பரம்பொருளாய் விண்டோஸ் 10
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 பிப்
2015
00:00

''விண்டோஸ் இயக்கத்திற்கு இது ஒரு மாபெரும் திருநாள்” என்ற உணர்ச்சிப் பெருக்கான வாசகத்துடன், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி நாதெள்ளா, விண்டோஸ் 10 இயக்க முறைமையின், நுகர்வோர் சோதனைப் பதிப்பினை, மக்கள் பார்க்கும் வகையில், ரெட்மண்ட் நகரில் நடைபெற்ற விழாவில், மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைமையகத்தில் வெளியிட்டார். ”விண்டோஸ் சிஸ்டத்தை தேடிப் பெற்ற மக்களிடமிருந்து, விண்டோஸ் சிஸ்டத்தை தேர்ந்தெடுத்து, அதனை நேசிக்கும் மக்களை நோக்கி நாம் நகர்வோம்” என்று விண்டோஸ் சிஸ்டத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களை நோக்கி அன்பு பெருக்கோடு உரையாற்றினார், நாதெள்ளா.
நம் வாழ்க்கை முறையையும், சிந்தனையையும் மாற்றி அமைத்த விண்டோஸ் இயக்கம், இனி, நம் வாழ்வின் சூழ்நிலைகளை மாற்றி அமைக்கும் பணியை, விண்டோஸ் 10 இயக்கத்துடன் தொடங்குகிறது. இந்த உலகிற்கு இன்னும் விண்டோஸ் ஒரு கட்டாயத் தேவையாக இருக்கும்; அது இல்லாமல் உலகு இயங்காது என்பதனை நிரூபிக்கும் வகையில், விண்டோஸ் 10 வருகிறது.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பது, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு பெரிய சவால் ஆகும். அதனுடைய வெற்றியில் தான், அந்நிறுவனத்தின் எதிர்காலமே உள்ளது. அந்த வகையில், விண்டோஸ் 10 சிஸ்டம் குறித்த நடவடிக்கைகள் அனைத்தையும், மைக்ரோசாப்ட் நிறுவனம் சரியாகவே மேற்கொண்டுள்ளன என்று கூறலாம். பத்தாண்டுகளுக்கு முன்னால், அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும், பெரும்பாலும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில், 90% விண்டோஸ் இயக்கமே இயங்கியது. அதன் பின்னர் வந்த ஸ்மார்ட் போன், டேப்ளட் ஆகிய டிஜிட்டல் சாதனங்களில், ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் இயங்கியதால், டிஜிட்டல் சாதனங்களில் விண்டோஸ் இயக்கத்திற்கான பங்கு 15% ஆகக் குறைந்தது. இதனைச் சரி செய்து உயர்த்தும் பணியில், விண்டோஸ் 10 இயங்கும் எனக் கூறலாம்.
ஏற்கனவே வெளியான தொழில் நுட்ப பிரிவினருக்கான முன்னோட்ட பதிப்பில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் ஏற்படுத்திய தவறுகள் அனைத்தையும் சரி செய்தது. தற்போதைய, நுகர்வோருக்கான சோதனைத் தொகுப்பில், ஆச்சரியப்படத்தக்க வகையில் பல புதிய வசதிகளை நுகர்வோருக்குத் தந்துள்ளது. தொழில் நுட்ப பிரிவினருக்கான முன்னோட்ட பதிப்பினைப் பல லட்சம் பேர் சோதனை செய்து தங்கள் பின்னூட்டங்களைத் தந்தனர். இவர்களை முறைப்படுத்துவதற்காகவே, 'விண்டோஸ் இன்சைடர் திட்டம்' ("insiders")என்ற ஒன்றை மைக்ரோசாப்ட் சென்ற ஆண்டில் தொடங்கி, இன்னும் இயக்கிக் கொண்டுள்ளது. இந்த புதிய இயக்க முறைமையின், சிறப்பு அம்சங்களை இங்கு காணலாம்.

இலவசமாய்ப் பெறலாம்: முதலாவதாக, பலரும் எதிர்பார்த்துக் கேட்டுக் கொண்டது போல, விண்டோஸ் 10 பதிப்பு, விண்டோஸ் 7 மற்றும் அடுத்து வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்துவோருக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை இயக்கும் அனைத்து கம்ப்யூட்டர்களையும், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்துவிடலாம். கூடுதலாக, விண்டோஸ் 8.1 பயன்படுத்தும் விண்டோஸ் போன்களும், இதே விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்டேட் செய்யப்படும்.
மைக்ரோசாப்ட், 'விண்டோஸ்' என்பது இனி ஒரு சேவையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால், இது குறித்த விரிவான தகவல்களை வெளியிடவில்லை.

ஒரே சிஸ்டம்: ஆப்பிள், ஓ.எஸ். எக்ஸ் சிஸ்டத்தினை தன் டெஸ்க்டாப் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகவும், ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தை மொபைல் சாதனங்களுக்காக எனவும் பிரித்து வைத்து இயக்கி வருகிறது. ஆனால், முதன் முதலாக, மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10 சிஸ்டத்தை, பெர்சனல் கம்ப்யூட்டர் முதல் அனைத்து மொபைல் சாதனங்களுக்கும் இயைவானதாகத் தர இருக்கிறது. இவற்றில் இயங்கும் இடை முகங்களும் (Interface) ஏறத்தாழ ஒரே மாதிரியாக அமைய இருக்கின்றன. இதனால், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10ல் தொடங்கிய வேலையை, போனில் தொடரலாம். அதே போல, போனில் தொடங்கிய வேலையை, டேப்ளட் பி.சி.யில் இயக்கலாம். அனைத்து சாதனங்களையும் ஒரே இயக்கத்தில் கொண்டு வரும் இந்த வசதியினை, மைக்ரோசாப்ட் வெகு காலமாக எண்ணி வந்து, இப்போது ஈடேற்றியுள்ளது.
இதன் மூலம், மொபைல் கம்ப்யூட்டிங் உலகில் கோலோச்சி வரும், கூகுள் ஆதரிக்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் சிஸ்டங்களின் வாடிக்கையாளர்களைத் தன் பிடிக்குள், விண்டோஸ் சிஸ்டம் மூலம், தன் குடைக்குள் கொண்டு வருகிறது மைக்ரோசாப்ட். இதற்காகவே, உலக அளவில், தன் விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்தும் 150 கோடி பேர்களுக்கு, புதிய விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இலவசமாகப் பெற அனுமதித்துள்ளது.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 சிஸ்டத்தினை, பெர்சனல் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் சாதனங்களுக்கு மட்டுமில்லாமல், வேறு பல சாதனங்களையும் இயக்கும் வகையில் வடிவமைத்து வெளியிடுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சர்பேஸ் ஹப் (Surface Hub,) மற்றும் எக்ஸ் பாக்ஸ் ஒன் (Xbox One) ஆகியவையும் இதே சிஸ்டத்தினைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கிறது. இதனால், விண்டோஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஸ்டோர்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. வை பி இணைப்பு மூலம், எக்ஸ் பாக்ஸில் உள்ளனவற்றை, கம்ப்யூட்டரில் இயக்கலாம். எதிர் வழியில், மாற்றியும் இயக்கலாம்.
விண்டோஸ் 10 சிஸ்டம் கட்டமைப்பு, புரோகிராம்களை வடிவமைக்கும் டெவலப்பர்கள், ஒரே நேரத்தில், ஸ்மார்ட் போன், டேப்ளட், லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்குத் தங்கள் அப்ளிகேஷன்களை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த அனைத்து சாதனங்களையும் இயக்கும் ஒரே சிஸ்டமாக, மைக்ரோசாப்டின் விண்டோஸ் இருக்கப் போகிறது என இனி அடித்துச் சொல்லலாம்.

ஹலோ கார்டனா!: மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே வடிவமைத்துள்ள கார்டனா (Cortana digital assistant) விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கார்டனா இப்போது முழுமையாக, செறிவான திறன் பெற்றுள்ளது. மேப்ஸ், ஒன் ட்ரைவ் மற்றும் ஸ்பார்டன் பிரவுசர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நம் டிஜிட்டல் உதவியாளராகச் செயல்படும். நாம் டைப் செய்தோ, அல்லது குரல் வழியாகவோ, பைல் ஒன்றைத் தேடலாம். கார்டனா, இவற்றிலிருந்து நம்மைப்பற்றி நன்கு அறிந்து கொள்ளும். இதனைத் தொடர்ந்து பயன்படுத்துகையில், நமக்கு சில மேம்படுத்தப்பட்ட விஷயங்களைப் பரிந்துரைகளாகத் தரும்.

ஸ்பார்டன் பிரவுசர்: தன் விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இணைத்து வழங்குவதுடன், புதுமையான பிரவுசராக இருக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், ஸ்பார்டன் பிரவுசரை, நவீன தொழில் நுட்பத்தில், புதிய கூடுதல் வசதிகளுடன் மைக்ரோசாப்ட் வடிவமைத்துள்ளது. இதன்படி, ஓர் இணைய தளம் இதில் குறிப்பிடப்படுகையில், அந்த இணையதளப் பக்கத்தினை, அதனுடனான தொடர்புகளுடன் உறைய வைத்து காட்டுகிறது.
இதனால், தான் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, உருவாக்கி, மேம்படுத்தித் தந்த இன்டர்நெட் பிரவுசரை மைக்ரோசாப்ட் விட்டுவிடவில்லை. அதனையும் தன் சிஸ்டத்துடன் தருகிறது. ஆனால், இனி வருங்காலத்தில், இதற்கும் எக்ஸ்பிக்கு நேர்ந்த கதி ஏற்படலாம். முற்றிலும் மறைக்க, மறுக்கப்படலாம்.

மொபைல் போனுக்கும் விண்டோஸ் 10: போனில் விண்டோஸ் ஒரு முழுமையான மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. புதிய வகையில் போட்டோ, ஸ்கைப், ஆபீஸ் மற்றும் பிற அப்ளிகேஷன்கள் மாற்றப்பட்டு, மேம்படுத்தப்பட்டு கிடைக்கின்றன. கீ போர்டினை மாற்றி அமைக்கும் வகையில் தருகிறது. மெசேஜ் அனுப்ப, குரல் வழியினை பயனாளர்கள் மேற்கொள்ளலாம். ஸ்கைப் அப்ளிகேஷன் சிஸ்டத்துடன் இணைக்கப்படுகிறது. இதன் மூலம், மெசேஜ்கள் தாமாகவே, ஸ்கைப் மூலம் அனுப்பப்படுகின்றன. ஸ்கைப், டயலருடன் இணைக்கப்படுகிறது. போனில் இயங்கும் விண்டோஸ் சிஸ்டத்திற்கான ஆபீஸ் அப்ளிகேஷம் முற்றிலுமாக மேம்படுத்தப்பட்டு கிடைக்கிறது. பயனாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளும், வேர்ட், எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் அப்ளிகேஷன்களுடன் கிடைக்கின்றன.

விளையாடும் வசதி: போனில் இயங்கும் விண்டோஸ் 10, கேம் விளையாடுவதற்கான வசதிகளை மேம்படுத்துகிறது. இதனுடைய புதிய DirectX 12 அப்ளிகேஷன் புரோகிராமிங் மொழி, விளையாடுவதனை புதிய அனுபவமாகக் காட்டுகிறது.

எக்ஸ்பாக்ஸ்: மைக்ரோசாப்ட் தன் எக்ஸ்பாக்ஸ் (Xbox) அப்ளிகேஷனை, விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இணைத்துள்ளது. அதே போல, விண்டோஸ் 10 எக்ஸ்பாக்ஸ் ஒன் கன்சோலுடன் இணைக்கப்படுகிறது.

தொடரும் உறவு: விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தரப்பட்டுள்ள மிகப் பெரிய வசதி, அதன் தொடரும் உறவு தான். ஆம், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டங்களைப் பயன்படுத்தியவர்கள், விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பயன்படுத்தும்போது, ஒரு தொடர்ச்சியினை உணர்வார்கள். ஸ்டார்ட் மெனு மீண்டும் தரப்படுகிறது. அதே போல, விண்டோஸ் 8 பயனாளர்கள், அந்த சிஸ்டத்தில் விரும்பியவையும் தரப்பட்டுள்ளன. இவ்வாறு அனைத்திற்கும் இசைவான இடைமுகத்தினை மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10ல் Continuum என அழைக்கிறது.
விண்டோஸ் 10, மவுஸ் மற்றும் கீ போர்டினை உணர்ந்தவுடன், தானாக, பழைய வகை விண்டோஸ் எக்ஸ்புளோரரை ஸ்டார்ட் பட்டனுடன் காட்டுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டம் டெஸ்க்டாப்பில் பழகியவர்கள், இரண்டு வகையையும் இயக்கலாம். ஐகான்கள் புதிய உருவினைப் பெற்றுள்ளன. விண்டோஸ் 8 சிஸ்டத்தின் பெரிய அளவிலான ஐகான்களையும், பழைய ஸ்டார்ட் மெனுவுடன் இயங்குகையில், சிறிய அளவிலான ஐகான்களையும் பெற்று இயக்கலாம்.
விண்டோஸ் 8 சிஸ்டத்தில், அனைவராலும் விருப்பமில்லாமல் இயக்கப்பட்ட சார்ம்ஸ் மெனு (charms menu) விற்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, வலது பக்கம் இருந்து ஸ்வைப் செய்தால், புதிய நோட்டிபிகேஷன்ஸ் மெனு கிடைக்கிறது. இதில், பல அப்ளிகேஷன்களுக்கான இயக்க தொடக்கம் முடிவிற்கான விரைவாக இயங்கும் டாகிள் (quick-toggle) பட்டன்கள் தரப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி, டெஸ்க்டாப் மற்றும் டேப்ளட் என்ற நிலைகளுக்கு மாறிக் கொள்ளலாம். வை பி மற்றும் பிற செட்டிங்ஸ் அமைப்புகளையும் இயக்கலாம். செட்டிங்ஸ் மெனுவும், கண்ட்ரோல் பேனலும் புதிய பிரிவில் தரப்படுகின்றன.

விரைவான வேகம்!: மைக்ரோசாப்ட் தன் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்களை வழங்கும் போதெல்லாம், அது மெமரியில் அதிக இடத்தை எடுத்துக் கொள்கிறதென்றும், அதனால், சிஸ்டம் மெதுவாக இயங்குகிறது என்றும் குற்றச் சாட்டுகள் அடுக்கப்பட்டன. அது உண்மையே. அதனால், மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் 7 முதல், இத்தகைய குற்றச்சாட்டுகள் வராமல் பார்த்துக் கொண்டது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மிகச் சிறியதாக அமைத்து, வேகமாக இயங்கும் வண்ணம் வைத்துக் கொண்டது. விண்டோஸ் 10 சிஸ்டத்திலும், இந்த இலக்கு அழகாக அடையாளம் காணப்பட்டுள்ளது. விண்டோஸ் 8.1 இயக்க வேகத்தைக் காட்டிலும் மட்டுமில்லாமல், ஆப்பிள் நிறுவனத்தின் ஓ.எஸ்.எக்ஸ். யோஸ்மைட் சிஸ்டத்தைக் காட்டிலும் வேகமாக இயங்கும் வகையில், விண்டோஸ் 10 வடிவமைக்கப்படுகிறது.
விண்டோஸ் 7 முதல் அதன் பின் வந்த அனைத்து சிஸ்டங்கள் இயங்கிய கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 10 இயங்கும். இதனால், விண்டோஸ் 10 இயக்க, ஹார்ட்வேர் உயர்த்தப்பட வேண்டும் என்ற செலவு பயம் இல்லை.

அசையாத பாதுகாப்பு: இதுவரை வெளியிட்ட விண்டோஸ் இயக்க முறைமைகளில், மிகவும் அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது விண்டோஸ் 10 என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அண்மைக் காலத்தில் ஹேக்கர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், விண்டோஸ் 10 சிஸ்டத்தில் பலிக்காது எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஒன் ட்ரைவில் பல கட்டமைப்பு மாறுதல்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஒன் ட்ரைவில் சேவ் செய்யப்படும் பைல்கள் போட்டோஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் மியூசிக் அப்ளிகேஷன்களில் இயக்கப்படும். மேலும், போட்டோக்களைப் பொறுத்தவரை டூப்ளிகேட் பைல்கள் தாமாகவே களையப்படும். மிச்சமிருக்கின்ற பைல்கள், மேம்படுத்தப்படும்.

புதிய நவீன தொழில் நுட்பம்: மேலே கூறப்பட்டவை அனைத்தும் நாம் ஏற்கனவே, மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து பெற்று வந்தவற்றின் புதிய மாற்றங்கள். இவற்றுடன், முற்றிலும் புதிய பரிமாணங்கள் கொண்ட, நவீன தொழில் நுட்ப சங்கதிகளை, மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் தருகிறது. அந்த வகையில் முதலில் நாம் சந்திப்பது ஹோலோ லென்ஸ் (HoloLens) மற்றும் சார்ந்த அப்ளிகேஷன்கள் ஆகும். உலகிலேயே முதன் முதலாக, ”ஹோலோ கிராபிக் கம்ப்யூட்டிங் இயக்க மேடையை”, மைக்ரோசாப்ட் அமைக்கிறது. இதன் மூலம், பயனாளர்கள், முப்பரிமாண ஹோலோ கிராம்களை அமைக்கலாம். இதற்கான தலை அணிகலனை மாட்டிக் கொண்டு, விண்டோஸ் 10 சிஸ்டம் வழங்கும் ஹோலோ லென்ஸ் தொழில் நுட்பத்துடன் இணைந்து, ஹோலோ கிராபிக் உருவங்களை, நம் நிஜ உலகில் உலவவிடலாம்.
இது குறித்து உரையாற்றுகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் நாதெள்ளா, “இனி ஹோலோகிராம் உருவங்கள், நம் தினசரி வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிடும்” என்றார்.

விண் 10-எப்பொழுது எங்கு கிடைக்கும்?: சென்ற அக்டோபர், 2014 முதல், விண்டோஸ் 10ன் தொழில் நுட்ப முன்னோட்ட பதிப்பு வெளியானது. அப்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் இன்சைடர் (Windows Insider) புரோகிராம் என்ற ஒன்றைத் தொடங்கி, ஆர்வலர்களைப் பதியுமாறு கேட்டுக் கொண்டது. இந்த புரோகிராமில் பதிந்தவர்களுக்கு, வரும் வாரங்களில் விண்டோஸ் 10 நுகர்வோர் சோதனைப் பதிப்பு பயன்படுத்த அனுமதி கிடைக்கும்.
மொபைல் போனில் பயன்படுத்துவதற்கான விண்டோஸ் 10 சோதனைத் தொகுப்பு வரும் பிப்ரவரியில் கிடைக்கும்.
மொத்தமாகப் பயனாளர் அனைவருக்கும், விண்டோஸ் 10 இந்த ஆண்டின் பிற்பகுதியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.