அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2013
00:00

அன்புள்ள தோழிக்கு —
நான் ஒரு டீச்சர். நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பெற்றோரால் சீரிய முறையில் வளர்க்கப்பட்டவள். ஒரு நல்ல குடும்பத்தில், நல்லவர் என, என் பெற்றோர் பார்த்து முடிவு செய்தவருக்கு வாழ்க்கைப்பட்டு, இன்று நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அபலை நான்.
பிள்ளைகள் கல்லூரி பயிலும் வயதில் இருக்கின்றனர். நான் நல்ல பர்சனாலிட்டி உடையவள். யாரும் 35 வயதிற்கு மேல் மதிக்க மாட்டார்கள். இன்னும் நரை கூட தோன்றவில்லை; அப்படி ஒரு தோற்றம்.
சிறந்த முறையில் குடும்பத்தை, கணவனை, குழந்தைகளைப் பேணி, இப்படி ஒரு மனைவி யாருக்கு வாய்க்கும் என, உடன் பணியாற்றுபவர்கள், உறவுகள், நண்பர்கள் என, எல்லாராலும் பாராட்டுப் பெற்று வருபவள்.
சமையல் எக்ஸ்பர்ட்; கலைகளில் நாட்டம் அதிகம்; தையல், பாட்டு, பின்னல், வீட்டு அலங்காரம் என, எல்லாவற்றிலுமே தனி முத்திரை பதிப்பவள்...
சரி பிரச்னைக்கு வருகிறேன்...
என் கணவர் எல்லாவற்றிலும் எதிர்மறையான குணம் கொண்டவர். மனிதர்களாகிய நாம், நம்மில் அனேகர் அழகை ஆராதிக்கிறோம். ஆனால், இவரோ அசிங்கத்தை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுபவர். இவரது அபூர்வமான குணத்தால் அடியோடு ஆடிப்போய் இருக்கிறேன்.
இவர் உறவினரிடையே நல்ல பேர் பெற்றிருக்கிறார். காரணம், இவரால் நான் அனுபவிக்கும் கொடுமையை பிறரிடம் சொல்லாமல் மூடி மறைத்ததுதான். ஏனென்றால், இது வெளியில் பெற்ற தாயிடம் கூட சொல்ல முடியாத அவலம்.
ஆரம்ப காலங்களில் என் சகோதரிகளின் திருமணம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற கவலையாலும், தற்போது வளர்ந்து விட்ட பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தாலும் வாயிருந்தும் ஊமையாய், நடைபிணமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
கொஞ்சம் கூட ரசனையே இல்லாதவர்; முரட்டுத்தனமும், மூர்க்கப் புத்தியும் கொண்ட அறிவீலி; படு கோபக்காரர். படுக்கையறையில் கூட மூர்க்கத்தனத்தை காட்டுபவர்.
என் அழகை அடுத்தவர்களுக்கு காட்சி பொருளாக ஆக்க நினைப்பவர். எங்கள் வீட்டிற்கு வரும் பிற ஆடவர் எதிரில் நான் அரைகுறை ஆடையுடன் அல்லது ஆடையே இல்லாமல் போஸ் கொடுக்க வேண்டும். அவன் பால்காரனாக, டோபியாக, பூக்காரனாக யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நான் இதுவரை போராடி, சமாளித்து வருகிறேன்.
மறுத்தால் வீட்டில் என்னோடு தாறுமாறாக சண்டை போடுவார். பிள்ளைகள், இவர்கள் ஏன் இப்படி சண்டை போடுகின்றனர் என்று தெரியாமல் விழிப்பர். அவர்களுக்கு சரியான விளக்கம் கொடுக்க முடியாத நிலையில் நான். காரணம் தெரிந்தால், "உனக்கு இப்படிப்பட்ட கணவன் தேவையா?' என்று கேட்கக் கூடும் அல்லது தன் தந்தையை வெறுத்து ஒதுக்கக் கூடும்.
என் மதக் கோட்பாடுகளும், பெற்றோரால் வளர்க்கப்பட்ட சூழலும் இன்று சமூகத்தில் எனக்கு இருக்கும் நல்ல மதிப்பும்தான் என்னை ஊமையாக்கி, சிரித்த முகமாய் மனதின் ரணங்களை துளி கூட வெளியில் காட்டாமல், வாழ்ந்து வரச் செய்கின்றன.
ஒரு குடிகாரனை, ஸ்ரீலோலனை, பொறுக்கியை, ரேஸ் பைத்தியத்தை, சூதாட்டக்காரனை சமுதாயத்திற்கு அடை யாளம் காட்டி, நியாயம் கோர முடியும். ஆனால், என் நிலையை நான் எப்படி வெளியே கூற முடியும்? எனக்கு தகுந்த பதில் அளிப்பாயா?
உன்னுடைய பதில் என் கணவரை திருத்த வேண்டும். எனக்கு உதவுவாயா? இப்போது சமீப காலமாக நான் சம்மதிக்காததால், பிற பெண்களோடு தொடர்பு கொண்டு, சம்பளப் பணம் முழுமையும் ஊதாரித்தனமாக செலவழித்து, என்னை கடன் தொல்லைக்கு ஆளாக்கியிருக்கிறார்.
உன் பதில்தான், என் குடும்பத்தில் ஒளி ஏற்ற வேண்டும். கை நிறைய சம்பாதித்தும், வாழ்க்கையில் இதுவரை எந்த சுகத்தையும் நான் அனுபவிக்கவில்லை. நான் சுமங்கலி கோலம் கொண்ட ஒரு துறவி. புரிகிறதா? நல்லதொரு பதிலை எதிர்பார்க்கிறேன்.
இப்படிக்கு,
ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகி.


அன்பு சினேகிதி —
உன் கடிதம் கண்டேன். உன்னைப் பற்றி நீயே எழுதியிருக்கும் சுய விமர்சனம் கண்டு புன்னகைத்தேன். 50 வயசுக்கும், 35 வயது இளமையும், சுறுசுறுப்பும், கலைகளில் தேர்ச்சியும் அத்தனை சுலபத்தில் ஒருவருக்கே அமையப் பெற்றிருக்கிறது என்றால், ஆண்டவனின் அருள் உனக்கு பரிபூரணமாக இருக்கிறது என்றுதானே அர்த்தம்.
உன் கணவரை பற்றி நீ எழுதியிருந்ததில் இருந்து ஒன்று தெளிவாக புரிகிறது. ஏதோ ஒரு காரணத்தால் அவருக்கு மனச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம். உன் இளமையும், அழகும். மற்றவர் உன்னிடம் வைத்திருக்கும் மதிப்புமே என்று கூட சொல்லலாம்.
எப்படி நீ, உன்னுடைய அழகுக்கும், புத்திசாலித்தனத்துக்கும் அவர் சற்றும் பொருத்தமில்லை என்று நினைக்கிறாயோ அப்படியே அவரும் நினைக்கலாம்.
அவருக்குள், "இவளுக்கு ஏற்ற புருஷன் நான் இல்லை, என்கிற உறுத்தல் நிறைய இருக்கிறது. அதே சமயம், தன்னுடைய தகுதிக்கு மேல் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு ஒரு பெண் கிடைத்ததில் கர்வமும், அசட்டுப் பிடிவாதமும் சேர்ந்து இருக்கிறது.
நீ ஆசிரியை என்பதால் இப்படி சொன்னால் புரியும் என, நினைக்கிறேன்...
அதிகம் படிக்காத, எப்போதும் ஒற்றைப்படையில் மதிப்பெண் வாங்கும் சிறுவன் ஒருநாள் பக்கத்து சிறுவனைப் பார்த்து காப்பி அடித்தோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ நல்ல மதிப்பெண் வாங்கினாலோ தன் மதிப்பெண் தெரியும்படியாக சிலேட்டை தூக்கி பிடித்து நடப்பான்.
அதுவும் படிக்கிற புத்திசாலி குழந்தைகள் பக்கம் போக மாட்டான். அவர்களுக்கு இவன் சங்கதி தெரியும்... ஆகவே, தன்னை விடவும் படிக்காத, அசட்டுக் குழந்தைகளிடையே தான் இவனது அலட்டலும், விரட்டலும் இருக்கும்.
இப்போது புரிகிறதா... உன் அழகும், இளமையும், வாய்க்கு ருசியாய் சமைக்கும் நேர்த்தியும் உன் கணவரின் தாம்பத்யம் என்கிற சிலேட்டில் தவறி விழுந்துள்ள அதிக பட்ச மதிப்பெண். அந்த பெருமையை தன் தகுதியை விடவும் குறைவான தகுதி உடையவர்களிடம், "எக்சிபிட்' செய்து கொள்வதில் அவருக்கு ஒரு திருப்தி.
அதே சமயம் இத்தனை மென்மையான பெண்ணை இதுபோல் இம்சிப்பதில் ஒரு சுகம்; இப்படி சுகம் கண்ட ஆண்களுக்கு, தாம்பத்ய சுகம் கூட இரண்டாம் பட்சம் தான்.
நீ செய்ய வேண்டியது...
அவரை விடவும் நீ ஏதாவது ஒரு விதத்தில் உன்னை தாழ்த்திக் கொள்ளப் பார். அவரது வயதுக்கு ஏற்றபடி உருவத்திற்கு ஏற்றபடி அலங்காரம் அல்லது நடை, உடை பாவனை. இது மிகவும் கஷ்டம் தான். ஆனால், பிரச்னையை சமாளிக்க இது சரியானபடி உதவும். அடிக்கடி அவர் காதுபட உனக்கு வயசாவதை சொல்லி இடுப்பு, முதுகு வலிக்கிறது என்று சும்மாவாவதும் புலம்பு; தராசுத்தட்டு சமமாகும் வரை.
முதலாவது சரிப்பட்டு வராது என்று தோன்றினால், உன் கணவரிடம் இப்படி கேள்... "கண்டவன் முன்னால் அரைகுறையாக போஸ் கொடுக்கச் சொல்கிறீர்களே... நான் மட்டும் போஸ் கொடுத்தால் போதுமா அல்லது உங்கள் அம்மா, அக்கா, தங்கச்சி இவர்களையும் கூப்பிடட்டுமா? என்று.
மனிதர் அரண்டு போவார் பிறகு, நிதானமாக, "இப்படி ஒரு வக்ரம் உங்களுக்கு இருக்கும் என்பது நமது பிள்ளைகளுக்கு தெரிய வந்தால், ஆயுசுக்கும் அவர்கள் தங்களது பொண்டாட்டி, குழந்தைகளோடு உங்கள் முகத்தில் விழிக்காமல் எங்கயாவது ஓடி விடுவர். அப்புறம் செத்தால் கூட திரும்பிப் பார்க்க மாட்டார்கள்...!' என்று சொல்.
உன் கடிதத்திலிருந்து உனக்கு திருமணம் ஆனதிலிருந்தே, நாம் எங்கேயோ எப்படியோ இருந்திருக்க வேண்டியவள். நம்மை கொண்டு வந்து கிணற்றில் தள்ளி விட்டனரே என்கிற நினைப்பு இருந்திருக்கிறது எனத் தெரிகிறது. உன்னிடம் என்ன இல்லையென்று அவர் பிற பெண்ணை நாடிப் போகிறார் என்று யோசி. முடிந்தால் உன் கணவனை, முரட்டு குணம் கொண்ட உன் மூன்றாவது பிள்ளையாக நினைத்துப் பழகி பாரேன்.
உனக்கே இப்போது 50 வயது நெருங்கிக் கொண்டிருப்பதாக எழுதியிருக்கிறாய். உன் கணவருக்கு 53 அல்லது 55 இருக்கலாம். இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.
மனதில் கஷ்டம் தோன்றும் போதெல்லாம் நீ சார்ந்துள்ள மதத்தின் வேத புத்தகத்தில் உள்ள 91ம் சங்கீதத்தை உன் இல்லம் எங்கும் ஒலிக்கும் படியாக பாடு... இது ஆறுதல் மட்டும் அல்ல; நம்பிக்கையையும், சக்தியையும் அளிக்கக் கூடியது.
உனக்காக நானும் இதே 91ம் சங்கீதத்தை வாசிக்கிறேன்.
இப்படிக்கு உன் அன்பு தோழி
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (24)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.A.Nurul Hassan - Kollidom,Thaikkal,இந்தியா
21-ஜூலை-201321:46:45 IST Report Abuse
S.A.Nurul Hassan இவர் அழகு என்ற கர்வம் இருக்கிறது... அதையே அவரது கணவன் ஒரு படி மேலே பொய் அடுத்தவர் பார்த்து ரசிக்கும்படி உடை அணியச்சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? இந்த பெண்ணுக்குதான் மனச்சிதைவு கணவருக்கு அல்ல... இப்பெண் சொல்வது உண்மையாக இருக்காது.
Rate this:
Share this comment
Cancel
Anjali - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூலை-201311:00:52 IST Report Abuse
Anjali கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம்....
Rate this:
Share this comment
Cancel
ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா
20-ஜூலை-201306:42:23 IST Report Abuse
ஜாம்பஜார் ஜக்கு நீங்க சொல்றது எல்லாமே உண்மையா? நீங்க எழுதின வார்த்தைகளை நீங்களே ஒரு முறை படிச்சு பார்த்து ஒரு சுய மதிப்பீடு செய்யுங்கள். அவைகள் உண்மையானால் நீங்க டிவோர்ஸ் செய்வதுதான் ஒரே தீர்வு.
Rate this:
Share this comment
Cancel
JEGAN - RAMNAD,இந்தியா
19-ஜூலை-201317:29:28 IST Report Abuse
JEGAN இதுலாம் நம்புற மாதிரி இல்லையே
Rate this:
Share this comment
Cancel
mainarkunju16@gmail.com - india,இந்தியா
18-ஜூலை-201312:47:48 IST Report Abuse
mainarkunju16@gmail.com ஐயோ பாவம்...
Rate this:
Share this comment
Cancel
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
18-ஜூலை-201302:02:15 IST Report Abuse
HoustonRaja இந்த வாரம் சகுந்தலா கோபிநாத் அவர்கள் தங்களின் பதிலில் ஒன்றை சரியாக சொல்லியுள்ளார் - வாசகியின் கணவருக்கு தாழ்வு மனப்பான்மையும், கர்வமும், அசட்டுப் பிடிவாதமும் (சிறு பிள்ளைத்தனமான) உள்ளது. ஆனால், அவரின் பதிலில் எனக்கு உடன்படாத கருத்துகள் சிலதும் உள்ளன. 1. "அவரை விடவும் நீ ஏதாவது ஒரு விதத்தில் உன்னை தாழ்த்திக் கொள்ளப்பார்.." - இதனை யாராலும் மனநலத்துடன் எந்தவிதத்திலும் ஏற்று செயலாற்றுவது இயலாதது. அப்படியே செய்தாலும், பிரிச்சனையை இன்னும் மோசமாக்கவே செய்யும். 2. "இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்...." - காலம் நல்ல தீர்வைத்தரும் என்று காத்திருக்கச் சொல்கிரார்கள். அதுவரை தினந்தோறும் தோன்றும் மன உள்ளச்சளுக்கு என்ன நிவாரணம்? 3. "மனதில் கஷ்டம் தோன்றும் போதெல்லாம்..." - இறை நம்பிக்கை (அதனை நம்பும்) மனதிற்கு அமைதியை தரலாம், ஆனால் மனதில் சில திறன்களை வளர்த்துக்கொள்வதாலேயே மன நிம்மதி நிரந்திரமானதாக மாறும். இப்பெண்ணிற்கு இத்திருமண உறவே தொடர வேண்டுமெனில், எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்கிறேன். 1. முதலில், தன் உணர்வுகளை/நடவடிக்கைகளை உற்று நோக்கி - தான் ஒரு "கூர் உணர்சியுடையவரா(sensitive)?", என்பதை அறியவேண்டும். எப்படி இருப்பினும், தன்னை முழுமையாக அப்படியே ஏற்றுகொள்ள வேண்டும். (accept who you are wholly). தன்னை தானே ஏற்றுகொள்ள யாருடைய அங்கீகாரமும் தேவையில்லை என்பதை உணரவேண்டும் (self-acceptance and self-validation). 2. தன் கணவரை தாழ்வு மனப்பான்மையுடன், இந்த மனைவி ஏற்றுகொள்ள முயல வேண்டும். கணவனின் தாழ்வு மனப்பான்மைக்கு, தான் மட்டுமே காரணமல்ல என்பதையும் உணரவேண்டும் (accept him as he-is, without any self-blame). 3. கணவனின் தாழ்வு மனப்பான்மையில் (கணவருக்கு) உள்ள வலிகளை ஆழமாக கண்டு, அதனை நியாயப்படுத்தவேண்டும் (validate his feelings, not his mal-adaptive behaviors). 4. கணவன் ஏற்றுக்கொள்ளமுடியாத விதங்களில் நடந்தாலோ/எதிர்பார்த்ததாலோ, உங்களின் மறுமொழியை எடுபடக்கூடிய (effective) முறைகளில் அவருக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். "DEAR MAN" DBT (Dialectical Behavorial Therapy) கருத்து பரிமாற்ற முறைகள் மிகவும் பயன்னுள்ளவை. [வாசக நண்பர்கள் google செய்து விரிவாக படித்துக்கொள்ளவும்]. 5. ஆண்களுக்கான உணர்வுரீதியான அத்தியாவசியமான தேவைகளை (Trust, Acceptance, Appreciation, Admiration, Approval and Encouragement) புரிந்து அதனை தர முயலவேண்டும். 6. எல்லா பிரச்சனைகளையும் பூட்டிவைக்காமல் - தனக்கென ஒரு நெருங்கிய (நம்பிக்கைக்குரிய) நட்பு வட்டத்தையோ/உறவு சுற்றதையோ உருவாகிக்கொண்டு, அங்கேயும் தனக்கு இருக்கும் பிரச்சனைகளின் ஆழங்களை அலசவேண்டும். எல்லா பிரச்சினைகளின் வலிகளுக்கும் கணவரே வாய்க்காலாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால், அது எல்லா தருணங்களிலும் முடியாது. முற்றும். இந்த பெண் தான் முதலில் மாற வேண்டும் என்று நான் சொல்ல வரவேயில்லை, மாறாக (இந்த பெண் உதவி கொருபவராக இருப்பதால்) இவரால் பிரச்சனைகளை/தீர்வுகளை (இவர் பங்கிற்கு மட்டும்) அறிந்து மாற்றினால் கணவரும் மாறுவார், உறவும் மேம்படும் என்பதே என் கருத்து. கணவவரும் தன் பங்கிற்கு, இத்திரன்களை பயிற்சிசெய்து வளர்த்துகொண்டு மனைவிக்கு வேண்டிய (Caring, Understanding, Respect, Devotion, Validation, Reassurance) மனதின் அத்தியாவசியமான தேவைகளை தினந்தோறும் வழங்கவேண்டும். அப்படி செய்தால், இவர்களுக்குள் திருமணவாழ்வில் மகிழ்ச்சி திண்ணம். ( சில கருத்துகள் கீழ்காணும் இடங்களில் இருந்து எடுக்கப்பட்டது - 1. Men are from Mars, Women are from Venus [John Gray] and 2. DBT ss training manual [Marsha Linehan] )
Rate this:
Share this comment
Cancel
தமிழ்நிலா - வந்தவாசி,இந்தியா
17-ஜூலை-201301:05:17 IST Report Abuse
தமிழ்நிலா இவர் அழகு என்ற கர்வம் இருக்கிறது... அதையே அவரது கணவன் ஒரு படி மேலே பொய் அடுத்தவர் பார்த்து ரசிக்கும்படி உடை அணியச்சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? இந்த பெண்ணுக்குதான் மனச்சிதைவு கணவருக்கு அல்ல... இப்பெண் சொல்வது உண்மையாக இருக்காது.
Rate this:
Share this comment
Cancel
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
16-ஜூலை-201322:36:31 IST Report Abuse
HoustonRaja எனக்கு என்னவோ இது ஒரு பக்க (one-sided) புகைச்சலாகவே தெரிகிறது. இந்த அம்மையாரின் கடிதத்தில் பெரும்பாலும் ஆழத்தில், தன் கணவருடனான மனோபாவ வேற்றுமைகளின் (Personality differences) வலியும், இவர் சமூகத்தின் பார்வைகளையும் எதிர்பார்புகளையும் மட்டுமே வேதமாகவும்/அங்கீகாரமாக பார்ப்பதின் வலியும் தெளிவாக தெரிகின்றது. அந்த உணர்வுரீதியான வலிகளை மிகைப்படுத்துதலின் விளைவாகவே கணவரை குணப்படுகொலை (character assassination) செய்கிறாரோ என்று தோன்றுகிறது. இல்லையெனில், சுயமாக சம்பாதித்தும்/பிள்ளைகள் பெரியவரான பின்னும்/கணவன் மற்ற பெண்களுடன் கள்ளுரவு வைத்திருந்தும் இந்த கணவனை திருத்தும் வழியை ஏன் தேடுகிறார்?? ஆரோக்கியமான தேடல்கள் மனநலனை மேம்படுத்தும், ஆனால் இவரோ தன்னை ஒரு வாழ்நாள் தியாகியாக (சமூகத்தின் கண்களில்) காட்டிக்கொள்ள ஏங்குகிறாரோ, வழி தேடுகிறாரோ என்று அஞ்சுகிறேன். இப்போது, இவர் எழுதிய கடைசி இருவரிகளை மீண்டும் படித்துபார்க்கவும். சரி, அடுத்த பக்கத்திற்கு (the other side) வருகிறேன். அந்த கணவரும் இந்த பகுதிக்கு ஒரு கடிதம் எழுதினால், அது இப்படியும் இருக்கலாம். >>>>>>> எனக்கு கல்யாணம் ஆகி 20+ ஆண்டுகள் ஆகின்றன. என் மனைவி மிகவும் அழகானவள், அன்பானவள், எதையும் மிக சிறப்பாக செய்யகூடியவள். நான் அவளின் மேல் மிகவும் உயிராக இருக்கிறேன். என்னைவிட அவள் அழகிலும், திறன்களிலும் உயர்ந்தவள் என்று பலமுறை நானே அவளிடம் மனமார மகிழ்ந்து சொல்லியிருக்கிறேன். ஆனால், என்னால் அவளை சரியாக புரிந்துகொள்ளவே முடியவில்லை. சிறு வயது பெண்ணைப்போல், தன் அழகை/ஆடைகளை கவனித்தே பெரும் பொழுதை கழிப்பாள். நீ இயற்கையாகவே மிகவும் அழகு, என் இத்துனை பிரயத்தனம் செய்கிறாய் என்றும் சொல்லி பார்த்துவிட்டேன். அவருக்கு அன்றாட வீட்டு வேலைகளே செய்வதில் நாட்டமே இருந்ததில்லை, அதை வெளிப்படையாகவும் சொல்கிறார். காலம் சென்றால் எல்லாம் சரியாகிவிடும் என்று இருந்து விட்டேன். இருவரும் சம்பாரிப்பதால், நிறைய செலவுகள் செய்து வாழ்கை ஓடுகிறது. அவர் ஒரு "Perfectionist", அதனாலே எங்கள் இருவருக்கும் நிறைய கருத்து வேற்றுமைகள். எல்லாவற்றிலும் அளவு மீறிய எதிர்பார்புகளால், சீக்கிரமே களைத்து வெறுத்து விடுகிறார், சண்டையிடுகிறார். "நான் என்னை அழித்துக்கொண்டு உனக்கு செய்வதைபோல், நீ ஏன் எனக்கு செய்யவில்லை" என்று அழுது புலம்புகிறார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பொருட்களிலும், வசதிகளிலும் வரவிற்கு மிஞ்சிய செலவுகள் செய்கிறார் - நான் ஏதாவது சொன்னால் சண்டையிடுவாரோ/அழுவாரோ என்று வாயே திறப்பதில்லை. கடன்கள் அதிகமாகி விட்டது. நான் அதிகநேரம் வேலைசெய்து கடன்களை சற்று சரிக்கட்டலாம் என்று பார்த்தால் ... "வீட்டிலே இருப்பதேதில்லை" என்று அங்கும் சண்டை. என் நடத்தையையே சந்தேகிக்கிறாரோ என்று அஞ்சுகிறேன். நாங்கள் ஓரிரு மாதங்களாக சரியாகக்கூட பேசிக்கொள்வதே இல்லை. ஆனால், நான் அவளை மிகவும் விரும்புகிறேன், நீங்கள் தான் ஒரு நல்ல வழி சொல்லவேண்டும் <<<<<<< உங்களின் மாற்று கருத்துகளையும், ஏற்புக்களையும் வரவேற்கிறேன். இங்கே செய்யப்படவேண்டியது என்ன என்று எனக்கு தோன்றியதையும் அடுத்த பாகத்தில் எழுதுகிறேன். நன்றி.
Rate this:
Share this comment
Cancel
THADICOMBU D GANESAN DURAISAMY - dindigul,இந்தியா
16-ஜூலை-201318:12:52 IST Report Abuse
THADICOMBU D GANESAN DURAISAMY இந்த அம்மா தான் அழகு அழகு என்று நம்மள கவனிக்காம இருந்து இருப்பாங்க அதன் பாஸ் தன்னை கவனிக்கற பக்கம் வண்டிய திருப்பிட்டாறு. கன்னு நீ கண்ணகியா இருந்துட்டுப்போ ஆனா மாதவியாட்டம் டைம் டைம்த்துக்கு காபி கொடுக்காம இருந்து இருப்ப அதன் அண்ணன் காபி நல்ல கொடுக்கற அண்ணி வீட்டுக்கு கேட் பாஸ் வாங்கிட்டு போய்ட்டான் காலம் கடந்த வருத்தம் இது பேசாம உன் பிளைகளுக்ககாக வாழ பழகிக்கொள் all the best
Rate this:
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
16-ஜூலை-201317:46:55 IST Report Abuse
Divaharan நல்ல மனைவி / நல்ல கணவன் கிடைத்தாலும் சில ஜென்மங்களுக்கு வாழ்க்கையை நன்றாக நடத்தும் புத்தி இல்லை. என்ன செய்வது?
Rate this:
Share this comment
Anjali - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூலை-201311:04:48 IST Report Abuse
Anjaliதிங்க தெரியாதவனுக்குதா பண்ணு கெடைக்குது......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.