மல்லன் மாறப்பன்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 டிச
2014
00:00

சென்றவாரம்: சந்திரகிரி இளவரசி லக்ஷ்மி தேவியை வெங்கண்ணாவின் பிடியிலிருந்து மீட்ட மாறப்பன், நடந்தவற்றையும், தன்னைப் பற்றியும் அவளிடம் கூறினான். இளவரசியை அவளது தோழி வீட்டில் சிலகாலம் இருக்கும்படி விட்டுவிட்டு, விஜயநகரத்திற்கு கிளம்பினான் மாறப்பன். இனி-

கிருஷ்ண தேவராயர், பறங்கியர் முகாமிலே நடந்த குத்துச் சண்டையைப் பார்வை இடவந்ததையும், அந்தப் போட்டியிலே சூழ்ச்சி புரிந்த வெள்ளையர்களின் வேஷத்தைக் கலைத்துத் தான் வெற்றி பெற்றதையும், தான் அணிந் திருந்த பொன்னாபரணத்தைக் கழற்றி அதைத் தனக்கு அணிவித்துப் பாராட்டிய மகாராயரின் பெருந்தன்மையையும் நினைத்து அசை போட்டுக் கொண்டே, அந்தக் காட்டுப் பாதையில் மெல்லச் சென்று கொண்டிருந்தான் மாறப்பன்.
மன்னர் கிருஷ்ண தேவராயர், தனது தலைநகர் வந்து தம்மைச் சந்திக்குமாறு அவனிடம் கூறி இருந்தார். மகாராயரைக் காணும் ஆவலினால், தமிழ் நாட்டிலிருந்து தான் கிளம்பிய அந்த நாளை நினைத்துக் கொண்டான். கிருஷ்ண தேவராயரே தன்னைப் பார்த்து, விஜயநகரில் வந்து தன்னைச் சந்திக்குமாறு கூறும் சூழ்நிலையை உருவாக்கிய விதியின் விளையாட்டையும் எண்ணிப் பார்த்தபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது.
"தலைநகர் எப்படி இருக்குமோ மகாராயரைச் சந்திப்பது எப்படி?' என்று கவலைப்பட்டவனுக்கு, மன்னர் வெகுமான மாக அளித்த தங்கச் சங்கிலியின் நினைவு வரவே, மன்னரின் முத்திரை பதித்துள்ள இந்தச் சங்கிலிக்கு அரண்மனைக் காவலர்கள் தலை வணங்கி என்னை அவரிடம் அழைத்துப் போவார்கள்... என்று நிம்மதிப் பட்டான் மாறப்பன்.
"நண்பன் திம்மராயன் தலைநகரில் இருப்பதாகத்தான் கூறினான். ஆகவே, விஜய நகரம் போனதும் முதலில் அவனைச் சந்திக்க வேண்டும். அதன் பிறகு எல்லாமே சுலபமாக முடியும்...' இப்படிப் பல்வேறு எண்ண அலைகளில் மிதந்தபடி போய்க் கொண்டிருந்த மாறப்பனை, தூரத்தில் கண்ட காட்சி, குதிரையின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து நிற்கச் செய்தது.
காட்டு வழியில் குறுக்கே கூட்டமாகப் பலர் நின்று கொண்டிருந்தனர். சில போக்கு வண்டிகளும் கூட.
"கல்யாண கோஷ்டியா... அல்லது வியாபாரிகளின் கூட்டமா? ஏன் நடுக் காட்டில் சாலையின் குறுக்கே இப்படி...?' குதிரையை உதைத்து முடுக்கி வேகமாக அவர்கள் அருகில் போனான். அவர்கள் அருகே சென்றதும் அவன் குழப்பம் அதிக மாயிற்று. கூட்டத்தினரின் முகங்களில் கலவரமும், பீதியும் அப்பிக் கிடந்தன.
""ஏன்... என்ன விஷயம்? எதற்காக இங்கு நடுக்காட்டில் கலவரமுடன் நிற்கிறீர்கள்?'' என்று கேட்டான் மாறப்பன்.
""தம்பி, நீயும் வந்து சிக்கிக் கொண்டாயா?'' கொள்ளைக்காரன் ருத்ரய்யா, அதோ பார்!'' என்றார் வியாபாரி களில் ஒருவர்.
அதே சமயம், மரத்தின் பின்னாலிருந்து ஒரு கட்டைக் குரல் பேசியது.
""குதிரை வீரனே வா...! என் துப்பாக்கிக்கு வேலை தராமல் உன்னிடமுள்ள பொருள் களைக் கொடுத்து விடு!'' என்று கூறிக் கொண்டே முக மூடி அணிந்த ஒரு கம்பீரமான உருவம் முன்னால் வந்தது. மூக்கையும், வாயையும் ஒரு துணியினால் மறைத்து தலைப்பாகையோடு கட்டிக் கொண்டிருந்தான் அந்தக் கொள்ளைக்காரன் ருத்ரய்யா. அவன் கையில், மாறப்பனின் நெஞ்சைக் குறி பார்த்தபடி ஒரு துப்பாக்கி இருந்தது. ரோமம் அடர்ந்த புருவங்களின் கீழே பளபளத்த விழிகள் சிவந்திருந்தன.
கொள்ளைக்காரனை முறைத்துப் பார்த்த மாறப்பன் கலவரமற்ற குரலில் பேசினான்.
""என்னிடமுள்ள பொருள்களைத் தரா விட்டால் நீ என்ன செய்வாய்?''
மாறப்பனின் துணிச்சலைக் கண்ட வியாபாரிகள், ""தம்பி, தம்பி! அந்தப் பறங்கி ஆயுதமான துப்பாக்கியோடு தகராறு வேண்டாம். ருத்ரய்யா ஈவு இரக்கமற்ற கொடியவன்... கொலைக்கும் அஞ்சா தவன்...'' என்று குழறினர்.
அதே சமயம், கொள்ளையனின் இடது கை, மாறப்பனின் கழுத்தில் கிருஷ்ண தேவராயர் அவனுக்கு அணிவித்த மின்னும் தங்கச் சங்கிலியின் பதக்கத்தைப் பற்றி ஆராயலாயிற்று.
""அதைத் தொடாதே!'' என்று வெடித்தான் மாறப்பன்.
""உன் நீசக் கையினால் அதன் புனிதத்தை மாசுபடுத்தாதே. மன்னர் மகாராயர் எனக்களித்த பரிசு அது. என் உயிருக்கும் மேலானது. எடு கையை. இல்லாவிடில், என் முஷ்டி உன் மூக்கைச் சப்பையாக்கும்!''
ஆனால், மாறப்பன் தன் பேச்சை முடிக்கும் முன் அவன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி ருத்ரய்யாவின் கைக்குப் போய்விட்டது.
அதே சமயம், அவன் வலது கையிலிருந்த துப்பாக்கியின் கட்டை மாறப்பனின் தலையைப் பலமாகத் தாக்கியது.
"ஐயோ!' என்று அலறியபடி, வலி தாளாமல் தலையைக் கைகளால் பற்றிக் கொண்டு தரையில் சரிந்தான் மாறப்பன்.
கொள்ளைக்கார ருத்ரய்யா, துப்பாக்கி யினால் ஆகாயத்தில் சுட்டு வெடியுண்டாக்கி னான். வியாபாரிகளின் வண்டி மாடுகள், மிரண்டு சிதறி ஓடின. வியாபாரி களிடம் கொள்ளையிட்ட பொருள்களோடு, மாறப் பனின் தங்கச் சங்கிலியையும் எடுத்துக் கொண்டு, தன் குதிரையைத் தட்டி விட்டு, கானகத்தினுள் புகுந்து மறைந்து போனான் ருத்ரய்யா.
பொறி கலங்கிப் போயிருந்த மாறப்பனுக்குச் சிகிச்சை அளித்தனர் வியாபாரிகள்.
""தம்பி, நீ குதிரை மீது வருவதைத் தூரத்தில் பார்த்த போது நாங்கள் ரொம்ப நம்பிக்கையோடிருந்தோம். உன்னிடம் ஆயுதம் இருக்கும். கொள்ளைக்கார ருத்ரய்யாவோடு போராடி எங்களைக் காப்பாற்றுவாய் என்று நினைத்தோம். அவனும் கூட உன்னைக் கண்டு சஞ்சலப்பட்டு மரத்தின் பின்னால் போய் மறைந்து கொண்டான். ஆனால், நீ ஆயுதம் ஏதுமின்றி அசட்டுத்தனமாக அவனிடம் அடி வாங்கிக் கிட்டு, தங்கச் சங்கிலியையும் இழந்துவிட்டாயே,'' என்றனர்.
மாறப்பனின் தலை, வலியினால் விண் விண் என்று தெறித்துக் கொண்டிருந்தது.
"அந்த அயோக்கியனை நான் விடப் போவ தில்லை. அவனிடமிருந்து மன்னரின் வெகுமதி யான சங்கிலியை மீட்பேன் இது உறுதி!' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான். தங்கள் உடைமைகளையும், வண்டி மாடுகளையும் இழந்த வியாபாரிகள் நடந்தே அடுத்துள்ள ஓர் ஊரை அடைந்தனர்.
அந்த ஊரில் மாறப்பனுக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது. தன் குதிரையையும் உடைமை களையும் கொள்ளைக்காரனிடம் பறிகொடுத்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்தவன், அவ்வூர் அரசினர் மாளிகையில், தன் நண்பன் திம்ம ராயனைக் கண்டு திகைத்துப் பின் மகிழ்ச்சி யடைந்தான்.
""அருமை நண்பா, திம்மராயரே! உன்னைச் சந்திக்கத் தான் தலைநகருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். என் அதிர்ஷ்டம். உன்னை இங்கேயே சந்தித்து விட்டேன். இந்த ஊரில் நீ எப்படி...?'' என்று கேட்டான்.
திம்மராயனுக்கும் மாறப்பனை அந்த ஊரில் திடீரென்று சந்தித்ததில் வியப்பு,""மாறப்பா! கப்பலிலிருந்து எப்போது, எப்படி விடுதலை பெற்றாய்? உன்னைக் கண்டதில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா?'' என்று மாறப்பனைத் தழுவிக் கொண்டான்.
""நான் இங்கு வரி வசூல் செய்யும் அதிகாரி யாகப் பணியாற்ற வந்திருக்கிறேன். நீ எப்படி இங்கு வந்தாய்? உன் கதையைக் கூறு,'' என்று மாறப்பனை அரசாங்க விடுதிக்கு அழைத்துப் போனான் திம்மராயன்.
தன் போர்த்துக்கீசியக் கப்பலிலிருந்துதான் தப்பியதையும், பிறகு அவர்கள் முகாமில் மகாராயர் முன் குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றி பெற்று, ராயரின் கையால் பொற்சங்கிலி அணிவிக்கப்பட்டுப் பாராட்டுப் பெற்றதையும், சந்திரகிரி இளவரசி லஷ்மி தேவி பற்றிய விவரங்களையும் விரிவாகக் கூறினான்.
""மாறப்பா, உன் தீரத்தை எண்ணிப் பெருமைப்படுகிறேன். சந்திரகிரி இளவரசியின் கணவனாகப் போவதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உன் வீரத்துக்கும், அழகுக்கும் ஏற்ற பரிசு,'' என்று கூறி நிஜமாகவே சந்தோஷப் பட்டான் திம்மராயன்.
""நீ என்னுடனேயே தங்கலாம். சில நாளில் நான் வரி வசூலை முடித்துக் கொண்டு தலை நகருக்குத் திரும்புவேன். அப்போது, உன்னை மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் நானே அழைத்துப் போகிறேன்,'' என்றான் திம்மராயன்.
அரசு அதிகாரியாக, ராஜாங்க காரியமாக வந்துள்ள, திம்மராயனுக்குத் தன்னால் தொல்லை கூடாதென்று கருதியவன், ""நண்பா திம்மா! நான் சத்திரத்திலேயே தங்குகிறேன். ராயரின் ஆட்சியில் சத்திரங்களில் தங்கும் பயணிகளுக்கு என்ன குறை? ராஜ உபசாரம் செய்கிறார்களே. தவிர, உன் விடுதிக்கு அருகிலே தானே சத்திரம் உள்ளது? நீ தலைநகர் திரும்பிய பின் உன் வீட்டில் உன்னுடனேயே தங்குகிறேன். இங்கு வேண்டாம். இதைத் தவறாகக் கருதாதே,'' என்று கூறித் திம்ம ராயனிடம் விடை பெற்றுச் சத்திரத்துக்கு வந்தான் மாறப்பன்.
-தொடரும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X