லஞ்சம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
லஞ்சம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஏப்
2013
00:00

""அப்பா... இன்னைக்கு, வி.ஏ.ஓ., ஆபீஸ் போய், நம்ம வீட்டு பட்டா வாங்க, அப்ளை செய்துட்டு வந்துடறீங்களா? இந்த வீட்டை வாங்கி, ஆறு வருஷம் ஆச்சு. இன்னும் பட்டா வாங்காம இருக்கோம்,'' என்று சொன்ன ராம், தேவையான டாக்குமென்ட்டை, தன் அப்பா கதிரவனிடம் தந்தான்.
எல்லாவற்றையும் ஒருமுறை சரி பார்த்துக் கொண்டார் கதிரவன். வெளியில் வந்து, ஸ்கூட்டியை அவர் உயிர்பித்த சமயம், ""எங்க அவசரமா கிளம்பற?'' என்று கேட்டபடியே, அவருடைய நண்பர் சதாசிவம் வந்தார்.
""வி.ஏ.ஓ., ஆபீஸ் வரைக்கும் போறேன். வீட்டு பட்டா வாங்க வேண்டி இருக்கு.''
""சாமான்யமா பட்டா வாங்கிட முடியுமா? கீழ இருக்கறவன் ஆரம்பிச்சு, மேல இருக்கறவன் வரை இல்ல கொடுக்கணும்,'' நண்பர் சொல்ல, விசுக்கென நிமிர்ந்தார் கதிரவன்.
""என்னது... லஞ்சம் கொடுக்கணுமா? உனக்குத் தான் என்னைப் பத்தி தெரியும் இல்ல... எனக்கு அதெல்லாம் பிடிக்காது.''
""உனக்கு பிடிக்காது. ஆனா, கொடுக்கலைன்னா வேலை நடக்காது. சில நேரத்தில், நம்ம பிடிவாதத்தை தளர்த்திக்கணும்.''
""அதை விடு... ஏதாவது முக்கியமான விஷயமா? வீடு தேடி வந்திருக்க.''
""முக்கிய சமாச்சாரம் ஒண்ணுமில்லை. பார்த்து ரெண்டு நாளாச்சேன்னு வந்தேன். சரி சரி... நீ கிளம்பு. நான் அப்பறம் வர்றேன்.''
சதாசிவம் விடைபெற்று செல்ல, அவர் சொல்லிய லஞ்சம் என்ற வார்த்தை, கதிரவன், மனதில் கோபத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய பர்சை திறந்து பார்த்தார். சில பத்து ரூபாய் நோட்டுகளும், இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களும் கிடந்தன. கையில் பணம் இருந்தால் தானே கொடுப்பதற்கு என்று, குதர்க்கமாய் தோன்றிய நிமிடம், உதட்டில் கேலியாய் ஒரு புன்னகை படர்ந்தது.
கதிரவன் கொடுத்த டாகுமென்ட்ஸ் எல்லாவற்றையும் பார்த்த, வி.ஏ.ஓ., ""என்ன சார்... இவ்ளோ நாளா பட்டா வாங்காம இருந்து இருக்கீங்க? சரி, எதுக்கும் நீங்க ரிஜிஸ்டர் ஆபீசில் இருந்து, கடந்த 13 வருஷத்துக்கான வில்லங்க சான்றிதழ் வாங்கிட்டு வாங்க; செய்திடலாம்,'' என்று சொல்லி, மேற்கொண்டு ஏதோ பேச எத்தனித்த கதிரவனை கண்டுகொள்ளாமல் அடுத்தவரை அழைத்தார்.
மாலை வேலை முடிந்து, வீடு திரும்பிய ராமிடம் விவரம் சொன்னார் கதிரவன்.
""என்னப்பா நீங்க? போனோமா, பணத்தை கொடுத்து காரியத்தை முடிச்சோமான்னு இல்லாம...''
""அவங்க கடமையை செய்ய, நாம ஏன் பணம் தரணும்?''
""நமக்கு வேலை முடியணும்ன்னா, லஞ்சம் கொடுத்து தான் ஆகணும். நீங்க, பணத்தை இறுக்கி முடிஞ்சுகிட்டா, வேலை ஒண்ணும் நடக்காது. தேவையில்லாம, பட்டா கிடைக்கறதுல தாமதம் ஆகும். சரி, நானே வில்லங்க சான்றிதழ் வாங்கறதை பார்த்துக்கறேன். நீங்க போனா சரியா வராது.''
படபடவென பொரிந்துவிட்டு போன மகனை, கோபத்துடன் பார்த்தவர், மனைவி பக்கம் திரும்பினார்.
""என்ன பேச்சு பேசறான் பாரு... இவ்ளோ நாள் பட்டா வாங்காம, இவன் விட்டுட்டு, என்னை குத்தம் சொல்றான். பணம் கொடுத்து முடிக்கணுமாம்.''
""விடுங்க... அவனை பத்தி தான் தெரியும் இல்ல?'' சமாதானப்படுத்தும் குரலில், அவர் மனைவி சுமதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஸ்வீட் பாக்சுடன் உள்ளே வந்தான், அவர்களது இளைய மகன் முகுந்த்.
""என்னடா, இனிப்பு எல்லாம் வாங்கிட்டு வந்து இருக்க...'' ஆர்வத்துடன் கேட்ட அம்மாவை இழுத்து, அப்பாவின் அருகில் நிற்க வைத்து, சாஷ்டாங்கமாய் காலில் விழுந்தான்.
புரியாமல் விழித்த பெற்றோரிடம், ""ஆசிர்வாதம் செய்யுங்க. எனக்கு வேலை கிடைச்சிடுச்சி,'' என்று அவன் சொல்ல, சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விட்டார் கதிரவன்.
""பாரு சுமதி எம்புள்ளைய... வேலை கிடைக்க தாமதம் ஆனாலும், அவன் தகுதிக்கு ஏற்ப, வேலை கிடைச்சிடுச்சு.''
கதிரவன் முகத்தில் பெருமை பொங்கி வழிவதை கண்ட சுமதி, தானும் ஒப்புக்கு தலையாட்டி வைத்தாள்.
""ஏன்டா... பணம் கொடுத்தா தான் கிடைக்கும்ன்னு சொன்ன வேலை, பணம் கொடுக்காமலே கிடைச்சிடுச்சி பாரு. நீ கேட்ட உடனே பணம் கொடுத்து இருந்தால், உன் தகுதிக்கு கிடைக்க வேண்டிய வேலை, பணத்தால் கிடைத்த மாதிரி ஆகி இருக்கும். எல்லாத்துக்கும் லஞ்சம் கொடுத்து சாதிக்கணும்ன்னு நினைக்கக் கூடாது, உன் அண்ணன் மாதிரி.''
அவர் பேசியதை, தன்னுடைய அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ராம், வெளியில் வந்தான்.
""என்னப்பா சொன்னீங்க... இவனுக்கு கிடைத்த வேலை, இவன் தகுதிக்கு கிடைத்த பரிசா?'' குரலில் கிண்டல் வழிந்தோடியது.
""ஆமாம்... அவன் கேட்ட உடனே, நீ பணத்தை கொடுக்க சொன்னே. ஆனா, நான் தரல. இப்போ தானா வேலை தேடி வந்து இருக்கு.''
"தயவு செய்து கொஞ்சம் சும்மா இரு...' என்று, கண்களாலேயே கெஞ்சிய தம்பியை, கண்டுகொள்ளாமல், ""அம்மா, உன் கழுத்தை அழகா அலங்கரிக்கிற உன் ரெட்டை வட சங்கிலி எங்கே?'' என்று கேட்க, சங்கடத்துடன் நெளிந்தாள் சுமதி.
சட்டென்று, கதிரவனுக்கு உண்மை விளங்கியது. லஞ்சம் கொடுப்பது தவறு என்று கொள்கை உடைய தனக்கு, இப்படி ஒரு குடும்பம் வாய்த்ததில் மிகுந்த வேதனை அடைந்தார். தன் பிள்ளைகள் வளர்ப்பில், தான் எங்கே தவறு செய்தோம் என்று யோசிக்க தொடங்கினார்.
மறுநாள், அரைநாள் மட்டுமே விடுப்பு எடுத்த ராம், ரிஜிஸ்டர் ஆபீஸ் போன இரண்டு மணி நேரத்தில், சான்றிதழை வாங்கி வந்து விட்டான்.
""என்ன அதுக்குள்ள வந்திட்ட... சான்றிதழ் கிடைச்சுதா? இல்ல... நான் நாளைக்கு அலையணுமா?'' கதிரவன் குரலில் ஒரு சின்ன கோபமும், அலுப்பும் இருந்தது.
அம்மாவை பார்த்து, ஒரு சின்ன கண்சிமிட்டலுடன், அவரிடம் வில்லங்க சான்றிதழை கொடுத்தான். அவன் என்ன செய்து, அதை உடனே பெற்றிருப்பான் என்று, அவருக்கு நன்கு புரிந்தது. என்ன சொன்னாலும், அவன் திருந்தப் போவதில்லை என்பதை, அவர் நன்கு உணர்ந்திருந்தார். கோபத்தை கட்டுப்படுத்த, அவர் படும்பாட்டை கண்டு, சிரிப்பாக வந்தது ராமுவுக்கு.
""அப்பா... நீங்க நேத்தே, கொடுக்கறத கொடுத்து இருந்தா, நமக்கு இந்நேரம் வேலை முடிஞ்சிருக்கும். இப்ப புரிஞ்சிகிட்டிங்களா?'' என்று சொன்னவனை முறைத்தார்.
""விடுங்கப்பா... தேவையில்லாம டென்ஷன் ஆகாதீங்க. நாளைக்கு நீங்க தான், வி.ஏ.ஓ., ஆபீஸ் போகணும். என்னால, இனிமேல் லீவ் எடுக்க முடியாது. நீங்க தான் பார்த்துக்கணும்.''
எப்போது பட்டா கைக்கு வரும் என்று இருந்தது கதிரவனுக்கு. காலையில் கிளம்பியவரின் சட்டை பையில், அவசரமாய் இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை சொருகினான் ராம்.
""கேட்பதற்கு முன்னாடியே எடுத்து கொடுத்துடுங்க; பட்டா வாங்கறது தான் முக்கியம்,'' என்று, அவன் சொருகிவிட்டு போன ரூபாய் நோட்டுகளை எரிச்சலுடன் பார்த்தார். கிளம்ப எத்தனித்தவரை தடுத்தாள் சுமதி. ""இங்க பாருங்க... கூடவோ, குறைச்சலோ, இன்னைக்கு கண்டிப்பா வேலையை முடிச்சிடுங்க. அவன் கொடுத்ததுக்கு மேல கொஞ்சம் பணம் எடுத்துக்கிட்டு போங்க.''
மனைவி சொன்னதை கேட்டவர் மனதில், "சில நேரத்தில் நம்ம பிடிவாதத்தை தளர்த்திக்கணும்...' என்று நண்பர் சொன்ன வார்த்தைகள் வந்து போனது. எல்லாம் தலையெழுத்து என்று எண்ணிக் கொண்டார்.
வெளியில் வந்தவர் கண்களில், எதிர் வீட்டு குழந்தை சாப்பிடுவதற்கு அடம்பிடிப்பதும், அதன் அம்மா ஏதேதோ சொல்லி, அதை சாப்பிட வைக்க பாடுபட்டு கொண்டிருப்பதும் பட்டது.
""ஹே குட்டி... இங்க தாத்தாவை பாரு! செல்லம் இல்ல, சாப்பிடு,'' என்று கதிரவனும், அந்த குழந்தையை சாப்பிட வைக்க முயன்றார். அந்த குழந்தை மேலும் முரண்டு பிடித்தது.
""கண்ணம்மா, இங்க பாரு. நீ ஒழுங்கா சாப்பிட்டா, உனக்கு தாத்தா சாக்லேட் வாங்கிட்டு வந்து தருவேனாம்.''
சாக்லேட் ஆசையில், குழந்தை தன்னுடைய தாய் கொடுத்த உணவை வேகமாய் உண்டு முடித்து, இவரை பார்த்து எச்சில் வாயுடன் சிநேகமாய் சிரித்தது. குழந்தையின் கன்னத்தில் தட்டியவர், தாத்தா வரும்போது, பாப்பாவுக்கு டைரி மில்க் வாங்கிட்டு வர்றேன். இப்போ, பை சொல்லு தாத்தாவுக்கு,'' என்றபடியே, அந்த குழந்தைக்கு கைகளை ஆட்டி விட்டு கிளம்பினார்.
இவரை அடையாளம் கண்டு கொண்ட, வி.ஏ.ஓ., சற்றே சிரித்து, ""வாங்க சார்...'' என்று, அமர்வதற்கு இருக்கையை காட்டினார். ராம் சொல்லி சொல்லி, இவருக்கு, வி.ஏ.ஓ., காட்டிய பணிவு, அவர் பணத்திற்காக செய்வது போல இருந்தது.
சென்ற வேலை முடிய, சட்டென்று ராம் கொடுத்த பணம் நினைவுக்கு வந்தது. எடுத்து, கதிரவன் கொடுக்க, பதறி விட்டார் வி.ஏ.ஓ.,
""என்ன சார்... செய்றீங்க... முதல்ல பணத்தை உள்ளே வையுங்க,'' ஒன்றும் புரியவில்லை கதிரவனுக்கு. ஒரு வேளை, தான் கொடுப்பது ரொம்பவும் குறைவோ என்று தோன்ற, இன்னுமொரு, 500 ரூபாய் தாளை எடுத்தார்.
""இதான் சார்... நம்ம மக்கள்கிட்ட இருக்கற கெட்ட பழக்கம். எது ஒண்ணுனாலும், லஞ்சம் கொடுத்தா தான் வேலை நடக்கும்ன்னு மக்கள் மனசுல ஊறி போய்டுச்சு.''
வி.ஏ.ஓ., சொன்னது, தன் காதில் சரியாக தான் விழுந்ததா என்று சந்தேகம் வந்துவிட்டது கதிரவனுக்கு.
""தப்பா நினைச்சுக்காதீங்க சார்... பணம் கொடுத்தா தான், பட்டா சீக்கிரம் கைக்கு வரும்ன்னு என் பையன் சொன்னான்... அதான்...'' என்று வார்த்தைகளை மென்று விழுங்கினார்.
""ஏன் சார்... நேர்மையான அதிகாரியே இருக்க மாட்டார்களா? யாரோ ஒருத்தர் ரெண்டு பேரு செய்ற தப்பால், எல்லாருமே அப்படிதான்னு மக்கள் நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க. எங்களுக்குத் தான் மாசம் பிறந்தா, சம்பளம் கைக்கு வந்துடுதே. அப்புறம் ஏன் லஞ்சம் தர்றீங்க?''
வி.ஏ.ஓ., பேசி கொண்டே இருக்க... இப்படியும் ஒரு அதிகாரி இருக்க முடியுமா, இல்லை... இவர் நடிக்கிறாரா என்று தோன்ற, ""இல்லை... நீங்க அன்னைக்கு வில்லங்க சான்றிதழ் வாங்க சொல்லி, வேணும்ன்னே இழுத்தடிச்சீங்களோன்னு,'' கதிரவன் சற்றே இழுக்க... வி.ஏ.ஓ., முகத்தில் கோபம் அப்பட்டமாய் தெரிந்தது.
""அது, பட்டா வழங்க கண்டிப்பா வேணும். அதான் வாங்கிட்டு வரச் சொன்னேன். அதை நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க! உண்மையிலேயே சொல்ல போனா, லஞ்சம் நம்ம கலாசாரத்துலேயே ஊறி போச்சு. அதுக்கு காரணம், நாம லஞ்சம் கொடுக்கற பழக்கத்தை, நம்ம வீட்டுல இருந்தே தொடங்கிடறோம்.''
"என்ன சொல்கிறார் இவர்...' என்று புரியாமல் விழித்தார் கதிரவன்.
""ஆமாம் சார். நம்ம வீட்டில் குழந்தை அடம்பிடிக்கும் போது, அதை ரொம்ப ஈசியா டைவர்ட் செய்து, வேற விஷயங்களில் கவனத்தை திருப்பிடலாம். ஆனா, நாம யாருமே அப்படி செய்றது இல்லை. உடனே, சாக்லேட்டோ இல்லை ஐஸ்கிரீமோ, பொம்மையோ தந்து தானே, சமாதானம் செய்றோம்! அப்படி இல்லன்னா, நீ இதை செய், உனக்கு நான் அதை தர்றேன்னு சொல்றோம்.
""இப்படி, குழந்தை பருவம் முதலே ஏதாவது பொருட்களை எதிர்பார்த்தே வளர்ற பிள்ளைகள், லஞ்சம் கொடுக்கறதையோ, வாங்கறதையோ தப்பா நினைக்கறதே இல்லை. இவர்கள் தானே எதிர்கால இந்தியா? அப்புறம், இந்தியாவில் லஞ்சத்தை ஒழிக்கவே முடியாதுன்னு எல்லாம் பேசறதுல, என்ன அர்த்தம் இருக்கு சார்...''
வி.ஏ.ஒ.,வின் வார்த்தைகளில் இருந்த உண்மை, சம்மட்டி அடிப்பது போல இருந்தது கதிரவனுக்கு. சாக்லேட் தருவதாய் சொல்லி, எதிர் வீட்டு குழந்தையை சாப்பிட வைத்ததை, இவ்வளவு நேரம், தான் பெருமையாய் எண்ணிக் கொண்டிருந்ததை நினைத்து வெட்கினார்.
வீட்டுக்கு வெளியே பின்பற்றிய கொள்கையை, வீட்டிற்குள், தான் பின்பற்றவே இல்லை. அதனால் தான், பிள்ளைகளுக்கு லஞ்சம் தருவது தவறு என்று புரியவே இல்லை என்பதை, மிக தாமதமாக உணர்ந்தார் கதிரவன்.
வி.ஏ.ஓ., ஆபீசில் இருந்து வெளியே வந்தவர், ஸ்கூட்டி சாவிக்காக பேன்ட் பாக்கெட்டில் கைவிட, எதிர் வீட்டு குழந்தைக்காக வாங்கி வைத்திருந்த சாக்லேட் உருகி, கைகளில் பிசுபிசுத்தது. ஒவ்வொருத்தர் வீட்டிலும் தொடங்கும், இந்த லஞ்ச கலாசாரம், பெரும் விருட்சமாய் வளர்ந்து, நாட்டையே விழுங்கி கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவர், அதை தூர எறிந்தார்.
***

நித்யா பாலாஜி

Advertisement