அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2013
00:00

வானொலியில், "இன்று ஒரு தகவல்' என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பானதைக் கேட்டு இருப்பீர்கள்; வானொலியின் பயனுள்ள நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று!
நேயர்களுக்கு வானொலி தரும் இந்நிகழ்ச்சி போன்று, எனக்கு மட்டும், "இன்று ஒரு தகவல்' தந்து கொண்டிருக்கிறார் ஒரு பெண்மணி... அவர் யார், எவர் என்று இதுவரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
என்னுடைய, "லேண்ட் லைன்' தொலை பேசியில் ரெக்கார்டிங் வசதி உண்டு. நான் இல்லாத நேரத்தில் அழைப்பவர்கள் தாங்கள் சொல்ல வந்த சேதியை பதிவு செய்து விடலாம். இந்த வசதியைப் பயன்படுத்தி, அப்பெண்மணி தினம் ஒரு ஜோக் - தகவல் - கிசுகிசு - அறிவிப்பு - செய்தி என, ஏதாவது ஒன்றை பதிவு செய்து விடுகிறார்.
என் தொலைபேசி எண்ணை எப்படி கண்டு பிடித்தார் அல்லது யார் கொடுத்தது என, கண்டு பிடிக்க முடியவில்லை. இருந்தாலும், கொடுத்தவருக்கு நன்றி; பயனுள்ள விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறதே...
அன்று அலுவலகம் வந்ததும், "ஆன்சரிங் மிஷினை' இயக்கினேன். அதே பெண்மணியின் குரல்...
"இன்று ஒரு ஜோக்...' என்றவர், சிறிது இடை வெளி கொடுத்து, ஜோக்கைக் சொல்ல ஆரம்பித்தார்...
"அடல்ட்ஸ் ஒன்லி சர்ட்டிபிகேட் பெற்ற படத்தில் ஒரு காட்சி... நீச்சல் குளத்தில் இறங்கப் போகுமுன், கதாநாயகி, தன் உடைகளை ஒவ்வொன்றாகக் கழற்று கிறாள்... கடைசியாக, உள்ளாடைகளை களைய எத்தனிக்கும் சமயம், "விர்'ரென்று ஒரு கார் போகிறது. கார் சென்றதும் பார்த்தால், கதாநாயகி, தண்ணீரில் முகம் மட்டும் தெரிய, நீந்திக் கொண்டிருக்கிறாள்.
"ஒரு சர்தார்ஜி, தினந்தோறும் மூன்று காட்சிகளையும் தொடர்ந்து பார்த்து வந்தார். ஒரு நாள், "சர்தார்ஜியிடம், "இந்த சினிமா அவ்ளோ நல்லாவா இருக்கிறது! விடாமல் பார்க்கிறீர்களே...' எனக் கேட்டார் தியேட்டர் மானேஜர்.
"அதற்கு, "இல்லை... ஒரு நாளாவது அந்தக் கார், ஒரு நிமிடமாவது தாமதமாக வராதா என்ற நம்பிக்கையில் தான் வருகிறேன்... சொல்லி வைத்தாற்போல, அது எப்போதும் போலத்தான் வந்து தொலைக்கிறது...' என்றாராம் சர்தார்ஜி...'
— இந்த ஜோக்கைச் சொல்லிவிட்டு, "ஜோக் எப்படி?' எனக் கேட்டு கலகலவெனச் சிரித்து, தொடர்பைத் துண்டித்திருந்தார்!
சர்தார்ஜிகளை கிண்டலடித்து இங்கு நாம் ஜோக் அடித்துக் கொண்டிருக்க, பஞ்சாபில், இதே ஜோக்கை, மதராசி - அதாவது, தமிழனை மையப்படுத்தி கிண்டலடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியனுக்கு - அது எந்த மாநிலத்தவனாக இருக்கட்டும்... உண்ண உணவிருக்கிறதோ, இல்லையோ... தமாஷ் உணர்ச்சிக்குப் பஞ்சமில்லை!
***

லென்ஸ் மாமாவுக்கு கடவாய் பல்லில் வலி... கன்னம் கொழுக்கட்டையாய் வீங்கி விட்டது... "தெரிஞ்ச டாக்டர்கிட்டே கூட்டிட்டுப் போப்பா...' என்றார்.
தமிழ்ப் பற்று கொண்ட பல் டாக்டர் அன்பர் ஒருவர் நினைவுக்கு வந்தார். அவரிடம் அழைத்துச் சென்றேன். அவர், மாமாவின் பல்லை பரிசோதித்துக் கொண்டிருந்தார். வரவேற்பு அறையில், "காலச் சுவடுகள்' என்ற நூல் கிடந்தது.
அதில் கண்ணதாசன், பெண்களைப் பற்றி எழுதி இருந்தார்.
இதோ அது...
இறைவன் சிருஷ்டியில் பெண்மை ஓர் அதிசயம்.
அறிவில் தெளிந்த முனிவர்கள் கூட அறிய முடியாத ரகசியம் பெண்மை. படைக்கும் கடவுளும், பாதுகாக்கும் கடவுளும் கூட, அந்தக் கிணற்றில் விழுந்திருக்கின்றனர்.
மகா வீரர்களையே பேதைகளாக்கிய நாட்டியசாலை அது; ஆழம் தெரியாத சுரங்கம் அது. இறங்குகிறவனை மூச்சுத் திணற வைக்கும் சமுத்திரம் அது!
"உண்டால் தான் மயக்குகிறது மது; கண்டாலே மயக்குகிறாள் மாது...' என்றான் வள்ளுவன்.
பச்சைப் பசேல் என்று, தலை தூக்கி நின்று, பவள நிற மலர்களை உதிர்த்து, சில்லென்ற காற்றுக்கு மெல்லிய நடனமாடும் பூஞ்செடிகள் போல நளின தாரகைகளின் மயக்கு முகங்களும், சற்றே செரிந்த கூந்தலும், தங்க கொடி போன்ற இடையும், எவ்வளவு நல்லவனையும் கிறங்கடித்து விடுகின்றன.
சில பெண்களுக்கு சிரிப்பு, சில பெண்களுக்கு இனிமையான குரல், சில பெண்களுக்கு அற்புதமான கண்கள், சில பெண்களுக்கு அழகான கூந்தல்...
ஒவ்வொருத்தியிடமும் ஒவ்வொரு ஆயுதம் இருக்கிறது.
பாலைவனத்து நீரோடைகள் பசியையும், தாகத்தையும் அதிகப்படுத்துகின்றன; பார்வை கலக்கிறது. புதிய உலகத்துக்கு இழுத்துச் செல்கின்றன...
அங்கே ஏமாற்றம் காத்திருந்தால், உயிர் சாதாரணமாகி விடுகிறது; தர்ம தேவதை காத்திருந்தால் உலகம் சாதாரணமாகி விடுகிறது!
மனித இனத்தின் பலவீனத்தை வேடிக்கை பார்க்கவே இறைவன் பெண்ணைப் படைத்தான்!
— இப்படி எழுதி இருக்கிறார்... உண்மைதானா? அறிந்தவர் எழுதலாமே!
(மாமாவின் பல்லைப் பிடுங்கியே ஆக வேண்டுமென்று சொல்லிவிட்டார் டாக்டர்!)
***

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூடிப் பேசுகின்றனர், தமக்கென சங்கம் வைத்து உள்ளனர். அதற்கு தலைவர், செயலர் - போன்ற அலுவலர்களை தமக்குள்ளேயே தேர்வு செய்து கொள்கின்றனர். ஐ.பி.எஸ்., அல்லாத போலீசார், சங்கம் அமைக்கக் கூடாது என்கின்றனர்.
முதல்வராக ராஜாஜி, இருந்தபோது, போலீஸ் வேலை நிறுத்தம் நடந்தது. அதை அவர் ஒரே நாளில் முறியடித்தாராம். எப்படி என்று தம் நூலில் விளக்கியுள்ளார் முன்னாள் ஐ.ஜி., எப்.வி.அருள்.
முதலமைச்சராக ராஜாஜி 1952ல் இருந்தபோது, நிகழ்ந்த ஆபத்தான போலீஸ் வேலை நிறுத்தத்தை ஒரே நாளில் முறியடித்தார். அந்த வேலை நிறுத்தத்தைத் தூண்டிய இருநூறு யூனியன் தலைவர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பித்து, அரசியல் சட்டத்தில் உள்ள விசேஷப் பிரிவுகளையும் பயன்படுத்தி, வேலையிலிருந்தும் நீக்கினார்.
இந்த வேலை நிறுத்தத்தின் போது சென்னை நகரப் போலீஸ் கமிஷனராக தேவசகாயம் இருந்தார். நான், சட்டம் ஒழுங்கிற்கான துணை கமிஷனராக இருந்தேன். பரபரப்பூட்டிய இவ்வேலை நிறுத்தத்தின் போது சீனியரான ஒரு போலீஸ் அதிகாரிக்கு என்ன செய்தி வந்ததோ, தெரியவில்லை... எங்களையெல்லாம் அழைத்தார்.
"கைது செய்த போலீஸ்காரர்களை நாம் விட்டு விட வேண்டியது தான்! எல்லா போலீஸ்காரர்களுமே ஸ்ட்ரைக் செய்யப் போகிறார்களாம். மலபார் ஸ்பெஷல் போலீஸ் படையும் ஸ்ட்ரைக்கில் சேரப் போகிறதாம். அதோடு, ரவுடிகள் நகரில் ரகளை செய்யத் தயாராக இருப்பதாகவும் செய்தி...' என்றார் அந்த சீனியர் போலீஸ் அதிகாரி.
ஸ்ட்ரைக் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்களை வெளியே விடுவதற்கு நாங்கள் இருவரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தோம். "முதல் அமைச்சரிடம் கேட்கலாம்...' என்று ராஜாஜியிடம் அழைத்துச் சென்றார் அந்த சீனியர் அதிகாரி.
சோபாவில் அமர்ந்தபடி, சீனியர் அதிகாரி சொல்லியவற்றை அமைதியாகக் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொண்டார், ராஜாஜி. பிறகு அவரை பார்த்து, "கைது செய்தவர்களை விடுவதற்கில்லை; முதலில் நீங்கள் ஸ்ட்ரைக்கை முறியடிக்கும் வேலையைப் பாருங்கள்...' என்றார்.
போலீஸ் வேலை நிறுத்தம் முறியடிக்கப்பட்ட மறுநாள், அந்த சீனியர் அதிகாரியை வரவழைத்து, தவறான தகவல்களைக் கொடுத்து பயமுறுத்தியதற்காக, உடனே வேலையை ராஜினாமா செய்துவிட்டு போகும்படி சொல்லி விட்டார் ராஜாஜி. அந்த வேலை நிறுத்தத்தில் துணிச்சலுடன் ராஜாஜி எடுத்த நடவடிக்கைகளைப் பார்த்து அவரை வழிபடவே ஆரம்பித்து விட்டேன்.
— புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chennai sivakumar - chennai,இந்தியா
29-ஜூலை-201316:34:21 IST Report Abuse
chennai sivakumar வானொலியில் ஒரு தகவல் நிகழ்ச்சி மிக பயன் உள்ளதாக இருந்தது.என்னுடைய பாட்டியிடம்(வயது 100 +) ஒரு நாள் ஈமெயில் என்று கூறியபோது அவருக்கு விளங்கவில்லை.பிறகு சுருக்கமாக கம்ப்யுட்டர் தபால் என்று கூறினேன்.அவர் அதற்கு இது நேத்திக்கு ரேடியோவில் தினம் ஒரு தகவல் நிகழ்ச்சியில் சொன்னார்கள் என்று கூறி என்னை ஆச்சரியப்பட வைத்தார்.அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சி இருந்தது .இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Dhanraj Jayachandren - Madurai,இந்தியா
28-ஜூலை-201311:42:34 IST Report Abuse
Dhanraj Jayachandren தமாஷ் உணர்ச்சி இல்லைனா பாதி பைத்தியம் ஆகிடுவான் அந்துஜி.........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.