அவன் பெயர் அனிருத்! (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 டிச
2017
00:00

சென்றவாரம்: ஆன்மிக சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட சுனாமியில், ஒரே மகன் அனிருத்தை காணவில்லை. அவனைத் தேடி கண்டுபிடிக்க பல வகையிலும் முயன்று கிடைக்காததால் சென்னை திரும்பினர். இனி -
சென்னை வந்து சேர்ந்தனர் ஈஸ்வர், ஜோதிலட்சுமி தம்பதியர்.
வீட்டை திறந்ததும், ஏராளமான தபால்கள் சிதறி கிடந்தன. அனிருத் பத்திரமாய் வீடு திரும்ப கடிதம் போட்டிருந்தனர் நலம் விரும்பிகள். சற்றே ஆறியிருந்த பிரிவுத்துயர் காயம், மீண்டும் திறந்து, ரத்தம் வழிந்தது. தெருவினர்,நண்பர்கள் வந்து குழுமினர்.
'என்ன ஈஸ்வர்... 20 நாள் வலை வீசி தேடியுமா அனிருத் கிடைக்கல...'
'அனிருத் உயிருடன் தப்பி, எங்காவது இருப்பான்... நம்பு ஜோதிலட்சுமி...'
'சுனாமியால, 14 நாடுகள்ல, 2 லட்சத்து, 20 ஆயிரம் பேர் இறந்திருக்காங்க; 50 ஆயிரம் பேர், காணாம போயிருக்காங்க; 17 லட்சம் பேர் வீடு இழந்திருக்காங்க; உங்க குழந்தையை மட்டும் முழுங்கலன்னு, ஆறுதல் படுங்க...'
'காணமல் போனவர்களில் பெரும்பாலானோர், இறந்து தான் போயிருப்பர் என, புள்ளி விவரம் கூறுகிறது; அனிருத்தின் ஆன்மா சாந்தியடைய, இறைவனை பிரார்த்திக்கிறேன்...'
கடைசி வசனத்தை கூறியவர் மீது, பாய்ந்து. குரல்வளைய நெரித்தாள் ஜோதிலட்சுமி.
'உயிரோட இருக்கிற என் மகனின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறீங்களா... இதென்ன முட்டாள் தனமான பேச்சு... ஆறுதல் சொல்ல வந்த சாக்குல, எங்க நெஞ்சை குத்தி, கிழிக்க வந்தீங்களா... உங்களின் ஆறுதலை நாங்க கேட்டோமா...'
குரல்வளை பிதுங்கியது.
ஓடி வந்து மனைவியின் பிடியிலிருந்து, அந்த தெருக்காரரை விடுவித்தார் ஈஸ்வர்.
'எங்கள் மீது, அன்பும், அக்கறையும் வைத்து, நலம் விசாரிக்க வந்தமைக்கு நன்றி. அனிருத் எங்களுக்கு விரைவில் கிடைக்க பிரார்த்தனை செய்யுங்கள்; இப்போது, நீங்கள் புறப்படலாம்; எங்களிருவருக்கும் தனிமை தேவைப்படுகிறது...'
வந்தவர்கள் கைகளை பிசைந்தவாறே புறப்பட்டனர்; ஒருவருக்கொருவர் கிசு கிசுப்பாய் பேசினர்; அவர்கள் வாசல் கதவைத் தாண்டியது தான் தாமதம், கதவை உட்புறமாகக தாளிட்டு, அப்படியே சரிந்து விழுந்து, கதறி அழுதாள் ஜோதிலட்சுமி.
ஒவ்வொரு நாளும், காவல்துறை ஆய்வாளர் முகுந்தனுக்கும், நாகை மீனவ இளைஞர்களுக்கும் போன் செய்து, 'எதாவது நல்ல தகவல் இருக்கிறதா...' என கேட்பாள்.
எதிர்மறையான பதில் வரும்; கூடவே சமாதானமும், ஆறுதலும் வழங்குவர்.
கணவன், மனைவி இருவருமே கறுத்து, சிறுத்து, உருக்குலைந்து போயினர்.
நள்ளிரவில் துாங்கிக் கொண்டிருக்கும் ஜோதிலட்சுமி திடீரென்று எழுந்து, கணவனை எழுப்புவாள்.
'என்ன ஜோதி...'
'அனிருத் ஜன்னலுக்கு வெளியே நின்று, அம்மா... அம்மா... என அழைக்கிறான்...'
'அது உன் மன பிரமை...'
'இல்ல... கேட்டது அவன் குரல்; கதவை திறந்து, ஜன்னல் பக்கம் போய் பார்ப்போம்; பாவம் அவன் குளிரால் நடுங்குவான்...'
'உன் திருப்திக்காக போய் பார்ப்போம்... வா...' இருவரும் கதவை திறந்தனர்; ஜன்னல் பக்கம் துழாவினர்;அனிருத் இல்லை.
பகல் பொழுதுகளிலும், ஜோதிலட்சுமியின் காதுகளுக்கு அனிருத்தின் அன்பு குரல் ஒலித்தபடியே இருந்தது. சமையலறையில் இருக்கும் போது, அனிருத் படுக்கையறையில் உலாத்துவது போல, காலடிகள் கேட்கும். தொடர்ந்து, அனிருத்தின் நினைவுகளால் மனச்சிதைவு நோய்க்கு ஆளானாள் ஜோதிலட்சுமி.
மனநல மருத்துவரை சந்தித்தனர்.
நுாற்றுக்கணக்கான கேள்விகளை ஜோதிலட்சுமியிடம் கேட்டு, பதில்களை பதிவு செய்தார்.
'உங்க மகன் காணாமல் போனத உங்க ஆழ்மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது; அதனால்தான், மகனின் குரலையும், காலடி அரவத்தையும் தொடர்ந்து கேட்கிறீர்கள். ஆழ் மனதை சாந்தப்படுத்த சில மாத்திரைகள் எழுதித் தருகிறேன்; தொடர்ச்சியாக உட்கொள்ளுங்கள்...'
'இல்ல டாக்டர்... எனக்கு எந்த மாத்திரையும் தேவையில்ல...'
'மிஸ்டர் ஈஸ்வர்... உங்க அனுசரணையும், ஆதரவும் தான், உங்க மனைவிய குணப்படுத்தும்; மனநோய், புதை சேறு போன்றது; அருகில் போனால், உங்களையும் இழுத்து, அமிழ்த்தும் ஜாக்கிரதை...'
கணவனின் வற்புறுத்தலுக்காக, மாத்திரைகள் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தாள்; அதன்பிறகு ஆழ்ந்து துாங்குவாள்; மனைவியை பார்த்தவாறே, விடிய விடிய துாங்காமல் அமர்ந்திருப்பார் ஈஸ்வர்.
அனிருத் காணாமல் போய், ஒரு ஆண்டு பூர்த்தியானது..
நாள்காட்டி, 26.12.2005 காட்டியது!
வாசலில், ஒரு கார் வந்து நிற்கும் அரவம் கேட்டது; அதிலிருந்து, கணவன், மனைவி ஜோடியாக வந்திறங்கினர்; வருவது யார் என்ற கேள்விக்குறியுடன், வரவேற்றாள் ஜோதிலட்சுமி.
'வாங்க... உள்ள வாங்க... யார பாக்கணும்...'
' உங்களைத் தான் பாக்க வந்திருக்கிறோம்; நீங்க, போன வருஷம் சுனாமில காணாமல் போன அனிருத்தின் பெற்றோர், ஈஸ்வர் - ஜோதிலட்சுமி தானே... போன வருஷம் சுனாமியப்ப எங்க, பத்து வயது மகளோடு மகாபலிபுரம் போயிருந்தோம்,; எங்க மக சுனாமியில போயிட்டா... வி ஆர் செய்லிங் ஆன் தி சேம் போட்...'
'கேக்க சங்கடமா இருக்கு... எங்க நிலமை, உலகத்துல வேற யாருக்குமே வரக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டுல்ல இருந்தோம்...'
'சந்தோஷங்களை மட்டும் பகிர்ந்துக்கிறது மனித பண்பில்ல; துக்கங்களையும் பகிர்ந்து கொள்வதே மகத்தான மனித பண்பு. சுனாமியால், உறவுகளை பிரிந்தோர் கூட்டமைப்பு ஒன்றை நடத்துறோம்.
'அதில்,பெற்றோர், உறவினர்களை இழந்தோர் அனைவரும் உறுப்பினராய் உள்ளனர்; ஒவ்வாரு மாதமும் கூடி, சோகங்களுக்கு வடிகால் அமைக்கிறோம்; இன்று, வருடாந்திர கூட்டம் மாலையில் நடக்க இருக்கிறது; அதில், நீங்க கட்டாயம் கலந்து கொள்ளணும்..'
'எங்க முகவரிய யார் கொடுத்தது...'
'நாகை காவல்நிலைய ஆய்வாளர் முகுந்தன் கொடுத்தார்...'
'எத்தனை கூட்டங்களில் கலந்து கொண்டாலும், மகனை தொலைத்த வேதனை சற்றும் குறையாது...'
'அப்படி சொல்லக் கூடாது நீங்க; ஒரு முறை கலந்து பாருங்களேன்...'
'கலந்து கொண்டால், என் மகன் கிடைத்து விடுவானா...'
'யார் கண்டது... உங்களுக்குத் தேவையான தகவல் எதாவது, ஒரு உறுப்பினரிடம் இருக்கக்கூடும்; அப்படி தகவல் கிடைத்து, பிரிந்தவர் கூடிய அற்புதங்கள் பல நடந்திருக்கின்றன...'
'ஆசை காட்டுகிறீங்க... உங்கள் பிடிவாதத்துக்காக வருகிறோம்; கூட்டம் எங்கே நடக்கிறது...'
'பெசன்ட் நகர் பீச்சில்; மாலை, 6:00 மணிக்கு வந்து விடுங்கள்...'
'சரி...'
'நாங்க கிளம்புறோம்...'
'இருங்க காபி சாப்பிட்டு போகலாம்...'
'இன்னொரு நாள் குடிக்கிறோம்; இப்போது, நாங்க கிளம்புறோம்...' வந்தவர்கள் கிளம்பிச் சென்றனர்; புறப்பட்டது கார்.
பெசன்ட் நகர் கடற்கரை; ஓரளவு கூட்டம் கூடியதும், தமிழ்தாய்வாழ்த்து பாடப்பட்டது; அமைப்பின் தலைவர், முந்தைய கூட்டங்கள் நடந்த விதத்தை விவரித்தார்.
முதலில், ஒரு பெண் உறுப்பினர் எழுந்து, பேச ஆரம்பித்தார்.
'எட்டு ஆண்டுகளாக காதலித்தவரை, சென்ற ஆண்டு தான் திருமணம் செய்தேன்; கணவரை எங்கு தேடியும், கிடைக்கவில்லை; காதல் கணவனுடன், அந்தமான் சென்ற நான், தன்னந்தனியளாய் தமிழகம் திரும்பினேன்; அவர் நினைவுடனே நடை பிணமாய் திரிந்தேன்; எனக்கு, ஆறுதல் கூற, ஒருவர் வந்தார்.
'அவரின் இதமான ஆறுதல் பேச்சு, என் மனக் காயத்துக்கு, மருந்து போட்டது; அடுத்த வாரம் எனக்கும், ஆறுதல் கூறிய நண்பருக்கும் மறுமணம் நடக்க இருக்கிறது.
'ஆண்டாண்டு காலம், அழுது, புரண்டாலும் மாண்டோர் திரும்பி வரப்போவதில்ல. துக்கத்திலயே, உருண்டு, புரண்டு கொண்டிருக்காமல், புது வாழ்க்கைய தேடிக் கொண்டேன்; என் மறுமணத்துக்கு, அனைவரும் நேரில் வந்து, வாழ்த்த வேண்டும் என, வேண்டிக் கொள்கிறேன்...'
உறுப்பினர் அனைவரும் கை தட்டினர்.
ஒவ்வொரு உறுப்பினராய் எழுந்து, சுனாமியில் அன்புக்குரியவர்களை எப்படி இழந்தனர், ஏற்பட்ட வெற்றிடத்தை எதனால், இட்டு நிரப்பினர் என்பதை விவரமாய் கூறினர்.
ஜோதிலட்சுமி எழுந்தாள்.
'நீங்க அனைவரும் சுனாமி விழுங்கிய உறவுகளை வேறொரு உறவால் எப்படி இட்டு நிரப்புனீர்கள் என்பதை விரிவாக சொன்னீங்க; என் மகன் அனிருத்தை தொலைத்தேன்; அவனது இடத்தை நிரப்ப, எந்த மாற்று ஏற்பாடும் செய்ய, மனம் ஒப்பவில்லை. நீங்கள் எல்லாம், சுனாமியில் தொலைந்தவர்களை, இறந்தவர்களாக ஒப்புக் கொண்டுள்ளீர்கள்.
'ஆனால், நான், என் மகன் இன்னும் உயிருடன் இருப்பதாக, திண்ணமாக நம்புறேன். நான், இந்த கூட்டத்தில் உங்களிடமிருந்து, என் மகன் பற்றி, ஏதாவது தகவல் கிடைக்குமா என எதிர்பார்த்து வந்தேன்.
'என் கணவர், மகனின் புகைப்படத்தை உங்களிடம் வினியோகிப்பார். புகைப் படத்தின் பின்னால், முகவரியும், மொபைல் போன் எண்ணும் எழுதப்பட்டிருக்கிறது. என் மகன் அனிருத் உயிருடன் இருக்கிறான் என்ற தகவலை, யாரிடமிருந்தாவது பெற நினைக்கிறேன். நன்றி, வணக்கம்!
உறுப்பினர்கள் அனைவரும் புகைப் படங்களை வாங்கினர்; கூட்டம் முடிந்தது. நன்றியுரை வாசிக்கப்பட்டது.
மறுநாள் -
கூரியரில் ஒரு தபால் வந்தது; ஜோதிலட்சுமி தான் பிரித்தாள்.
அன்புடையீர்!
உங்கள் அன்புமகன் அனிருத் உயிருடன் இருக்கவும், விரைவில் உங்களுடன் வந்து சேரவும் எல்லாம்வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.
சுனாமியால் உறவுகளை பிரிந்தோர் கூட்டமைப்பின் உறுப்பினர் அனைவரும் கையெழுத்திட்டிருந்தனர்.
- தொடரும்...

- ஆர்னிகா நாசர்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.