கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 மார்
2016
00:00

கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் செயல்படுகையில், தவறாக ஏதேனும் ஒரு பார்முலாவினை தேவையில்லாத இடத்தில் செயல்படுத்திவிட்டால், அதனை இயக்காமல் இருக்க, கண்ட்ரோல் + இஸட் பயன்படுத்தினால் செயல்படுமா? அல்லது வேறு வழி உள்ளதா?
கா. பன்னீர்செல்வம், திருப்பூர்.
பதில்:
இது நம் அனைவருக்குமே ஏற்படும் விளைவு தான். எக்ஸெல் புரோகிராமிலும் Ctrl+Z செயல்படும். உடனடியாக நாம் மேற்கொண்ட செயல்பாட்டினைச் செயல்படுத்தாமல் மீண்டும் பழைய நிலைக்கே செல்லும். இந்த இரு கீகளை அழுத்தி, மேற்கொண்ட செயலுக்கான விளைவைத் தடுத்துவிடலாம். எக்ஸெல் புரோகிராமில் இன்னோரு வழியும் உள்ளது. எக்ஸெல் புரோகிராம் விண்டோவில், ரிப்பனில் இடது ஓரம் உள்ள டேப்களுக்கு மேலாக, ஒரு சிறிய வளைந்த அம்புக்குறி இருக்கும். இதில் கிளிக் செய்தால், கண்ட்ரோல்+இஸட் கீகளை அழுத்துகையில் என்ன விளைவு ஏற்படுகிறதோ, அதே 'செயல் ரத்து செயல்பாடு' இயக்கப்படும். இதனை அழுத்திய பின்னர், “டிங்” என ஏதேனும் ஒலி வந்தால், ரத்து செய்வதற்கான செயல்பாடு எதுவும் இல்லை என்று பொருள். ரத்து செய்திடும் வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகள் இருப்பின், இந்த வளைந்த அம்புக்குறியின் ஓரமாக அழுத்தினால், சிறிய மெனு கிடைக்கும். அதில் நீங்கள் மேற்கொள்ளக் கூடிய அனைத்து செயல்பாடுகளும் பட்டியல் இடப்படும்.

கேள்வி: என்னுடைய லேப்டாப் கம்ப்யூட்டரில், எஸ்.எஸ்.டி. ஹார்ட் ட்ரைவ் தரப்பட்டுள்ளது. இதனை டிபிராக் செய்திடக் கூடாது என என் நண்பர் கூறுகிறார். ஆனால், இதனை மேற்கொள்வதே நல்லது என நான் எண்ணுகிறேன். ரிஸ்க் எடுக்கவிரும்பாமல், உங்களிடம் சந்தேகத்தை நிவர்த்தி செய்திட விரும்புகிறோம். அன்பு கூர்ந்து பதில் தரவும்.
என். நடனம், சிதம்பரம்.
பதில்:
டிபிராக் என்பது (Defrag (short for defragmentation)) என்பது, ஹார்ட் டிஸ்க்கில், வெவ்வேறு இடத்தில் பதியப்பட்டுள்ள, ஒரு கோப்பின் டேட்டாவை நகர்த்தி, ஒரே இடத்தில் அமைக்கும் செயலாகும். இதன் மூலம், ட்ரைவில் டேட்டாவினைத் தொடர்ந்து பதிந்திட அதிக இடம் கிடைக்கும். இதனால், உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டர் இயக்க வேகம் அதிகரிக்கும். எஸ்.எஸ்.டி. என்பது (SSD -~ solid-state drive) சாலிட் ஸ்டேட் ட்ரைவினைக் குறிக்கிறது. ஒரு சாலிட் ஸ்டேட் ட்ரைவில், நகரும் பகுதிகள் இருக்காது. இது, ப்ளாஷ்
மெமரியின் தன்மையுடன் கூடிய ஹார்ட் ட்ரைவாகும். நகரும் பகுதிகள் இல்லாததால், வழக்கமான ஹார்ட் ட்ரைவ் உள்ள கம்ப்யூட்டரைக் காட்டிலும், இதன் செயல்வேகம் அதிகரிக்கும். பொதுவாக, சாலிட் ஸ்டேட் ட்ரைவிற்கு டிபிராக் என்னும் டேட்டா நகர்த்தல் பணி தேவைப்படாது என்றே அனைவரும் கருத்து தெரிவிக்கின்றனர். சில வேளைகளில், விண்டோஸ் இயக்கமே, இதில் டிபிராக் பணியை மேற்கொள்ளும். நாமாக மேற்கொண்டால், சாலிட் ஸ்டேட் ட்ரைவில் ஏதேனும் பாதிப்பு ஏற்படலாம். எனவே, நாமாக மேற்கொள்ளாமல் இருப்பதே நல்லது.

கேள்வி: பல இதழ்களில் படித்ததைக் கொண்டு, என் லேப்டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 சிஸ்டத்தைப் பதிந்து இயக்கிக் கொண்டு வருகிறேன். இப்போது, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு முன்பு வந்த பாப் அப் செய்திகளைப் போல, விளம்பரங்கள் வருகின்றன. இது இணையத் தொடர்பு இல்லாத நேரத்திலும் வருகிறது. ஏன்?
ஆ. சிவகுருநாதன், தஞ்சாவூர்.
பதில்:
தொடர்ந்து விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு அப்டேட் பைல்கள் வெளியிடப்படுவதால், மைக்ரோசாப் இதனைத் தன் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பதைக் கடமையாகக் கருதுகிறது. விண்டோஸ் 10 பயனாளர்கள், இவற்றை நிச்சயமாக மேற்கொண்டுதான் ஆக வேண்டும் என்பதாலேயே, இந்த எச்சரிக்கைகள் தரப்படுகின்றன. இதற்கான கோப்பினை மைக்ரோசாப்ட் இணையத் தொடர்பில் இருக்கும்போதே பதிந்துவிடுவதால், உங்களுக்கு, இணையத்தோடு தொடர்பு இல்லாத நிலையிலும் இந்த நினைவூட்டல்கள் கிடைக்கின்றன. இது நம்முடைய செயல்பாட்டிற்கு நல்லதுதானே. இதுவரை மைக்ரோசாப்ட் தந்த விண்டோஸ் பதிப்புகளில், விண்டோஸ் 10 தான் மிகவும் கூடுதல் வசதிகள் கொண்ட, அதிக பாதுகாப்பான செயல்பாட்டினைத் தரக்கூடிய சிஸ்டமாகும். சிலர் இதனை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கான “ஆண்ட்ராய்ட்” சிஸ்டம் போல இயங்குகிறது என்று புகழ்கின்றனர். விண்டோஸ் ஸ்டோரில், விண் 10க்கான, இசைக் கோப்புகள், விளையாட்டுகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எக்கச்சக்க விஷயங்கள் கிடைக்கின்றன. இந்த சிஸ்டம் தரும் 'கார்டனா' டூலை அனைவரும் மிகவும் விரும்புகின்றனர். இதில் தரப்பட்டுள்ள 'டிஜிட்டல் அசிஸ்டண்ட்' டூல், தேடுதலில் புதிய பரிமாணத்தை அளிக்கிறது. எனவே, எப்படிப் பார்த்தாலும், விண்டோஸ் 10, மிகவும் சிறந்த சிஸ்டமாகும். எனவே, அது சார்ந்து தரப்படும் எச்சரிக்கை செய்திகளைப் பொருட்படுத்தாமல் பயன்படுத்துவதே சிறந்தது.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் உருவாக்குகையில், பாரா, பாராவாக எண்களுடன் அமைக்கிறேன். ஆனால், சில பாராக்களுக்கு எண்கள் தேவையில்லை. அவற்றை விட்டுவிட்டு, அதாவது எண்கள் இல்லாமல் எப்படி அமைப்பது? என்ன செய்தாலும், மொத்தமாக நீங்கிவிடுகிறது அல்லது அனைத்து பாராக்களுக்கும் எண்கள் அமைகின்றன. இதற்கான வழி கூறவும்.
எஸ். திருஞானம், கோவை.
பதில்
: பலருக்கு இதனைப் போல தேவை அடிக்கடி ஏற்படுவதுண்டு. வேர்ட் தானாக, எண்களை அமைப்பதால், நாமாக சில பத்திகளுக்கு மட்டும் நிறுத்த முடியவில்லை. ஆனால், வேர்டில் இதனை மிக அழகாக மேற்கொள்ளலாம். அதற்கான வழிகளை இங்கு தருகிறேன்.
1. வழக்கமாக, எண்கள் கொண்ட பட்டியலை எப்படி அமைப்பீர்களோ, அதே போல அமைக்கவும். நீங்கள் எந்த பத்திகளுக்கு எண்கள் இருக்க வேண்டாம் என விரும்புகிறீர்களோ, அந்த பத்திகளுக்கும் சேர்த்து அமைக்கவும். அதாவது, சிறிது நேரத்திற்குத் தற்காலிகமாக அந்த பத்திகளுக்கு எண்கள் இருக்கும்.
2. ரிப்பனில், ஹோம் தேர்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
3. இப்போது கர்சர், நீங்கள் தேவையில்லை எனக் கருதும் முதல் பத்தியில் இருக்க வேண்டும். இனி பாராகிராப் குரூப்பில் (Paragraph Group) Numbering டூல் மீது கிளிக் செய்திடவும். இங்கு Set Numbering Value என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் எண் 0 ஐ தேர்ந்தெடுக்கவும்.
4. அல்லது, கர்சரை பத்தியில் வைத்து, ரைட் கிளிக் செய்திடலாம். இதில் கிடைக்கும் பட்டியலில் Skip Numbering என்பதைத் தேர்ந்தெடுத்தால், அதற்கு அளிக்கப்பட்ட எண் நீக்கப்பட்டு, அடுத்த பத்திக்கு அந்த எண் தரப்படும். அல்லது, இங்கும் Set Numbering value என்ற கட்டத்தில் '0' தந்தால், எண் நீக்கப்படும். இப்படியே, நீங்கள் எந்த பத்திகளுக்கெல்லாம், எண்களை நீக்க விரும்புகிறீர்களோ, அவற்றில் ஒவ்வொன்றாக நீக்கிவிடலாம். ஆனால், எண்கள் வரிசையாக, இருக்க வேண்டிய பத்திகளில் இருக்கும்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றை இயக்கி வருகிறேன். இதில் ஏன் விண்டோஸ் 10 சிஸ்டம் போடக் கூடாது? என் அலுவலகத்திலும், வீட்டில் உள்ள டெஸ்க்டாப் கம்ப்யூட்டரிலும் விண்டோஸ் 10 இயங்குகிறது. எனவே தான், லேப்டாப் கம்ப்யூட்டரிலும் விண் 10 வைத்துக் கொள்ள விரும்புகிறேன். ஆனால், நீங்கள் பதியமுடியாது என்று எழுதுகிறீர்கள். ஏன்? இதற்கான வழி என்ன?
ஜே. அருமைசிங், காரைக்கால்.
பதில்:
நான் ஒரு போதும், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை ஒரு கம்ப்யூட்டரில் பதித்து இயக்க முடியாது என்று எழுதியதில்லை. விண்டோஸ் 10 சிஸ்டம், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 உள்ள லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் இலவசமாக இறக்கிப் பதிந்து கொள்ளலாம். மைக்ரோசாப்ட் நிறுவனமே, இணையம் வழியாக, மிக எளிதாக இதனைப் பதித்துவிடும். விண்டோஸ் எக்ஸ்பி எனில், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை விலை கொடுத்து வாங்கிப் பதிந்து கொள்ள வேண்டும். அப்போது ஏற்கனவே உள்ள உங்கள் எக்ஸ்பி சிஸ்டம் முழுமையாக அழிக்கப்படும். அதில் பதிந்துள்ள புரோகிராம்களும் நீக்கப்படும். அவற்றின் விண்டோஸ் 10க்கான பதிப்புகளை நீங்கள் புதியதாகப் பதிய வேண்டியதிருக்கும். உங்கள் டேட்டா பைல்களுக்கும் பேக் அப் நகல் எடுத்துவைத்துக் கொண்டு இந்த வேலையை மேற்கொள்ள வேண்டும்.
இன்னொரு எச்சரிக்கையையும் தருகிறேன். உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கான ஹார்ட்வேர் கொண்டிருக்க வேண்டும். அந்த வகையில், கீழே குறிப்பிடும் திறன் கொண்ட ஹார்ட்வேர் பிரிவுகள் இருக்க வேண்டும். அவை: ஒரு கிகா ஹெர்ட்ஸ் (1 GHZ) அல்லது கூடுதலான வேகத்தில் இயங்கும் ப்ராசசர், 32 பிட் சிஸ்டம் எனில், ஒரு ஜி.பி. ராம் மெமரி, 64 பிட் சிஸ்டம் எனில், 2 ஜி.பி. ராம் மெமரி. DirectX 9 அல்லது அதன் பின் வெளியான கிராபிக்ஸ் கார்ட், டிஸ்பிளே 800 X 600 அடர்த்தி. ஹார்ட் டிஸ்க்கில் விண்டோஸ் 10 மட்டுமே 20 ஜி.பி. ஹார்ட் டிஸ்க் இடம் எடுத்துக் கொள்ளும். பின் உங்கள் தேவைக்குமாக, எவ்வளவு ஹார்ட் டிஸ்க் தேவைப்படும் என கணித்துக் கொள்க.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி, 7, 8 மற்றும் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், பாதுகாப்பிற்கென Microsoft Security Essentials என்னும் செயலி தரப்பட்டது. இதுவே விண்டோஸ் 10லும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் எதுவும் இல்லையே, ஏன்? விண்டோஸ் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்திட வேண்டும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறதா? அன்பு கூர்ந்து விளக்கவும்.
என். ஜவஹர் நாதன், தஞ்சாவூர்.
பதில்:
விண்டோஸ் 10 இயக்கத்துடன், மாறா நிலையில் தரப்பட்டுள்ள வைரஸ்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும் புரோகிராம் Windows Defender. மைக்ரோசாப்ட் இதற்கென பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் வடிவமைக்கும் நிறுவனங்களை வாங்கி, அவற்றின் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, சிறந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமாக Windows Defender செயலியைத் தந்துள்ளது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் தரப்பட்ட Microsoft Security Essentials புரோகிராமிற்குப் பதிலாக இது தரப்பட்டுள்ளது.
விண்டோஸ் 8 சிஸ்டம் வரும் முன்னர், மைக்ரோசாப்ட் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், அவ்வளவு செறிவுடன் திறன் கொண்டு இயங்கவில்லை என்பது உண்மையே. ஆனால், Windows Defender மிக அருமையாக இயங்குகிறது. Norton, AVG, AVAST மற்றும் Mcafee ஆகிய பிரபலமான வைரஸ் எதிர்ப்பு செயலிகளுக்கு இணையாக இயங்குகிறது. ஆனால், நீங்கள் மைக்ரோசாப்ட் தரும் Windows Defender அல்லது வேறு நிறுவனங்கள் தரும் செயலிகளைப் பயன்படுத்தினாலும், மால்வேர் புரோகிராம்களுக்கு எதிரான புரோகிராம் ஒன்றையும் பயன்படுத்தலாம். இதில் Malware Bytes சிறப்பானதாகும். ஆனால், இது சோதனை முறையில் இலவசமாக 15 நாட்கள் மட்டுமே இயக்கிப் பார்க்கலாம். பின்னர், கட்டணம் செலுத்த வேண்டும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X