வடசென்னை பகுதியான பெரம்பூரில் இயங்கி வரும் பெரம்பூர் சங்கீத சபா துவக்கப்பட்டு 82 ஆண்டுகள் முடிந்து விட்டன. பிரம்மஸ்ரீ மன்னார்குடி சாம்பசிவ பாகவதர் போன்ற புகழ்பெற்ற கலைஞர்களும் தம் முதல் இசை இன்னிங்சை துவக்க, நேசக்கரம் நீட்டி, ஆதரவு தந்த அமைப்பு இது. அண்மையில் பெரம்பூர் சங்கீத சபாவில், இந்த ஆண்டின் கோலாகல சித்திரை இசை விழா, ஒன்பது நாட்களாக அமர்க்களமாக சிறந்த இசைக் கலைஞர்கள் பங்கேற்க நடந்தது.
இந்த இசை நிகழ்ச்சிகளின் வரிசையில் முதல் தரம் என்று பாராட்டும் வகையில் அமைந்திருந்தது, கலைமாமணி ராதா பத்ரியின் கச்சேரி. சென்னையின் பாரம்பரியக் கலைக்கூடமான கலா÷க்ஷத்திரத்தில் இசை பயின்ற கலைமாமணி ராதா பத்ரி, இசை, நாட்டியத் துறையில் மிகவும் பிரபலமான இசைப் பாடகி. குறிப்பாக, நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு அருமையாக நெளிவு சுளிவுகளுடன் நாட்டிய உருப்படிகளை பாடி நடன நிகழ்ச்சிகளுக்கு மேலும் மெருகு சேர்த்து புகழ்பெற்று வருவதோடு, தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.
சகானா ராகத்தின் சாரத்தை ஒரே வரியில் பிழிந்து உணர்த்திப் பாடிய பின்பு திருவொற்றியூர் தியாகய்யருடைய கருணிம்ப (ஆதி தாளம்) வர்ணத்தை முதல், இரண்டாம் காலப் பிரமாணத்தில் சிறப்பாக நிர்வகித்துப் பாடியது நல்ல ஆரம்பமாக இருந்தது.
நிகழ்ச்சியில் ராதா பத்ரி கையாண்ட இந்தோளம், பிரதான தோடி ராகம் எல்லாமே படு க்ளாஸ் என்று பாராட்ட வைத்தாலும், மனதை முழுதும் கவர்ந்தது. அவர் பாடிய அரிகாம்போதி ராக ஆலாபனை என்று தாராளமாக கூறலாம்.
இந்த அரிகாம்போதி ராகம் 28வது மேள ராகம். பழந்தமிழ் இசையில், இடம்பெற்ற இந்த ராகத்தை பற்றிய குறிப்புகள் கி.பி., 7ம் நூற்றாண்டில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவில், மகேந்திர பல்லவர் காலத்தில், செதுக்கப்பட்ட குடுமியான்மலை கல்வெட்டுகளில் கூட தமிழ் காணப்படுகிறது.
தமிழ் இசையில், "பாலை'களில் இதுவும் ஒன்று என்றும் அறியப்படுகிறது. ராதாவின் மந்த்ரஸ்தாயி ராக சஞ்சாரங்களில் தைவதத்தை நியாஸமாக வைத்து அழகாக பாடினார். பிரதான தோடியில் நல்ல ஆழம் இருந்தது. ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுடைய, ஏமி சேசிதே (தோடி) (ஆதி) கீர்த்தனையில், ஸ்ரீராமரால் நதிகள் அடைந்த பெருமையை விளக்கும் சங்கதிகளின் நயம், ராதா பத்ரியின் குரலினிமையில் பாடி உணர்த்திய விதம், கச்சிதமான ஸ்வரப்ரஸ்தாரம் சிறப்பாக இருந்தது.
நிறைவு பகுதியில், அனுமான் சாலீசா ராகமாலிகை சுலோக பாடல் மனதை நெகிழ வைத்த குரலின் மதுரம் மனதில் இடம் பிடித்ததோடு, மறைந்த பிரபல இசை விதூஷி பாரத ரத்னா டாக்டர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது வரவேற்க வைத்த அம்சம்.
வயலினில் மெருகூட்டிய வாசிப்பு கலைமாமணி டி.கே.பத்மநாபனின் சிறப்பான ஒத்துழைப்புடனும், குறிப்பாக, அனுமந்தபுரம் பூவராகனின் மிருதங்க நாதமும், வாசிப்பும் அருமை. மனம் கவர்ந்தது.
-மாளவிகா