சுகாதாரமான டிஜிட்டல் பயன்பாடு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 நவ
2014
00:00

சுற்றுப் புறச் சூழ்நிலையைச் சுத்தப்படுத்தும் இயக்க செயல்பாடுகள் நாடெங்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நேரத்தில், நம் டிஜிட்டல் சாதனங்களைச் சுத்தமாக வைத்துப் பயன்படுத்தும் சில வழிகளை இங்கு காணலாம். டிஜிட்டல் சாதனங்கள் என்று வருகையில், அவற்றின் உட்புறம் மட்டுமின்றி, வெளிப்புறங்களிலும் சில சுகாதாரமான சூழ்நிலைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இங்கு டிஜிட்டல் சாதனங்கள் என்று குறிப்பிடுகையில், அது நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களை மட்டுமல்ல; மொபைல் போன், டேப்ளட்
பி.சி.க்கள் ஆகியவற்றையும் குறிக்கிறது.
எப்படி நாம், என்ன அறிவுரை கொடுத்தாலும், கண்ட இடங்களிலும் விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுகிறோமோ, அதே போல, நம் கம்ப்யூட்டரிலும், அதன் செயல் வேகத்தைக் கட்டுப்படுத்தும் அளவிற்குத் தேவையற்ற புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, நம்மை அறியாமலேயே பின்னணியில் இயக்குகிறோம். கண்ட இடங்களில் சாப்பிட்ட பின்னர், எப்படி நம் கைகளைச் சரியாகக் கழுவவில்லை என்றால், நம்மை நோய் தொற்றும் அபாயம் உள்ளதோ, அதே போல, பெர்சனல் கம்ப்யூட்டரைச் சரியாகச் சுத்தம் செய்திடவில்லை என்றால், கம்ப்யூட்டரும் தன் இயக்கத்தை நிறுத்தி முடங்கும் அளவிற்கு நிலைமை உருவாகலாம்.
இது போன்ற தன்னிச்சையான, செயல்திறன் முடக்கும் செயல்பாடுகள், தனிநபர்கள் இயக்கும் கம்ப்யூட்டர்களிலேயே ஏற்படுகின்றன. நிறுவனங்கள் தங்கள் கம்ப்யூட்டர்களைப் பராமரிக்கும் பணிகளை முறையாகக் குறிப்பிட்ட கால கட்டத்தில் மேற்கொண்டு, இவை இயங்குவதற்கான நல்ல சூழ்நிலையை உருவாக்குகின்றன. இருப்பினும் அனைவரும் பின்பற்ற வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து இங்கு குறிப்புகள் தரப்படுகின்றன.

டெஸ்க்டாப்பில் சேவ் செய்தல்
தாங்கள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் பைல்களை அனைவருமே சரியாக, சீராக அமைத்து இயக்குகின்றனர் என்பது நிச்சயம் உண்மையாக இருக்காது. இது சற்று சவால் விடுக்கும் செயல்தான். டாகுமெண்ட், போட்டோ மற்றும் பிற வகை பைல்கள் நம் கம்ப்யூட்டரில் நாளடைவில் குவியத் தொடங்கும். இருப்பினும், விண்டோஸ் பயன்படுத்துபவர்களில் பலர், இவற்றை டெஸ்க்டாப்பில் சேவ் செய்திடவே முனைகின்றனர். இது நம் வீடுகளில், தரைகளில் நாம் உடுத்தும் ஆடைகளை போட்டு வைப்பதற்கு இணையாகும். டெஸ்க்டாப்பில் பைல்களை வைத்தால், சில பேக் அப் புரோகிராம்கள், அவற்றை விட்டுவிடும் வாய்ப்புகள் அதிகம். மேலும், பைல்கள், ஷார்ட்கட் ஐகான்கள் எனப் பல வகைகளில் டெஸ்க்டாப்பில் பைல்கள் சிதறிக் கிடந்தால், அவற்றை வகைப்படுத்துவதும் சிரமம். எனவே, டெஸ்க்டாப்பிலிருந்து பைல்களை எடுத்து, வேறு ட்ரைவ்களில் Pictures, Music, and Documents எனத்தனியே போல்டர்களை உருவாக்கி, சேவ் செய்வதே நல்லது.

சாப்ட்வேர் அப்டேட்
நாம் இன்ஸ்டால் செய்த சாப்ட்வேர் அப்ளிகேஷன்களுக்கு அப்டேட் பைல்கள் கிடைத்தாலும், அவற்றை அப்டேட் செய்திடத் தயங்குகிறோம். இதற்கான நினைவூட்டும் செய்திகள் கிடைத்தாலும், அவற்றைத் தவிர்த்துவிடுகிறோம். ஆனால், இது பெரிய தவறாகும். டிஜிட்டல் உலகில், அடுத்தவர்களின் கம்ப்யூட்டர்களில் நுழைய வலை விரிக்கும் குற்றவாளிகள், திருடர்களுக்கு, இந்த அப்டேட் செய்யப்படாத அப்ளிகேஷன்கள், வரவேற்புத் தோரணம் கட்டாத வாசல்களாகும். குறிப்பாக ஆரக்கிள் ஜாவா அடிப்படையில் இயங்கும் அப்ளிகேஷன்கள் இத்தகைய தன்மையை உடையன ஆகும். டிஜிட்டல் பாதுகாப்பு பணியில் இயங்கும் காஸ்பெர்ஸ்கி நிறுவனம், 2013 ஆம் ஆண்டில் நடந்த கம்ப்யூட்டர் கைப்பற்றுதல் முயற்சிகள் ஜாவா இயங்கும் கம்ப்யூட்டர்களை நோக்கியே மேற்கொள்ளப்பட்டதாக அறிவித்துள்ளது. விண்டோஸ் இயக்கத்தின் பல பைல்கள், அடோப் அக்ரோபட் ரீடர் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகியவை இதில் முன்னணி இடம் பெற்றன.
அண்மையில், டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் சிலர், "DarkHotel" என்ற பெயரில் இயங்கும் திருட்டு குழு ஒன்று குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த குழுவினர், பெரிய விடுதிகளில் தரப்படும் வை பி வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் கம்ப்யூட்டர்களைக் குறி வைத்து தங்கள் தாக்குதலை மேற்கொள்கின்றனர். இவர்கள், இந்த வாடிக்கையாளர்களுக்கு, அடோப் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை அப்டேட் செய்திடச் சொல்லி போலியான பாப் அப் செய்திகளை அனுப்புகின்றனர். இதற்கு இணங்குபவர்களுக்கு மால்வேர் புரோகிராம்கள் நிறைய அனுப்பப்படுகின்றன. இதனை எப்படி எதிர்கொள்வது? உங்களுக்குத் தெரியாத, புதிய நெட்வொர்க்கில் செயல்படுகையில், இது போன்ற செய்திகளைப் புறந்தள்ள வேண்டும். அப்டேட் செய்திட தகவல் வந்தால், அந்த சாப்ட்வேர் அப்ளிகேஷன் தரும் நிறுவனத்தின் இணைய தளம் சென்று அப்டேட் செய்திட வேண்டும்.

கீபோர்ட் அருகே உணவுப் பண்டம்
தண்ணீர், காபி, தேநீர் மற்றும் பிற திரவ உணவுகளை, கம்ப்யூட்டர் கீ போர்ட் அருகே அல்லது மேலாக வைத்து, எடுத்து அருந்துவது மிகவும் தவறான பழக்கம். உங்கள் லேப்டாப் ஒரு லஞ்ச் ட்ரே இல்லை. மேலும், திரவங்கள், கீ போர்டில் உள்ள சர்க்யூட்டில் இறங்கினால், அதில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு கீ போர்ட் செயல்பாடு தன் தன்மையை இழந்துவிடும். சி.பி.யு. வழியாக எந்த திரவம் இறங்கினாலும், மதர்போர்ட், ப்ராசசர், மெமரி ஆகியவை மீட்டெடுக்க முடியாத அளவிற்கு கெட்டுவிடும். அப்படியானால், திட உணவினைச் சாப்பிடலாமா என்று கேட்கக் கூடாது. சிறிய துகள்களாக உள்ள உணவுப் பொருட்கள் விழுந்து, உள்ளே நுழையும் வாய்ப்புகளும் உண்டு. இவை கீ போர்டில் விழுந்தால், கீகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு சரியாக இயங்காமல் போகலாம். கீகள் மற்றும் டச் பேட் அருகே உணவுப் பொருள் புழங்குவது, ஒன்றிரண்டு பருக்கைகளினால் கூட கிரீஸ் தடவியது போல ஆகிவிடும். பின்னர் இதனைச் சுத்தம் செய்வதும் கடினம்.

இரண்டு அடுக்கு பாதுகாப்பு
மால்வேர் புரோகிராம்களை அனுப்பும் டிஜிட்டல் திருடர்கள், உங்களுடைய ஒன்றிரண்டு பாஸ்வேர்ட்களைத் திருடிவிட்டாலும், உங்களுக்குப் பிரச்னையை ஏற்படுத்தலாம். நம் காண்டாக்ட் முகவரிகள், ரகசிய மின் அஞ்சல்கள் இவர்கள் கைகளில் சிக்கி நமக்கு தொல்லை கொடுக்கலாம். எனவே தான், வங்கிகள் சார்ந்த நிதி பரிமாற்றத்தில், அவை தரும் அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் பயன்படுத்த வேண்டும். நம் பாதுகாப்பிற்காகவே, வங்கிகள், இப்போது இரண்டு அடுக்கு பாதுகாப்பினை வழங்கியுள்ளன. நாம் ஏதேனும் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்குகையில், யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை நாம் அமைக்கிறோம். பின்னர், அந்த அக்கவுண்ட் சேவைதளத்திலிருந்து, நம் போனுக்கு டெக்ஸ்ட் அல்லது வாய்ஸ் அழைப்பின் மூலம் நம் அக்கவுண்ட் குறித்த தகவல்கள் உறுதி செய்யப்படுகின்றன. இந்த வகையில் தொலைபேசி வழி பாதுகாப்பினை விரும்பாதவர்கள், தற்போது வழங்கப்படும் யு.எஸ்.பி. பாதுகாப்பு கீ வசதியைப் பயன்படுத்தலாம். இதற்கு நம் சாதனத்தில் யு.எஸ்.பி. போர்ட் இருக்க வேண்டும். நமக்கு இந்த சேவையை வழங்குபவர்கள், இது போல யு.எஸ்.பி. வழி பாதுகாப்பினை வழங்க வேண்டும்.

டேட்டா பேக் அப்
கம்ப்யூட்டர் யுகம் தொடங்கிய நாள் முதலாய், நமக்கு அறிவுரை கூறுபவர்கள் எல்லாம், நம் டேட்டாவினை பேக் அப் எடுக்குமாறு அறிவுறுத்துவார்கள். இருந்தாலும், நம்மில் பலர் இந்த அறிவுரைப்படி நடப்பதே இல்லை. அதுவும் இப்போது இணைய வெளியிலேயே, நம் டேட்டா அடங்கிய பைல்களை பாதுகாப்பாக பதிந்து வைத்திட இலவசமாகவே பல வசதிகள் கிடைக்கின்றன. ட்ராப் பாக்ஸ், கூகுள் ட்ரைவ், மைக்ரோசாப்ட் வழங்கும் ஒன் ட்ரைவ் இந்த வகையினைச் சேர்ந்தவையே. இப்போதெல்லாம், பைல் ஒன்றை உருவாக்கி முடிக்கும்போதே, அது தானாக இத்தகைய பேக் அப் ட்ரைவ்களில் சேவ் செய்யப்படும் வசதி உள்ளது. இருந்தும், நீங்கள் டேட்டா பைல் பேக் அப் எடுத்து வைக்கவில்லை என்றால், அசம்பாவிதங்கள் நிகழ்கையில், நீங்கள் அவற்றை இழக்க வேண்டியதுதான். நிறுவனங்களின் பைல்கள் பெரிய அளவில் இருந்தால், கட்டணம் செலுத்தி, இத்தகைய ஸ்டோரேஜ் வசதியை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இருந்தாலும், உங்கள் பைல்களுக்கு, நீங்கள், உங்கள் அளவில் பேக் அப் எடுத்து வைக்கவில்லை என்றால், அது முற்றிலும் தவறான ஒரு செய்கையாகும்.

அழுக்காகும் கம்ப்யூட்டர்
உங்களுக்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை மிகவும் பிடிக்குமோ, அதே போல தூசு மற்றும் அழுக்குக்கும் கம்ப்யூட்டரை ரொம்பவும் பிடிக்கும். எனவே தான், நாள்பட்ட கம்ப்யூட்டர்களில், சி.பி.யு. டவர் உள்ளாக தூசு மற்றும் அழுக்கு நிறைய சேர்கிறது. ஒரு சில கம்ப்யூட்டர்களில், ஒட்டடையையே நான் பார்த்திருக்கிறேன். இதற்குக் காரணம், அவற்றைக் கழற்றிச் சுத்தப்படுத்தாததுதான். காற்றில் பறந்து செல்லும் தூசு, அழுக்கு மற்றும் தலைமுடி கற்றைகள் எளிதாக சி.பி.யு. வைக்கப்பட்டுள்ள கேபின் டவரில் தஞ்சம் புகுந்து, பின் தொல்லை கொடுக்கின்றன. குறிப்பாக, இவை உள்ளே, வெப்பத்தினை வெளியேற்ற இயங்கும் மின் விசிறிகளில் நுழைந்து, அதன் இயக்கத்தை நிறுத்துகின்றன. இதனால் வெப்பம் வெளியேற முடியாமல், ப்ராசசர் மற்றும் ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போகும் நிலையை அடைகின்றன. சிறிய காற்று வெளியிடும் சாதனம், வேக்குவம் கிளீனர், பேப்பர் டவல், அனைத்து அழுக்குகளையும் சுத்தம் செய்திடும் கிளீனர், காட்டன் ஸ்வாப், சிறிது ஆல்கஹால் அல்லது பெட்ரோல் ஆகியவற்றைக் கொண்டு கேபின் டவரைச் சுத்தம் செய்திட வேண்டும். கீ போர்டினை, இணைப்பினை நீக்கிவிட்டு, தலைகீழாக கவிழ்த்து, தட்டினால், உள்ளே சென்ற சிறிய உணவுப் பொருள் துகள்கள் வெளியேறும்.

வெப்பத்தின் நேர் எதிரில்
வெப்பம் கொண்ட காற்று வீசும் இடத்தில் நம் குழந்தை அல்லது நாம் அன்போடு வளர்க்கும் செல்லப் பிராணிகளை விட்டுவைப்போமா? மாட்டோம். அதே போல, கம்ப்யூட்டர் மற்றும் சார்ந்த சாதனங்களை, வெப்பமாக, சூடாக இருக்கும் இடத்தில் வைத்திடக் கூடாது. கார்களில் பெரும்பாலானவர்கள், பின் சீட்டுக்கு மேலாக வைத்திடுவார்கள். இங்குதான், வெய்யில் தொடர்ந்து அடிக்கும் இடமாகும். அதனாலேயே, அந்த இடம் சூடாக இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், மொபைல் போன், லேப்டாப் போன்ற டிஜிட்டல் சாதனங்களை வைத்திடக் கூடாது. லேப்டாப் கம்ப்யூட்டர்கள் 10 முதல் 35 டிகிரி செல்சியஸ் அளவிலான வெப்பத்தினைத் தாங்கி இயங்கும் தன்மை கொண்டவை. மொபைல் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள், 0 முதல் 35டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தில் இயங்கும். நல்ல இயக்கத்திற்கு, அவை பழகிப்போன அறையின் வெப்ப அளவில் மட்டுமே வைத்து இயக்கவும்.

அனைத்திற்கும் ஒரே பாஸ்வேர்ட்
நாம் ஒவ்வொருவரும் குறைந்தது நான்கு அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கும் மற்றும் வங்கி சார்ந்த நிதி பரிமாற்றத்திற்கும். பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம் பயன்படுத்த வேண்டியதுள்ளது. இன்னும் பலர் கூடுதலான எண்ணிக்கையில் பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் செயல்படுவார்கள். இவர்கள், அனைத்தையும் நினைவில் கொள்ள இயலாமல், ஜிமெயில் அக்கவுண்ட்டிலிருந்து வங்கி அக்கவுண்ட்வரை ஒரே பாஸ்வேர்டினையே பயன்படுத்துவார்கள். இது அபாயமானதாகும். யாரேனும் ஒரு ஹேக்கர், இந்த பாஸ்வேர்டினைத் திருடிவிட்டால், நாம் அனைத்தையும் இழக்க வேண்டியதிருக்கும். இப்படி நினைவில் வைத்துக் கொள்ளாதவர்களுக்காகவே, பாஸ்வேர்ட் மேனேஜர் புரோகிராம்கள் பல (Dashlane or LastPass) உள்ளன. இவற்றில் ஒன்றை அவர்கள் பயன்படுத்தலாம்.

மொபைல் போன்கள்
அண்மையில் எடுத்த ஆய்வு ஒன்றில், ஆறில் ஒரு மொபைல் போன் நோய் பரப்பும் கிருமிகள் குடி இருக்கும் வீடுகளாக இருந்ததனை அறிந்துள்ளனர். மக்கள், அவர்கள் வெளியில் கூறிக் கொள்வது போல, தங்கள் கைகளைக் கழுவுவது இல்லை எனத் தெரிகிறது என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. டெக்ஸ்ட்டினை அதிகம் அமைக்கும் போன்களில், கூடுதலாக கிருமிகள் இருந்ததனையும் கண்டறிந்துள்ளனர். பலர் பகிர்ந்து பயன்படுத்தும் டேப்ளட் பி.சி. போன்ற சாதனங்கள் இந்த வகையில், மிகவும் பாதிப்பிற்கு உள்ளானவையாக இருந்தன. இதற்குக் காரணம், நாம் நம் கரங்களை, விரல்களைப் போதுமான சரியான அளவில் சுத்தம் செய்வது இல்லை. கைகளைச் சுத்தம் செய்வதுடன், போன்களையும், குறிப்பாக ஸ்மார்ட் போன்களையும், டேப்ளட் பி.சி.க்களையும் நன்றாகச் சுத்தம் செய்திட வேண்டும். திரவ சோப் மற்றும் இதற்கென விற்பனை செய்திடும் சுத்தம் செய்திடும் திரவ வகைகளைப் பயன்படுத்தி சுத்தம் செய்திடலாம்.

மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டர்
நாள் செல்லச் செல்ல, நம் கம்ப்யூட்டரின் இயக்க வேகம் குறைந்து கொண்டே இருக்கும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. டவுண்லோட் செய்த புரோகிராம்கள், நாம் அறியாமல் பின்னணியில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள், போதுமான அளவில் இல்லாத ராம் மெமரி, மால்வேர் புரோகிராம்கள் எனப் பல காரணங்கள் இருக்கும். இருப்பினும், எளிதான முறையில் சரி செய்திட, நம் கம்ப்யூட்டரில் உள்ள கேஷ் மெமரியைப் புதுப்பிப்பது, தற்காலிக பைல்களை நீக்குவது, தற்காலிக பிரவுசர் பைல்களை நீக்குவது போன்ற செயல்களில் அடிக்கடி ஈடுபடுவது, நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டினைத் தொடர்ந்து சீராக வைத்திருக்கும். தேவையற்ற புரோகிராம்கள் இயங்குவதனை ஸ்டார்ட் அப் சென்று நீக்கலாம். அல்லது இயங்காமல் வைத்திருக்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X