கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 அக்
2015
00:00

கேள்வி: என் லேப்டாப் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்து தரப்பட்டுள்ளது. இலவசமாக, விண்டோஸ் 8.1லிருந்து மாற்றிக் கொண்டோம். இதில் பிங் (Bing) இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இதில் செயல்பட எனக்குப் பிடிக்கவில்லை. இதன் இயக்கத்தினை முடக்க முடியுமா? அதற்கான வழிமுறைகள் என்ன?
எஸ். பிரியங்கா, சென்னை.
பதில்
: பிங் செயலியைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், பிரியங்கா. மைக்ரோசாப்ட் நிறுவனத்தால், வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச் இஞ்சின் பிங். அது உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம் அல்ல. நீங்கள் பிங் தேடல் சாதனம் மூலம், தகவல்களைத் தேட விரும்பவில்லை என்றால், உங்கள் பிரவுசரில், வேறு தேடல் சாதனங்களத் திறந்து பயன்படுத்தலாம். நீங்கள் விரும்பும் சர்ச் இஞ்சினை, உங்கள் ஹோம் பேஜ் ஆகவோ, அல்லது, உங்களின் மாறா நிலை தேடல் சாதனமாகவோ அமைத்துக் கொள்ளலாம். நீங்கள் புதியதாக ஒன்றைப் பயன்படுத்தும்போதே, அந்த சர்ச் இஞ்சினை மாறா நிலையில் அமைத்துக் கொள்கிறீர்களா? என்று கேட்கும். அதற்கு 'யெஸ்' பட்டனை அழுத்திவிட்டால், அதுவே, உங்கள் தேடல் செயலியாக அமைக்கப்பட்டுவிடும். பின்னர், வேறு ஒரு தேடல் சாதனத்தினை விரும்பினால், மாற்றாக அதனை அமைத்துக் கொள்ளலாம்.
புதிய எட்ஜ் பிரவுசரின், மாறா நிலை தேடல் செயலியாக, பிங் உள்ளது. ஆனாலும், அதனை மேலே சொன்ன வழிகளில் மாற்றிக் கொள்ளலாம்.
நீங்கள் எட்ஜ் பிரவுசர் பயன்படுத்துவதால், அதில் மாற்றத்தினை எப்படி மேற்கொள்வது என்று விளக்குகிறேன்.
எட்ஜ் பிரவுசரில், வலது மேல் புறத்தில் உள்ள மெனு பட்டனை கிளிக் செய்து, அதில் “Settings.” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
கீழாகச் சென்று, “View Advanced Settings.” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்தப் பிரிவில், உங்களுக்கான மாறா நிலையில் அமைக்க வேண்டிய சர்ச் இஞ்சினை அமைக்கலாம்.
விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பொறுத்தவரை, பிங் தேடல் சாதனம்தான், அதன் விருப்பமாக உள்ளது. எனவே, சர்ச் பாக்ஸ் அல்லது கார்டெனாவினை நீங்கள் பயன்படுத்தினால், அது பிங் சர்ச் இஞ்சினில்தான் சென்று நிற்கும். நீங்கள் பிங் சாதனத்தை அதிகம் வெறுப்பதாக இருந்தால், கூகுள் அல்லது யாஹூ சர்ச் இஞ்சினைத் திறந்து உங்கள் தேடலை மேற்கொள்ளலாம்.

கேள்வி: புதியதான, ஐ.ஓ.எஸ்.9 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு, என் ஐபேடினை மாற்றிவிட்டேன். இதில் தற்போது 'சான்பிரான்சிஸ்கோ' என்னும் பாண்ட் தரப்படுகிறது. முன்பு தரப்பட்ட 'ஹெல்விடிகா' இல்லை. என்னால், எழுத்தினைப் பெரிதாக்கவும், போல்ட் செய்திடவும் முடிகிறது. ஆனால், வேறு ஒரு எனக்குப் பிடித்த எழுத்திற்கு எப்படி மாறிக் கொள்வது?
டி. சார்லஸ் ஞானமாணிக்கம், காரைக்கால்.
பதில்
: ஐ.ஓ.எஸ்.9 சிஸ்டத்தில், ஆப்பிள் தன் மாறா நிலை எழுத்துருவினை ஹெல்விடிகா விலிருந்து சான்பிரான்சிஸ்கோ என்னும் எழுத்துருவிற்கு மாற்றிவிட்டது. இதன் மூலம் படிப்பது கூடுதல் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று ஆப்பிள் கருதுகிறது. இந்த எழுத்துரு, ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பிள் வாட்ச் சாதனத்திற்காகத் தயாரித்தது. இந்த பாண்ட், ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகவும் பிடித்துப்போய், இதனை ஐ.ஓ.எஸ்.,ஓ.எஸ்.எக்ஸ் மற்றும் வாட்ச் ஓ.எஸ்.ஆகிய அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும், மாறா நிலையில் உள்ள எழுத்துருவாக மாற்றிவிட்டது. உங்களைப் போன்ற வேறு சிலரும் ஆப்பிள் நிறுவனத்திற்கே எழுதிக் கேட்டுள்ளனர். ஆனால், ஆப்பிள் நிறுவனம் தன் சாதனங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரே மாதிரியான அனுபவத்தினைத் தர விரும்புகிறது. எனவே, இந்த எழுத்துருவினை மாற்றி வேறு ஒரு எழுத்துருவினை மாற்ற இடம் தராது என்றே எண்ணுகிறேன். இருப்பினும், இணையத்தில், இது போல ஆப்பிள் சாதனங்களில், எழுத்துருக்களை மாற்றுவதற்கான தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் உள்ளனவா என்று பார்க்கவும். ஆனால், அதனை ஆப்பிள் அனுமதிக்குமா, பின் நாளில் பிரச்னை வருமா என்பது குறித்து நான் எதுவும் கூற முடியாது.

கேள்வி: பேஸ்புக் அக்கவுண்ட் தளத்தில், நண்பர்களுடன் சேட் செய்கிறேன். ஒவ்வொரு நண்பருடனும், தனித்தனிக் கட்டத்தில் சேட் செய்கிறேன். என் நண்பர், ஒரே கட்டத்தில் குழுவாகவும் சேட் செய்திடலாம் என்று கூறுகிறார். இதற்கான செயலி என்ன? எங்கிருந்து டவுண்லோட் செய்திட வேண்டும்?
ஆர். என். ஆத்தியப்பன், திருநெல்வேலி.
பதில்:
தனிச் செயலி வேண்டியதில்லை. அதே சேட் விண்டோவில் மூலம், மற்ற நண்பர்களையும் அழைத்து சேட் செய்திடலாம். மற்ற நண்பர்களுக்கு இதனைத் தெரிவித்து விட வேண்டும். ஏனென்றால், ஒருவர் டைப் செய்திடும் தகவலை மற்ற அனைவரும் படிக்கலாம். இதற்கு கீழ்க்கண்டபடி செயல்படவும்.
முதலில், இணையத்தில், உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் செல்லவும். இப்போது உங்கள் நண்பர்களில் ஒருவர் இணைப்பில் கிளிக் செய்து சேட் விண்டோ தொடங்கவும். அந்த விண்டோவில் மேலாக Options என்னும் கியர் வீல் படத்தில் கிளிக் செய்தால், Add Friends to Chat என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். இதில் கிளிக் செய்தால், உடன் ஒரு சிறிய நீளக் கட்டம் கிடைக்கும். அதில் நீங்கள் இணைக்க விரும்பும் நபரின் பெயரை டைப் செய்தால், அவரும் இந்த விண்டோவில் சேர்க்கப்படுவார். இப்படியே பலரை இணைத்து சேட் செய்திடலாம். இப்போது, நீங்கள் இணைத்த அனைத்து நண்பர்களும் இந்த குரூப்பில் இருப்பார்கள். அவர்கள் பெயர்கள் காட்டப்படும். இந்த விண்டோவில் நீங்கள் எதனை டைப் செய்தாலும், அது இங்கு இணைக்கப்பட்டுள்ள நண்பர்களின் சேட் விண்டோக்களிலும் காட்டப்படும். இன்னொரு வழியும் உண்டு. பேஸ்புக்கில் உங்கள் நண்பர்களைச் சேர்த்து ஒரு குழு அமையுங்கள். இந்த குழுவின் சார்பாக, அதில் உள்ளவர்கள் பதியும் தகவல்கள் அனைத்தும் சேட் விண்டோவில் காட்டப்படும். அனைவரும் பங்கேற்கலாம்.

கேள்வி: கூகுள் தளத்தில் நம் தேடல்கள் எல்லாம் பதிந்து வைக்கப்படுவதாகவும், அவை அனைத்தையும் தனியே நாம் பெற முடியும், அழிக்க முடியும் மற்றும் நகலெடுத்து வைக்க முடியும் எனக் கேள்விப் பட்டேன். இது உண்மையா? எந்த தளத்தில் என் தேடலை மட்டும் பெறலாம்? அடுத்தவர்களின் தேடலைப் பெற முடியுமா?
கே.ஆர். ஜீவகராஜ், மதுரை.
பதில்:
கூகுள் உங்கள் தேடல்களை எல்லாம் தனியே ஒரு தளத்தில் பதிந்து வைக்கிறது. இது நமக்கு உதவிடத்தான் என்றாலும் சில சிக்கல்கள் இதனால் ஏற்படலாம். நீங்கள் ஒரு மாதம் முன்பு ஒன்றைத் தேடி அறிந்தீர்கள். அதனை இப்போது உடனே காண வேண்டும் என எண்ணினால், முயன்று கூகுள் தளத்திலேயே இதனைப் பெறலாம். நம் தேடல்கள் அனைத்தையும் கூகுள் பட்டியலாகத் தருகிறது.
முதலில் கூகுள் அக்கவுண்ட் ஒன்றில் உங்கள் யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து உங்களைப் பதிந்து கொள்ளுங்கள். ஜிமெயில் தளத்தில் கூட நுழையலாம். பின்னர் இந்த தொகுப்பினைப் பெற முதலில் https://history.google.com/ என்ற தளம் செல்லவும். இங்கு நீங்கள் அந்த வாரத்தில் மேற்கொண்ட தேடல்களின் அடிப்படையில் ஒரு சார்ட் கிடைக்கும். எத்தனை தேடல்களை மேற்கொண்டீர்கள் என்ற விபரம் கிடைக்கும். அப்படியே கர்சரைக் கீழாகக் கொண்டு சென்றால், தேடல்கள் அனைத்தும், அவற்றிற்கான இணையப் பக்க சிறிய படத்துடன் காட்டப்படும். இவற்றைத் தனியே நீங்கள் தரவிறக்கம் செய்தும் வைத்துக் கொள்ளலாம். இதில், நீங்கள் தேடிய தேடல்கள் மற்றவர்களால் அறியப்படக் கூடாது என்று எண்ணினால், தரவிறக்கம் செய்வதனை இரகசியமாக சேவ் செய்திட வேண்டும். இல்லை என்றால், அவற்றை இந்த தளத்திலிருந்து அழித்துவிட்டு, தரவிறக்கம் செய்திடலாம். மேலே சொன்ன தளத்தில் வலது மேல் மூலையில் இருக்கும் கியர் ஐகானில் கிளிக் செய்திட வேண்டும். அங்கு காட்டப்படும் கீழ்விரி மெனுவில், "Download" என்பதில் கிளிக் செய்தால், உங்களின் தேடல்கள் அனைத்தும், அவை சேர்த்து வைக்கப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்டு, உங்களுக்குத் தரப்படத் தயாராய் இருக்கும். இருப்பினும், உங்களுக்கு எச்சரிக்கை ஒன்று தரப்படும். உங்கள் தேடல்களில், மற்றவர்கள் அறியக் கூடாத தேடல்கள் சில இருக்கலாம். மற்றவர்களுக்குக் காட்டப்படாமல் இருக்க வேண்டிய தளங்கள் இருக்கலாம். எனவே, எப்படி எச்சரிக்கையாக, இதனைக் காப்பாற்றி வைக்க வேண்டும் என அறிவுறுத்திவிட்டு, மொத்த தேடல் தொகுப்பினையும் பெறுவதற்கான லிங்க் உங்களுக்கு ஜிமெயிலில் அனுப்பி வைக்கப்படும். அல்லது வேறு யாரும் இதனைத் தரவிறக்கம் செய்திடாமல் இருக்க, இரு வழிப் பாதுகாப்பினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளும். மொத்த தேடல் தளங்கள் பட்டியலும், சுருக்கப்பட்ட பைலாகத் தரப்படும்.
அவரவர் தேடல்களை மட்டுமே பெற முடியும். மற்றவர்களின் யூசர் நேம், பாஸ்வேர்ட் தெரிந்தால், இதே முறையில் பெறலாம். ஆனால், அது திருட்டல்லவா!

கேள்வி: நான் விண்டோஸ் 7 அல்ட்டிமேட் பயன்படுத்தி வருகிறேன். விண்டோஸ் 10 இலவசம் என்பதால், அதற்கு மாற திட்டமிடுகிறேன். விண்டோஸ் 8 மற்றும் 8.1 சென்று, அதன் பின்னர் தான், விண் 10 கிடைக்குமா? நேரடியாக, விண் 10க்கு அப்கிரேட் செய்திட முடியுமா?
எஸ். ஜீவானந்தம், விருதுநகர்.
பதில்:
விண்டோஸ் 7 உரிமம் பெற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்திருந்தால், நீங்கள் நேரடியாக விண்டோஸ் 10 பெறலாம். ஏற்கனவே, இந்த கம்ப்யூட்டரை, இணைய இணைப்பில் இயக்கி இருந்தால், விண் 10 பெறுவதற்கான பைல்கள், உங்கள் கம்ப்யூட்டரில் இறங்கி இருக்கும். இல்லை என்றால், இணைய இணைப்பில் முதலில் விண்டோஸ் அப்டேட் கட்டளை கொடுத்து, அதற்கான பைல்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளவும். தொடர்ந்து, உங்கள் கம்ப்யூட்டர் லேப்டாப்பாக இருந்தால், மின்சக்தி தடைபடா வண்ணம் வைத்துக் கொண்டு, இணைய இணைப்பில் விண் 10 அப்டேட் கொடுத்தால், விண் 10 சிஸ்டம் இன்ஸ்டால் செய்யப்படும். இடையே நீங்கள் விண்டோஸ் 8க்கு மாறி இருந்தால், விண்டோஸ் 8லிருந்து நேரடியாக, விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்திட முடியாது. விண்டோஸ் 8.1 க்குச் சென்று, பின்னரே விண்டோஸ் 10க்குச் செல்ல வேண்டும்.

கேள்வி: நான் விண்டோஸ் 8.1 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர் வைத்துள்ளேன். இதில், இலவசமாகக் கிடைக்கும் விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பதிய இருக்கிறேன். பாதுகாப்பாக, கம்ப்யூட்டரில் உள்ள டேட்டாவிற்கு பேக் அப் எடுக்க வேண்டும். என் டேட்டா பைல்களை பேக் அப் எடுக்க ப்ளாஷ் ட்ரைவ் அல்லது போர்ட்டபிள் ட்ரைவ்களைப் பயன்படுத்த வேண்டுமா? அல்லது, க்ளவ்ட் ட்ரைவில் பேக் அப் எடுப்பதுடன் விட்டுவிடலாமா? எப்படி க்ளவ்ட் ட்ரைவில் பேக் அப் பைல்களை சேவ் செய்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியுமா? மீண்டும் எந்த சேதமும் இன்றி கிடைக்குமா?
ஆர். பிரவீணா சுந்தர், கோவை.
பதில்:
நீங்கள் தாராளமாக, மைக்ரோசாப்ட் தரும் OneDrive வசதியினைப் பயன்படுத்தி, உங்கள் பைல்களை பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளலாம் பழைய ஸ்கை ட்ரைவ் தான், இப்போது ஒன் ட்ரைவ் என அழைக்கப்படுகிறது. உங்களுடைய மல்ட்டி மீடியா மற்றும் டாகுமெண்ட் பைல்களைத் தானாகவே, ஒன் ட்ரைவில் பேக் அப் பைல்களாக சேவ் செய்திடலாம். உங்கள் கம்ப்யூட்டரிலும் இவற்றைப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். இதற்கான வழிமுறைகள் இதோ:
முதலில் PC Settings செல்லவும். பின்னர் SkyDrive தேர்ந்தெடுக்கவும். Save documents to SkyDrive by default என்பதனை இயக்கி வைக்கவும். இதுதான் ஒன் ட்ரைவ். எனவே, குழப்பமடைய வேண்டாம்.
நீங்கள் எந்த புதிய டாகுமெண்ட் ஒன்றை சேவ் செய்தாலும், அது மாறா நிலையில் OneDrive/SkyDriveல் சேவ் செய்திடப்படும். உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டரிலும் சேவ் செய்து கொள்ளலாம். OneDrive/SkyDriveல் சேவ் செய்யப்பட்ட பைல் மீது ரைட் கிளிக் செய்து, கம்ப்யூட்டரில் சேவ் செய்திடும் வகையிலும் அமைக்கலாம். இது நீங்கள் இணைய இணைப்பில் இல்லாத போது பயன்படும்.
உங்களுடைய கடிதத்தில், ப்ளாஷ் ட்ரைவ் அல்லது போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் பயன்படுத்தலாமா என்ற சந்தேகத்தினையும் பதிந்திருக்கிறீர்கள். தாராளமாக இவற்றையும் பயன்படுத்தலாம். க்ளவ்ட் ட்ரைவினையும் பயன்படுத்தலாம். ஒன்றுக்கு இரண்டாக வைத்துக் கொள்வது நல்லதுதானே. இருப்பினு, உங்கள் சந்தேகத்திற்கான என் பதில், க்ளவ்ட் ட்ரைவில் சேமித்து வைத்த பைல்களை எப்போதும், எங்கிருந்தாலும் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்பதே.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X