இணைய வேகமும் எதிர்க்கும் நிறுவனங்களும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஆக
2016
00:00

இந்தியாவில், இணையம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, எப்போதும், குறைந்த பட்சமாக 512 கிலோ பிட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பினைத் (மொபைல் போன் மற்றும் பிற சாதனங்கள் வழியாக) தர வேண்டும் என அண்மையில் இணையம் மற்றும் மொபைல் சேவை நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் ட்ராய் (TRAI - Telecom Regulatory Authority of India) அமைப்பு அறிவித்தது. இதனை அனைத்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் எதிர்த்து வருகின்றன.
இந்தியாவில் இணைய இணைப்பு சேவை தருவதில் இது ஒரு நல்ல முன்னோடிக் கொள்கை அறிவிப்பாக இருந்தாலும், தற்போதைய அடிப்படைத் தேவை இதுவாக இருந்தாலும், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் இதனை எதிர்க்கின்றன. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் சிஸ்டமா ஷ்யாம் டெலிசர்வீசஸ் நிறுவனங்கள், “குறைந்த பட்ச வேகத்தில் எப்போதும் இணைய இணைப்பு வழங்குவது தங்கள் வருமானத்தைப் பாதிக்கும் எனவும், திட்ட அளவில் டேட்டா பயன்பாட்டிற்குப் பின்னர், வாடிக்கையாளர்கள், இந்த குறைந்த பட்ச வேகத்தினைத் தவறாகப் பயன்படுத்துவார்கள்” எனவும் அறிவித்துள்ளன. (சிஷ்டமா ஷ்யாம் நிறுவனம், இந்தியாவில் எம்.டி.எஸ். என்ற பெயரில் ஒரு கோடி சந்தாதாரர்களுக்கு மொபைல் சேவையினை வழங்கி வருகிறது. இவர்களில், ஏறத்தாழ 10 லட்சம் பேர் மொபைல் வழி இணைய சேவையினைப் பெற்று வருகின்றனர். இவை தவிர, பல கூடுதல் மதிப்பு கொண்ட இணைய வழி சேவைகளையும் வழங்கி வருகிறது)
இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கையில், ஒரு டேட்டா திட்டத்தில், அனுமதிக்கப்பட்ட டேட்டா சேவைக்குப் பின்னர், இந்த அளவு வேகத்தில் தான் இணைய இணைப்பு தரப்பட வேண்டும் என வாடிக்கையாளர்கள் நிர்ப்பந்திக்க முடியாது எனக் கூறி உள்ளனர். அனுமதிக்கப்பட்ட டேட்டா அளவு காலியான பின்னர், இணைய இணைப்பு வேகத்தினை மாற்றும் உரிமை, சேவை வழங்கும் நிறுவனங்கள் வசமே இருக்க வேண்டும் என ரிலையன்ஸ் அறிவித்தது.
சிஸ்டமா நிறுவனம், டேட்டா சார்ந்த கட்டணத் திட்டத்திலும், குறைந்த பட்ச வேகம் விநாடிக்கு 215 கிலோ பிட்ஸ் அளவிலேயே தர முடியும் என்றும், அனுமதிக்கப்பட்ட டேட்டா அளவு பயன்படுத்தப்பட்ட பின்னர், வேகத்தைக் குறைத்து இணைப்பு வழங்குவது நிறுவனமே முடிவு செய்திட வேண்டும். இல்லையெனில், வாடிக்கையாளர்கள் வேக சலுகையைத் தவறாகப் பயன்படுத்த முடியும் எனவும் அறிவித்தது.
Cellular Operators Association of India மற்றும் Association of Unified Telecom Service Providers of India என்ற இரு அமைப்புகளும், ட்ராய் அமைப்பு தன் பரிந்துரையை மறு பரிசீலனை செய்திட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளன.
இதற்கிடையே, இந்திய இணையப் பயனாளர்களுக்கான அமைப்பு, ட்ராய் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என பயனாளர்கள் அனைவரும் இதற்கான கடிதம் ஒன்றை அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தக் கடிதத்தினை kapilhanda@trai.gov.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த முகவரிக்குரிய கபில் ஹண்டா என்பவர், ட்ராய் அமைப்பிற்கான இணைய சேவை, ஸ்பெக்ட்ரம் ஏலம் ஆகியவற்றிற்கான ஆலோசகர் ஆவார்.
இந்தக் கடிதத்தில், மற்ற நாடுகளில் வழங்கப்படும் குறைந்த பட்ச இணைய இணைப்பின் வேகத்துடன் ஒப்பிடுகையில், விநாடிக்கு 512 கிலோ பிட்ஸ் என்பது மிக மிகக் குறைவு என்றும், இதைக் கூட வழங்க முடியாத ஒரு இணைய சேவை நிறுவனம், தன் சேவையினை நிறுத்திக் கொள்வதே சரி என்று எழுதப்பட்டுள்ளது.
ட்ராய், இந்திய இணையப் பயனாளர்கள் தாங்கள் பெறும் இணைய இணைப்பின் வேகத்தை அறிந்து கொள்ள, மொபைல் போனில் பயன்படுத்த அப்ளிகேஷன் ஒன்றை வடிவமைத்து இலவசமாக “MySpeed” என்ற பெயரில் வழங்கி வருகிறது. இதன் மூலம் நாம் பெறும் இணைய இணைப்பின் வேகத்தினை அறிந்து கொள்ளலாம். வேகத்தில் குறை இருப்பின், உடனே ட்ராய் அமைப்பிடம் குறை தெரிவிக்கலாம்.
இது மட்டுமின்றி, தற்போது டேட்டா கட்டணத்திட்டங்களின் காலம் மூன்று மாதங்கள் மட்டுமே அதிக பட்சமாகத் தரப்படுகின்றன. கட்டணம் செலுத்திப் பெற்ற பின்னர், நாம் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, அந்தப் பணமும் திட்டமும் காலாவதியாகிவிடும். இமெயில் மற்றும் இன்ஸ்டண்ட் மெசேஜ் வசதிகளுக்கு மட்டும் இணைய வசதியைப் பயன்படுத்துபவர்களுக்கு இது இழப்பாகவே இருக்கிறது. எனவே, இந்த கால அவகாசத்தினை ஓர் ஆண்டாக நீட்டித்துப் பரிந்துரை செய்துள்ளது ட்ராய்.
இந்தியா இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை குறித்து பெருமைப் பட்டுக் கொண்டாலும், அதன் இணைய சேவை வழங்கும் வேகம் பன்னாட்டளவில் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது. மொத்தத்தில் பார்க்கையில், இந்தியாவின் சராசரி இணைய வேகம் விநாடிக்கு 3.5 மெகா பிட்ஸ் ஆக உள்ளது. அமெரிக்காவில் ஊடகங்களுக்கான தகவல்கள் மற்றும் கட்டுரைகளையும், பிற சேவைகளையும் வழங்கும் AKAMAI டெக்னாலஜிஸ் என்னும் நிறுவனம், இந்தியாவில் இணைய இணைப்பு வேகம், ஆசிய பசிபிக் நாடுகளிலேயே மிகவும் குறைவாக உள்ளது என அறிவித்துள்ளது. அதே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள மற்ற தகவல்கள் ஆர்வமூட்டும் வகையில் அமைந்துள்ளன. தென் கொரியாவில் தான் அதிவேக இணைய இணைப்பு வேகம் உள்ளது. சராசரியாக, விநாடிக்கு 29 மெகா பிட்ஸ் வேகமும், அதிக பட்சமாக 103.6 மெகா பிட்ஸ் வேகமும் ஆக உள்ளது. இந்தியாவில் அதிக பட்ச வேகம் 25.5 மெகா பிட்ஸ் ஆகும். உலக அளவில் சராசரி வேகம் 6.4 மெகா பிட்ஸ் ஆக உள்ளது.
இந்தியாவில், பெங்களூருவைச் சேர்ந்த ஏ.சி.டி. நிறுவனம், 100 மெகா பிட்ஸ் வரையிலான வேகத்தில் இணைய இணைப்பு தரும் திட்டங்களைக் கொண்டிருந்தாலும், இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைவே. இருப்பினும், இந்திய சராசரி இணைய வேகம் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வருவதும் ஒரு நல்ல அம்சமே. தற்போது இந்தியாவில், ஐந்தில் ஒருவர் விநாடிக்கு 4 மெகா பிட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பினைப் பெற்று பயன்படுத்தி வருகிறார்.
இந்தியாவில், 15 மெகா பிட்ஸ் வேகத்தில் இணையம் பயன்படுத்துவோர் 2 சதவீதப் பேர் மட்டுமே என்றாலும், இந்த வகை வாடிக்கையாளர் எண்ணிக்கை அண்மையில் 210% உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
பொதுவாகப் பார்க்கையில், ட்ராய் பரிந்துரை செய்துள்ள, குறைந்த பட்ச வேகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிறுவனங்கள், தங்கள் கட்டமைப்பு மற்றும் இயக்கத்திற்கான செலவினைக் குறைத்து லாபத்தை அதிகப்படுத்தவே, இது போன்ற எதிர்ப்பினை தெரிவித்துள்ளதை அறியலாம். பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல். குறைந்த பட்ச வேகமாக விநாடிக்கு 2 மெகா பிட்ஸ் வழங்குவதைத் தன் இலக்காகக் கொள்ள இருப்பதாக அறிவித்திருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். சரியாகப் பார்த்தால், பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ள 2 மெகா பிட் வேகம் தான், குறைந்த பட்ச வேகமாக இருக்க வேண்டும்.
எனவே, இந்தப் பிரச்னையின் தாக்கம் உணர்ந்தவர்கள், மேலே தரப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்குத் தங்கள் கருத்துகளை அனுப்பலாம்.
ட்ராய் அமைப்பு இன்னொரு வழியையும் பின்பற்றுமாறு, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் பயன்படுத்த வை பி ஹாட் ஸ்பாட்களை அமைத்து இயக்குமாறு பரிந்துரைத்துள்ளது. மற்ற நாடுகளில் மிகவும் வெற்றிகரமாக இயங்கி வரும், பொது இடங்களில் இணைய இணைப்பு தரும் வை பி ஹாட்ஸ்பாட்கள், இந்தியாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. இது குறித்து iPass மற்றும் Maravedis Rethink என்ற அமைப்புகள் கருத்து தெரிவிக்கையில், இந்தியாவில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கென, இணைய இணைப்பு தரும் வை பி இடங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன என்றும் அவை அவ்வளவாக அதிகரிப்பதில்லை என்றும் அறிவித்துள்ளன. அவற்றின் அறிக்கையில் தரப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் 31,518 ஹாட் ஸ்பாட்கள் மட்டுமே உள்ளன. பிரான்ஸ் போன்ற சிறிய நாட்டில், ஒரு கோடியே 30 லட்சம் ஹாட் ஸ்பாட்கள் இயங்குகின்றன. அமெரிக்காவில் இது 98 லட்சம். பிரிட்டனில் இது 56 லட்சம். உலக அளவில் இயங்குவது போல, ஹாட் ஸ்பாட் அமைக்கப்பட வேண்டுமானால், நம் மக்களில் 150 பேருக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஹாட் ஸ்பாட்கள் அமைக்கப்பட வேண்டும். இந்தக் கணக்கில் பார்க்கையில், இந்தியாவில் இன்னும் 8 லட்சம் புதிய ஹாட் ஸ்பாட்கள் நிறுவப்பட வேண்டும். மக்களும் இதனையே அதிகம் விரும்புகின்றனர். வை பி ஹாட் ஸ்பாட்கள் மூலம் தாங்கள் விரும்பும் பாடல்களைக் கேட்க விருப்பப்படுகின்றனர்.
2014 ஜூலை முதல் 2015 அக்டோபர் வரையிலான காலத்தில், மொபைல் போன்களின் வழியாக இணைய இணைப்பு பயன்பாடு 80% உயர்ந்திருந்தது. ஆனால், வை பி நெட்வொர்க் வழியாக இணையப் பயன்பாடு 164% அதிகரித்திருந்தது. வை பி ஹாட் ஸ்பாட்கள் கூடுதலாக அமைப்பது குறித்தும் ட்ராய் மக்களின் கருத்தினைக் கேட்டுள்ளது. இதற்காக அலைவரிசை அதிகப்படுத்துதல், பயனாளர்களைக் கண்டறியும் வழி, கட்டணம் விதித்தல், கிராமங்களில் ஊராட்சி நிர்வாகமே செலவினை ஏற்றுக் கொண்டு, மக்களுக்கு இலவசமாக வை பி இணைப்பினை வழங்குவது போன்ற பல பிரிவுகளில் கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. வை பி வழியாக இணைய இணைப்பினைப் பயன்படுத்த, ஒரு மெகா பிட் டேட்டாவிற்கு 2 பைசா தான் செலவாகும். இதுவே, தற்போதைய டேட்டா கட்டணத்திட்டத்தில், ஒருவர் 23 பைசா செலவிட வேண்டியதுள்ளது. எனவே, வை பி ஹாட் ஸ்பாட் இடங்களை அதிகரித்து, அனைவருக்கும் இணையம் என்ற இலக்கினை ஈட்டிட ட்ராய் விரும்புகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X