சில பாதைகள்... சில பகிர்வுகள்....
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 பிப்
2014
00:00

பின்னுரையாக...
2012, டிசம்பரில் மங்கையர் மலர் பொறுப்பாசிரியர் அனுராதா சேகரிடமிருந்து ஃபோன் வந்த நாள் இன்னமும் என் நினைவில் இருக்கிறது. "ஒரு தொடர் எழுத வேண்டும்' என்று அவர் சொன்னபோது, சந்தோஷமாக ஒப்புக்கொண்டேன். "சில பாதைகள் சில பயணங்கள்' என்று தொடரில் தலைப்பை முடிவு செய்தபோதுகூட, நான் நினைக்கவில்லை, ஒவ்வொரு பகுதியிலும் வித்தியாசமான வாழ்க்கையை வாழ்ந்த ஏதோ ஒரு பெண்ணைப் பற்றி எழுதப் போகிறேன் என்று...
நிர்பயாவுக்கு அந்த பயங்கரம் நடந்த நாள். "கடைசிவரை நிர்பயா போராடினாள், வாழ்வதற்கான தீவிரமான உந்துதலோடு இறுதிமூச்சு வரை முயற்சி செய்தாள்' என்ற செய்தி எனக்கு ஆழமான உத்வேகத்தை அளித்தது. அவளது போராட்டமும், அவள் வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கையும் முதல் அத்தியாயத்துக்கான களமாயின. அதன்பின்... ஒவ்வொரு அத்தியாயத்திலும் "ஒரு பெண், அவளது வாழ்க்கை' என்று தொடர் வளர்ந்தது. காலம் எனும் பெரு மணற்பரப்பில் அழியாமல் தடம் பதித்த சில முன் ஏர் பெண்களின் பாதைகளைத் தேடவும் அதைத் தொடரில் பதிவு செய்யவும் இந்தத் தொடர் எனக்குப் பெரும் வாய்ப்பைத் தந்தது. அந்த வாய்ப்பை ஒரு வரமாக நான் ஏந்திக் கொண்டேன்.
தன்னை கைவிட்ட உறவுகளையும், மன்னித்த என் அத்தை லட்சுமி பற்றி எழுதியபோது, அநேகம் பேர் எனக்கும் இதேபோல் ஓர் அத்தை, எங்க அம்மாகூட இப்படித்தான், எங்க பாட்டியும் உங்க அத்தையும் ஒண்ணு என்றெல்லாம் சொன்னார்கள். "சமைத்துப்பார்' மீனாட்சி அம்மாள் முதல் குமாரமங்கலம் குடும்பத்தைச் சேர்ந்த பார்வதி கிருஷ்ணன் வரை.. குடிப்பழக்கத்துக்கு தன் கணவரைப் பறிகொடத்த பின், அந்தப் பழக்கத்திலிருந்த மற்றவரைக் காக்க இந்தியாவின் முதல் டி-அடிக்ஷன் சென்டர் தொடங்கிய சாந்தி ரங்கநாதன் முதல் கம்போடியாவின் குழந்தைப் பாலியல் தொழிலாளிகளை மீட்கப் போராடும் சோம்லே மாம் வரை... ஆசிட் வீச்சால் பொசுங்கிய முகத்துடன், அது போன்ற பெண்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த அர்ச்சனா குமாரி தொடங்கி, இந்தியாவின் முதல் முதியோர் இல்லம் தொடங்கிய சாவித்திரி வைத்தி வரை.... எத்தனையோ சாதனைப் பெண்களின் பயணங்களைப் பகிர ஒரு வாயிலைத் திறந்துவிட்டது "மங்கையர் மலர்'.
போன அக்டோபர் மாதம். சிகாகோ நகருக்கு எங்கள் பட்டிமன்றக் குழுவோடு, ஒரு நிகழ்ச்சிக்காகப் போயிருந்தேன். ஓர் அறுபது வயதுப் பெண் அருகே உட்கார்ந்து என் கையைப் பிடித்துக் கொண்டார். "மங்கையர் மலர்ல உங்க தொடர் படிக்கிறேன்' என்றார். ஏதோ சொல்ல மிகவும் விரும்பினார். எதனாலே திடீரென்று தேம்பித் தேம்பி அழுதார். "என்னம்மா... என்ன' என்றேன் பதறி. எந்தக் கட்டுரை, எந்தச் சம்பவம் அவருக்கு எந்த நினைவுகளை மீட்டெடுத்ததோ...நானறியேன். அழும் அவரும், அவரது கையைப் பிடித்தபடி நானுமாய் காலம் கரைந்தது. பின்பு எழுந்து என் தலை மீது கை வைத்த ஆசி கூறிவிட்டு அவர் நகர்ந்துவிட்டார்.
வாழ்க்கை நொடி தொறும் நமக்கு அனுபவங்களை வாரி வழங்குகிறது. ஏதோ ஒரு புள்ளியில், எழுதப்படும் என் அனுபவம் எல்லோருக்குமான பொது அனுபவமாய்ப் புலர்ந்து விடுகிறது. அதை வாசகர் வாயிலாக எழுத்தாளன் அறியும் தருணமே அந்த எழுத்தாளனின் மிக உன்னதமான தருணம். இதுபோன்ற எண்ணற்ற தருணங்களை வழங்கிய வாசகர்களுக்கு என் நன்றி!
"நாளைக்குள்ள கொடுத்திடுங்க' என்று ஒவ்வொரு முறையும் பணிவாக நினைவூட்டி என்னோடு பாடுபட்ட ஆசிரியர் குழு அனிதா, ஒவ்வொரு இதழ் வெளிவந்த உடனும் கூப்பிட்டுத் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட தோழி அனுராதா சேகர், வித்தியாசமான ஓவியங்களைத் தந்த ஓவியர் செல்வம், புகைப்படக் கலைஞர் அனிதா மூர்த்தி எல்லோரும் என் நன்றிக்கு உரியவர்கள்.
இன்னமும் எழுதப்பட வேண்டிய பெண்களின் வரலாறுகள் அநேகம். அவர்களது கதைகளை எழுதுவது சமூகத்தின் வரலாற்றை எழுதுவதற்கு ஒப்பானதே. ஏனென்றால் காலம்தோறும் பெண்ணே சமூகத்தை முன்னெடுத்துச் செல்கிறாள். தியாகத்தாலும், போராட்டத்தாலும் சமூகத்தை ஒரு குழந்தையைப் போலத் தூக்கி வளர்க்கிறாள்.
அப்படி எழுதப்படாமலே போன வரலாறுகளுக்கு சொந்தக்காரர்களான எண்ணிலா சாதனைப் பெண்களின் காலடித் தடங்களுக்கு என் வணக்கங்கள்!

- பாரதி பாஸ்கர்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.