பசுமை நிறைந்த நினைவுகளே.... - வெள்ளி விழா கண்ட குற்றால டூரின் அனுபவங்கள்! (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 செப்
2013
00:00

கோலப்போட்டி!
என்ன கலர் சேலை போட்டி!
காபி போட்டி!
நட்சத்திர தேடல்!
குடை மழை போட்டி!
- என்று வாசகர்களை மகிழ்விக்க போட்டிகள் நடந்து கொண்டு இருந்த நேரம் அது. திடீரென பம்பர் போட்டி போல, குற்றால டூர் போட்டி அறிவிக்கப்பட்டதும், வாசகர்கள் கூப்பனை அனுப்பி குவித்து விட்டனர்.
கை வலிக்க எடுத்து அடுக்கி வைத்த, லட்சக்கணக்கான வாசகர் கூப்பனில் இருந்து, அதிர்ஷ்டசாலி வாசகரை தேர்வு செய்து கொடுத்தார், இப்போதைய சிம்புவும், அப்போதைய லிட்டில் சூப்பர் ஸ்டாருமான சிலம்பரசன் .
இந்த கூப்பன் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள், தினமலர் நாளிதழில் வெளியானதும், தமிழகம் முழுவதும் உள்ள, "தினமலர் -வாரமலர்' வாசகர்களிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊருக்குள், "இவருதானா அவுரு' என்ற பாணியில் தனி மரியாதை பெற்று உலா வந்தனர்.
அந்தக்காலத்தில் லாட்டரியில் பரிசு விழுந்தவரை பேட்டி, படம் எடுத்து, பத்திரிகையில் வெளியிடுவது போல, திண்டிவனத்திலிருந்து தேர்வான சரஸ்வதியின் குடும்ப புகைப்படம், தினமலர் நாளிதழில், பேட்டியோடு வெளியானதும், அவர்களின் அந்தஸ்து இன்னமும் கூடியது.
அப்போதெல்லாம், மதுரை மீனாட்சியம்மன் கோவிலை ஒட்டி பஸ்சை ஓட்டிச் செல்லலாம். இப்போது - அந்த வழியாக சைக்கிளை கூட ஓட்ட முடியாது. அன்று, பஸ்சில் செல்ல வசதி இருந்ததால், வாசகர்களுடன் கோவிலை சுற்றி வலம் வந்து, கிழக்கு வாசல் கோபுரம் முன் பஸ்சை நிறுத்தி, சிறப்பு பூஜை செய்து, தாழம்பூ, குங்குமம் எல்லாம் வாசகர்களுக்கு கொடுத்து கிளம்பினோம்.
அப்புறமும் விடாமல், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசலில் நிறுத்தி, சிதறு தேங்காய் உடைத்து, விபூதி, பஞ்சாமிர்தம் வரவழைத்து கொடுத்தோம்.
தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூரை நெருங்கியதும், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளான ஆண்டாள் கோவில் முன் நின்று, தமிழகத்தின் மிகப்பெரிய தேர் முன்பும், தமிழக அரசின் சின்னமான ராஜகோபுரம் முன்பும் நின்று, படம் எடுத்து, ஆண்டாள் பிரசாதத்தையும் பெற்று, அந்த ஊரின் புகழ்பெற்ற, பால்கோவாவை சுவைத்தபடி பயணம் தொடர்ந்தது.
"எல்லாம் சரி... ஆனால், நீ இப்படி கோவில் கோவிலாக நின்று, ஆன்மீக டூர் போல சென்றால், குற்றாலம் போய் சேருவதற்குள் இரவாகி விடும்... வாசகர்கள் பசியால் துடித்து போவர்...' என்று, பஸ்சில் கூடவே வந்த, அந்துமணி கூப்பிட்டு அட்வைஸ் செய்தார். அவர் சொன்னது போல அந்த வருடம் சாயங்கால மாகத்தான் குற்றாலம் போய் சேர்ந்தோம்.
விஷயம் தெரிந்த அந்துமணி, சமயோசிதமாக ராஜபாளையம் ஆனந்தா ஓட்டல் சிற்றுண்டி, இம்பாலா கடையில், "பப்ஸ்' போன்றவைகளை வாங்கச் சொன்னதால் அதைச் சாப்பிட்டு, பசியை அடக்க முடிந்தது. இந்த படிப்பினை காரணமாக, அதன் பின் நடந்த டூர் எல்லாம், மதுரையை விட்டு கிளம்பினோமா, ராஜபாளையத்தில் ஒரு டீ குடித்துவிட்டு நேராக குற்றாலம் அடைந்தோமா என்று தான் இருக்கும்.
ஆனாலும், பசியோடு இறங்கியவர்களுக்கு கல்யாண சமையல் சாதம் தோற்றது என்று சொல்லுமளவிற்கு, குற்றாலம் மணி அய்யர் பிரமாதமாக சாப்பாடு போட்டு அசத்தினார். இப்போது நினைத்தாலும், அவர் செய்து கொடுத்த வத்தல் குழம்பின் ருசியை நினைத்து மனம் ஆனந்தப்படுகிறது.
குற்றாலம் என்பது, குளிப்பதும், சாப்பிடுவதற்குமான இடம் என்பதால், பத்து பேர் வந்தாலும், சமையல்காரரை கையோடு கூட்டிவந்து, சமைத்து சாப்பிடும் பழக்கம் இருந்தது. அப்போது குற்றாலத்தில்
சொல்லிக் கொள்ளும் படியான ஓட்டல்கள் இல்லை. இதன் காரணமாக, அரசு விருந்தினர் மாளிகையின் ஆஸ்தான சமையல் கலைஞராக இருந்தவரான மணி அய்யர், வேறு ஒரு இடத்தில் சமைத்து, வாசகர்கள் தங்கியிருந்த குற்றால நகரிய விடுதிக்கே கொண்டுவந்து பரிமாறினார்.
குற்றால நகரிய விடுதியில், எங்களைத்தவிர வேறு பலரும் தங்கியிருந்தனர். மணி அய்யரின் சாப்பாடு வந்ததும், அதன் மணம், அவர்களையும் இழுக்கும், "அவுங்களும் சாப்பிட்டு போகட்டும்' என்று, சொல்லி விடுவார் அந்துமணி. இதன் காரணமாக, சாப்பிடும் நேரத்தில் பெரிய கூட்டமே திரண்டு விடும்.
இப்படி, விதவிதமாய் சமைத்து கொடுத்து அசத்திய மணி அய்யர், இப்போது இல்லை. அவரது நினைவுகள் மட்டும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.
இப்போது, எந்த அருவி என்றாலும், வாகனத்தை தூரத்தில் நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டிய நிலை; அப்போது அப்படி இல்லை. எங்களது பஸ்சை, மெயினருவிக்கு அருகிலேயே நிறுத்தியிருந்தோம். அதே போல, வரிசையும் கிடையாது, கூட்டமும் கிடையாது; போலீசும் கிடையாது. நாமாக பார்த்து அருவியை விட்டு வெளியே வந்தால்தான் உண்டு.
இன்று, தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் அத்தனை ஷோக்களும், அன்றே, குற்றால டூரின் போது, வாசகர் களிடையே நடத்தப்பட்டதுதான். மனமொத்த தம்பதிகள், சைகை காட்டுங்கள், பரிசை வெல்லுங்கள் போன்ற போட்டிகள் முதன் முதலில், வாரமலர் குற்றால டூரில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. போட்டியில் வென்றவர் களுக்கு, தினமலர், "டைரக்டர்' ஆதிமூலம் கைவினைப் பொருட்களை வழங்கி சந்தோஷப் படுத்தினார்.
"எல்லாம் சரி... குற்றால நகரிய விடுதியில் குரங்குகள் செய்த அட்டகாசம் பற்றிய மேட்டர் என்னாச்சு...' என, கேட்கிறீர்களா... கட்டாயம் அடுத்த வாரம் சொல்லி விடுகிறேன்.

ஏன் குற்றாலம்!
இயற்கையும்,பசுமையும் மாறாமல் குடிகொண்டுள்ள ஒரு தண்ணீர் தேசம், இன்று, குற்றாலம்தான்.
இங்குள்ள, மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி என்று, ஒவ்வொரு அருவியில்லும் குளிப்பது ஆனந்தமே!
குற்றாலம் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளுக்குள் பெய்யும் மழையும், அங்குள்ள மூலிகைகளில் ஊற்றெடுக்கும் நீரும், பெருகி, அருவியாக கொட்டுவதால், இதில் குளிப்பதற்கு இணையான ஆனந்தம் வேறு எதிலும் இல்லை. எப்போதும் அடிக்கும் சாரலிலும், தூரலிலும் நனைந்தபடி, அருவிகளில் குளித்து திரும்பும் போது ஏற்படும் புத்துணர்வே தனி.
குற்றாலம் அருகே சிவந்திபுரம் என்ற ஊரில், "பாண்டியன் கிராம பேங்க்'ல் பணிபுரியும் தமாசு எழுத்தாளரும், அந்துமணியின் நண்பருமான பி.ஜி.பி.இசக்கி, "வாசகர்களை ஏன் இங்கு அழைத்து வரக்கூடாது' என்று, ஐடியா கொடுத்ததன் அடிப்படையிலேயே, மளமளவென்று விஷயங்கள் நடந்தேற, வாரமலர், "குற்றால சீசன் டூர்' 1989 முதல் துவங்கி, தொய்வில்லாமல், இன்று வரை நடந்து வருகிறது.
வாரமலர் குற்றால டூருக்கு என்று சில ராசிகளும் உண்டு.
அதுவரை சீசன் இல்லாமல் இருக்கும். ஆனால், வாசகர்கள் போய் இறங்கியதும் "வாங்க வாங்க... வந்துட்டீங்களா!' என்று கேட்டபடி, மேகம் சூழ்ந்து, மழை பெய்ய, சீசன்களை கட்டிவிடும்.
இப்படியும் சில வருடங்கள் நடந்துள்ளது.
டூர் எனும் அன்பு மயமான கோவிலுக்குள் நுழையும் வாசகர்கள், வாசலிலேயே தங்களது கவலை, பிரச்னை எனும் செருப்புகளை கழட்டி வைத்து விட்டு வருவதால், டூரின் போது அவர்கள் அனுபவிக்கும் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. குற்றாலத்தில் துவங்கும் அவர்களின் மகிழ்ச்சி, அதன்பிறகும், அவர்களின் உள்ளத்திலும், இல்லத்திலும் பலவிதங்களில் தொடர்வதால், வந்த வாசகர்கள் மனதிலும், வாழ்க்கையிலும், டூர் என்பது நிரந்தரமான இனிய ஒரு நிகழ்வாக பதிவாகிவிடுகிறது.
***
அருவி கொட்டும்.

எல் முருகராஜ்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.