சாண்டக்ளாஸும் சருக்கு வண்டியும்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 பிப்
2016
00:00

சாண்டாக்ளாஸுக்கு அப்போது அத்தனை வயதாக இல்லை. அவரது தாடி வெள்ளையாகவில்லை. வட துருவ வாசியான அவருக்குப் பொழுதே போகவில்லை. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக உலகத்துக் குழந்தைகளுக்குப் பரிசு தரும் பழக்கமும் அவரிடம் அப்போது இல்லை. பனிப் பாறைகளில் சறுக்கி விளையாடி அலுத்துப் போன வேளையில் ஒருநாள் சில பனிமண்டலப் பறவைகள் சாண்டாவிடம் கூறின.
''உலகின் மற்றப் பகுதிகளில் வாழும் குழந்தைகள் சோம்பிக் கிடக்கின்றன. ஏனென்றால், அவர்களுக்கு விளையாடப் பொம்மைகள் இல்லை!'' என்றன.
இதைக் கேட்டதும், சாண்டாவிற்கு, 'பளீர்' என்று ஒரு யோசனை தோன்றியது. உடனே தன் வீட்டுக்குப் போனார். அவருடைய நண்பர்களான வனதேவதைகளையும், குள்ளர்களையும் கூப்பிட்டார். எல்லாரும் சேர்ந்து விதவிதமான விளையாட்டுப் பொம்மைகளையும், பொருள்களையும், புத்தகங்களையும் வருடம் முழுவதும் உருவாக்கிக் குவித்தனர்.
துருவக்கரடி, ஸீல், துருவநாய், கலைமான், இவையும் கூட சாண்டாவின் நண்பர்கள்தான். தாங்களும் பொம்மை செய்ய உதவுவதாக, முன் வந்தன. ஆனால், அவைகளால் தொழிற்சாலையில் குழப்பம்தான் ஏற்பட்டது.
துருவக்கரடி தான் செய்த பொம்மைகளை வைத்து விளையாட அவை கீழே விழுந்து உடைந்தன. சங்கீதப் பெட்டியின் இசைக்கு ஏற்ப ஸீல், தன் வாலின்மீது நின்று நடனமாட ஆரம்பித்து விட்டது. துருவ நாய்களோ, பூனை, முயல் பொம்மைகள் நிஜமென்று எண்ணித் துரத்தலாயின. கலைமான்கள் பலூனை மூக்கால் ஊதி தள்ள, அது அவைகளின் கொம்பில் விழுந்து, 'படால்' என்று உடைந்தன. ஆகவே, சாண்டா எல்லா மிருகங்களையும் வெளியில் தள்ளிக் கதவைச் சாத்திக் கொண்டார்.
ஒரு வகையாக ஏராளமான பொம்மைகள் செய்து குவிக்கப்பட்டன. தொழிற்சாலைக்குள் இனி இடமில்லை. அத்தனை பொம்மைகள்.
உழைத்துக் களைத்துப் போனா சாண்டா, 'அப்பாடா!' என்று உட்கார்ந்தார். குள்ளர்களும், குட்டிச் சாத்தான்களும் தேவதைகளும் சுருண்டு முடங்கிக் கொண்டன தூங்குவதற்காக.
''இத்தனை பொம்மைகளையும் எல்லாக் குழந்தைகளுக்கும் விநியோகிக்க வேண்டுமே. அதோ, என்னுடைய சறுக்கு வண்டி, இதோ பொம்மைகள். ஆனால், வண்டியை இழுத்துப் போவது யார்?'' என்று கவலையுடன் கூறினார் சாண்டா.
''நாங்கள் இழுத்துப் போகிறோம்,'' என்று முன் வந்தன துருவக் கரடிகள்.
''நாங்களும் வருகிறோம்,'' என்றன கலைமான்கள்.
''எங்களை அழைக்கக் கூடாதா?'' என்றன ஸீல்கள்.
''உங்களையா? உங்களை நம்பினால் ஐந்து வருடத்துக்குப் பிறகல்லவா குழந்தைகளுக்கு பொம்மைகள் கிடைக்கும்!'' என்று நகைத்தன நாய்கள்.
ஸீல்களின் மெதுவாக நகரும் குணத்தை குத்திக்காட்டி. இதனால் வேதனையடைந்த ஸீல்களின் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டது. அவை உணர்ச்சிவசப்படக் கூடியவை. அவைகளின் கண்ணீரைக் கண்டு, சாண்டா தவித்துப் போனார். ஏனென்றால், அவருக்கு இளகிய உள்ளம்.
அதனால், அவைகளைத் திருப்திப்படுத்தத் தன் சறுக்கு வண்டியில் பூட்டி, பொம்மை மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கிளம்பினார். பனிக்கட்டிப் பாதையில், கைகளையும், வாலையும் ஆட்டி, ஆட்டி ஸீல்கள் வண்டியை இழுத்துக் கொண்டு நகர்ந்தன. ரொம்ப மெதுவாகப் போயின. சாண்டாவும் பொறுமையை இழக்கவில்லை.
''வடதுருவத்திலிருந்து பதினைந்து டிகிரி தெற்கே போனதும், அலாஸ்கா பக்கமாகப் போங்கள்,'' என்றார்.
''ம்... ஹூம்... முதலில் க்ரீன்லாந்துக்குத்தான் போகணும். என் மாமா அங்கு வசிக்கிறார். ரொம்ப நாளாக அங்கு போக வேண்டுமென்று ஆசை, அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதே விடுவேனா?'' என்றது ஒரு ஸீல்.
''அதெல்லாம் முடியாது. ஆஸ்திரேலியக் கடலில் உள்ள மீன்கள் ரொம்ப ருசியாக இருக்குமென்று கேள்வி. ஆகவே, நாம் முதலில் ஆஸ்திரேலியாவுக்குப் போவோம்,'' என்று அந்தப் பக்கமாக நகர்ந்தது இன்னொரு ஸீல். இப்படி ஒவ்வொரு ஸீலும் ஒவ்வொரு இடத்துக்குப் போக விரும்பின. பாவம் சாண்டா க்ளாஸ்!
''நம்முடைய பயணத்தின் நோக்கம் குழந்தைக்கும் பரிசுப் பொருள் கொடுப்பது தான். பயணத்தின் முடிவில் நீங்கள் எல்லாருமே எல்லா இடங்களையும் பார்த்து விடலாம். ஆகவே, என் சொல்படி கேளுங்கள்,'' என்று சொல்லிப் பார்த்தார்.
ஆனால், பொல்லாத ஸீல்கள் ஒத்துக் கொள்ளவில்லை. ஆகவே, அவைகளுடன் வட துருவத்துக்கு திரும்புவதைத் தவிர வேறு
வழியில்லை அவருக்கு.
'இந்த காரியத்துக்கு நாய்கள் தான் சரி. சறுக்கு வண்டி இழுப்பதில் அனுபவம் உண்டு அவைகளுக்கு, என்று தனக்குள் கூறிக் கொண்டே சாண்டாகிளாஸ் துருவ நாய்களை வண்டியில் பூட்டி தம் பயணத்தை மறுபடி தொடங்கினார். ஆனால், அலாஸ்கா போவதற்குள் அவைகளும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளலாயின.
''நீ உன் பங்குக்கான பளுவை ஒழுங்காக இழுத்தால்தான் நான் என் பங்குக்கான பளுவை இழுப்பேன்,'' என்றது ஒரு நாய்.
''நான் என்னுடையதை ஒழுங்காகத்தான் இழுக்கிறேன்... நீதான் சரியாக இழுக்கவில்லை'' என்றது இரண்டாவது நாய்.
''நீங்கள் சண்டை போட்டுக் கொண்டு எல்லாச் சுமையையுமே என்னை இழுக்கச் செய்கிறீர்களே இது நியாயமா?'' என்றது இன்னொரு நாய்.
''போதும் போதும்! சண்டை கூடாது. யார் வேலை செய்யவில்லை என்பதை ஆராய இது நேரமில்லை. அவரவர் அவரவருடைய கடமையைச் செய்வோம். பிறரைப் பற்றி குறை கூறக் கூடாது. எப்படியாவது இந்தப் பொம்மைகளை எல்லாம் குழந்தைகளின் கையில் சேர்த்தாக வேண்டும். அதுதான் நமது குறிக்கோள்,'' என்று சமாதானப்படுத்தினார் சாண்டா.
இதைத் துருவ நாய்களும் ஏற்றுக் கொண்டன. ஆனால், ஒவ்வொன்றும் தானே அதிகமாக உழைப்பதாகக் கருதின. முடிவில் முதல் நாய் இனி என்னால் மேல போகமுடியாது என்று நின்றுவிட்டது. இதனால் மற்ற நாய்களின் ஓட்டமும் தடைப்பட எல்லாமே நின்றுவிட்டன. சாண்டாவும் வேறு வழியில்லாமல் மறுபடியும் மூட்டைகளுடன் வட துருவத்துக்குத் திரும்பும் படியாயிற்று.
கலைமான்களும், துருவக் கரடிகளும் சாண்டாவுக்கு உதவ முன்வந்தன. கலைமான்கள் எப்போதுமே சுயநலமில்லாத, சுத்தமான பிராணி. ஆகவே, போட்டியைத் தவிர்க்க துருவக் கரடிகளும் வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டன.
இந்தத் தடவை எப்படியும் வெற்றியோடு போய்த் திரும்பலாம் என்று நினைத்தார் சாண்டா. ஏனென்றால், துருவக் கரடிகள் தகராறு செய்யாத பிராணிகள். ஒரு கட்டுப்பாட்டுக்கு இணங்கக் கூடியவை. துருவக் கரடிகள் உற்சாகமாக வண்டியை இழுத்துக்கொண்டு ஓடின. சாண்டாவும் சீட்டியடித்தபடி குஷியாகச் சவாரி செய்தார். ஊசி இலைக் காடுகளுக்கு அருகே வரும் வரைதான் இந்த வேகமும், மகிழ்ச்சியும்.
''கொஞ்சம் பொறுங்கள். அதோ அந்த மரத்தில் ஏறி விட்டு வருகிறேன்,'' என்று கூறி ஒரு பெரிய மரத்தின் மீது ஏறலாயிற்று முதல் கரடி.
சாண்டா, ''நில்லு நில்லு!'' என்று கத்த கத்த.. அது மடமடவென்று மரத்தின் மீது ஏறலாயிற்று மற்ற கரடிகளையும் இழுத்துக் கொண்டு.
''இல்லை, இல்லை.... நான் அதோ அங்குள்ள குகைக்குள்ளே போய் ஆராயப் போகிறேன். என்னை விட்டுவிடு,'' என்று வேறுதிசையில் இழுத்தது இரண்டாவது துருவக் கரடி.
சாண்டா தலையில் கையை வைத்தபடி உட்கார்ந்துவிட்டார்.
''இந்தக் கரடிகளின் குணம் எப்போதுமே இப்படித்தான். இதை மறந்து போய் இவற்றை அழைத்து வந்தேனே... அது என் தப்பு. இந்த வேலைக்கு இவை அருகதையற்றவை,'' என்ற முடிவோடு மூன்றாம் தடவையாக வடதுருவத்துக்கே திரும்பிப் போனார்.
முடிவாகக் கலைமான்களைச் சறுக்கு வண்டியில் பூட்டிக் கொண்டு புறப்பட்டார்.
'இந்தத் தடவையாவது திரும்பி வராமல் பரிசுப் பொருள்களை வினியோகித்து விட்டுத் திரும்ப வேண்டுமே' என்ற கவலையோடு வண்டியில் அமர்ந்திருந்தார் சாண்டா.
அவரது தொங்கிய முகத்தைக் கண்ட முதல் கலைமான் தன் தோழர்களிடம் கூறியது.
''நாம் எல்லாரும் ஒரு குறிக்கோளுடன் போகிறோம். இந்தப் பரிசுகளையெல்லாம் உலகத்து குழந்தைகளுக்குச் சேர்ப்பிப்பதற்காக. ஆகவே, நமக்குள் எந்த வேற்றுமை இருந்தாலும் அவற்றையெல்லாம் மறந்துவிட்டுச் செயல்பட வேண்டும். ஒற்றுமையாக உழைப்போம். கடமை முடியும்வரை கட்டுப்பாடாகப் பணிபுரிவோம்,'' என்று கட்டளையிட்டது.
சாண்டாவின் வியப்பை அதிகரிக்கும் வகையில் எட்டு கலைமான்களும், வண்டியை இழுத்துக்கொண்டு காற்றெனப் பறந்தன. அவர் செலுத்திய திசைகளிளெல்லாம் சென்றன. தங்களை மறந்து, எடுத்துக் கொண்ட காரியத்தை ஒற்றுமையாகச் செய்து முடிக்கும் கடமை உணர்வோடு செயல்பட்ட கலைமான்களையே, சாண்டா க்ளாஸ் அன்று முதல் தம் கிறிஸ்துமஸ் பண்டிகைப் பயணத்துக்குப் பயன்படுத்தலானார்.
குட்டீஸ்... இப்போது புரிகிறதா சாண்டா க்ளாஸின் சறுக்கு வண்டியைக் கலைமான்கள் ஏன் இழுக்கின்றனவென்று.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.