கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஆக
2015
00:00

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்தில் அப்கிரேட் பைல்கள் தானாக அப்டேட் செய்யப்பட்டுவிடும் என்றும், அதன் மேல் நமக்குக் கட்டுப்பாடு இருக்காது என்றும் கூறியுள்ளீர்கள். அப்படியானால், இணைய இணைப்பு இல்லாமல் பயன்படுத்தும்போது தரப்படும் அப்டேட் பைல்கள் என்னவாகும்? இதனால் நமக்கு இழப்பு ஏற்படுமா?
என். கரன்சந்திரன், கம்பம்.
பதில்
: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பொறுத்தவரை, மைக்ரோசாப்ட், அது தரும் அப்டேட் பைல்களை அவசியம் தரவிறக்கம் செய்யப்பட்டு, இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறது. இது விண்டோஸ் ஹோம் பதிப்பில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீங்கள் கேட்டுள்ள கேள்வியும் சரியானதுதான். தொடந்து இணைய இணைப்பில் இல்லாதபோது என்னவாகும்? நீங்கள் எப்போது இணையத்தில் உங்கள் கம்ப்யூட்டரை இணைக்கிறீர்களோ, அப்போது உள்ள அப்டேட் பைல் தானாக உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்படும். அப்படியானால், அதற்கு முன்னர் வந்த பைல்கள் அப்டேட் ஆகாமல் விடப்படுமா? என்றும் நீங்கள் கேள்வி கேட்கலாம். இது போல சூழ்நிலைகள் வராமல் இருக்க, அடுத்தடுத்து தரப்படும் அப்டேட் பைல்களில், முந்தைய அப்டேட் பைல்களின் அம்சங்களும் இணைக்கப்பட்டே தரப்படும்.
விண்டோஸ் 10 ப்ரோ சிஸ்டம் வைத்துள்ளவர்கள், அப்டேட் செய்வதில் தங்கள் விருப்பத்திற்கேற்றபடி செயல்பட உரிமை தரப்பட்டுள்ளது. இவற்றில் பாதுகாப்பு சம்பந்தமான பைல்கள் இருக்கும் என்பதால், அவற்றை உடனுடக்குடன் அப்டேட் செய்வதே நல்லது. மேலும், எட்ஜ் பிரவுசரை இனி அனைவரும் பயன்படுத்துவார்கள் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. அதனால், அதற்குமான அப்டேட் பைல்களும் இணைத்தே தரப்படும். எனவே, தங்கள் பிரவுசர் பாதுகாப்பாகச் செயல்பட விருப்பப்படுவோர், கட்டாயமாக அப்டேட் பைல்களை இணைப்பது நல்லது.

கேள்வி: என்னுடைய ரெகவரி ட்ரைவ் முழுவதுமாக நிரம்பி விட்டதாக பாப் அப் செய்தி வருகிறது. அதன் பின் என்னால் பைல் பேக் அப் எடுக்க முடியவில்லை. இது எதனால் ஏற்படுகிறது? என்னுடைய ரெகவரி ட்ரைவினையும் பார்க்க இயலவில்லை. இதனை எப்படி பார்க்கலாம்?
கா. ஜேம்ஸ் ஸ்ரீதர், மதுரை.
பதில்:
நல்ல கேள்வி. உங்களுடைய கம்ப்யூட்டர் எந்த நிறுவனத்தால் வழங்கப்பட்டது என்ற தகவலை நீங்கள் தந்திருக்கலாம். சில நிறுவனங்கள், கம்ப்யூட்டரில் ரெகவரி ட்ரைவ் ஆப்ஷனைத் தருகின்றன. பொதுவாக இது D: ட்ரைவாக இருக்கும். இது தனி ட்ரைவ் அல்ல. கொடுக்கப்பட்டுள்ள ஹார்ட் ட்ரைவில் ஒரு பகுதியே. நீங்கள் பேக்டரியிலிருந்து வந்த போது இருந்த அமைப்பிற்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்ல முயற்சிக்கும்போது மட்டுமே இந்த ட்ரைவ் இடம் செயல்படுத்தப்படும். அப்போது, நீங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொண்ட அனைத்து அமைப்புகளும் அழிக்கப்படும். எனவே, இந்த இடத்தில், பயனாளர் எவரும் எந்த பைலையும் சேவ் செய்திட முடியாது. கூடாது. முன்பு, நாம் கம்ப்யூட்டர் வாங்கும்போது, அதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதியப்பட்டு நமக்கு ஒரு சி.டி. கொடுப்பார்கள். கம்ப்யூட்டர் கிராஷ் ஆனால், அதனைப் பயன்படுத்தி பூட் செய்திடலாம். மீண்டும் சிஸ்டத்தைப் பதிந்திடலாம். அந்த சி.டி. யின் செயல்பாட்டினை இந்த ரெகவரி ட்ரைவ் மேற்கொள்கிறது. இது மிகச் சிறிய இடமாகத்தான் இருக்கும். இது நிறைந்துவிட்டது என்று செய்தி வந்தால், கவலைப்படாமல் இருங்கள். நீங்கள் அதில் எதனையும் சேமிக்காதவரை கவலைப்படாமல் இருக்கவும். உங்களுடைய பேக் அப் பைல்கள் இதில் சேவ் செய்யப்படக் கூடாது. சேவ் செய்யப்பட்டு, நிறைவடைந்துவிட்டால், பின் ஒரு நாளில் ரெகவரி வேலைகளை மேற்கொள்கையில் சிரமம் ஏற்படும். எனவே, பேக் அப் பணிகளுக்கு ப்ளாஷ் ட்ரைவ் அல்லது போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் பயன்படுத்தவும்.

கேள்வி: எனக்கு விண்டோஸ் 10 இன்ஸ்டலேஷன் டிஸ்க் கிடைக்குமா? எங்கிருந்து வாங்கிக் கொள்ளலாம்?
எம். ஷேக், பொட்டல்புதூர்.
பதில்
: ஏகப்பட்ட பேர் இந்த கேள்வியைக் கேட்டு வருகின்றனர். கம்ப்யூட்டர் மலரிலும் இதற்கான பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சற்று விரிவாக இங்கு இதனைப் பார்க்கலாம். இதற்கு விடை “ஆம், நீங்கள் பெறலாம்” என்பதே. மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து, உங்களுக்கு உங்கள் இலவச அப்கிரேட் விண்டோஸ் 10 தயார் என்று செய்தி கிடைக்கும்போது, அங்கேயே, இன்ஸ்டலேஷன் டிஸ்க் பைல்களைத் தரவிறக்கம் செய்திட ஒரு லிங்க் தரப்படும். இதற்கு நீங்கள் முதலிலேயே முன்பதிவு செய்திருக்க வேண்டும். இந்த லிங்க்கில் கிளிக் செய்து, டிஸ்க் அல்லது ப்ளாஷ் ட்ரைவில், விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பதிந்து எடுத்துக் கொள்ளலாம். இதனைப் பயன்படுத்தி, நீங்கள் இன்ஸ்டால் செய்கையில், செய்யப்படும் கம்ப்யூட்டரில் ஏற்கனவே, அனுமதி பெற்ற விண்டோஸ் 7, விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 சிஸ்டம் இயங்கிக் கொண்டிருந்தால், எந்தவிதக் கேள்வியும் கேட்கப்படாமல், விண் 10 பதிவு செய்யப்படும். இல்லை எனில், விண் 10 இயங்க ப்ராடக்ட் கீ ஒன்றை நீங்கள் தர வேண்டும். மேலும் தகவல்கள் தேவைப்பட்டால், http://www.microsoft.com/en-us/software-download/ windows10?OCID=WIP_r_Win10_Body_AddPC என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினைக் காணவும்.

கேள்வி: ஒவ்வொரு ட்ரைவிலும் போல்டர்கள் வேறு வேறு விதமாகக் காட்டப்படுகின்றன. இவற்றை ஒரே மாதிரியாகத் தோன்றும் வகையில் எப்படி அமைக்கலாம்? செட்டிங்ஸ் வழிகளைக் காட்டவும்.
-எஸ். கணேஷ் டேவிட், காலாபெட், புதுச்சேரி.
பதில்
: நாம் தொடர்ந்து பல போல்டர்களைப் பயன்படுத்துகையில், ஒவ்வொன்றையும் ஒரு மாதிரியாக, நம் தேவைக்கேற்றபடி அமைப்போம். அதனால் தான், இந்த வேறுபாடு. இதனை ஒரே மாதிரியாக அமைத்திட, கீழே காட்டியுள்ளது போல செயல்படவும்.
முதலில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் வழியாகப் போல்டர் ஒன்றைத் திறந்து Organize என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதன் பின் Folder and search options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு வியூ டேப்பிற்குச் சென்று மேலாக உள்ள Apply to folders என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இனி இதுதான் உங்களின் மாறா நிலையில் உள்ள (Default) போல்டராக அமைந்துவிடும்.

கேள்வி: ஹெர்ட்ஸ் என்ற அலகு குறித்துப் படிக்கையில், அது ஒரு விஞ்ஞானியின் பெயர் எனத் தரப்பட்டிருந்தது. இது உண்மையா? அது குறித்து சற்று விளக்கம் தர முடியுமா?
என். பாக்யலட்சுமி, தேவாரம்.
பதில்:
இது குறித்து முன்பே கம்ப்யூட்டர் மலர் கேள்வி பதில் பகுதியில் சற்று விரிவாகத் தந்திருந்தேன். நீங்கள் சொல்வது சரியே. அந்த சொல், அதனை உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர் தான். ஹெர்ட்ஸ் என்பது அவருடைய குடும்பப் பெயர். இதனைச் சுருக்கமாக Hz என்று எழுதுகிறோம். ஜெர்மனி நாட்டின் இயற்பியல் விஞ்ஞானி Heinrich Rudolf என்பவரின் குடும்ப பெயர் ஹெர்ட்ஸ்.
ஜெர்மன் பிசிக்ஸ் விஞ்ஞானி Heinrich Rudolf என்பவரின் குடும்ப பெயர் ஹெர்ட்ஸ். ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் அலைவரிசையினை, மெட்ரிக் முறையில் அளந்திட இந்த பெயர் வைக்கப்பட்டது. ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு (ரேடியோ அலைவரிசையில்). கம்ப்யூட்டரைப் பொறுத்த வரை இது மானிட்டருடன் அதிகம் சம்பந்தப்படுத்தி பேசப்படுகிறது. சி.ஆர்.டி. மானிட்டர் (டிவி பெட்டி போல இருப்பது) அதன் ஸ்கிரீன் இமேஜை தொடர்ந்து காட்டாமல் விட்டு விட்டுத் தான் காட்டுகிறது. ஆனால் அதனை நாம் நம் கண்களால் பார்த்தால் கண் கெட்டுப் போகும். எனவே தான் விநாடியில் பலமுறை இது விட்டு விட்டுக் காட்டப்படுகையில் இடைவெளி தெரிவதில்லை. எடுத்துக் காட்டாக 85 Hz என்பதில் விநாடி நேரத்தில் 85 முறை இமேஜ் பின் வாங்கப்பட்டு மீண்டும் காட்டப்படுகிறது. அத்தனை முறை காட்டப்படுவதனாலேயே இமேஜ் அப்படியே நிலையாக நிற்பது போல நாம் உணர்கிறோம்.
மெஹா ஹெர்ட்ஸ் Mehahertz (MHz) ஒரு மெஹா ஹெர்ட்ஸ் என்பது பத்து லட்சம் சுற்றுகளாகும். அதாவது ஒரு விநாடியில் பத்து லட்சம் சுற்றுகள் ஏற்படுகின்றன. இது எப்படி ஏற்படுகிறது என்பதனை படமாகவோ அல்லது வேறு வழியாகவோ விளக்குவது கஷ்டம். கம்ப்யூட்டர் பிராசசரைப் பொறுத்தவரை மெஹா ஹெர்ட்ஸ் என்பது மிகவும் சாதாரணம். ஒரு கம்ப்யூட்டர் பிராசசர், உள்ளாக அமைந்த ஒரு கடிகாரத் துடிப்பினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு செயல் மேற்கொள்ளப்படுகிறது. எத்தனை முறை இந்த துடிப்பு ஏற்படுகிறது என்பதுதான் பிராசசரின் கிளாக் ஸ்பீட் என அழைக்கப்படுகிறது. இந்த வேகம் மெஹா ஹெர்ட்ஸ் என்பதில் அளக்கப் படுகிறது.
கிஹா ஹெர்ட்ஸ் Gigahertz (GHz): கம்ப்யூட்டர் உலகில் இது கம்ப்யூட்டர் பிராசசரின் வேகத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ். முதலில் வந்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள் 4.77 மெஹா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசசர்களைக் கொண்டிருந்தன. அதாவது விநாடிக்கு ஏறத்தாழ 48 லட்சம் கிளாக் துடிப்புகள். தற்போதைய ப்ராசசர்களின் வேகம் கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் காட்டப்படுகிறது.

கேள்வி: கம்ப்யூட்டரில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், சற்று கிராஷ் ஆனால் மட்டுமே, ரீ பூட் செய்கையில், சேப் மோட் (Safe Mode) வழியில் ரீ பூட் செய்திட முடிகிறது. நானாக சேப் மோடில் நுழைய வேண்டும் என்றால் முடியவில்லை. இதற்கான திரை மிக வேகமாகச் சென்று விடுகிறது. இதற்கான செட்டிங்ஸ் என்ன? நான் பயன்படுத்துவது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம்.
என். ஜெயச்சந்திரன், பொள்ளாச்சி.
பதில்
: விண்டோஸ் 7ல் எந்த பதிப்பு என்று சொல்லியிருக்கலாம். சேப் மோடுக்குச் செல்லும் ஆப்ஷன் கொண்ட திரை பொதுவாகச் சில விநாடிகள் நின்றுதான் செல்லும். உங்களுடைய கம்ப்யூட்டரில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. இருப்பினும் இதற்கான இன்னொரு வழியினைத் தருகிறேன்.
1. ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து, கட்டத்தில் “msconfig” என டைப் செய்து எண்டர் தட்டவும். இது, System Configuration டூல் காட்டும்.
2. இதில் Boot என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. Safe Boot என்பதற்கு அடுத்து உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். “Minimal” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்வு செய்தவுடன் ஓகே கிளிக் செய்திடவும்.
4. இதனை அடுத்து காட்டப்படும் பாக்ஸில் ஓர் எச்சரிக்கை செய்தி இருக்கும். உங்களுடைய கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடக் கேட்டுக் கொள்ளும். அதாவது, உங்களுடைய கம்ப்யூட்டரை நீங்கள் சேப் மோடில் இயக்கலாம். இதில் Restart என்பதில் கிளிக் செய்திடவும். அல்லது நீங்கள் அப்போது கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருக்கும் பணியினை முடிக்க வேண்டும் என்றால், ரீ ஸ்டார்ட் செய்திடாமல், அந்த வேலையை முடிக்கவும். அதன் பின் ரீஸ்டார்ட் செய்திடவும். இப்போது கம்ப்யூட்டர் சேப் மோடில் இயங்கத் தொடங்கும்.
5. நீங்கள் சேப் மோடில் இருக்கும்போது, நீங்கள் எதை எல்லாம், கம்ப்யூட்டரில் சரி செய்திட வேண்டும் எனத் திட்டமிட்டீர்களோ, அவை அனைத்தையும் முடித்துவிடவும். பின் மீண்டும் எம்.எஸ். கான்பிக் கொடுத்து System Configuration utility விண்டோ பெறவும். இங்கு சேப் மோட் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். இல்லை என்றால், உங்கள் கம்ப்யூட்டர் தொடர்ந்து சேப் மோடில் தான் இயங்கத் தொடங்கும்.

கேள்வி: இரண்டு நாட்களுக்கு முன்னர் விண்டோஸ் 10 சிஸ்டத்தினை வெற்றிகரமாக இன்ஸ்டால் செய்தேன். ஆனால், இதில் தரப்பட்டுள்ள விண்டோஸ் போட்டோஸ் அப்ளிகேஷனில், போட்டோ எடிட்டிங் பணிகளைச் சரிவர மேற்கொள்ள இயலவில்லை. மிகவும் தொடக்க நிலையில் உள்ளது போல காணப்படுகிறது. ஏற்கனவே நான் பயன்படுத்திய புரோகிராம்கள், விண்டோஸ் 10க்கு தயார் செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரியவில்லை. இதிலிருந்து மீள ஒரு வழி தரவும்.
என். பஞ்சாபிகேசன், தஞ்சாவூர்.
பதில்:
நீங்கள் குறிப்பிடும் விண்டோஸ் போட்டோ அப்ளிகேஷன் மூலம், போட்டோக்களில் சில டச் அப் வேலைகளை மேற்கொள்ளலாம். ஆனால், அடோப் போட்டோ ஷாப் போல அனைத்து பணிகளையும் மேற்கொள்ள இயலாது. ஜிம்ப் (GIMP GNU Image Manipulation Program) என்ற புரோகிராமினை நீங்கள் பயன்படுத்தலாம். இது இலவசமாகக் கிடைக்கிறது. விண்டோஸ் 10ல் இயங்கும். போட்டோ ஷாப் செயலியில் மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் இதில் மேற்கொள்ளலாம். இதனை http://www.gimp.org/downloads/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X