கேள்வி-பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 அக்
2014
00:00

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் தரப்படும் மார்ஜின் கோட்டில், மிகத் துல்லியமாக ஒரு அங்குல அளவில் 100ல் ஒரு பங்கு அளவில் கூட, இடம் அமைக்க முடியும் என்று என் நண்பர் கூறுகிறார். ஆனால், அவரால் எப்படி என்று சொல்ல இயலவில்லை. அவர் கூறுவது சாத்தியமா?
-ஆர். தியாகராஜன், சென்னை.
பதில்:
ஆம், சாத்தியமே. மார்ஜினில், உங்கள் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும். உங்கள் மார்ஜின் கோடு, அங்குல அளவில், 1,2,3… என குறிக்கப்பட்டிருக்கும். இதனை நீங்கள் 1.45 அல்லது 3.31 எனக் குறிப்பிட்ட இடத்தில் டேப் அமைக்க வேண்டும் என விரும்பினால், கர்சரை மார்ஜினில் நிறுத்தியவாறே, ஆல்ட் கீயை அழுத்தவும். இப்போது துல்லியமாக, மார்ஜின் அளவு காட்டப்படும். கர்சரை முன்னும் பின்னும் இழுத்தவாறு, துல்லியமான அளவில், டேப் அமைக்கலாம்.

கேள்வி: பண்டா செக்யூரிட்டி என்பது என்ன? என்ன வகை பாதுகாப்பினை இது கம்ப்யூட்டருக்கு வழங்குகிறது? விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இதனைப் பயன்படுத்துமாறு என் நண்பர் கூறுகிறார். தங்கள் கருத்து என்ன?
என். திருமுருகன், மதுரை.
பதில்
: பண்டா செக்யூரிட்டி (Panda Security) என்பது ஓர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம். இது சற்று வித்தியாசமான முறையில், பல கூடுதல் வசதிகளையும் தரும் புரோகிராம் ஆகும். அந்த வகையில் மிகச் சிறந்த ஒரு புரோகிராம்.
எப்போதும் பாதுகாப்பு, இணைய தள முகவரி மற்றும் இணையத்தை வடிகட்டுதல், தானாக அப்கிரேட் செய்யப்படும் வசதி, கம்ப்யூட்டர் செயல்பாட்டினையும், செயல்படும் விதத்தினையும் கண்காணித்து அறிவித்தல் ஆகிய சிலவற்றை இங்கு குறிப்பிடலாம். இதனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தினால், அதன் சிறப்பியல்புகளை நீங்கள் நன்கறிய முடியும். http://www.pandasecurity.com/india/windows8 என்ற முகவரியில் உள்ள இணையதளத்திலிருந்து இதனை இலவசமாகப் பெறலாம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இதனைப் பயன்படுத்துங்கள்.

கேள்வி: சில ஆண்டுகளாக நான் விஸ்டா பயன்படுத்தி வருகிறேன். என் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அறிவுரைப்படி, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாற இருக்கிறேன். எனக்கு அறிவுரை கூறுபவர்கள் எல்லாம் என் அருகில் இல்லை. எனவே நானேதான் இதனைச் செய்தாக வேண்டும். என் கம்ப்யூட்டர் எச்.பி. கம்ப்யூட்டர். முன் ஜாக்கிரதையாக நான் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைத் தந்து வழி காட்டவும்.
என்.பெருமாள், திருப்பூர்.
பதில்
: விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வது நல்ல முடிவு தான். ஏற்கனவே விஸ்டா இயங்குவதால், அந்த கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 எளிதாகப் பதிந்து பயன்படுத்த முடியும். இதனை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமே உறுதி செய்து கொள்ளலாம். உங்கள் கம்ப்யூட்டர், விண்டோஸ் 7 சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்ளுமா என்பதனை அறிய, மைக்ரோசாப்ட் இலவச சேவை ஒன்றினைத் தருகிறது. அதன் பெயர் Windows 7 Upgrade Advisor. இதனைப் பயன்படுத்தினால், அது உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, அதில் விண்டோஸ் 7 பயன்படுத்த முடியுமா என்பதற்கான ஆலோசனையையும், அவ்வாறு பயன்படுத்தினால், ஏதேனும் பிரச்னை வருமா என்பதனையும் அறிவிக்கும். இந்த டூலைத் தரவிறக்கம் செய்திட http://windows.microsoft.com/en-us/windows/downloads/upgrade-advisor என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இதனை இயக்கினால், புதிய சிஸ்டம் இயங்குவது குறித்தும், அதில் ஏற்படக் கூடிய சிக்கல்கள் குறித்தும் விரிவான அறிக்கை ஒன்று உங்களுக்குக் கிடைக்கும். அதனைப் படித்துப் பார்த்து, அதன்படி செயல்படலாம். இதில், உங்கள் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்க முடியாத அப்ளிகேஷன் புரோகிராம் குறித்தும் தகவல்கள் தரப்படும்.
மேலும், உங்கள் கம்ப்யூட்டரைத் தயாரித்து வழங்கிய நிறுவனத்தின் இணையதளம் சென்று, குறிப்பிட்ட மாடல் கம்ப்யூட்டர், விண்டோஸ் 7 சிஸ்டத்தினை சப்போர்ட் செய்திடுமா என்பதனை உறுதி செய்வதற்கான ஆலோசனை எதுவும் தந்துள்ளார்களா எனப் பார்த்து, அதன்படியும் செயல்படலாம். இந்த தளத்தில், விண்டோஸ் 7 உங்கள் கம்ப்யூட்டரில் இயங்குவதற்கான, புதிய ட்ரைவர் புரோகிராம்கள் தரப்பட்டிருக்கும். அவற்றை, இத்தளம் மூலம் அப்கிரேட் செய்திட வேண்டியதிருக்கும். புதிய ட்ரைவர் புரோகிராம்களை, ஒரு டிவிடி அல்லது ப்ளாஷ் ட்ரைவில் பதித்து வைத்துக் கொண்டு, விண்டோஸ் 7 பதிந்த பின்னர், கம்ப்யூட்டரில் பதிய வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டில் வைத்து, உங்கள் பணிகளுக்கு, கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக எழுதி இருக்கிறீர்கள். எனவே, விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்து கொள்ளவும்.

கேள்வி: எனக்கு அலுவலகத்தில் நான் பயன்படுத்திய விண் 7 கம்ப்யூட்டர் எடுத்துச் செல்லப்பட்டதால், தற்காலிகமாக, விண்டோஸ் விஸ்டாவில், ஆபீஸ் 2003 கொண்ட கம்ப்யூட்டரைக் கொடுத்துள்ளார்கள். இதில் எக்ஸெல் தொகுப்பில் பணி செய்கையில், ஒர்க் ஷீட்டில் பேஜ் பிரேக் தெரியவில்லை. இது அச்செடுக்க, அதற்கேற்ற வகையில் பார்மட் செய்திட அவசியம் தேவைப்படுகிறது. இதனை எப்படி செட் செய்வது எனத் தெரியவில்லை. தயவு செய்து எனக்கு அந்த அமைப்பு குறித்து விளக்கவும்.
கா. கார்த்திகா, புதுச்சேரி.
பதில்:
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், பேஜ் பிரேக், பிரிண்ட் வியூ ஆப்ஷனில் காட்டப்படும். அல்லது Page Break Preview என்ற ஆப்ஷன் பெற்று பார்த்தாலும் தெரிய வரும். இதனை நீங்கள் முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். எக்ஸெல் இந்த பேஜ் பிரேக்கினை இடைவெளிக் கோடாக நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசைகளின் ஊடாகக் கொடுக்கிறது. சில செட்டிங்ஸ் அமைப்பில் இந்த கோடு தெரியாமல் இருக்கலாம். இதனையும் முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். இவற்றிலும் தெரியவில்லை என்றால், கீழே தரப்பட்டுள்ள செட்டிங்ஸ் வழிகளைப் பின்பற்றவும்.
1.Tools மெனு சென்று அதில் ஆப்ஷன்ஸ் செலக்ட் செய்திடவும். இங்கு Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
2. இதில் View டேப்பினை செலக்ட் செய்திடவும். இதில் Page Breaks செக் பாக்ஸ் ஒன்றும் இருக்கும். இதில் ஒரு டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
3. அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி பேஜ் பிரேக் கோடுகள் கிடைக்கும்.

கேள்வி: என் பேஸ்புக் அக்கவுண்ட்டில், யாரேனும் வீடியோவுடன் பதிவு போட்டிருந்தால், அது பக்கத்தைத் தொடங்கியவுடன் இயங்க ஆரம்பிக்கிறது. இதனை நாம் வேண்டும் என்றால் மட்டும் இயங்க வைத்திட என்ன செய்திட வேண்டும்?
ஆ. இம்மானுவேல், புதுச்சேரி.
பதில்
:ஏற்கனவே, இந்த மலரில், ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களில் இயங்கும் பேஸ்புக்கில், ஆட்டோ பிளே டூல் இயக்கத்தை நிறுத்த எழுதி இருந்தேன். இப்போது பெர்சனல் கம்ப்யூட்டரில் அதனை எப்படி மேற்கொள்வது என்று பார்க்கலாம்.
பேஸ்புக் திரையில், மேலாகக் காட்டப்படும் சிறிய அம்புக் குறி அல்லது முக்கோணத்தினை கிளிக் செய்து, கிடைப்பதில் செட்டிங்ஸ் (Settings) என்பதில் கிளிக் செய்து செட்டிங்ஸ் மெனு பெறவும். திரையின் இடது புறம் உள்ள பிரிவில், கீழாக Videos என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும். அதில் கிளிக் செய்திடவும். பின்னர், இரண்டு பிரிவுகள் காட்டப்படும். ஒன்று மாறா நிலையில் உள்ளவை; இன்னொன்று Auto-Play Videos. பேஸ்புக் திறந்தவுடன், அதில் பதியப்பட்டுள்ள வீடியோக்கள் உடனே இயங்க வேண்டாம் என முடிவெடுத்தால், இதன் அருகில் உள்ள அம்புக் குறியை கிளிக் செய்து, அதில் Off என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

கேள்வி: செக்டிஸ்க் கட்டளையை விண்டோஸ் 7 சிஸ்டத்தில் எங்கு தருவது? இதனுடன் பாராமீட்டர் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். பாரா மீட்டர் என்பது என்ன? எதற்காக அதனைக் கொடுக்க வேண்டும்?
எஸ். குமாரவேல், சிதம்பரம்.
பதில்:
செக்டிஸ்க் (chkdsk) என்பது, டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதற்கான ஒரு கட்டளை. நம் ஹார்ட் டிஸ்க்கினை சோதனை செய்து, அது குறித்த தகவல்களை நமக்குத் தரும். இதில் பலவகையான சோதனைகளை மேற்கொள்ளலாம். எனவே, எந்த வகையான சோதனை என்பதைக் கம்ப்யூட்டருக்குத் தெரியப்படுத்த, செக் டிஸ்க் கட்டளையுடன், கூடுதலாக சில கட்டளைச் சொற்கள் அல்லது எழுத்துக்களைச் சேர்த்து குறிப்பிட்ட பார்மட்டில் தரவேண்டும். இந்த கூடுதல் கட்டளைச் சொற்கள், செக்டிஸ்க் பணியினை வரையறை செய்து, நாம் விரும்பும் தகவல்களைத் தர உதவுகின்றன. இவற்றைத்தான் ஆங்கிலத்தில் பாராமீட்டர் (parameter) என அழைக்கிறோம்.
CheckDisk புரோகிராமினைப் பெற்று இயக்க, ரன் விண்டோவில், cmd எனக் கொடுத்து எண்டர் தட்டினால் டாஸ் விண்டோ கட்டம் கிடைக்கும். அதில் chkdsk என டைப் செய்து எண்டர் தட்ட வேண்டும்.
பாராமீட்டர்கள் அனைத்துடன் செக் டிஸ்க் கட்டளை கீழ்க்கண்ட பார்மட்டில் அமையும்.
chkdsk [volume:][[Path] FileName] [/f] [/v] [/r] [/x] [/i] [/c] [/l[:size]]
இதில் volume: என்பது ட்ரைவ் எழுத்து. Path] FileName என்பது நீங்கள் சோதனை செய்திட விரும்பும் பைல் இருக்கும் இடத்தைக் குறிக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களைக் குறிக்க, wildcard character எனப்படும் (* மற்றும் ?) கேரக்டர்களை இங்கு அமைக்கலாம்.
/f என்ற கட்டளை, டிஸ்க்கில் உள்ள பழுதுகளைக் கண்டறிந்து குறிக்கிறது. இயன்றால், அந்த இடத்தினை லாக் செய்திடும்.
/v என்ற கட்டளை, ஒவ்வொரு டைரக்டரியில் உள்ள பைல்கள் சோதனையிடப்பட்டவுடன், அவற்றைக் காட்டுகிறது.
/r என்ற கட்டளை, பழுதான இடங்களைக் கண்டறிந்து, அதில் உள்ள தகவல்களைக் கண்டறிகிறது. இதற்கு அந்த டிஸ்க் லாக் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கேள்வி: கேஷ் மெமரியை எப்படி ரெப்ரெஷ் செய்து புதுப்பிக்க முடியும். அந்த மெமரியே ஒரு தற்காலிக மெமரி தானே? அப்படியானால், Cache Refresh என்பது எதனைக் குறிக்கிறது? இது ஒரு தவறான சொல்லாக்கமா?
எஸ். ஆர். கவிநயா, சென்னை.
பதில்:
இது தவறான சொல்லாகத்தான் இருக்கும் என்ற எண்ணப் பாங்கில் இந்த கேள்வி உங்கள் மனதிலேயே தங்கியுள்ளது
தங்களின் நீண்ட கடிதத்திலிருந்து தெரிகிறது. சற்று விரிவாக இந்த கேள்விக்கான பதிலைத் தருகிறேன்.
இணையத்தில் உள்ள தளங்களைக் காண, நாம் பயன்படுத்தும் பிரவுசர்கள், வெப் கேஷ் (Web cache) என்ற ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்துகின்றன. இது, தற்காலிகமான ஸ்டோரேஜ் ஆகும். இதில் நாம் தரவிறக்கம் செய்து பார்த்த இணைய தளங்கள் குறித்த குறியீடுகள், மீடியா சார்ந்த தகவல்கள் ஆகியவை பதியப்பட்டு வைக்கப்படுகின்றன. இதனால், இதே தளங்களுக்கு நாம் அடுத்து செல்கையில், இந்த பதிவுகளிலிருந்து தளங்கள் நமக்கு வேகமாகக் காட்டப்படும். எடுத்துக் காட்டாக, செய்திகளை வழங்கும் இணைய தளங்களை நாம் அடிக்கடி பார்க்கும் போது, அவற்றின் தலைப்பு பக்கம், பக்க வடிவமைப்பு போன்ற விஷயங்கள், இந்த தற்காலிக ஸ்டோரேஜிலிருந்து பெறப்பட்டு திரையில் காட்டப்படும். அதே நேரத்தில், மேம்படுத்தப்பட்ட செய்திகள், அதற்கான சர்வரிலிருந்து பெறப்பட்டு இணைக்கப்படும். இதனால், இணைய தளங்களிலிருந்து இவை நம் கம்ப்யூட்டரை அடையும் நேரம் நமக்கு மிச்சமாகிறது.
இதில் பிரச்னை, இவை செயல்படாதபோது ஏற்படுகிறது. எடுத்துக் காட்டாக, பழைய செய்தி மற்றும் தகவல்களே காட்டப்படும். அப்போது, இந்த மெமரியை நாம் ரெப்ரெஷ் செய்து அனைத்தையும் குறிப்பிட்ட இணைய தளத்திலிருந்து பெற்று தரும்படி கட்டாயப்படுத்தலாம். இவ்வாறு பிரவுசரைக் கட்டாயப்படுத்த, ஷார்ட் கட் கீ தொகுப்பு உள்ளது. சில வேளைகளில் இவை பிரவுசர்களுக்கிடையே மாறுபடலாம். ஆனால், பொதுவான ஷார்ட் கட் கீ தொகுப்பு CTRL+F5 ஆகும். F5 என்ற கீ அழுத்தல்,
ஓர் இணையப் பக்கத்தினை ரெப்ரெஷ் செய்து புதியனவாகக் காட்டும். ஆனால் Reload கட்டளை, பிரவுசரை, குறிப்பிட்ட பக்கத்தினை அதன் சர்வரிலிருந்தே முழுமையாகப் பெற்றுக் காட்டுமாறு வற்புறுத்தும். வெப் கேஷ் மெமரியிலிருந்து பெறுவது அப்போது ஒதுக்கப்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles John Britto - Dindigul,இந்தியா
16-அக்-201414:23:03 IST Report Abuse
Charles John Britto விண்டோஸ் XP சிஸ்டத்தில் உள்ள இண்டர்நெட்டை Android (Karbonn Titaninum S5+) மொபைல்க்கு wifi, Data cable மூலமாக இண்டர்நெட்டை connect பண்ண முடியுமா? முடியுமானால் அதன் முறையை (steps) விவரித்து கூறுங்கள்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X