அம்மா என்றால் அன்பு!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஏப்
2013
00:00

பல பலவென பொழுது விடியும்போது, ராஜாவின் கார், காரைக்காலைத் தாண்டி, திருமலைராயன் பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
"இந்தப் பக்கம் தானே, சுந்தரேசன் ஊர் பெயர் சொன்னான்... ஆங்... நிரவி...'
காரை நிறுத்தி, எதிரில் வந்த பைக்காரரிடம் கேட்டான்.
""நிரவின்னு... இங்கே ஒரு ஊர்...''
""அதோ... ரைட்லே ரோடு போகுது பாருங்க, அது வழியே போனா நிரவி தான்,'' என்று சொல்லி பைக்காரர் வேகமெடுக்க, காரை வலப் பக்கமாகத் திருப்பினான் ராஜா.
வளைந்து நெளிந்து சென்ற சாலை வழியே காரை செலுத்தினான். பாதை முடியும் இடத்தில், சட்டென ஊர் தென்பட்டது. பரந்து கிளை பரப்பிய ஆலமரத்தைச் சுற்றி கடைகள். தேனீர் கடை, முடி திருத்தகம், பெட்டிக்கடை என, மிகச் சிலரே நடமாடிக் கொண்டிருந்தனர். ஊர் இன்னும் முழுமையாக விழிக்கவில்லை.
தேனீர் கடையில், தேனீர் வாங்கி, வாசலில் இருந்த பலகையில் உட்கார்ந்தான். சூடாக தொண்டையில் இறங்கிய தேனீர் இதமாகக் கொஞ்சம் தெம்பாக இருந்தது.
""வேறே எதுனா வேணுமா சார்? சூடா இட்லி இருக்கு. பரோட்டா இருக்கு... ரொம்ப தொலைவிலேயிருந்து வர்ற மாதிரி களைப்பா இருங்கீங்க...?'' டீ ஆற்றியபடி கடைக்காரர் கேட்டார்.
""வேண்டாம்... டீ போதும்,'' என்று காசை கொடுத்து விட்டு, கேட்டான்...
""இங்கே பஞ்சாபகேச அய்யர்ன்னு...''
கடைக்காரர் டீ ஆற்றுவதை நிறுத்தி, அவனை ஏறிட்டு பார்த்தார்.
ராஜாவின் சிவந்த நிறத்தையும், முகத்தையும் பார்த்தவர்...
""ஓ... நீங்க அவங்க ஆளா... துஷ்டிக்கு வந்திருக்கீங்களா?''
""துஷ்டியா?'' திடுக்கிட்டான் ராஜா.
""ஆமாம்... அய்யரு நேத்து ராத்திரி காலமாயிட்டாரே... அதுக்குத்தானே வந்திருக்கீங்க? பாவம்... அவரு மகன் வரணும்ன்னு காத்திட்டிருக்காங்க. மகன் வந்து தானே, எல்லா காரியமும் நடக்கணும்.''
பரபரத்தான் ராஜா.
""அவர் வீடு எங்க இருக்கு?''
""அதோ... தெற்காலே சிவன் கோவில் இருக்கில்லே... அதை ஒட்டி ஒரு தெரு போகும்... அதிலே கடைசி வீடு. பார்த்தாலே தெரியும். சாவு வீடாச்சே தெருவிலே சனம் நிற்கும்.''
வேகமாக காரை கிளப்பினான் ராஜா.
அந்த வீடுதான்; பழைய வீடு. திண்ணை காரை பெயர்ந்து, மேலே ஓடுகள் சரிந்து, மூங்கில் குச்சிகள் நீட்டிக் கொண்டிருக்க, இற்றுப் போன தூண்களும், சுவரும், எந்த மழைக்கோ இடிந்து விழ காத்திருந்தன.
வாசற்படியிலும், திண்ணையிலும் இருப்பு கொள்ளாமல் தவித்தபடி ஏழெட்டு பேர். சற்று தள்ளி, டி.வி.எஸ்., வண்டியின் அருகில் பொறுமைஇழந்து, அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி, கடுகடுத்த முகத்துடன் சாஸ்திரிகள்.
காரில் வந்து இறங்கிய ராஜாவை ஏறிட்டு பார்த்தனர்.
""நான்... சுந்தரேசன் நண்பன்,'' என்று தயக்கத்துடன் கூற...
""சுந்தரேசன் வரலையா?'' என்று, காரின் உள்ளே எட்டிப் பார்த்தனர்.
""உள்ளே போங்க... எப்ப தான், அவன் வரப் போறான்... ராத்திரி போன உயிர், எத்தனை நேரம் போட்டு வெச்சிருக்கறது?''
சலிப்பான குரல்களைக் கடந்து, மெல்ல குனிந்து உள்ளே வந்தான். வீட்டின் உட்புறம் இன்னும் மோசமாக இருந்தது. மேடும் பள்ளமுமான தரை. ஓடுகள் உடைந்து, கூரை ஆங்காங்கே பொத்தல் பொத்தலாக பல் இளித்தது.
பஞ்சாபகேச அய்யரை தாழ்வாரத்தில் கிடத்தியிருந்தனர். ஒரு காலத்தில் உயரமும், பருமனுமாக இருந்திருக்க வேண்டும்; சுந்தரேசனும் உயரம் தானே. அவர், இப்போது முகமெல்லாம் பஞ்சு பஞ்சாக அடர்ந்திருக்க, உள்வாங்கிய கண்களும், ஒட்டி உலர்ந்த தேகமுமாக, எலும்புக் கூடாக கிடந்தார்.
தலைமாட்டில் சுருண்டிருந்த அழுக்கு துணி மூட்டையை அசைத்தாள், ஒரு பெண்.
""மாமி... சுந்தரேசனோட பிரண்டாம்; வந்திருக்கார் பாருங்க.''
மூட்டை அசைந்தது. தலையைத் தூக்கி இடுங்கிய கண்களால் பார்த்தாள் கல்யாணி அம்மாள். கணவரைப் போலவே சுருங்கிய மேனி; பஞ்சாகப் பறந்த தலை.
""யாரு... தெரியலையே,'' முனகலாக வந்தது குரல்.
""நான்... சுந்தரேசனோட நண்பன்.''
""நண்பன்னா... கூட வேலை பார்க்கறீங்களா?''
ஒரு வினாடி யோசித்தவன், ""ஆமாம்மா,'' என்றான்.
""சுந்தரேசன் ஏன் வரலை... தந்தி கிடைச்சுது இல்லையா? கிடைச்சு தானே, நீ வந்திருக்கே, போன் செய்தா,சுவிச் ஆப்ன்னு வந்ததாம்... ஏன் இன்னும் அவன் வரலை?''
தொண்டையை செருமிக் கொண்டான் ராஜா.
""அவன்... இப்ப சென்னையிலேயே இல்லை. ஆபீஸ்லே வடக்கே, ரொம்ப உள்ளே அடங்கிய ஊருக்கு அனுப்பியிருக்காங்க. சேதி சொல்ல முடியலை. மொபைல்ல பேச முடியலை, அதான் நான் வந்தேன்.''
அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. எப்படி இத்தனை கோர்வையாக பேச முடிந்தது என்று.
சற்று மவுனித்தாள் கல்யாணி.
""கொஞ்சம் என் கூட வர்றியா...'' என்று, கையூன்றி எழுந்தவள், கொல்லைப் பக்கம் நகர்ந்தாள்; அவளை பின் தொடர்ந்தான் ராஜா.
கொல்லைப்புறம் செடிகள், நீரின்றி காய்ந்து கிடந்தன. கால் வைக்க முடியாமல் இலைச் சருகுகள்.
கிணற்றுச் சுவரில் சாய்ந்து கொண்டாள் கல்யாணி அம்மாள்.
""சுந்தரேசனோட பிரண்டுன்னு சொல்ற... சுந்தரேசன் எங்களை பத்தியும் சொல்லியிருப்பான். இங்கே நிலைமை ரொம்ப மோசமாயிட்டுதுப்பா. வீட்டு பேர்லே கடன் வாங்கி, அடைக்க முடியாமே மூழ்கி விட்டது. அடுத்த மாசம் காலி செய்ய சொல்லிட்டாங்க. சுந்தரேசனுக்கும், அங்கே சொற்ப சம்பளம் தானாம். அதிலேயும் வாயை கட்டி, வயத்தை கட்டி, எங்களுக்கும் ஏதோ அனுப்புவான். போறும் போறாமையுமாதான் இருக்கும்.
""அவனும் தான், பாவம் என்ன செய்வான்... ஏற்கனவே, அரை வயறு தான் சாப்பிடுவோம். மாமாவுக்கும் உடம்பு முடியாமே போயிட்டது. இப்ப ரெண்டு மாசமா பணம் அனுப்பறதில்லே. வேலை பார்க்கற இடத்திலே என்ன பிரச்னையோ, மாமாவோட சாவுக்கு நோய் மட்டும் காரணம் இல்லேப்பா... பசி, பட்டினி... நாங்க சாப்பிட்டே ரெண்டு நாள் ஆறது...''
அழவும் தெம்பில்லாமல் விசும்பினாள் கல்யாணி அம்மாள். நெஞ்சே வெடித்துவிடும் போல இருந்தது ராஜாவுக்கு.
நடுங்கும் மெல்லிய விரல்களால், அவன் கையை பற்றிக் கொண்டாள் கல்யாணி அம்மாள்.
""சொல்லவே சங்கடமா இருக்குப்பா... இப்போ மாமாவைப் கொண்டு போய், நெருப்பு வைக்க கூட கையிலே ஒரு பைசா கிடையாதுப்பா.''
கல்யாணி அம்மாளின் சுருங்கிய கன்னங்களில் கண்ணீர் வழிந்தது.
"சுரீர்' என்றது ராஜாவுக்கு.
""கவலைப்படாதீங்க அம்மா... நான் இருக்கேன். மாமாவுக்கு செய்ய வேண்டியதை குறைவில்லாமே செய்துடலாம். எத்தனை செலவானாலும் பரவாயில்லை. இப்ப நடக்க வேண்டிய காரியம் தான் முக்கியம். சுந்தரேசனுக்காக காத்திருக்க வேண்டாம். ஆக வேண்டியதை பார்ப்போம்.''
கல்யாணி அம்மாளை பரிவுடன் அணைத்தபடியே உள்ளே வந்தான் ராஜா.
பணம் செலவழிக்க ஆள் ரெடி என்று தெரிந்தவுடன், பரபரப்பு ஏற்பட்டது அங்கே. அடுத்த ஒரு மணி நேரத்தில், யாரோ பங்காளி, கொள்ளி போட முன்வர, பஞ்சாபகேச அய்யர் சுடுகாடு நோக்கி பயணமானார்.
வீடு கழுவியதும், புறப்பட தயாரான சாஸ்திரிகளை பிடித்து, திண்ணையில் உட்கார வைத்தான். மறுநாள் செய்ய வேண்டிய சடங்கு என்ன என்று கேட்டு, அதற்கான பணத்தை கொடுத்தான்.
அடுத்த நாள், சுடுகாட்டில் பால் ஊற்றி அஸ்தி சேகரித்தனர். அதன் பின், பத்து நாள் காரியங்களுக்கும், முதல் நாளே பணம் கொடுத்து குறைவில்லாமல் செய்யச் சொன்னான்.
பத்தாம் நாள், ஒன்றன், சவண்டி, சுபம் என்று எல்லாவற்றுக்கும் பார்த்து பார்த்து, பணம் செலவழித்தான். பக்கத்து டவுனில், காரைக்காலில் லாட்ஜில் தங்கியிருந்து, தினமும் இரவு வந்து, மறுநாள் சடங்குக்கு பணம் கொடுத்து விட்டு உடனே திரும்பி விடுவான்.
எல்லாம் முடிந்து தங்கியிருந்த ஓரிரு உறவினர்களும் கிளம்பி விட, கல்யாணி அம்மாள் தனியாக முற்றத்து குறட்டில் உட்கார்ந்திருந்தாள்.
""என்னம்மா... எல்லாம் குறைவில்லாம நடந்து முடிஞ்சிட்டது இல்லே,'' என்று கேட்டபடி, கல்யாணி அம்மாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் ராஜா.
கல்யாணி அம்மாள் கண் கலங்கினாள். ஆதரவுடன், அவன் தோளைப் பற்றிக் கொண்டாள்.
""நீ யாரோ, எவரோ... சுந்தரேசன் வேறே வரலியே, கையிலேயும் காசில்லையேன்னு தவிச்சிட்டு இருந்தப்போ, கடவுள் மாதிரி வந்தே, எல்லாத்தையும் இழுத்துப் போட்டு செஞ்சே, ஒரு வாய் தண்ணீர் கூட இங்கே குடிக்கலை. சுந்தரேசன் வந்திருந்தா கூட இப்படி செஞ்சிருப்பானான்னு தெரியலை... நல்லா இருப்பேடா குழந்தை; பகவான் உனக்கு ஒரு குறையும் வைக்க மாட்டார்.''
சற்று நெகிழ்ந்தான் ராஜா.
""நானும் உங்க பிள்ளைதாம்மா. அவன் இடத்திலே இருந்து செய்ய எனக்கு உரிமை இல்லையா? அதிருக்கட்டும்... மேற்கொண்டு என்ன செய்யப்போறீங்க... என் கூட சென்னைக்கு வந்துடறீங்களா?''
""ஆமாம் பா... நான் கூட அதான் நெனைச்சேன். இனிமே, இங்கே என்ன இருக்கு எனக்கு. சுந்தரசேன் திரும்பி வர்ற வரைக்கும், உங்க வீட்டிலேயே ஒரு ஓரமா ஒண்டிக்கிறேனே.''
""என் வீட்டிலேயா?'' நெளிந்தான் ராஜா.
""கொஞ்ச நாள் தானேப்பா, அப்பறம் எனக்காக, ஒரு ரூம் பார்த்து கொடு. உனக்கு சுமையா இருக்க மாட்டேம்பா. அப்பளம் இடுவேன்; வடாம் பிழிவேன். சென்னையில, இது மாதிரி செய்து நல்லா சம்பாதிக்கலாம்ன்னு சொல்வர். முடிஞ்ச அளவு செய்து, உனக்கு உதவியா இருப்பேன்.''
""உங்க பிள்ளை நான் இருக்கும்போது, நீங்க ஏம்மா கஷ்டப்படணும்? அங்கே ஒரு டீசண்டான ஹோம்ல உங்களை சேர்க்க ஏற்பாடு செய்துட்டேன்.''
""ஹோம்னா... ஆசிரமமா?''
""நீங்க நினைக்கற மாதிரி, அனாதை ஆசிரமம் இல்லைம்மா. வசதியானவங்க கூட, வீட்டுலே பார்த்துக்க முடியாமே, பெரியவங்களை அங்கே தான் சேர்ப்பாங்க. மாசா மாசம் பணம் கட்டிடுவேன். உங்களுக்காக தனி ரூம், போன், அட்டாச்டு பாத்ரூம் "டிவி'ன்னு எல்லா வசதியும் இருக்கும். சுடச்சுட சாப்பாடு, வேளா வேளைக்கு உங்க ரூம் தேடி வரும். அங்கேயே கோவில், பிரார்த்தனை ஹால், பஜனை அப்படீன்னு பொழுதும் நல்லா போகும். வாரா வாரம் மெடிக்கல் செக்கப்பும் உண்டு. அப்பறம், மாமாவோட அஸ்தியை காசியில், கங்கையில கரைக்கவும் ஏற்பாடு செய்துட்டேன். ஹோம்லயே உங்களை பத்திரமா காசிக்கு அழைச்சிட்டு போய் வருவாங்க.''
""இதுக்கெல்லாம் ரொம்ப செலவாகுமே.''
""உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். அது என் பொறுப்பு.''
""ரொம்ப நல்ல மனசுப்பா உனக்கு. இதுக்கெல்லாம் பதிலுக்கு என்னாலே என்ன செய்ய முடியும்? சுந்தரேசன் வந்ததும் உன்னை பத்தி சொல்லணும். எப்ப வருவான்... ரெண்டு மூணு மாசம் ஆயிடுமா?''
""அது... சொல்ல முடியாது, மேலேயும் ஆகலாம்,'' சட்டென எழுந்து வெளியே வந்தான் ராஜா.
அந்த இல்லம் கல்யாணி அம்மாவுக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. எல்லா வசதிகளுடன், கூடமாட பேசிப் பழக அவரையொத்த மூதாட்டிகள். காசிக்குப் போய் வர குரூப்பான பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
""பிடிச்சிருக்கா அம்மா?''
""ரொம்ப பிடிச்சிருக்குப்பா... எனக்காக ரொம்ப மெனக்கடறே. என்னாலே பதிலுக்கு மனசார வாழ்த்தத் தான் முடியும். நல்லா இருப்பே கண்ணா... உங்க அப்பா - அம்மா ரொம்ப கொடுத்து வெச்சவங்க. இப்படி, ஒரு பிள்ளை பெத்திருக்காங்களே, எந்த குறையுமில்லாமே நல்லா இருப்பேடா,'' ராஜாவின் தலையைத் தொட்டு வாழ்த்தினாள்.
அவசரமாக கண்ணீரை துடைத்துக் கொண்டான் ராஜா.
""சரிம்மா... நான் போய் ரிஜிஸ்டர்ல கையெழுத்து போட்டுட்டு வர்றேன்,'' என்று கிளம்பினான்.
மேலாளர் பெரிய லெட்ஜர் புத்தகத்தை பிரித்து வைத்தார்.
""பெயர் சொல்லுங்க.''
""கல்யாணி அம்மா. வயது எழுபது. கணவர் பஞ்சாபகேச அய்யர். இப்ப உயிரோட இல்லை. ஒரே மகன் சுந்தரேசன் அவனும் இறந்துட்டான்.''
""அப்ப... நீங்க யாரு... உறவினரா, நண்பரா?''
""ரெண்டுமில்லே... பார்க்கப் போனா கிட்டத்தட்ட பதினைஞ்சு நாட்களுக்கு முன், அவங்களை யார் எவர்னே எனக்கு தெரியாது.''
மேலாளர் நிமிர்ந்தார்.
""அப்ப எதுக்கு அவங்களுக்காக, முழு பொறுப்பையும் ஏத்துக்கிட்டீங்க?''
""கடன் சார்... நன்றிக் கடன்.''
""புரியலையே...''
""சொல்றேன் சார்... பதினைஞ்சு நாட்களுக்கு முன், சென்னையிலே, நானும் என் மனைவியும், என் அம்மாவோட, கடைத் தெருவுக்கு வந்தோம். கார் கதவை திறந்து, என் அம்மா ரெண்டடி தான் வெச்சுருப்பாங்க. அப்ப அவங்களை நோக்கி ஒரு பைக் சீறிட்டு வந்தது. நான் பதறிப் போய் உறைஞ்சு நின்னுட்டேன். அப்போ அந்த வழியா போன ஒரு இளைஞன், மின்னல் மாதிரி பாய்ந்து, என் அம்மாவை பின்னாலே தள்ளி விட்டான். பைக் வேகமாக கடந்து போயிட்டது. எல்லாம் சில நொடியிலே நடந்தது. என் அம்மா நூல் இழையிலே, உயிர் பிழைச்சதை உணரவே, எனக்கு சில நொடிகள் ஆயிட்டது. நானும், என் மனைவியும் கீழே விழுந்த என் அம்மாவை எழுப்பி உட்கார வைச்சு, அவங்களுக்கு ஒண்ணுமில்லேன்னு தெரிஞ்சதும் தான், அந்த இளைஞனைப் பத்தின நினைவே வந்தது.
""அவனைப் போய் பாருடான்னு என் அம்மா பதறினாங்க. என் அம்மாவை தள்ளி விட்டு காப்பாத்தின அந்த இளைஞன், தடுமாறி ரோட்டிலே விழுந்து மயங்கிக் கிடந்தான். ரோட்டில இருந்த கூரான கல், பின் மண்டையிலே குத்தினதில, ரத்தம் ஏராளமா வெளியேறியிருந்தது. அப்படியே, அவனைத் தூக்கி காரிலே போட்டு, நர்சிங் ஹோமில் சேர்த்தோம். மனைவியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அம்மாவோட அவன் நினைவு திரும்பறதுக்காக காத்திருந்தோம். ரெண்டு மணி நேரம் கழிச்சு கண் விழிச்சான். மெதுவா திக்கி திக்கி அவனைப் பற்றி சொன்னான்.
""அவன் பேர் சுந்தரேசன். அப்பா பஞ்சாபகேச அய்யர். அம்மா கல்யாணி அம்மா. ரெண்டு பேரும் காரைக்கால் பக்கத்திலே நிரவியிலே இருக்காங்க. ரொம்ப கஷ்டப்படற குடும்பம். சுந்தரேசனுக்கும், இங்கே சுமாரான வேலைதான். அதுவும் இப்போ வேலை போயிட்டது. வேறே வேலை தேடிட்டு இருக்கான். நான், அவனுக்கு ஆறுதல் சொன்னேன். "நல்லபடியா பொழச்சு எழுந்திரு. அப்புறம் நானே உனக்கு நல்ல வேலை வாங்கித் தர்றேன். எங்கம்மாவை காப்பாத்தியிருக்கே... அந்த நன்றிக்காக உனக்கு எந்த உதவி வேணாலும் செய்ய காத்திருக்கேன்...' அப்படீன்னு சொன்னேன். அவன் கண் கலங்க என்னை பார்த்து கும்பிட்டான்.
""டாக்டர்கிட்டே அவனை நல்லா கவனிக்கும்படி சொல்லி, மருத்துவ செலவுக்கு பணத்தை கட்டிட்டு வீட்டுக்கு வந்தேன். இரவு பத்து மணிக்கு போன் வந்தது. தலையிலே குத்தின கல் ஆழமாக குத்தினதாலே, மூளை பாதிச்சு, ரத்தக் குழாய் வெடிச்சு இறந்து போயிட்டதாக சொன்னாங்க. பதறிப் போயிட்டேன். "என்னை காப்பாத்தப் போய், அவன் உயிர் விட்டுட்டானே'ன்னு அம்மா புலம்பினாங்க. உடனே என்னை, "அவங்க ஊருக்குப் போய், அவங்க அப்பா - அம்மாவை கையோட கூட்டி வந்து, பிள்ளைக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய ஏற்பாடு பண்ணுன்னு' என்னை விரட்டினாங்க. நானும் ராத்திரியே கார்ல கிளம்பி பொழுது விடிய அவங்க ஊருக்கு வந்தேன்.
""அங்கே போய் பார்த்தா, பிள்ளை இறந்த, அதே நேரத்திலே, அப்பாவும் இறந்து கிடந்தார். அங்கே இருந்த வறுமை சூழ்நிலை, என் மனசை ரொம்ப பாதிச்சிடிச்சி. அதனாலேயே சுந்தரேசன் இறந்ததை, அவங்க அம்மாகிட்டே சொல்லாமலே, அவன் அப்பாவுக்கு செய்ய வேண்டியதை நானே செலவழிச்சு செய்யச் சொன்னேன். அவன் வேலை விஷயமா, வடநாடு போயிருக்கிறதா பொய் சொல்லி, அவங்க அம்மாவையும் கையோட கூட்டி வந்து, உங்க ஹோம்ல சேர்த்துட்டேன்,'' என்று கூறி முடித்தான்.
மேலாளர் சிலையாக உறைந்திருந்தார்.
""அய்யோ... பிள்ளை செத்ததே அவங்களுக்கு தெரியாதா?''
""தெரியாது சார். அங்கே நிரவிக்கு போய் நிலைமையை பார்த்ததும், என் அம்மாவுக்கும், மனைவிக்கும் போன் செய்து விவரத்தை சொல்லி சுந்தரேசனுக்கு, அவங்க முறைப்படி இறுதிக்கடன் செய்ய ஏற்பாடு செய்ய சொல்லிட்டேன். அந்தம்மாவுக்கு பிள்ளை இறந்த சேதி தெரியவே வேண்டாம் சார். ஏதாவது சாக்கு போக்குச் சொல்லி சமாளிச்சுடுவேன். இனி, அவங்களுக்கு பிள்ளையா இருந்து காப்பாத்தறது என் பொறுப்பு.''
மேலாளர் நெகிழ்ந்தார்.
""ரொம்ப பெரிய மனசு சார் உங்களுக்கு. எனக்கென்னன்னு போயிட்டே இருக்கற இந்த காலத்திலே, ஒரு அம்மாவை தத்து எடுக்கற பெரிய மனசு யாருக்கும் வராது சார். இதிலே உங்க பேர், அட்ரஸ், போன் நம்பர் எழுதுங்க, ஆயிரத்திலே ஒருத்தர் சார் நீங்க,'' என்று பாராட்டினார்.
ராஜா எழுத... மேலாளர் அதிர்ந்தார்.
""என்ன சார்... உங்க பேர், ராஜா முகமது இக்பால்ன்னு எழுதறீங்க... நீங்க முஸ்லிமா?''
""ஆமாம்... அதனால் என்ன?''
"" நீங்க முஸ்லிம், அவங்க இந்து பிராமின். நீங்க எப்படி சார் அவங்களை அம்மா...''
தடுத்தான் ராஜா .
""அன்னிக்கி புயல் மாதிரி வந்து, என் அம்மாவை காப்பாத்தினானே சுந்தரேசன்... அப்போ அவன் எங்கம்மா என்ன மதம், என்ன ஜாதின்னு பார்த்துட்டா ஓடி வந்து காப்பாத்தினான்? ஒரு அம்மாவை காப்பாத்தணும்ங்கிற வெறி மட்டும் தானே, அவனை ஓடி வர வெச்சது? நர்சிங் ஹோம்லே கண் விழிச்சதும், அவன் கேட்ட முதல் கேள்வியே, "அம்மா நல்லா இருக்காங்களா? அவங்களுக்கு அடி ஒண்ணும் படலியே'ன்னு தான் கேட்டான். அவன் பார்க்காத பேதத்தை, நான் ஏன் சார் பார்க்கணும்? உலகத்திலேயே அம்மாங்கற சொல்லுக்கு ஜாதி, மதம், இனம் எதுவும் கிடையாது சார். அதுக்கு ஒரே அர்த்தம் அன்பு தான் சார். எங்கம்மாவுக்கு உயிர் கொடுத்த அவனுக்கு, நான் செய்ய வேண்டிய காணிக்கை, கடைசி வரை அவனோட அம்மாவை பாதுகாக்கறது தான் சார். வர்றேன் சார்... எங்கம்மாவை நல்லா பார்த்துக்குங்க,'' சிரித்தபடி வெளியேறினான் ராஜா.
கைக் கூப்பிட்டபடி எழுந்து, விடை கொடுத்தார் மேலாளர்.
***

பானுமதி ராஜகோபாலன்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish Elangovan - chennai,இந்தியா
18-ஏப்-201323:15:05 IST Report Abuse
krish Elangovan நானும் என் மனைவியும் இக்கதையினை படித்துவிட்டு கண் கலங்கிவிட்டோம், அருமையான கதை. படைப்பாளிக்கு நன்றி. கிருஷ்ணகுமாரி இளங்கோவன், சென்னை
Rate this:
Share this comment
Cancel
Anbu Chelvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201318:55:33 IST Report Abuse
Anbu Chelvan ஒரு கதை ஒரு நல்ல அம்மாவை (நரேஷ் அம்மா) பற்றியது இந்த கதை. இரு நல்ல மகன்களை பற்றியது. எல்லாவற்றிலும் அன்பு ஒன்றே நிலையானது. ரொம்ப நன்றி வாரமலருக்கு
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
17-ஏப்-201316:54:11 IST Report Abuse
LAX கடைசி பத்தியில் ராஜாவின் வார்த்தைகள் கண்ணீரை வரவழைத்து விட்டன. மேலாளர் சொன்னது போல் ராஜா ஆயிரத்தில் ஒருவரல்ல லட்சத்தில் ஒருவர். அருமையான கதை. வாழ்த்துக்கள் Ms.பானுமதி ராஜகோபாலன்.
Rate this:
Share this comment
Cancel
snegan - Chennai,இந்தியா
17-ஏப்-201314:08:57 IST Report Abuse
snegan சூப்பர்... அம்மாவுக்கு ஈடே இல்ல பாஸ்.. அதை உணர்ந்த இருவர்..........
Rate this:
Share this comment
Cancel
Mahesh - Chennai,இந்தியா
17-ஏப்-201313:07:24 IST Report Abuse
Mahesh Nice Story...Super...
Rate this:
Share this comment
Cancel
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201301:45:59 IST Report Abuse
Uma மெய்சிலிர்க்க வைத்து கண்கலங்க வைத்த கதை. நிஜமாகவே ஆசிரியர் அருமையா ட்விஸ்ட் கொடுத்துட்டார். ஜாதி என்ன ஜாதி, அன்பும் மனிதாபிமானமும் தானே பெருசு.
Rate this:
Share this comment
Cancel
Sathiyaseelan Periyasamy - Kuwai,குவைத்
16-ஏப்-201320:55:02 IST Report Abuse
Sathiyaseelan Periyasamy அருமையான படைப்பு முழுவதும் படித்து முடிக்கும் முன் கண்கள் குளமாகி கண்களில் நீர் வழிந்தோடியது. மனதை தொட்ட ஒரு அருமையான படைப்பு. அம்மா என்பதன் அருத்தம் முழுமையாக காணக் கூடிய ஒரு சம்பவம் என்றே சொல்ல வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
bala - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
16-ஏப்-201320:34:50 IST Report Abuse
bala super story. caste, amma paasam, varumai, karunai, anbu, anaitthaiyum inaitha padippu. excellent
Rate this:
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
15-ஏப்-201317:15:36 IST Report Abuse
சகுனி நெஞ்சம் தொட்ட சில சிறுகதைகளில் இதுவும் ஒன்று ........ வாழ்த்துக்கள் .......... மனித நேயத்திற்கு முன்பு மதமாவது ......... ஜாதியாவது .........
Rate this:
Share this comment
Cancel
Tamil - tiruttani  ( Posted via: Dinamalar Android App )
15-ஏப்-201308:43:50 IST Report Abuse
Tamil அருமையான படைப்பு கண்களில் நீர் வழிந்தோடியது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.