கழிப்பறையை கொண்டாடுவோம்!
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 நவ
2016
00:00

“உங்க பள்ளிக்கூடத்துல உலக கழிப்பறை தினத்தைக் கொண்டாடினீங்களா?” என்று விசித்திரமான ஒரு கேள்வியைக் கேட்டார் ஞாநி மாமா.
“கழிப்பறை தினத்தை எப்படி மாமா கொண்டாடமுடியும்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டேன். “கழிப்பறை என்பதே ஒரு கொண்டாட்டம்தான்” என்றார் மாமா. “பல முதியவர்களுக்கு பிரச்னை இல்லாமல், வலி இல்லாமல், மலச் சிக்கல் இல்லாமல் மலம் கழிப்பது என்பது ஒரு கொண்டாட்ட மகிழ்ச்சிக்கு சமமானது. நீங்களே நெடு நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்துக்கொண்டு இருந்துவிட்டு, அப்புறம் கழித்து முடித்ததும் ஒரு மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறீர்கள் இல்லையா?” என்று கேட்டார்.
“நிஜம்தான். ஆனால், பள்ளிக்கூடத்தில் கழிப்பறை தினத்தை எப்படி கொண்டாடுவது?” என்றான் பாலு.
“முதலில் நம் பள்ளிக் கூடத்தில் கழிப்பறை சுத்தமாக தண்ணீர் வசதியுடன் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். எந்தப் பள்ளியில் கழிப்பறை சுத்தமாக இருக்கிறதோ அங்கே மீதி விஷயங்களையும் அக்கறையுடன் செய்வார்கள் என்பது என் அனுபவம். கழிப்பறை சுத்தமாக இல்லாவிட்டால், பல விதமான தொற்றுகள் ஏற்பட்டு நாம் நோய்வாய்ப்படுவோம். சுத்தமான கழிப்பறை இருக்கிறது என்றால் அத்தனை நோய்களிடமிருந்தும் நாம் தப்பித்தோம் என்று அர்த்தம். அதைக் கொண்டாட வேண்டாமா?” என்று கேட்டார் மாமா.
“இப்போதெல்லாம் பள்ளிக் கூடங்களில் ஸ்மார்ட் போர்டு வந்துவிட்டது. வகுப்பறையில் மின் விசிறிகள் போட்டிருக்கிறார்கள். சில பள்ளிகளில் ஏ.சி., கூட இருக்கிறது. தரையில் மார்பிள் டைல்ஸ் பதிக்கிறார்கள். இத்தனை செய்கிற பள்ளிகளில் கழிப்பறை நன்றாகத்தானே இருக்கும்?” என்று கேட்டேன்.
மாமா இல்லையென்று தலையாட்டினார். “நான் நிறைய அப்படிப்பட்ட பள்ளிகளைப் பார்த்திருக்கிறேன். வெளித்தோற்றத்தில் எல்லாம் பிரமாதமாக இருக்கும். உடனே கழிப்பறைக்குப் போய் பார்ப்பேன். சகிக்க முடியாமல் இருக்கும்,” என்றார்.
அடுத்து “பிரான்சில் இருக்கும் வெர்சேய்ல்ஸ் அரண்மனை தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்டார்.
உடனே வாலு, வெர்சேய்ல்ஸ் அரண்மனை பற்றி புள்ளிவிவரங்களை எடுத்து வீசியது. அந்த அரண்மனையைக் கட்ட இன்றைய கணக்கில் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது சுமார் 1200 கோடி ரூபாய்கள் ஆகியிருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். அந்த அரண்மனையில் 100 நூலகங்கள் இருந்திருக்கின்றன. இரண்டு லட்சம் புத்தகங்கள். அரண்மனையை அலங்கரிக்கத் தேவைப்பட்ட பட்டுத்துணியை தயாரிக்க தனி நெசவாலை வைத்து இருந்திருக்கிறார்கள். கண்ணாடியாலான கைவினைப் பொருட்களை செய்ய வெனிசிலிருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு வேலை முடிந்ததும் அதே போல வேறு எங்கேயும் தயாரித்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களைக் கொன்றிருக்கிறார்கள்.
“நடந்து, சுற்றிப் பார்க்கவே இரண்டு நாள் தேவைப்படும் அந்த பிரமாண்டமான அரண்மனையில் மொத்தம் எத்தனை கழிப்பறைகள் இருந்தன தெரியுமா?” என்று கேட்ட மாமா அடுத்து சொன்ன தகவல்கள் ஒரே அதிர்ச்சியாக இருந்தன. “நூற்றுக்கணக்கான பிரபுக்களின் குடும்பங்கள் வசித்த அந்த அரண்மனையில் மன்னர், ராணி குடும்பத்தினர் மட்டும் உபயோகிப்பதற்கு மொத்தம் ஏழே ஏழு கழிப்பிடங்கள்தான் இருந்திருக்கின்றன. அவையும் உலர் கழிப்பறைகள். தண்ணீர் கிடையாது. மீதி அறைகளில் எல்லாம் மலச் சட்டிகள் வைத்திருப்பார்கள். நிரம்பினதும் ஜன்னல் வழியே வெளியே கொட்டியிருக்கிறார்கள். அதனால் அரண்மனை பக்கம் போனால் எப்போதும் ஒரு வாடை வீசுகிறது என்று அந்த காலத்திலேயே பல அறிஞர்கள் எழுதிய குறிப்புகளில் சொல்ல்யிருக்கிறார்கள்.”
“ஏன் பல பழைய நாகரிகங்களில் குளியலறை கட்டினாலும், கழிப்பறை கட்டாமல் இருந்திருக்கிறார்கள்?” என்று கேட்டேன்.
“மலம் கழிக்கும்போதோ, சிறுநீர் கழிக்கும்போதோ கெட்ட ஆவிகள், துர்தேவதைகள் அந்த உறுப்புகள் வழியே நம் உடலுக்குள் போய்விடும் என்று ஒரு மூடநம்பிக்கை இருந்திருக்கிறது. அதனால்தான் பழங்காலத்தில் ரோம் நகரத்தில் கட்டிய பொதுக் கழிப்பறை சுவர்களில், துர்தேவதைகளைக் கொல்லும் வல்லமையுடைய நல்ல தேவதைகளின் படங்களை வரைந்திருக்கிறார்கள். திறந்தவெளியில் கழித்தால் துர்தேவதை வந்து பிடித்துக் கொள்ளாது என்று நினைத்திருக்கிறார்கள்.”
இந்தியாவிலும் இன்னும் நிறைய பேர் அப்படித்தான் நினைக்கிறார்கள் போலிருக்கிறது. வீட்டில் எந்த விதமான கழிப்பறையும் இல்லாதவர்கள் இந்தியாவில் 53.4 சதவிகிதமாம்! தமிழ்நாட்டில் மட்டும் 51.7 சதவிகிதம். கோவா, சிக்கிம், டாமன் டையூ, சண்டிகர் முதலிய இடங்கள் நம்மை விடப் பரவாயில்லை. கழிப்பறை இல்லாதவர்கள் 20 சதவிகிதத்துக்கும் கீழேதான்.
“எனக்கு பிரான்சுக்குப் போய் அந்த வெர்செய்ல்ஸ் அரண்மனையைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது” என்றான் பாலு. “இப்போது வாடையெல்லாம் எதுவும் கிடையாது. லட்சக்கணக்கில் வரும் பார்வையாளர்களுக்காக ஏராளமான கழிப்பறைகள் கட்டிவைத்திருக்கிறார்கள்” என்ற மாமா, “நீ முதலில் டெல்லிக்குப் போய் டாய்லெட் மியூசியத்தைப் பார்” என்றார்.
டாய்லெட்டுக்குக் கூட மியூசியமா?
“சுலப் இன்டர்நேஷனல் அமைப்பு அதை நடத்துகிறது. உலகம் முழுவதும் கழிப்பறை உருவாகி வளர்ந்த வரலாறை அங்கே தெரிந்துகொள்ளலாம். எத்தனை விதமான டாய்லெட்டுகள் இருக்கின்றன என்று பார்க்கலாம்” என்றார் மாமா.
“சமீபத்தில் தங்கத்தில் கமோட் செய்திருக்கிறார்கள்” என்றது வாலு. நியூயார்க்கில் இருக்கும் குகென்ஹெம் மியூசியத்தில் கலைஞர் மொரிசோ கட்டேலன் என்ப்வார் 18 காரட் சுத்த தங்கத்தில் கமோட் செய்திருக்கிறார். இது வெறுமே காட்சிக்கில்லையாம்; உபயோகிக்கவாம். ஒருவர் ஆயிரம் டாலருக்கு டின்னர் சாப்பிடலாம். இன்னொருத்தர் 10 டாலருக்கு சாப்பிடலாம். விளைவு ஒன்றுதான். கமோட் தங்கத்திலிருந்தாலும் பீங்கானில் இருந்தாலும் ஒரு வித்தியாசமும் கிடையாது. கழிப்பறையில் இருக்கும் இந்த ஜனநாயகத் தன்மையை உணர்த்தவே தங்கத்தில் செய்தேன்” என்று கட்டேலன் சொல்லியிருக்கிறார்.
“ஒரு தங்க கமோட் செய்ய ஆகிற செலவில் நூறு பேருக்குக் கழிப்பறை கட்டிக் கொடுத்திருக்கலாம்” என்றேன் நான். “ஒரு வேளை இது கட்டேலன் காதில் விழுந்தால் அவர் கூட மனம் மாறலாம் நோபல் மாதிரி” என்றார் மாமா.
நோபல் ஒரு வேதியியல் விஞ்ஞானி. டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தார். நிறைய ஆயுதங்கள் தயாரித்து விற்று லாபம் சம்பாதித்தார். போபர்ஸ் பீரங்கி அவருடைய கம்பெனி தயாரிப்புதான். அவருடைய தம்பி இறந்தபோது தவறாக இவர்தான் இறந்துவிட்டார் என்று நினைத்து சில பத்திரிகைகள், 'ஆயுதம் விற்று பணம் சம்பாதித்த மரண வியாபாரி மறைந்தார்' என்று எழுதின. இதைப் படித்துவிட்டு நோபலுக்கு வருத்தமாகிவிட்டது. உடனே தன் சொத்து முழுவதையும் அறக்கட்டளையாக்கி பல துறை அறிஞர்களுக்கு பரிசு கொடுக்க உயில் எழுதி வைத்தார்.
“கழிப்பறை கட்ட யாரும் உயில் எழுத வேண்டியதில்லை. தண்டச் செலவு செய்யும் காசில் நாமே கட்டலாம். முடியாதவர்களுக்கு கட்டித்தர முன்வரும் கறுப்புப் பணக்காரர்களுக்கு அரசு சலுகை கொடுக்கலாம்” என்றேன்.
“நல்ல ஐடியா. பிரதமருக்கு எழுதப் போகிறேன். கணக்கு காட்டமுடியாத 500,1,000 ரூபாய் நோட்டையெல்லாம் வங்கியில் போஸ்ட் பாக்ஸ் மாதிரி உண்டியல் வைத்து போடச் சொல்லி, இப்படி பயன்படுத்தலாம்” என்றான் பாலு.
“முதலில் உன் பள்ளிக் கூட டாய்லெட் எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்” என்றார் மாமா.

வாலுபீடியா 1: ஆல்ஃபிரட் நோபலுடைய அப்பா இமானுவெல் நோபல்தான் பிளைவுட் பலகையை உருவாக்கியவர். ஆல்ஃபிரட் மொத்தம் 355 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வாங்கினார்.

வாலுபீடியா 2: மனுஸ்மிருதி, விஷ்ணுபுராணம், நாரத புராணம் ஆகியவற்றில் மலம் சிறுநீர் கழிக்கும்போது ஒருவர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், சுத்தப்படுத்தும் முறைகள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.