வளர்ப்பு!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2013
00:00

ஐந்தாவது பிளாட்பாரத்தில் கோவை எக்ஸ்பிரஸ், புறப்படத் தயாராக நின்று கொண்டிருந்தது. பயணிகள் அவசர அவசரமாக வந்து, பெட்டிக்குள் ஏறுவதிலிருந்து, வண்டி புறப்படும் நேரம் நெருங்கி விட்டது, என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.
குழாயில் தண்ணீர் பிடித்து வருகிறேன் என்று, இறங்கிய கணவன் ராகவன் இன்னும் வரவில்லையே என்று, ஜன்னலோரம் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் கற்பகம்.
தவறு அவளுடையது தான். பல முறை நினைவுபடுத்தியும், புறப்படும் போது எடுத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு, கடைசியில் மறந்தே போய் விட்டாள்.
எடுத்து வந்த ஆறிப் போன இட்லியை, தண்ணீர் இல்லாமல் சாப்பிட்டால், விக்கல் எடுத்து, பரலோகம் போக வேண்டியது தான். ரயிலிலேயே கிடைக்கும் தண்ணீர் பாட்டிலை வாங்குவது ராகவனுக்கு பிடிக்காது. வெட்டிச் செலவு என்பார்.
அதனால் தான், இதற்கு முன் பயணம் செய்த பயணி ஒருவர் விட்டுச் சென்ற காலிபாட்டிலை எடுத்து கொண்டு, குழாயைத் தேடி போய் விட்டார்.
""இந்தா... தண்ணீர் பாட்டிலை நல்லா மூடி வை.''
பின்னால் குரல் கேட்டு திரும்பினாள். அங்கே ராகவன் நிற்க, ""எப்படி வந்தீங்க, நான் இந்தப் பக்கம் பார்த்துட்டு இருக்கேன்.''
""வண்டி புறப்பட்டுட்டா, ஓடி வந்து ஏர்ற வயசா எனக்கு? அதுதான், குழாயடிக்கு நேரா இருந்த பெட்டியில் ஏறி, நம்ம பெட்டிக்கு வந்துட்டேன்.''
""அட... அப்படியும் வர முடியுமா?''என்று வெள்ளந்தியாய் கேட்டாள் கற்பகம்.
அவள் நாட்டுப்புறம். பஸ்சில் தான், அதிகமாக பயணித்துப் பழக்கம். இப்போது தான் முதல் முறையாக, ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து மகளையும், மருமகனையும் பார்ப்பதற்காக கோவைக்கு செல்கிறாள்.
ஒரு புன்சிரிப்பை மட்டும் உதிர்த்த ராகவன், அவளுக்கு எதிரே அமர்ந்தவர், திடீரென ஆச்சரியத்தில் முகம் மலர்ந்தவராக, ""அங்க பாரு கற்பகம், அந்த பழ வண்டிக்கு பக்கத்துல நிக்கறது, நம்ம சுவாமிநாதன் சார் மாதிரி இல்ல.''
""ஆமாங்க... அவரே தான் கூப்பிடுங்க''
எங்கே இருக்கிறார், என்றே தெரியாத ஒரு நல்ல நண்பரை, இருபது ஆண்டுகளுக்கு பின் பார்க்கின்றனர். அதுவும், பிளாட்பாரத்திலிருந்து ரயில் புறப்படும் நேரம் பார்த்து.
""சுவாமிநாதன்... சுவாமிநாதன்,'' என்று சூழ்நிலையை மறந்து, மகிழ்ச்சியில் சத்தமாக கூப்பிட்டார் ராகவன்.
குரல் கேட்டு திரும்பிய சுவாமிநாதன், ஜன்னலோரம் கம்பிக்கு நடுவே தெரியும் ராகவனைப் பார்த்து, அடையாளம் கண்டு, புன்னகைத்தவாறே ஓடி வந்தார்.
""ராகவன்...எப்படி இருக்கீங்க? அடேயப்பா...பார்த்து எத்தனை வருஷமாச்சு?''
""நலமாக இருக்கேன். காரைக்குடியிலிருந்து, சென்னைக்கு திரும்பி வந்து, பத்து வருஷமாச்சு.''
""அப்படியா...நானும் நங்கநல்லூரை விட்டு, மயிலாப்பூர்ல செட்டில் ஆகி, எட்டு வருஷமாச்சு. ஒரே ஊர்ல இருந்தும் ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்காம இருந்துட்டமே,'' என்று வருத்தத்துடன் கூறினார் சுவாமிநாதன்.
வண்டி நகரத் தொடங்கியதுமே பரபரப்பானார் ராகவன்.
""நான் கோவைக்கு போயிட்டு, அடுத்த வாரம் சென்னைக்கு வந்துருவேன். உங்களை எங்க பார்க்கிறது?'' என்றார் ராகவன்.
வண்டி அதற்குள் வேகம் காட்டியது. இரைச்சல் வேறு.
""ராகவன்... ஆழ்வார்பேட்டை சிக்னல் பக்கத்துல, "அன்னை தெரசா முதியோர் இல்லம்'ன்னு இருக்கு. அங்க தான் நான் இருக்கேன். அவசியம் வாங்க,'' என்றார் சுவாமிநாதன்.
வண்டி இன்னும் வேகம் எடுக்கவே, சுவாமிநாதன் உருவம் பின்னோக்கி நகர, அவர் குரலும் தேய்ந்தது.
ஆனால், "அன்னை தெரசா முதியோர் இல்லம்...' என்று அவர் கூறிய, அந்த வார்த்தைகள் மட்டும், மறுபடியும் ராகவன் காதில் ஒலித்து, மனதை என்னவோ செய்தது.
வண்டியின் வேகத்திற்கு நிகராக, அவரின் எண்ணங்கள் இருபது ஆண்டுகள் பின்னோக்கி சென்றது. நங்கநல்லூர் அமிர்தா அபார்ட்மென்ட்டில் குடியிருந்த அந்த நாட்கள், மிக தெளிவாக கிளாசிக் மேட்னியைப் போல் ஒட ஆரம்பித்தது.
சுவாமிநாதன் பி4 ப்ளாட். ராகவன் பி5 ப்ளாட். பக்கத்து பக்கத்து வாசல்.
எப்போதும் கதவை மூடி வைத்திருக்கும் சென்னை ப்ளாட் வாசிகளை போல் இல்லாமல், நட்பு பாராட்டும் குடும்பங்கள்.
லஞ்சம் வாங்காத நேர்மையான அரசு அதிகாரி சுவாமிநாதன். ஒரே பையன் ரவி. இன்ஜினியரிங் படித்து வந்தான். மனைவி சுந்தரி. அடக்கமான, அன்பான குடும்பத் தலைவி.
சாய்பாபா பக்தரான சுவாமிநாதன் ரத்த தான முகாம், சமூக சேவை என்று எங்கு சென்றாலும், ரவியையும் கூட்டிச் செல்வார். ரவியும்... படிப்பிலும், பண்பிலும் சிறந்தவனாக விளங்கினான். பெரியவர்களிடம், அத்தனை மரியாதை. அப்பா எதிரே உட்கார மாட்டான். வீட்டு வேலைகளில், அம்மாவிற்கு உதவியாக இருப்பான்.
ராகவனுக்கு ஒரே பெண். சங்கீதா. பிடிவாதத்தின் மறு உருவம். அப்பா செல்லம். மகன் இல்லாத குறையை, தன் மகளிடம் அன்பாக பொழிந்தார். எதைக் கேட்டாலும் வாங்கிக் கொடுத்தார்.
"உங்களுக்கு பென்ஷன் வராத தனியார் கம்பெனி வேலை. பிற்காலத்திற்கு நமக்கு என்று ஏதாவது சேமிக்க வேண்டும்...' என்று கற்பகம் எப்.எம்., ரேடியோவாக கத்தினாலும், காதில் வாங்கிக் கொள்ள மாட்டார் ராகவன்.
ராகவன் வீட்டில் ரசம் மட்டும் என்றால், சுந்தரி கூட்டு, பொரியல் என்று கொண்டு வந்து அசத்தி விடுவாள். சுந்தரி வீட்டில் சாம்பார் என்றால், கற்பகம் அப்பளத்தை பொரித்து அடுக்கியபடியே, அவர்கள் வீட்டில் ஆஜராகி விடுவாள். அந்த அளவு நெருக்கமான நட்பு.
"பையனைப் பெற்றால், கல்யாணம் முடிந்த பின், மனைவி பேச்சைக் கேட்டு பெற்றோரை தவிக்கவிட்டு போய் விடுவர், பெண் தான் பாசமாக இருக்கும்...' என்பார்
"எந்த பாசமும் கடைசி காலத்தில் கஞ்சி ஊற்றாது. காசு இருந்தால் தான் மதிப்பு. பிள்ளையை பெற்றால் உரிமையோடு போய் நிற்கலாம்...' என்று வாதிடுவாள் கற்பகம்.
இப்போது இரண்டுமே பொய்யாகி விட்டது.
கோவையில் இருக்கும் சங்கீதா, மயிலாப்பூரில் உள்ள பழைய ப்ளாட்டை விற்று, அவள் பங்கைக் கொடுக்கச் சொல்லிக் கேட்கிறாள். அவள் கணவன் மாடி போர்ஷன் கட்ட வேண்டுமாம். இந்த வயதில், இருக்கும் சொந்த வீட்டை விற்று விட்டு, வாடகை வீட்டிற்கு போக முடியாது. அடிக்கடி பெட்டி தூக்க தனக்கு தெம்பு இல்லை. தனக்கும், அம்மாவிற்கும் பின், இந்த சொத்து உனக்குத் தானே என்று எத்தனையோ எடுத்துச் சொல்லியும், கோபித்துக் கொண்டு ஒரு வாரமாக போன் செய்வதில்லை.
அவளை சமாதானப்படுத்துவதற்குத் தான், ராகவன் தன் மனைவியுடன் கோவைக்கு செல்கிறார். இவர்கள் பாடு தான் இப்படி என்றால், சுவாமிநாதன் ஏன் முதியோர் இல்லம் வந்தார், ரவி என்ன ஆனான்? அப்பாவின் மேல் அத்தனை பாசமும், மரியாதையும் வைத்திருந்தவன் மனைவி பேச்சை கேட்டு மாறும், சராசரி மனிதனாகி விட்டானா?
""என்னங்க... ஒரு மாதிரியாயிட்டீங்க? சுவாமிநாதன் சார் சொல்லிட்டுப் போன விஷயம், உங்க மனசை ரொம்பத்தான் பாதிச்சுருச்சு போல.''
குழப்பத்திலும், வேதனையிலும் மனம் இறுகிப் போன ராகவனின் மவுனத்தை கலைத்தாள் கற்பகம்.
""ஆமா கற்பகம். இந்த ரவி, எத்தனை நல்ல பையனா இருந்தான். எப்படி ... இவங்களால இப்படி மாற முடியுது? பிள்ளையை பெத்தா கண்ணீருன்னு... சினிமாவுல பாடினது உண்மைதானா?'' என்றார் ராகவன்.
""சரி விடுங்க நீங்க கூடத்தான், பொண்ணுங்க பாசமா இருப்பாங்கன்னு அடிக்கடி சொல்வீங்க. இப்ப சங்கீதா நடந்துக்கறது எவ்வளவு வேதனையா இருக்கு. எல்லாம் தலையெழுத்துப் படிதான் நடக்கும். சரி வண்டி புறப்பட்டு ரொம்ப நேரமாகுது. பசி தாங்க மாட்டீங்க... இட்லிய சாப்பிடுங்க'' என்றபடியே டிபன் பாக்சை திறந்தாள் கற்பகம்.
கண்கள் கலங்க கற்பகத்தை பார்த்தார் ராகவன்.
"இருக்கிறதோ, இல்லையோ கடைசி வரைக்கும் ஆதரவா இருக்கிறது கட்டின பொண்டாட்டி தான்...' என்று, அவர் வாய் முணுமுணுத்தது.
""என்னங்க கோவையிலிருந்து வந்ததும், ஒரு நடை முதியோர் இல்லம் போயி, சுவாமிநாதன் சாரையும், சுந்தரியையும் பார்த்து, ரெண்டு வார்த்தை ஆறுதல் சொல்லிட்டு வரணும்,'' என்றாள் கற்பகம்.
""அப்படியே செய்யலாம். நீயும் இட்லி சாப்பிட்டுட்டு, மறக்காம சுகர் மாத்திரை போட்டுக்க,'' என்று கரிசனமாக கூறினார் ராகவன்.
அன்னை தெரசா முதியோர் இல்லம், ஆழ்வார்ப்பேட்டை என்ற பெயர் பலகை தாங்கிய, அந்த பெரிய பங்களாவின் முன், ஆட்டோ வந்து நின்றது.
ராகவனும், கற்பகமும் அதிலிருந்து இறங்கி உள்ளே சென்றனர்.
எங்கு பார்த்தாலும் பசுமை வண்ண மலர்கள், பூத்து குலுங்கும் தோட்டத்தின் நடுவே பெரிய பங்களா. முதியோர் இல்லம் போல் இல்லாமல், ஏதோ சினிமா நடிகரின் பங்களா போல் இருந்தது.
""ஐயா உங்களுக்கு யாரைப் பார்க்கணும்?'' என்று, தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தவர்களை, வெள்ளை சீருடை அணிந்து, கழுத்தில் அடையாள அட்டையுடன் வந்த பெண் முகமலர்ச்சியுடன் விசாரித்தாள்.
சொந்த பெண்ணோ, மருமகளோ கூட காட்ட முடியாத ஒரு பரிவு, அவள் முகத்தில் தெரிந்தது.
""சுவாமிநாதன், இங்க தான் இருக்கறதா சொன்னாரு.''
""ஓ...சென்ட்ரல் ஸ்டேஷன்ல சந்திச்ச நண்பர் மிஸ்டர் ராகவன், நீங்க தானா?''
""ஆமா... என் பேரு ராகவன், இது, என் மனைவி கற்பகம்.''
""வாங்க சார்... உள்ள வந்து ரிசப்ஷன்ல உட்காருங்க. நீங்க வருவீங்கன்னு, சார் மொதல்லயே சொல்லியிருக்காரு. சார் கிச்சன்ல இருக்காரு. போய் கூட்டிட்டு வரேன்,'' எனக் கூறி உள்ளே சென்றாள் அந்தப் பெண்.
அது பழைய பங்களாவாக இருந்தாலும், முற்றிலும் குளிர்சாதனம் செய்யப்பட்டு படுநாகரிகமாக, சுத்தமாக ஒரு கார்ப்பரேட் கம்பெனியை போல இருந்தது.
எங்கு திரும்பினாலும், உண்மையாக நாட்டிற்கு உழைத்த தேசத் தலைவர்களின் படங்கள்... நடுநாயகமாக, அன்னை தெரசா கைகூப்பி வரவேற்றுக் கொண்டிருந்தார்.
குடிக்கத் தண்ணீரும், பின்னால் சூடான காபியும் வந்தது.
""வாங்க ராகவன்... வாம்மா தங்கச்சி... காபி சாப்பிட்டீங்களா? க்ளோஸ் சர்க்யூட் கேமராவுல, நீங்க ரெண்டு பேரும் வர்றதைப் பார்த்துட்டு தான், நானே என் கையால காபி போட்டு அனுப்பினேன். இருந்தாலும், அந்த நாள்ல நீங்க எனக்கு கொடுத்த காபி மணம் வராது,'' என படபடவென்று பேசிய சுவாமிநாதன் கள்ளமில்லாமல் சிரித்தார்.
""சுவாமிநாதன், கிச்சன்ல நீங்களா?''
""ஆமாண்ணே...உங்களுக்கு பால் காய்ச்சக் கூடத் தெரியாதுன்னு, சுந்தரி கிண்டல் செய்யுமே... நீங்க எப்படி?''
""தங்கச்சி... தேவை வரும் போது, எல்லாமும் கத்துக்க வேண்டியது தான். அதுவும் இல்லாம, இது நான் நடத்தற இலவச முதியோர் இல்லம். நூறு பேர் தங்கி இருக்காங்க. இரண்டு சமையல்காரங்க இருந்தாலும், டேஸ்ட் பார்க்காம நான் பரிமாற அனுமதிக்க மாட்டேன். வயசானவங்க... ஆதரவு இல்லாம தானே இங்க வர்றாங்க. அவங்களுக்கு வாய்க்கு ருசியா போடறது, என் கடமை இல்லையா?''
"முதியோர் இல்லம் சொந்தமா நடத்துறாரா?' புரியாமல் ஒருவருக்கொருவர் பார்ததுக் கொண்டனர் ராகவனும், கற்பகமும்.
""அண்ணே...சுந்தரி...'' என இழுத்தாள் கற்பகம்.
""அவ ஐந்து வருஷத்துக்கு முன்னால, ரெண்டு நாள் காய்ச்சல் வந்து படுத்தவ தான்.. என்னை தனியா விட்டுட்டு போயிட்டா.''
கண்கலங்கினார் சுவாமிநாதன். அவருக்கு சுந்தரி என்றால், அத்தனை பாசம்.
""சாரி... சுவாமிநாதன், ஆமா ரவி எங்கே? அவன் உங்களை கவனிச்சுக்கலாம் இல்ல?'' என்றார் ராகவன் கேள்வியாக.
""நல்லா சொன்னீங்க போங்க...என் சுந்தரி போனதுக்கு பின், நடை பிணமா இருந்த என்னை, இந்த அளவுக்கு சுறுசுறுப்பான மனுஷனாக்கினதே, ரவி தான். பாவம் எனக்காக, அவன், அமெரிக்காவில பார்த்துட்டு இருந்த பெரிய வேலையை உதறிட்டு, பொண்டாட்டியோட இங்க வந்துட்டான். இந்த பழைய பங்களாவை, ஐந்து கோடி ரூபாய் கொடுத்து வாங்கி, ஒரு முதியோர் இல்லமும் ஆரம்பிச்சுக் கொடுத்தவனே அவன் தான். நாங்க எல்லாம் ஒண்ணாத்தான் இங்கயே தங்கியிருக்கோம்.''
""சொந்தமா சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சு நடத்தறான் ரவி. தி.நகர்ல தான் ஆபீஸ். இந்த முதியோர் இல்ல நிர்வாகத்துக்கு ரவியும், அவன் மனைவி ரீட்டாவும், ரொம்ப <உதவியா இருக்காங்க.''
பேசிக் கொண்டிருக்கும் போதே, ரவியும் அவனின் அமெரிக்க மனைவி ரீட்டாவும், அங்கே வந்தனர்.
""வணக்கம் அங்கிள். வணக்கம் ஆன்ட்டி...ரீட்டா, இவங்க எங்க பேமிலி நண்பர்கள். அவங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்க.''
அமெரிக்க மருமகள், "ஹாய்' என்று சொல்லாமல், இந்திய முறைப்படி கீழே மண்டியிட்டு நமஸ்கரித்தாள்.
""ஒரு குறையும் இல்லாம பிள்ளை குட்டியோட நூறு வருஷம் வாழணும்மா,'' மனதார வாழ்த்தினர் ராகவன் தம்பதியினர்.
""பிறந்து, வளர்ந்தது அமெரிக்காவா இருந்தாலும், ரீட்டாவுக்கு நம்ம இந்தியக் கலாசாரம் ரொம்ப பிடிக்கும். பெரியவங்ககிட்ட நல்ல மரியாதை, யாராவது வந்து உதவின்னு கேட்டா... கையில் இருக்கறதை எடுத்து தர்ற தாராள மனசுன்னு, மொத்தத்துல என் மருமக ஒரு 24 கேரட் தங்கம். அதுனால தான் ஜாதி, மதம், நாடுன்னு எதுவுமே பார்க்காம, ரவி ஆசைப்பட்ட ரீட்டாவை மறுக்காம கல்யாணம் செஞ்சு வைச்சேன்.''
மாமனார் புகழ்ந்ததும், ரீட்டாவின் சிவந்த கன்னம், இன்னும் வெட்கத்தால் சிவந்தது.
ராகவன் எழுந்து, ரவியின் கையைப் பிடித்துக் கொண்டார்.
""ரவி, உங்கப்பா முதியோர் இல்லத்துல இருக்கேன்னு சொல்லிட்டு போனதும், உன்னைப் பத்தி தப்பா நினைச்சுட்டேம்ப்பா... என்னை மன்னிச்சுக்க... அப்பாவை உங்க கூட வச்சிட்டு இருக்கிறதை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்குப்பா.''
""தப்பு அங்கிள்... நான் தான் அப்பா கூட இருக்கேன்.''
""இருந்தாலும், சொந்த அப்பா, அம்மாவையே வச்”க்க யோசனை செய்யற இந்தக் காலத்துப் பசங்க மத்தியில, நீ நூறு அப்பா அம்மாவை வச்சி, ஆதரிக்கிறேயே... அதுக்கு ரொம்ப பெரிய மனசு வேணும்.''
""பை அங்கிள்... பை ஆன்ட்டி அவசரமா கம்பெனியில மீட்டிங் இருக்கு, அடிக்கடி வாங்க நம்ம அபார்ட்மென்ட் பழைய கதைகளை பேசலாம்.''
சிரித்தபடியே ரவியும், ரீட்டாவும் காரில் ஏறிச் சென்றனர்.
""ராகவன், பசங்களை படிப்பு, உத்தியோகம் சம்பாத்தியம்ங்கிற சுயநல வட்டத்துக்குள்ள, வளர்க்காமல். மனித நேயம், சமுதாய சிந்தனையோட வளர்க்கணும். அப்ப தான் அவங்க நம்மையும், இந்த சமுதாயத்துல, ஒரு அங்கமா பார்த்து, கடைசி காலத்துல அனுசரணையா இருப்பாங்க. கண்ணுக்கு தெரிந்த மனிதர்களை நாம நேசிக்க முடியலைன்னா, கண்ணுக்குத் தெரியாத கடவுளை, எப்படி நேசிக்க முடியும்ன்னு அன்னை தெரசா அடிக்கடி கேட்பாங்க, '' என்று ஆணித்தரமாக பேசினார் சுவாமிநாதன்.
""ஆமா சுவாமிநாதன். நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. உங்க வளர்ப்பு தான் ரவியை, சமுதாயமே கையெடுத்துக் கும்பிடற அளவுக்கு, ஒரு மனிதனாக்கியிருக்கு,'' என்றார் ராகவன்.
***

கோவை அனுராதா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ksv - chennai,இந்தியா
07-ஜூன்-201314:37:06 IST Report Abuse
ksv மனதை நெருடிய கதை மிகவும் பிடித்தது நன்றி
Rate this:
Share this comment
Cancel
Prabhakar Manohar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜூன்-201316:43:25 IST Report Abuse
Prabhakar Manohar நல்ல அற்புதமான படைப்பு - ம.பிரபாகர்- அபு தபி
Rate this:
Share this comment
Cancel
Narayanan Gopalan - Chennai,இந்தியா
03-ஜூன்-201310:25:32 IST Report Abuse
Narayanan Gopalan குட் கோவை அனுராதா சார் என் இப்போதெல்லாம் உங்களை நாடகங்களில் பார்க்க முடிவதில்லை ?
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
03-ஜூன்-201302:53:19 IST Report Abuse
GOWSALYA அனைத்து இளைய சமுதாயமும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு நல்ல கதை.....அதுவும் அன்னை திரேசாவின் கருத்துக்களுக்கும் நன்றிகள் பல.....
Rate this:
Share this comment
Cancel
bala - puduvai  ( Posted via: Dinamalar Android App )
02-ஜூன்-201318:13:08 IST Report Abuse
bala super story hats off. I love it
Rate this:
Share this comment
Cancel
gvvrajan - mumbai,இந்தியா
02-ஜூன்-201315:15:52 IST Report Abuse
gvvrajan அழகான கற்பனை
Rate this:
Share this comment
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
02-ஜூன்-201314:37:25 IST Report Abuse
chennai sivakumar உள்ளத்தை தொடும் கதை.இக்கால இளைங்கர்கள் கண்டிப்பா படிக்க வேண்டிய கதை.
Rate this:
Share this comment
Cancel
shantha - Mumbai, Maharashtra,இந்தியா
02-ஜூன்-201313:20:10 IST Report Abuse
shantha எல்லோருமே ரவி மாதிரி இருந்துவிட்டால் அநாதை இல்லங்களே இருக்காது
Rate this:
Share this comment
Cancel
S.Ravi - Brisbane,ஆஸ்திரேலியா
02-ஜூன்-201303:38:53 IST Report Abuse
S.Ravi அற்புதமான கதை, வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.