முதலாளி (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஏப்
2013
00:00

டி.ஆர்.சுந்தரம், வெற்றிப் படங்களையே தந்து கொண்டிருக்கிறார் என்று பெயர் வாங்கினாலும், அவருக்கும் மனக்குறை இருக்கத்தான் செய்தது. தமிழகத்தில் அப்போது பிரபலமாக இருந்த எல்லா நட்சத்திரங்களையும் தன் ஸ்டுடியோவிற்குள் அழைத்து வந்து விட்ட டி.ஆர்.சுந்தரம், ஒருவரை மட்டும் அவரால் தன் படங்களில் நடிக்க வைக்க முடியவில்லை. அவர்தான் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்.
எந்தக் காரணத்தினாலோ, பாகவதருக்கும், இவருக்கும் ஒன்று சேரும் ராசி இல்லாமல் போய்விட்டது. இத்தனைக்கும் பாகவதர் அப்போது சேலம், "சங்கர் பிலிம்ஸ்' எடுத்த, "அம்பிகாபதி'படத்தில் கூட நடித்தார். மாடர்ன் தியேட்டர்சிலும் ஒரு படத்திற்கு ஒப்பந்தம் ஆனார். ஆனால், படப்பிடிப்பு தான் நடைபெறவில்லை. இதற்குப் பின், ஒரு கதையே இருக்கிறது. டி.ஆர்.சுந்தரம், பாகவதரை வைத்து, "பில்ஹணன்' எனும் கதையை படமாக்க முடிவு செய்து, பாகவதரை சேலத்திற்கு வரவழைத்தார். பாகவதர் கதாநாயகன், கே.எல்.வி.வசந்தா கதாநாயகி.
சேலம் வந்த பாகவதர், முதலில் ஸ்டுடியோவைப் பார்க்க விரும்பினார். அவரைத் தன் காரிலேயே அழைத்து போனார் டி.ஆர்.சுந்தரம். ஸ்டுடியோவின் ஒவ்வொரு பிரிவையும் அவருக்கு சுற்றி காண்பித்தார். பாகவதருக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால், டைரக்டரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார். "எனக்கென்று ஒரு தனி, "மேக்கப்' அறை வேண்டும்...' என்றார். "அதற்கென்ன, கட்டிவிட்டால் போயிற்று...' என்ற டைரக்டர், உடனே அதற்கும் ஏற்பாடு செய்யச் சொன்னார். படப்பிடிப்புக்கு இருபது நாட்கள் இருக்கும்போது, பாத்ரூமுடன் அவருக்கு ஒரு மேக்கப் ரூம் தயாரானது. அருகிலேயே கதாநாயகிக்கும் ஒரு மேக்கப் ரூம் கட்டப்பட்டது.
படப்பிடிப்புக்கு நாள் நெருங்கி வந்த வேளையில், திடீரென ஒரு அதிர்ச்சியான செய்தி. "லட்சுமிகாந்தன்' கொலை வழக்கில் பாகவதர் கைது செய்யப்பட்டார்.
இதனால் தான், பாகவதர் மாடர்ன் தியேட்டர் சில் நடிக்க இயலாமல் போனது. ஏஞ்சல் பிலிம்ஸ் கம்பெனியில் இருந்து பிரிந்து வந்த பின், டி.ஆர்.சுந்தரம், மாடர்ன் தியேட்டர்சுக்காக மட்டும் படங்களை எடுத்தார். கூட்டாக யாரையும் முதலில் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால், அவரது பிடிவாதத்தைத் தளர்த்தியவர், எட்டயபுரம் மகாராஜா காசிவிஸ்வநாத பாண்டியன். தன்னுடன், ஸ்டுடியோ அதிபர் கூட்டு சேர்ந்து ஒரு படம் எடுக்க விரும்பினார் மகாராஜா. அவரது வேண்டுகோளை தட்ட முடியாமல், டி.ஆர்.சுந்தரம் எடுத்த படம் தான், "தயாளன்!' பி.யூ.சின்னப்பா நடித்தது. இதற்குப் பின், பலருடன் கூட்டு சேர்ந்து படங்கள் எடுத்தார் டி.ஆர்.சுந்தரம்.
தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை தந்ததோடு நில்லாமல், ஒரு பெரிய ஸ்டுடியோவை திறம்பட நிர்வகித்து வருகிறார் என்பதால், டி.ஆர்.சுந்தரம், பட உலகில் மிகவும் முக்கியஸ்தராகக் கருதப்பட்டார்.
தென் இந்திய பிலிம் வர்த்தக சபை என்றொரு ஸ்தாபனம் சென்னையில் இருந்தது. ஸ்டுடியோ முதலாளிகள், பெரிய டைரக்டர்கள் போன்றோர், இதில் அங்கத்தினர்களாக இருந்தனர். எச்.எம்.ரெட்டி, கே.சுப்பிரமணியம், எஸ்.எஸ்.வாசன் போன்ற பிரபலங்கள், இந்த வர்த்தக சபைக்குத் தலைவர்களாக இருந்தனர். தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும், இங்கே தலைவர் பதவி தரப்பட்டது. அந்த வரிசையில், டி.ஆர்.சுந்தரம், 1949-50ல் தலைவரானார். அப்போது அவர் இச்சபைக்குச் செய்த சேவையில், பலர் நன்மை அடைந்தனர்.
அவர் மீண்டும், 1956-1959ல் தலைவரான போது, ஒரு முக்கியமான வேலையை முடிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டார். பலரால் முயற்சித்தும் முடியாத விஷயமாக இருந்தது அது. அதாவது, பிலிம் சேம்பருக்கு சொந்தக் கட்டடம் கட்டுவது அல்லது வாங்குவது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த இந்த விஷயத்தை முடிக்க, மிகவும் தீவிரமாக இறங்கினார் டி.ஆர்.சுந்தரம். அவருக்கு உதவி செய்ய, பல தயாரிப்பாளர்களும், ஸ்டுடியோ முதலாளிகளும் முன் வந்தனர். அப்போதைய மவுன்ட் ரோட்டில், எச்.எம்.வி.கட்டடத்தின் மூலம், சேம்பருக்காக ஒரு இடத்தைப் பிடித்தார். அதைச் சொந்தமாக்கிக் கொள்ள மனம் இருந்தாலும், இடத்தை வாங்கப் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.
அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டடத்தை வாங்குவதில், இனியும் தாமதம் ஏற்படக்கூடாது என்று நினைத்த டி.ஆர்.சுந்தரம், தன் சொந்தப் பணத்தைக் கொடுத்து, தேவையை நிறைவு செய்து, கட்டடத்தை வாங்கி, அதில் பிலிம் சேம்பர் வர்த்தக சபையை ஸ்தாபித்தார். இது ஒரு மகத்தான சாதனை என்று பட உலகத்தினர் பாராட்டி, வர்த்தக சபைக்கு அருகில் இருந்த தெருவிற்கு, "டி.ஆர்.சுந்தரம் அவின்யூ' எனும் பெயரையும் சூட்டி மகிழ்ந்தனர்.
இதே பிலிம் சேம்பர் கட்டட வளாகத்தில், டி.ஆர்.சுந்தரத்தின் சிலை அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. அந்த சமயத்தில், அவர் ஆற்றிய பேருரையில், டி.ஆர்.”ந்தரம் மீது அவர் வைத்திருந்த பாசம் தெரிந்தது.
சர்வாதிகாரி படத்தை,
டி.ஆர்.சுந்தரம் எடுக்க முடிவு செய்திருந்த போது, அதற்கு அவர் வைத்திருந்த பெயர், "வீரவாள்' என்பதாகும். அதாவது, ஆங்கிலப் படத்தின் நேரடி மொழிபெயர்ப்பு. இந்தப் பெயர் மாறியதற்கு மிகவும் முக்கியமான ஒரு சம்பவம் உண்டு.
"சர்வாதிகாரி' படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்தப் படத்திற்கு, "வீரவாள்' என்று தான் பெயர்.
ஒரு நாள் படப்பிடிப்பு, "முதலியார் தோப்பு' எனும் இடத்தில் ஏற்பாடாகியிருந்தது. அந்தத் தோப்பிற்குள், சிறிய ஓடை எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். அந்த ஓடையைக் கடக்க, அமைச்சர் கைப்பாவையாக இருந்த அஞ்சலிதேவியும், அவரது தோழியான அங்கமுத்துவும், நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வருவர்.
அதே சமயம், பின்னால் சற்று தள்ளி, இன்னொரு வண்டியில் கதாநாயகனான எம்.ஜி.ஆரும், தளபதியான நாகையாவும் வருவர். தளபதி நாகையாவின் மெய்க்காப்பாளர் வேடம் தான் எம்.ஜி.ஆருக்கு! அரசரை சந்திக்க இவர்கள் போவர். முன்னால் செல்லும் அஞ்சலிதேவியின் வண்டியின் சக்கரம் ஓடையின் சேற்றில் சிக்கிக் கொள்ளும். குதிரைகள் இழுக்க முடியாமல் தடுமாறும். எம்.ஜி.ஆர்., எஜமானரிடம் உத்தரவு பெற்று, அஞ்சலிதேவியின் சாரட் வண்டியை நகர்த்த வேண்டும். அந்த சமயத்தில்தான், கதாநாயகன் - நாயகிக்கிடையே, பார்வை பரிமாற்றம் நடைபெறும். அதுவே காதலாக மாறும். இது தான் அன்று எடுக்கப்பட வேண்டிய சீன்!
இந்தக் காட்சியை படமாக்க, நடிக, நடிகையர் மற்ற டெக்னீஷியன்கள் உட்பட எல்லாரும் தயாராக இருந்தனர். வெளிப்புறப் படப்பிடிப்பு என்றால், காலையில் எட்டு மணிக்கெல்லாம் லோகேஷனில் இருக்க வேண்டும். டைரக்டர் டி.ஆர்.சுந்தரம் வந்துவிட்டார். நேரம் போய்கொண்டே இருந்தது. ஆனால், படப்பிடிப்புக்குத் தேவையான இரண்டு சாரட் வண்டிகள் வரவே இல்லை. மணி பத்தாகி விட்டது.
எல்லாமே திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் நடக்க வேண்டும் என்று நினைப்பவர் டி.ஆர்.சுந்தரம். அவர் சொன்ன தேதியில் தான் படமும் ரிலீஸ் ஆகும். அப்படிப்பட்டவருக்கு, இந்தத் தாமதம் எவ்வளவு கோபத்தை உண்டாக்கியிருக்கும் பாருங்கள்.
கோபத்தினால் முகம் சிவக்க, காரை அனுப்பி, புரொடக்ஷன் மானேஜர் வேணுவை அழைத்து வரச் சொன்னார்.
— தொடரும்.

வாரமலர் இதழில் வெளியாகும் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்தின் வாழ்க்கை வரலாறு தொடர் மிகவும் அருமை. என் பால்ய வயதில், நடிக்கும் ஆர்வத்துடன் மாடர்ன் தியேட்டர்ஸ்”க்கு இரண்டு கடிதம் எழுதினேன். இரண்டு கடிதத்திற்கும் உடனுக்குடன் பதில் வந்தது.
எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலும், "தங்கள் சேவையை பயன்படுத்திக் கொள்ள இயலாமைக்கு வருந்துகிறோம்...' என்ற வாசகத்துடன் பதில் வந்தது. கடிதத்தைப் பார்த்ததும், வாய்ப்பு கொடுக்கவில்லையே என்ற ஏக்கம் உடனே நீங்கிவிட்டது.
தங்கள் சேவையை பயன்படுத்திக் கொள்ள இயலாமைக்கு வருந்துகிறோம் என்ற மனிதநேய வார்த்தைகள், என்னை மகிழ்வித்தன. இதற்காகவே, டி.ஆர்.சுந்தரத்தின் நிர்வாகத் திறமையை என் மனம் பாராட்டிக் கொண்டேயிருக்கிறது.
- இப்படி எழுதியிருப்பவர் திரைப்படம் மற்றும் "டிவி' தொடரில் நடித்து வரும் நடிகர் எம்.எஸ்.பெருமாள்.
***

ரா. வெங்கடசாமி

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.