20 ஆண்டுகளுக்கு முன் மனித நாகரிகத்தை மாற்றி உயர்த்திய விண்டோஸ் 95
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 ஆக
2015
00:00

இந்த உலகத்தின் நடவடிக்கையையும், மனித நாகரிகத்தின் பரிமாணங்களையும் மொத்தமாக மாற்றிப் போட்ட விண்டோஸ் 95 சிஸ்டம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1995 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 24ல், விண்டோஸ் 95 சிஸ்டம் பொதுமக்களுக்கு வெளியானது. அடுத்த இருபது ஆண்டுகளுக்கு, இந்த உலகத்தின் தொழில் நுட்பத்தினை மாற்றிய புரட்சிகரமான சிஸ்டம் அப்போதுதான் அறிமுகமானது. மைக்ரோசாப்ட் நிறுவன சரித்திரத்தில், ஒரு சகாப்ததின் தொடக்கமும் முடிவும் ஆக விண்டோஸ் 95 இருந்தது என்றால் அது சத்தியமான உண்மை ஆகும்.
விண்டோஸ் 95, முதல் முதலாக அறிமுகமான விண்டோஸ் சிஸ்டம் அல்ல. அது வெளி வருவதற்கு, 10 ஆண்டுகளுக்கு முன்பே, வீடுகளில் கம்ப்யூட்டர் பயன்பாடு செயல்பட்டு வந்தது. ஆனால், எந்த செயல்பாடும், விண்டோஸ் 95 சிஸ்டம் போல, தொழில் நுட்ப புரட்சியை மாற்றி அமைக்கவில்லை. யாரும் எதிர்பாராத, ஒரு கலாச்சார மாற்றத்திற்கான விதையையும் மனிதர்களிடையே அது தூவியது.

விண்டோஸ் 95 வெளியான போதுதான், அது உலக அளவில் மேற்கொள்ளப்படும் விழாவாக முதல் முறையாக நடந்தது. தேசிய அளவில் ஓர் ஆரவாரமிக்க திருவிழா சத்தத்தினை, விண்டோஸ் 95 வெளியான அன்று கண்டு கொள்ள முடிந்தது. அது ஒரு புதிய ஆகஸ்ட் விடுமுறை நாள் போல இருந்தது. பலர் அந்த நாளை 'பில்கேட்ஸ் நாள்' என அழைத்தனர். கம்ப்யூட்டர் தொழில் பிரிவினைத் தன் கரங்களுக்குள் பில் கேட்ஸ் வைத்திருந்தார். தொடர்ந்து அது அவர் எண்ணப்படியே வளர்ந்து வந்தது. 1995ல், மைக்ரோசாப்ட் ஆண்டு விற்பனை 590 கோடி டாலராக இருந்தது. நிறுவன ஊழியர்கள் எண்ணிக்கை 17,800. இப்போது, அதன் விற்பனை 9360 கோடி டாலர். ஊழியர்கள் 1,17,354 பேர். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பே, பெர்சனல் கம்ப்யூட்டர் தொழிலைத் தன் விருப்பத்திற்கேற்ப நடத்த, மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் முடிந்தது.
எப்படியாவது, ஒரு விண்டோஸ் 95 சிஸ்டம் காப்பியைப் பெற்று, வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் பதிந்து இயக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன், பல்லாயிரக்கணக்கானவர்கள், அது முதன் முதலில் விற்பனையாகும் கட்டிடத்தின் முன்னே தவமாய் கூடி இருந்தனர். (தற்போது புதிய ஐபோன் வெளியிடப்படுகையில் தான், அத்தகைய கூட்டம் கூடுகிறது.)
மைக்ரோசாப் நிறுவனத்தின் சரித்திரத்தில் மட்டுமல்லாது, பெர்சனல் கம்ப்யூட்டிங் முறையில் விண்டோஸ் 95 ஒரு திருப்பத்தினை ஏற்படுத்தியது. இதில் அறிமுகமான ஸ்டார்ட் மெனு, 2012ல் கைவிடப்பட்டு, இப்போது கட்டாயமாகத் தரப்பட்டே ஆக வேண்டிய ஒன்றாக, தற்போதைய விண்டோஸ் 10ல் இடம் பெற்றுள்ளதை இங்கு நினைவு கூரலாம். இதில் அறிமுகமான டாஸ்க் பார் வசதிதான், இன்றைய இணையச் செயல்பாட்டு முறையினை வகைப்படுத்தியது எனக் கூறலாம்.
கிராபிக் டிசைனைப் பொறுத்தவரை, விண்டோஸ் 95, ஒரு புதிய உத்வேகத்தினைத் தந்தது. அப்போது சந்தையில் இருந்த அனைத்து சாதனங்களின் ஹார்ட்வேர்களுடன் செயல்பட்டது. பெர்சனல் கம்ப்யூட்டர்கள், மக்கள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்தும் விலைக்குத் தள்ளப்பட்டதுவும், விண்டோஸ் 95 தந்த புதிய வசதிகளினால் தான். அவற்றின் பால் ஈர்க்கப்பட்ட மக்கள், பெர்சனல் கம்ப்யூட்டர் என்பது, நாம் இதுவரை பயன்படுத்திய ஒன்றல்ல; அதற்கும் மேலாக, இன்னும் எவ்வளவோ விஷயங்களைக் கையாளலாம் என மக்கள் தெரிந்து கொண்டு, பெர்சனல் கம்ப்யூட்டரைப் பெற்று இயக்கினர்.
விண்டோஸ் 95 அறிமுகமாகி, ஒரு வாரம் கழித்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வெளியானது. மக்கள் பலரின் முதல் பிரவுசராக அது அமைந்தது. பயனாளர்கள், கம்ப்யூட்டர்கள் மூலம் அளவிடமுடியாத அளவிற்குத் தகவல்களைப் பெற முடியும் என்பதை உணர்ந்தனர். வெகுகாலம் பழக்கத்திலிருந்து விலகிய நிலையில் இருந்த தங்கள் நண்பர்களுடன் எளிதாகத் தொடர்பு கொள்ள முடியும் என்பதை உணர்வு பூர்வமாகக் கம்ப்யூட்டர்கள் வழியே பெற்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, பொழுது போக்க வழி தரும் மிகச் சிறந்த சாதனமாகவும், கம்ப்யூட்டர் இடம் பெற்றது. இதன் பயனாக, கம்ப்யூட்டர்களின் விற்பனை, உலகளாவிய அளவில் வேகமாக உயர்ந்தது. 1995ல், பிரிட்டனில், நான்கில் ஒரு பங்கு வீடுகளில் தான், கம்ப்யூட்டர் இடம் பெற்றிருந்தது. இது 2001ல் இரு மடங்காகியது. இணையத்தை முதன் முதலில் அதிகம் பேர் பயன்படுத்த அடிப்படை அமைத்துத் தந்தது விண்டோஸ் 95 தொகுப்பாகும்.
இந்தப் புரட்சிகரமான மாற்றத்தினை ஏற்படுத்திய மாமனிதராக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில் கேட்ஸ் பார்க்கப்பட்டார். அதுவே உண்மையும் கூட. 1998 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் நிறுவனம், உலகின் மிகப் பெரிய நிறுவனமாக இடம் பெற்றது. அதன் பங்கு மூலதனத்தின் மதிப்பு திடீரென உயர்ந்து 61 ஆயிரத்து 300 கோடி டாலர் என்ற அளவில் எகிறியது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், அதிக அளவில் தன் பங்கு மூலதனத்தை உயர்த்திய நிறுவனமாக தொடர்ந்து மைக்ரோசாப்ட் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதன் தொடக்கம், விண்டோஸ் 95 தொகுப்பின் மூலமே உருவானது.
இதனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதை மலர்களால் மட்டுமே ஆனதாக எண்ண வேண்டாம். வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக மைக்ரோசாப்ட் நடந்து கொள்கிறது என்ற கூக்குரல் அடிக்கடி எழும்பியது. இதனால், தொடர் வழக்குகளை, மைக்ரோசாப்ட் சந்தித்தது. அதே போல, 2001ல் வெளியாகி மகத்தான வெற்றியைத் தந்தது விண்டோஸ் எக்ஸ்பி. இந்த வெற்றி மட்டுமல்லாது, விஸ்டா போன்ற சிஸ்டம் தந்த தோல்வியையும் மைக்ரோசாப்ட் சந்தித்தது.
விஸ்டா சிஸ்டம் வெளியான பின்னர், ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோனை வெளியிட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பில் கேட்ஸ் இடத்தில் வந்த ஸ்டீவ் பால்மர், மொபைல் போன் சந்தையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இடம் பெறுவதில் அக்கறை காட்டவில்லை. இதனால், மைக்ரோசாப்ட் தன் புகழை இழந்தது. ஸ்டீவ் பால்மர், அவசர அவசரமாக, சாம்சங் மற்றும் ஆப்பிள், மொபைல் போன் பிரிவில் கொண்டிருக்கும் புகழை மைக்ரோசாப்ட் பெற முடியும் என்று எண்ணி, நோக்கியா நிறுவனத்தை 504 யூரோ கொடுத்து வாங்கினார். ஆனால், ஸ்டீவ் பால்மரை அடுத்து தலைவரான, சத்ய நாதெள்ளா, இது ஒரு மோசமான வர்த்தக நடவடிக்கையாகக் கருதினார். நோக்கியா நிறுவனத்தை வாங்கியதை ஒதுக்கினார். பல ஆயிரம் பேருக்கு வேலை போனது.
ஆனால், அதற்குப் பதிலாக, தன் நிறுவனத்தின் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை, மொபைல் போன்களிலும், டேப்ளட் பி.சி.க்களிலும் இயங்கும் வகையில் ஒரே மாதிரியாக, நாதெள்ளா மாற்றி அமைத்தார். இதனால், இதன் அடிப்படையில் புரோகிராம்களை அமைத்தால், இன்னும் அதிகப் பயனாளர்களைச் சென்றடையலாம் என டெவலப்பர்களை அழைத்தார் நாதெள்ளா.
விண்டோஸ் 95 வெளியான போது, ஓராண்டில் 4 கோடி சாப்ட்வேர் உரிமங்கள் விற்பனையாயின. ஆனால், இப்போது, நாதெள்ளா, விண்டோஸ் 10 நூறு கோடி சாதனங்களில் இயங்கும் காலமே தனது இலக்கு என அறிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் அதன் விண்டோஸ் சிஸ்டத்தின் வெற்றி குறித்து கணக்கிடுபவர்கள், விண்டோஸ் 95 வந்த போது ஏற்பட்ட மாற்றங்களையும், வரவேற்பினையும் அடிப்படையாகக் கொண்டே கணக்கிட்டு வருவது, அப்போது விண்டோஸ் 95 பெற்ற வெற்றியை இன்றளவிலும் நாம் உறுதியாகத் தெரிந்து கொள்ள உதவுகிறது. அதே அளவிலான வெற்றியை, அண்மையில் வெளியான விண்டோஸ் 10 பெறும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X