கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஏப்
2015
00:00

கேள்வி: ஸ்பார்டன் பிரவுசர் குறித்து நிறைய எழுதி உள்ளீர்கள். மைக்ரோசாப்ட் விரைவில் தர இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது தற்போது வந்துவிட்டதா? எந்த இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்திடலாம்? நீங்கள் பயன்படுத்திப் பார்த்தீர்களா? பாதுகாப்பானதா?
கே. பூங்கோதை, சென்னை.
பதில்:
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனைவருக்கும் கிடைக்கும்போது இந்த பிரவுசர் கிடைக்கும். 'ஸ்பார்டன்' என்பது புதிய பிரவுசரின் குறியீட்டுப் பெயர் தான். இந்த பெயரிலேயே பிரவுசர் கிடைக்கலாம். அல்லது வேறு பெயரில் கிடைக்கலாம். தற்போது விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சோதனைப் பதிப்பினைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பார்ப்பவர்களுக்கு, அண்மையில் ஸ்பார்டன் பிரவுசரின் சோதனைப் பதிப்பும் கிடைக்கிறது. ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். விண் 10 மற்றும் ஸ்பார்டன் இரண்டுமே சோதனைப் பதிப்பு தான்.
சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்திப் பார்த்த வகையில், ஸ்பார்டன் பிரவுசர், வேகமாக, உண்மையிலேயே அதி வேகமாக இயங்குகிறது. இதன் முகப்பு தோற்றம், பிரிவுகள் அமைப்பு அனைத்தும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 ஐக் காட்டிலும் எளிமையாகவும், வசதியாகவும் உள்ளது. நாம் திறக்கும் ஒவ்வொரு இணையப் பக்கத்திற்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ளது போல, சதுர டேப்கள் தரப்படுகின்றன. இதில் உள்ள எக்ஸ் ('x') அடையாளத்தினை கிளிக் செய்தால், தளங்கள் மூடப்படுகின்றன. '+' அடையாளத்தினைக் கிளிக் செய்தால், புதிய டேப்கள் திறக்கப்படுகின்றன. இடது புறம் மேலாக, முன் மற்றும் பின் சென்ற இணைய தளங்களைப் பெறுவதற்கான அம்புக் குறிகள் (Forward and Back) தரப்பட்டுள்ளன.
கூடவே, ஒரு ரெப்ரெஷ் பட்டனும் தரப்பட்டுள்ளது. பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தினை, மீண்டும் தரவிறக்கம் செய்து பார்க்க. இங்கு கிடைக்கும் பாரில் கிளிக் செய்தால், தேடலுக்கான கட்டமும், இணைய தள முகவரிக்கான கட்டமும் கிடைக்கிறது. வலது மேற்புறம் உள்ள ஸ்டார் பட்டனில் கிளிக் செய்தால், பேவரிட் தளங்களை இணைக்கலாம்; அல்லது ரீடிங் லிஸ்ட்டில் தேவையானவற்றைச் சேர்க்கலாம். அத்துடன், ஓர் இணைய தளக் கட்டுரையைப் பின்னர் படித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தால், அதற்கான ஆப்ஷனும் தரப்பட்டுள்ளது. ஏதேனும் இணைய தளப் பக்கத்தினை பேவரிட்ஸ் பிரிவில் இணைத்தால், அதற்குத் தனியாக ஒரு பெயர் கொடுத்து, போல்டர் ஒன்றில் ஒதுக்கி வைக்கலாம். இதில் வேடிக்கையான ஒன்றாக அல்லது புதிய ஒன்றாக எனக்குப் பட்டது இதில் காணப்படும் கடிகார ஐகான் தான். இதனைக் கிளிக் செய்தால், பிரவுசரின் ஹிஸ்டரி கிடைக்கிறது. கீழ் நோக்கி உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால், நாம் அண்மையில் டவுண்லோட் செய்தவை பட்டியலிடப்படுகின்றன. பேனா மற்றும் பேப்பர் போல உள்ள ஐகானில் கிளிக் செய்தால், இணைய தளத்தில் ஏதேனும் எழுதி வைக்கலாம். கடைசி ஐகானாக மூன்று புள்ளிகள் உள்ள ஐகான் தரப்பட்டுள்ளது. இதில் கிளிக் செய்தால், செட்டிங்ஸ் மற்றும் சார்ந்த வேலைகளை மேற்கொள்ளலாம். இன்னும் நிறைய சொல்லலாம். இவை எல்லாம். தற்போது இருப்பவற்றிலிருந்து மாறுபட்டவை.

கேள்வி: ஒரு ப்ளாஷ் ட்ரைவில் கம்ப்யூட்டர் முழுவதையும் காப்பி செய்து, அப்படியே இயக்க முடியுமா? மானிட்டர் மற்றும் பிற சாதனங்களுக்கு இணைப்பு கொடுக்கும் வகையில் ஏதேனும் கட்டமைப்பு உள்ள பிளாஷ் ட்ரைவ் உள்ளதா?
ஆ. நிகிலா தினேஷ், கோவை.
பதில்:
உங்கள் கேள்வி சற்று விளக்கமாக இல்லை என்றாலும், நீங்கள் கேட்க விரும்பும் பொருளும், அதன் பின்னணி ஆர்வமும் தெரிகிறது. ப்ளாஷ் ட்ரைவில் கம்ப்யூட்டரின் மொத்த கட்டமைப்பினையும் எடுத்துச் சென்று, அதனை மானிட்டர் அல்லது அது போன்ற ஒன்றுடனும் கீ போர்டுடனும் இணைத்து கம்ப்யூட்டராக இயக்க முடியுமா? இதுதானே உங்கள் ஆர்வத்தின் அடிப்படை. இதோ அதற்கான தகவல் பதில்.
இதுவரை அப்படி எதுவும் இல்லை. ஆனால், கூகுள் நிறுவனம் அது போன்ற ஒன்றை வடிவமைத்துக் காட்டியுள்ளது. இந்த ப்ளாஷ் ட்ரைவ் அளவிலான கம்ப்யூட்டர் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியது. அசூஸ் (ASUS) நிறுவனம் இதனை வெளியிட உள்ளது. விலை 100 டாலருக்கும் குறைவாகவே இருக்கும். இதனை எச்.டி.எம்.ஐ.(HDMI) போர்ட் உள்ள எந்த சாதனத்துடனும் இணைக்கலாம். கீ போர்ட் மற்றும் மவுஸ் சாதனங்களை புளுடூத் மூலம் இணைக்கலாம். அவ்வளவுதான், கம்ப்யூட்டர் ரெடி. இன்ஸ்டண்ட் காபி போல, இன்ஸ்டண்ட் கம்ப்யூட்டர் ரெடி. இது மாணவர்களுக்கு மிக உகந்ததாக இருக்கும். தங்கள் பாக்கெட்டில் கம்ப்யூட்டரைத் தூக்கிச் சென்று பயன்படுத்தலாமே. குரோம் பிட் என அழைக்கப்படும் இந்த கம்ப்யூட்டர் 2 ஜி.பி. ராம் மெமரியும், 16 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரியும் கொண்டது. இல்லை என்றால் என்ன? இருக்கவே இருக்கிறது க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையிலான மெமரி.
இல்லை, எனக்கு விண்டோஸ் கம்ப்யூட்டர் தான் வேண்டும். அதில் தான் பழகி இருக்கிறேன் என்று கூறினால், இண்டெல் உங்களுக்காகவே, எச்.டி.எம்.ஐ. ஸ்டிக் கம்ப்யூட்டர் ஒன்றை உருவாக்கி வழங்குகிறது. இதன் மூலம் உங்கள் டிவியில் எச்.டி.எம்.ஐ. போர்ட் இருந்தால், அதனை கம்ப்யூட்டராக மாற்றிப் பயன்படுத்தலாம். இதில் வை பி, புளுடூத், யு.எஸ்.பி. போர்ட்,32 ஜி.பி. மெமரி எனப் பல வசதிகள் உள்ளன. இதன் விலை 150 டாலர்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துகிறேன். இதில் வழக்கமான கடிகாரம் டாஸ்க் பாரில் வலது மூலையில் காட்டப்படுகிறது. என் மகன் ஸ்விட்சர்லாந்தில் வேலை பார்க்கிறார். இந்தியாவிற்கும் அதற்கும் நேரம் வித்தியாசமாய் உள்ளது. இன்னொரு கடிகாரத்தை இதில் இன்ஸ்டால் செய்து, இந்திய நேரம் மற்றும் ஸ்விஸ் நேரம் காட்டும்படி அமைக்க முடியுமா? முடியுமானால், அதற்கான வழிகளைக் காட்டவும்.
எஸ். சுப்பையா, சென்னை.
பதில்:
இரண்டென்ன, மூன்று கடிகாரங்களை அமைக்கலாம். அதற்கான வழிகளைப் பார்க்கலாம். கண்ட்ரோல் பேனலைத் திறந்து கொள்ளவும். Date and Time என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் விண்டோவில் Additional Clocks என்றிருக்கும் டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு இரண்டு இடத்தில் Show This Clock எனக் காட்டப்படும். இதனைத் தேர்ந்தெடுக்க, அதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இதனைத் தேர்ந்தெடுத்தவுடன், உங்களுக்கு நேர மண்டலங்கள் காட்டப்படும். நீங்கள் எந்த நாட்டின் நேரம் கூடுதலாகக் காட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். இன்னொரு நாட்டின் நேரமும் இன்னொரு கடிகாரத்தில் காட்டப்பட வேண்டும் என்றால், அதனையும் மீண்டும் செட் செய்திடலாம். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி சிஸ்டம் ட்ரேயில் நீங்கள் அமைத்த இரண்டு அல்லது மூன்று கடிகாரங்கள் காட்டும் நேரத்தைக் காணலாம். உங்கள் மவுஸின் கர்சரை, சிஸ்டம் ட்ரேயின் வலது மூலைக்குக் கொண்டு சென்றால், அனைத்து நாட்டு நேரங்களும், அன்றைய கிழமையுடன் காட்டப்படும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் 2007 வைத்துள்ளேன். வெகு நாட்களாகப் பயன்படுத்தி வருகிறேன். இதில் வேர்ட் டாகுமெண்ட்களில் என் சொந்த ஆவணங்கள் (விளம்பர அலுவலகம் சார்ந்த) கொண்டுள்ள சொற்களைக் கொண்டு கஸ்டம் டிக்ஷனரி ஒன்றை உருவாக்கியுள்ளேன். அதனையும் பயன்படுத்துகிறேன். என் மகனும் இதே கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறான். அவனுக்கு இந்த கஸ்டம் டிக்ஷனரி தேவை இல்லை. ஆனாலும், வேர்ட் அதனுடனும் செக் செய்கிறது. இதனை அவன் பயன்படுத்தும்போது ஒதுக்கி வைப்பது எப்படி?
எஸ். சுப்ரமணியம். திருச்சி.
பதில்:
நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துவதால், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, Word Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் இடது பக்கம் உள்ள பிரிவில் Proofing என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Suggest From Main Dictionary Only என்பதனைத் தேர்ந்தெடுக்கும் வகையில், செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.

கேள்வி: எம்.எஸ். டாஸ் என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்ததா? ஐ.பி.எம். நிறுவனம் தயாரித்ததா? ஏன் அந்த சிஸ்டம் ஐ.பி.எம். கம்ப்யூட்டர்களில் இயங்கும் டாஸ் என அழைக்கப்படுகிறது? சற்று விளக்கவும்.
என். பார்த்திபன், சிதம்பரம்.
பதில்:
கம்ப்யூட்டர் தயாரித்த ஐ.பி.எம். நிறுவனம், “செஸ்” என்ற குறியீட்டுப் பெயரில், ஒரு ப்ராஜக்ட் ஒன்றைத் தயாரித்து தருமாறு, அப்போது தொடங்கப்பட்ட மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டது. 1981 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட், ஐ.பி.எம். கம்ப்யூட்டர்களில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமான எம்.எஸ். டாஸ் (Microsoft Disk Operating System (MS-DOS)) என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வடிவமைத்துக் கொடுத்தது. கம்ப்யூட்டர்கள் இயங்க இது ஓர் அடிப்படை இயக்கத்தினைத் தந்தது. ஹார்ட்வேர் மற்றும் புரோகிராம் என்ற இரு பிரிவுகளுக்கிடையே இருந்த இடைவெளியை இது இணைத்தது. இந்த சிஸ்டம் சாப்ட்வேர் மூலமே, மைக்ரோசாப்ட் பெர்சனல் கம்ப்யூட்டிங் என்ற பிரிவில் நுழைந்து கடந்த 40 ஆண்டுகளாகத் தனிக் காட்டு ராஜாவாக உலா வருகிறது. 1983 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 1.0 என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, டாஸ் சிஸ்டத்தின் மேம்படுத்தப்பட்ட இயக்கமாகத் தந்தது. முதல் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 1985ல் விற்பனைக்கு வந்தது.

கேள்வி: மிகப் பெரிய வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் குறிப்பிட்ட பக்கத்திற்கு உடனே செல்ல வேண்டும் என்றால், அதற்கான சுருக்கு வழி உள்ளதா?
ஆ. நரேன் காந்தி, புதுச்சேரி.
பதில்
: வேர்ட் தொகுப்பில் இதற்கான வழி உள்ளது. Find and Replace டயலாக் பாக்ஸில் இதற்கான வழி உண்டு. முதலில் எப்5 (F5) அழுத்தவும். வேர்ட் பைண்ட் அண்ட் ரிபிளேஸ் பாக்ஸில், the Go To என்ற டேப்பினைத் திறந்தபடி காட்டும். இந்த டயலாக் பாக்ஸில், இடது பக்கம் நீங்கள் குறிப்பிட்ட பக்கத்திற்குச் செல்ல வேண்டும் என்பதைக் காட்டும் இடத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இப்போது எந்த பக்கத்திற்குச் செல்ல வேண்டுமோ, அந்த பக்க எண்ணை அமைக்கவும். அடுத்து Go To என்பதில் கிளிக் செய்து, எண்டர் தட்டவும் உடன் அந்த பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.

கேள்வி: புதிய கம்ப்யூட்டரை விண்டோஸ் 10 தொகுப்புடன் வாங்கத் திட்டமிட்டிருக்கும் நான், தற்போது விண் எக்ஸ்பியையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன். இணையத்தில் பிரவுஸ் செய்திட, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்தி வருகிறேன். இதனை அப்டேட் செய்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9க்கு மாற விரும்புகிறேன். சிலர் அது வேலை செய்யாது என்கின்றனர். உண்மையா? மாறிக் கொள்ள என்ன செய்திட வேண்டும்?
என். மாலதி, பொள்ளாச்சி.
பதில்:
நல்ல கேள்வி. ஏனென்றால், பலருக்கு இந்த சந்தேகம் வந்துள்ளது. விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துவோர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 வரையில் மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பின்னர் வெளியான பதிப்புகள், எக்ஸ்பியில் இயங்காது. விஸ்டா பயன்படுத்துபவர்கள், பதிப்பு 9 வரை மட்டுமே பயன்படுத்த முடியும். விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 வரை பயன்படுத்தலாம். விண்டோஸ் 8.1க்கு அப்டேட் செய்தவர்கள், பதிப்பு 11 ஐப் பதிந்து இயக்கலாம். நீங்களாக, அப்டேட் செய்திடக் கட்டளை கொடுத்தால், ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனக்கு எது சரியானது என்று தேடி, அதற்கான பைலை இயக்கி அப்டேட் செய்து கொள்ளும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X