திண்ணை!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஏப்
2013
00:00

பாடலாசிரியர் முத்துக்கூத்தன், "நாடோடி மன்னன்' படத்தில், பானுமதி பாடிய, "சம்மதமா, நான் உங்கள் கூட வர சம்மதமா?' அரசக்கட்டளை படத்தில் இடம் பெற்ற, "ஆடப் பிறந்தவளே ஆடி வா' பாடலையும் எழுதியவர். பின், இவர் வில்லிசைக் கலைஞராகி, தமிழக அரசு சுகாதாரத் துறை சார்பாக ஊருக்கு ஊர் சென்று, "குடும்பக் கட்டுப்பாடு' பற்றி, வில்லிசை நிகழ்ச்சிகள் நடத்தினார்.
தஞ்சாவூருக்கு பக்கத்தில், ஒரு கிராமத்துக்கு நிகழ்ச்சி நடத்த சென்றார். அங்கிருந்த மருத்துவமனை டாக்டர், இவர் குழுவினரை மதிக்கவில்லை. அங்கே, கோவிலுக்குச் சொந்தமான, நாலு கால் மண்டபம் இருந்தது. "ஒலி, ஒளி மைக் செட்டுக்கு மட்டும் ஏற்பாடு செய்யுங்கள். அதற்குரிய பணத்தை கொடுத்து விடுகிறோம்...' என்றதற்கும் யாரும் முன்வரவில்லை. இரவு எட்டரை மணியாகி விட்டது. ஒலிபெருக்கி இல்லாமலே நிகழ்ச்சியைத் தொடங்கி விட்டார். அதன் பின் நடந்ததை அவரே சொல்கிறார்:
நாங்கள் இசைக் கருவிகளை எடுத்து, வீதி வழியே வரும்போது, கல் மண்டப மேடையில் ஏதோ பாட்டுக் கச்சேரி நடக்கப் போகுது என்று விளம்பரமாகி விட்டது.
பக்கத்து வீட்டில் இரண்டு பாய்களை வாங்கி, மேடையில் விரித்துப் போட்டு, வில்லிசைக் கருவியை நாணேற்றிக் கட்ட, அதைக் குடத்தின் மீது தூக்கி வைத்ததும், அந்தப் பகுதி மக்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும். சிறு கூட்டம் கூட ஆரம்பித்தது. பெண்களும், சிறுவர்களும் வந்து குழுமினர்.
"தந்த னத்தோம் என்று சொல்லியே...'
என்று பாடத் தொடங்கியதும், கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் சேர்ந்தது. சினிமாவில் நான் பாட்டு எழுதிய விவரங்களை எடுத்துச் சொன்னதும், தூரத்தில் நின்றவர்களும், ஓரமாக ஒதுங்கி நின்றவர்களும், மேடைக்கு அருகில் வந்து உட்கார ஆரம்பித்தனர்.
"புண்ணிய கோடி
பூங்காவனம் - என்னும்
புருஷன் மனைவி வாழ்ந்து வந்தார்
புள்ளை குட்டி யோட...' என்று சொல்ல ஆரம்பித்ததும் சற்று நேரத்திற்கு முன்வரை வெறிச்சோடிக் கிடந்த அந்த கடைவீதி, இப்போது கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு, மனிதத் தலைகளாகக் காட்சி அளித்தன.
நாங்கள் உற்சாகத்தோடு பாடிக் கொண்டிருந்தோம். என் வில்லின் வெண்கல மணி ஓசை ஒலித்துக் கொண்டே இருக்க. கூட்டம் பெருகி, சிரிப்பும், கைத்தட்டலுமாக களைக் கட்டியது.
குடும்பக் கட்டுப்பாடு நெறி அறியாத புண்ணியகோடியின் மனைவி பூங்காவனம், நிறைமாத கர்ப்பிணியாக தனிமையில் அமர்ந்து, தன் நிலையை நினைத்து வருந்திப் பாடுகிறாள்...
"என்ன சுகத்தைக் கண்டேன் - நான்
என்ன சுகத்தைக் கண்டேன் சும்மா
இத்தனை புள்ளெயெப் பெத்ததைத் தவிர
என்ன சுகத்தைக் கண்டேன் - நான்...'
- நாங்கள் பாடிக் கொண்டிருக்கும்போதே, இரண்டு பேர் வந்து, நாங்கள் உட்கார்ந்திருந்த மேடையின் இருமருங்கிலும் இருந்த கல் தூண்களில், இரண்டு, "டியூப் லைட்'களைக் கட்டினர். பளிச்சென்று அடித்தது வெளிச்சம். ஒரே கைத்தட்டல். தொடர்ந்து பாடுகிறேன்... இல்லை, பூங்காவனம் பாடுகிறாள்...
"சின்ன வயசுலே ஏழுக்குத்
தாயானேன்
செத்துப் பொழைக்கிற
நோயிக்கு ஆளானேன்!
(என்ன சுகத்தை)
போடாத நகையேதும்
போட்டுத்தான் பாத்தேனா
பொறந்த வீட்டுக்குப்
போயித்தான் வந்தேனா
நாடகம் சினிமான்னு
நல்லதைப் பார்த்தேனா
நல்ல நாள் பெரிய நாள்
புதுத் துணி போட்டேனா
(என்ன சுகத்தை)
சிறுவாட்டுக் காசேதும்
சேர்த்துத்தான் வச்சேனா
தெரியாம அஞ்சாறு
சீட்டுத்தான் புடிச்சேனா
கறிமீனு ஆக்கித் தான்
ருசியாகத் தின்னேனா
கச்சைக் கருவாட்டுக்
குழம்பு தான் வச்சேனா...'
இந்தப் பாட்டின் முடிவில், ஒரு மூதாட்டியார் மேடை அருகில் வந்து, ஒரு, "லோட்டா' நிறைய சுடுபாலும், ஒரு பொட்டலத்தில் பனங்கற்கண்டும் வைத்து, என்னிடம் அன்போடு கொடுத்தபடி சொன்னார்... "தம்பி... என் ஊட்டுக் கதையை அப்படியே சொல்றீங்க... ரொம்ப நல்லா இருக்கு. இதைக் குடிச்சிட்டு இன்னும் பாடுங்க...'
இதற்கிடையில், எங்கள் முன் ஒலிபெருக்கிக் கருவி கொண்டு வந்து வைக்கப்பட்டது. அவ்வூர் முஸ்லிம் ஒருவர் செய்த ஏற்பாடு. எல்லாம் எங்கள் கதைப் பாட்டின் மகிமை! நிகழ்ச்சி முடிந்ததும் ஒரே பாராட்டு. ஊர்க்காரர்களே எங்கள் இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்தனர்.
முத்துக்கூத்தன் எழுதிய,"என் கச்சேரிகள்!' நூலிலிருந்து...

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anandhaprasadh - Bangalore,இந்தியா
15-ஏப்-201314:00:40 IST Report Abuse
anandhaprasadh பாட்டு எவ்வளவு எளிமையாக, ஆனால் அர்த்தமுள்ளதாக, அதிகம் குழந்தைகளைப் பெற்றெடுத்ததால் ஏற்படும் பிரச்னைகளைப் பட்டியலிடுகிறது... கிராமியப் பாடல்களின் அழகே தனி...
Rate this:
Share this comment
Cancel
Narendra Bharathi - Sydney,ஆஸ்திரேலியா
14-ஏப்-201310:09:14 IST Report Abuse
Narendra Bharathi வில்லிசை/வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலைகள் இன்று மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன. இது போன்ற அறிய கலைகளைக் காப்பாற்ற/அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல தமிழக அரசு ஆவன செய்தல் வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.