழ்ச்சிகளிலும் அவரது உழைப்பின் முதிர்ச்சி தெரிகிறது.
சுஸ்ஸ்வராவிற்காக அவரது நடன பயிற்சியை சிம்மேந்திரமதியம ராக புஷ்பாஞ்சலியைக் கொடுத்து, திச்ர அலரிப்புடன் பிரதான உருப்படியான வார்ணத்திற்குள் நுழைந்தார். சிவனின் புகழ் பெற்ற வர்ணம், "சுவாமி, நான் உந்தன் அடிமை' எனத் துவங்கும் வர்ணம் தொன்று தொட்டு ஆடப்பட்டு வந்தாலும், ஒவ்வொரு முறை ஆடும்போதும் ரசிகர்களாகிய நமக்கு ஏதாவது ஒரு விஷயம் கருத்தாக கிடைக்கும்.
அந்த வகையில் பக்தியை முன்னிறுத்தி நான் உன் அடிமை எனை காப்பது உன் கடமை என்று உரிமையுடன் இறைஞ்சும் படி அமைந்துள்ள வர்ணத்திற்கு சுதர்மாவின் நடனம் சுகம். அனைத்து ஜதிகளும் மிக வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு சிறப்பாக ஆடினார். இறைவனுக்கு நான் அடிமை மட்டுமல்ல. அந்த அடிமையின் மனமும் உடலும் எப்படி இறைவனை ஆட்கொண்டுள்ளது என்பதை சஞ்சாரியில், உன் நாமஸ்மரனை என் ஜீவனம், உன் நடனமாடும் திருவடி எனக்கு சேவடி. உன் வடிவு கண்டு கண் குளிர்கிறோம்.
அந்த ஆடும் அழகில் மோகம் கொண்டு, நந்தி, ப்ருங்கி, சிவ கணங்கள், இந்திராதி, தேவர்கள், முனிவர்கள் என்ற பலரும் மூழ்கியுள்ளனர். மனிதர்களாகிய எங்களுக்கு நீ அருள் பாலிக்க விரைந்தோடி வா, என் ஈசனை புன்னகை தவழும் இதழுடன் பாபநாசம் சிவனின் அற்பதமான வரிகளுக்கு உயிரோட்டம் கொடுத்து நம் கண்களை பார்த்து ரசிக்க வைத்து பரவசமாக்கினார். சுதர்மாவின் நடனத்திற்கு பக்கபலமாக லக்ஷ்மணன் நட்டுவாங்கம். ஹரிபிரசாத் பாட்டு, நெல்லை கண்ணன் மிருதங்கம், சிகாமணி வயலின் ஆகியோர் கை கோர்த்தனர். இறுதியாக தில்லானா நளினகாந்தி ராக தில்லானா காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி இயற்றியது. மிக வித்தியாசமான அமைப்பில் ஸர்வமங்கள மாங்கல்யே என்று இறைவியை நமஸ்கரித்து அதன் மூலம் நாமடையும் பலனை கொடுக்கும் ஸ்தோத்திர திரட்டிற்கு சரணத்தில் அற்புதமான விளக்கம் கொடுத்து கோடானுகோடி பேர் தவம் செய்து உனை காண காத்து கிடக்கும்போது நான் எம்மாத்திரம், என்பதை அபிநயித்தார்.
ஆனால், என்னையும் தயை கூர்ந்து அருள்பாலிக்க வேண்டும் என்று இறைஞ்சி கேட்டு, தன் விண்ணப்பத்தை தேவிக்கு வைத்து நம்மையும் மனதால் அவருடைய நடனத்தை பாலமிட்டு இணைத்து விட்டார். சுதர்மாவின் சுகமான நடனம், கண்களுக்கு மட்டுமே விருந்தல்ல. நல்ல கருத்தைச் சொன்ன நடனமாகவும் விளங்கியது என்றால் அது மிகையில்லை.
- ரசிகப்ரியா