நகரங்களில் நிலவும் இணையப் பயன்பாட்டு இடைவெளி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 மார்
2016
00:00

இந்தியாவில் மொபைல் போன்கள் பெருகும் அளவிற்கு, இணையப் பயன்பாடு அதிகரிக்கவில்லை என்பது ஒரு குற்றச் சாட்டாக இருந்து வருகிறது. ஒரு சிலர், ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரிப்பதால், இணையப் பயனாளர் எண்ணிக்கையும் நிச்சயம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால், அண்மையில், இந்த நிலையை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு, ஒரு நிதர்சனமான உண்மையை தெரிவித்துள்ளது. அமெரிக்க நிறுவனமான, Pew Research Center என்னும் ஆய்வு மையம் இதனை மேற்கொண்டது.
நகர்ப்புறங்களில் வாழும் மக்களிடையே, இணையப் பயன்பாட்டில் பெருத்த இடைவெளி உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. புனே நகரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புனே நகரத்தின் பொருளாதார வளர்ச்சி, அங்கு இயங்கும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனங்களைப் பெரும்பாலும் சார்ந்தே உள்ளது. வேகமாகப் பெருகி வரும் இந்நகரில், தற்போது 59 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் பயன்பாட்டு நிலையைப் பார்க்கையில் பல அதிசயப்படத்தக்க தகவல்கள் வெளியாகின.
ஆய்வு நடத்தப்பட்ட மக்கள் தொகையில், 82% பேர் மிகக் குறைந்த வருமானம் உடைய மக்களாக உள்ளனர். இவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதே இல்லை.
56% வீடுகளில், இணையத்தினைப் பயன்படுத்துவோர் யாரும் இல்லை. இவர்களில், 41% பேர் 'இன்டர்நெட்' என்ற சொல்லையே கேள்விப்பட்டதில்லை. 16 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களில் 43% பேர் இணையத்தைப் பயன்படுத்துவதே இல்லை.
இதே நிலை தான், டில்லி மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களிலும் உள்ளது என்றும், இன்னும் சில பொருளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள நகரங்களில், இந்த இணையம் அற்ற நிலை இன்னும் மோசமாக உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்பது ஓர் உறுதியான தகவலாகும். ஆசியபசிபிக் நாடுகளில், இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகின்றன. இருப்பினும், இந்திய ஜனத்தொகையில், 21% பேர் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது பெருத்த ஏமாற்றம் தரும் உண்மை என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஏனென்றால், உலக அளவில், சராசரியாக, ஒரு நாட்டின் மக்களில், 67% பேர் இணையத்தினைப் பயன்படுத்துகின்றனர்.
இணையம் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை என்று பார்க்கையில், உலக அளவில், அமெரிக்காவையும் மிஞ்சி, சீனாவிற்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
ஆனால், புனேயில் உள்ள Centre for Communication and Development Studies (CCDS) என்னும் ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், நகர்ப்புற மக்களிடையே, இணையப் பயன்பாட்டில் பெருத்த இடைவெளி உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. புனே நகரில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள், அனைத்து நகர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனே நகரம், சாப்ட்வேர் ஏற்றுமதியில், பெங்களூருவினை அடுத்த நிலையில் உள்ளது. இந்நகரில் மட்டும் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 36 லட்சமாகும். இது ஆண்டு தோறும் 34% அதிகரித்து வருகிறது. இருப்பினும், இணையப் பயன்பாட்டில் ஏன் இந்த இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணங்களை இங்கு காணலாம்.
1. 84% பெண்கள் இணையத்தைப் பயன்படுத்துவதில்லை. ஆண்களில், 42% பேர் இணையம் பக்க செல்வதில்லை. மொத்த இணையப் பயனாளர்களில், 26% பேர் மட்டுமே பெண்கள். ஆய்வில் கலந்து கொண்ட பெண்களில், 84% பேர் இணையம் பக்கம் சென்றதில்லை. கலந்து கொண்ட ஆண்களில், 42% பேர் இணையப் பயன்பாடு தெரிந்ததில்லை. இதற்கு நம் பாரம்பரிய மூட நம்பிக்கைகளும் காரணமாய் இருப்பது வியப்பாய் உள்ளது. இந்தியக் குடும்பங்களில், நகரங்களில் கூட, ஆண்கள் மட்டுமே ஸ்மார்ட் போன் வைத்துள்ளனர். பெண்கள் அவற்றைப் பகிர்ந்து பயன்படுத்துகின்றனர். அல்லது, இணைய வசதி கிடைக்காத, நெட் டேட்டா இல்லாத திட்டத்தைப் பயன்படுத்துகின்றனர். எந்த கூடுதல் வசதியும் இல்லாத சாதாரண மொபைல் போனையே வாங்குகின்றனர். பையன்களைக் காட்டிலும், பெண்கள் வீட்டிலேயே உள்ளதால், அவர்களுக்கு எதற்கு மொபைல் போன் என்ற எண்ணம் பெற்றோர்கள் மத்தியில் உள்ளது. பெண்களுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுத்தால், அது தேவையற்ற தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்கள் வாழ்க்கை சீரழிந்துவிடும் என்ற எண்ணம் பரவலாகவே உள்ளது. குஜராத் மாநிலத்தில், பல கிராமங்களில் பஞ்சாயத்து அமைப்பே, பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது. பெண்களுக்குக் குறைந்த கட்டணத்தில், இணைய இணைப்பினை ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்கள், உழைக்கும் மக்களுடன் கலந்து கிராமப் பொருளாதார அமைப்பினைச் சீரமைக்க உதவுவார்கள். இதனை Mckinsey ஆய்வு அமைப்பு உறுதி செய்துள்ளது.
2. பெண்கள் கல்வி பெறுவதனால், இணையத்தைப் பயன்படுத்தும் வாய்ப்புகளைப் பெறுவார்கள். பத்தாம் வகுப்பு வரை படித்த பெண் ஒருவர் ஒரு குடும்பத்தில் இருந்தால் கூட, அந்தக் குடும்பம் இணைய இணைப்பில் வரும் வாய்ப்பு உள்ளது. கல்வித் தரம் உயர்கையில், இணையப் பயன்பாடும் உயர்கிறது. படிப்பறிவற்றவர்கள் அல்லது தொடக்கப் பள்ளி வரை மட்டுமே பயின்றவர்களில் 3% பேர் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
3. குடும்ப பொருளாதார அடிப்படையில் பார்க்கும்போது, மிக ஏழையாக உள்ள குடும்பங்களில் 29.4% குடும்பங்களே, இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். அதிக வசதி கொண்ட பணக்காரக் குடும்பங்களில், 62.8% குடும்பங்கள் இணைய இணைப்பு உள்ளவர்களாக வாழ்கின்றனர்.
4. இந்த ஆய்வில் தெரிய வந்த இன்னொரு பயனுள்ள தகவல், இளைஞர்கள் இணையத்தை அதிகம் பயன்படுத்துவதுதான். இணையத்தைப் பயன்படுத்துபவர்களில், 53.5% பேர், 16 முதல் 20 வயதில் உள்ளவர்கள். இந்த சதவீதம், கூடுதல் வயதுள்ளவர்களுடன் பார்க்கையில், குறைந்து கொண்டே செல்கிறது.
5. மக்களின் பணிக்களம், இணைய இணைப்பில் பெரும் பங்கு வகிக்கின்றது. இணையப் பயனாளர்களில், 46.5% பேர் மாணவர்கள். 26.2% பேர் சேவைப் பணிகளில் ஈடுபடுபவர்கள். இவர்கள் பார்க்கும் பணி சார்ந்து, இணையத் தொடர்பில் இருக்க வேண்டியதுள்ளது.
6. ஸ்மார்ட் போன் இருப்பது, இணையத்துடன் இணைப்பினைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களில், 77% பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத குடும்பங்களில், 30% பேர் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். கூகுள் இந்தியா எடுத்த கணிப்பில் இதே கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
7. Pew Research ஆய்வு மையக் கணிப்பின்படி, இந்தியாவில் 17% பேர் மட்டுமே ஸ்மார்ட் போன் சொந்தமாக வைத்துப் பயன்படுத்துகின்றனர். குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தில், 7% பேர் மட்டுமே, ஸ்மார்ட் போன் சொந்தமாக வைத்துள்ளனர். இதுவே பணக்காரக் குடும்பத்தில் 22% ஆக உள்ளது.
8. இந்த ஆய்வில் தெரியவந்த மேலும் சில ஆர்வமூட்டும் தகவல்களைப் பார்க்கலாம்.
இணையம் பயன்படுத்தாதவர்களில், 27.5% பேர், இணைய இணைப்பினை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாது என்றும், அதனாலேயே, இணையத்தை அணுகவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு இணையப் பயன்பாடு குறித்து கற்றுக் கொடுத்தால், இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
பெண்களைக் காட்டிலும், ஆண்கள் எட்டு மடங்கு அதிக நேரம் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இணையத்தைப் பயன்படுத்தாதவர்களில், 21% பேர், இணையத்தால் பெண்களுக்கு எந்தவிதப் பயனுமில்லை என்று உறுதியாக நம்புகின்றனர். இணையம் பயன்படுத்துபவர்களில், 32% பேர் இதே கருத்தினைக் கொண்டுள்ளனர்.
இணையப் பயனாளிகளில், 35% ஆண்களும், 24% பெண்களும், இணையத் தொடர்பு தங்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையை அளித்துள்ளதாகவும், அதனால் அவர்களின் மதிப்பு சமுதாயத்தில் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர். 8% பேர் மட்டுமே, இணையத்தில் அரசு தரும் சலுகைகள் குறித்து அறிந்து கொண்டதாக அறிவித்துள்ளனர். இந்த ஆய்வு, புனே நகரத்தில் மட்டுமே எடுக்கப்பட்டாலும், ஆய்வுக்குப் பொருளாக வந்த மக்கள், பொருளாதார நிலையில் அனைத்து பிரிவுகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தனர். பணி நிலையிலும், பலவகைப்பட்ட மக்களை இந்த ஆய்வு கருத்துக்கு எடுத்துக் கொண்டது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X