சந்திரபாபு (22)
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2017
00:00

எழுத்தாளர் ஜெயகாந்தனை சந்திக்க விரும்பினார், சந்திரபாபு. அவரது விருப்பத்தை நிறைவேற்ற, சந்திரபாபுவின் இல்லத்திற்கே சென்ற ஜெயகாந்தன், அதுபற்றி கூறியது:
சந்திரபாபுவிடம் பேசிக் கொண்டிருந்த போது, கவர்ச்சி நடிகை ஒருவர் அவருக்கு போன் செய்து பேசினார். அவர் பெயரை சொல்லி, 'அவ உங்களுக்கு வேணுமா...' என்று ஹாஸ்யம் பண்ணிய சந்திரபாபு, ரிசீவரை என்னிடம் கொடுத்து, அந்த நடிகையிடம் பேசச் சொன்னார். ஒரு மரியாதைக்காக, அந்த நடிகையிடம் பேசினேன்.
'பின், விஸ்கி அல்லது பிராந்தி சாப்பிட்டிருக்கிறீர்களா?' என்று மறுபடியும் என்னிடம் கேட்டார்.
'பழக்கமில்லை...' என்று பொய் கூற கூசினேன்.
ஆனால், சந்திரபாபு முந்தி, 'பழக்கம் இல்லை என்றால் இப்போது பழகிக் கொள்ளுங்கள்...' என்று பலத்த சிரிப்பொலியுடன் சொன்னார். சிறிது நேரத்தில் அவரது வேலையாள், ஒரு, 'ட்ரே'யில் முக்கோண வடிவில், இரண்டு மது கிண்ணங்களில் ஸ்காட்ச் விஸ்கியை ஊற்றி, எதுவும் கலக்காமல், 'ரா'வாகக் கொண்டு வந்து என்னிடம் நீட்டினார்.
'சோடா அல்லது வாட்டர்...' என்று கேட்டு, 'பிரிபேர் ஆன் தி ராக்ஸ்...' என்றார்.
'ஆன் தி ராக்ஸ்' என்றால், விஸ்கியில், வெறும் ஐஸ் கட்டிகளை மிதக்க விட்டு அருந்துவது என்று அன்றைக்கு தான் தெரிந்து கொண்டேன். ஸ்காட்ச் விஸ்கியின் பெருமைகளை பற்றி பேசத் துவங்கினார், பாபு.
மது அருந்தியபடி, மது அருந்துவது பற்றிய அனுபவங்களையும், நான் குடிக்காதிருப்பதற்கான காரணங்களையும் விளக்கினேன். ஒரு சந்தோஷத்துக்காக குடித்து, போலீஸ்காரர்கள் கையில் சிக்கி அவமானப்படுவதற்கு அஞ்சியதை வெளிப்படையாக சொன்னதும், சோபாவில் இருந்து ஒரு துள்ளு துள்ளி, இடி இடித்தது மாதிரி சிரித்தவர், டெலிபோன் ரிசீவரை எடுத்து, நகரத்தில் இருந்த ஓர் உயர் போலீஸ் அதிகாரிக்கு போன் செய்து, மிகவும் நட்புரிமையோடு, 'டேய்...' என்று பேசினார். பின், அவரிடம் என்னை பற்றி புகழ்ந்து, 'அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளரை நான் என் வீட்டில் மது விருந்து அளித்து, உபசரிக்கப் போறேன்...' என்று சொல்லி, என்னை அவரிடம் பேசச் சொன்னார். 'நான் குடித்துக் கொண்டு இருக்கிறேன்; அதனால் போலீஸ்காரருடன் பேச மாட்டேன்...' என்று மறுத்து விட்டேன்.
- சாந்திரபாபுவுடனான தன் சந்திப்பு குறித்து இவ்வாறு கூறியுள்ளார், ஜெயகாந்தன்.
இப்படித் துவங்கிய சந்திரபாபுவுடனான ஜெயகாந்தனின் நட்பு, நாள் தவறாமல் மாலை நேர மது இன்பத்துடன் தொடர்ந்தது.
ஜெயகாந்தனின், 'எனக்காக அழு' கதையை, தனக்கு நாடகமாக்கி தருமாறு அவரிடம் கேட்டார், சந்திரபாபு. அவர் மீது கொண்ட நட்பின் காரணமாக, அக்கதையை நாடகமாக்கும் முயற்சியை மேற்கொண்டார், ஜெயகாந்தன்.
சந்திரபாபு ஆர்வமாக எழுதச் சொன்னதோடு சரி; எழுதி முடித்த பின், 'நாடகத்தில் நடிக்க நேரமில்லை...' என்று கூறிவிட்டார். தனக்கு விருப்பம் இல்லாத முயற்சி, கைகூடாதது பற்றி ஜெயகாந்தனுக்கும் மகிழ்ச்சி தான். அதுபற்றி, அவர் சந்திரபாபுவிடம் கூறியபோது, 'ஜே.கே., உண்மையிலேயே, நீங்க, நான் இதுவரை சந்தித்திராத அரிய எழுத்தாளர் தான்; நீங்கள் உங்கள் எழுத்துத் திறமை மூலம் திரையுலகில் சாதனை செய்ய வேண்டும்; நாடகம் அதற்கு இடைஞ்சல் தான்...' என்றார் சந்திரபாபு.
'தமிழில் வரும் நாடகம் எல்லாமே இடைஞ்சல் தான்...' என்றார் ஜெயகாந்தன்.
மாலை நேரங்களில் சந்திரபாபுவும், ஜெயகாந்தனும் காரில் ஊர் சுற்றுவது வழக்கம். ஒருநாள், அவ்விதம் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கதை சொன்னார் சந்திரபாபு. அதற்கு ஜெயகாந்தன் திரைக்கதை, வசனம் அமைக்க வேண்டும் என விரும்பினார். 'ஸ்கேப் கோட் என்னும் ஆங்கிலக் கதையின் தழுவல் இது; இந்த கதையின் மூலத்தை வைத்து திரைக்கதை அமைக்கலாம்...' என்றார் ஜெயகாந்தன்.
உண்மையை ஒப்புக்கொண்ட சந்திரபாபு, அதற்கு சம்மதித்தார்.
சுமார் ஒரு மாத காலம், சந்திரபாபுவின் வீட்டுக்கு தினமும் சென்று, அக்கதைக்கான திரைக்கதை வடிவத்தை எழுதி முடித்தார், ஜெயகாந்தன். ஆனால், சந்திரபாபுவிடம் அதைப் படிக்க கொடுத்தபோது தான், அவருக்கு தமிழ் வாசிக்க தெரியாது என்ற உண்மையை தெரிந்து கொண்டார்.
நாடக முயற்சி போலவே, அந்த சினிமா முயற்சியும் நிறைவேறாமலேயே போனது.
சந்திரபாபுவின் திறமையை பற்றி ஜெயகாந்தன், 'சந்திரபாபுவுக்கு இயற்கையாகவே நடிப்புத் திறமை, பாட்டுத் திறமை உண்டு. அவற்றையெல்லாம் ஓர் உதாரியைப் போல், சினிமா உலகுக்கு வாரி இறைத்ததன் விளைவாக, அவருக்கு அதீதமான ஏற்றத்தையும், எதிர்பாராத வீழ்ச்சியையும் இந்த சினிமா உலகம் கொண்டு வந்துவிடும் என்று அஞ்சினேன். அதை பலமுறை அவரிடம் கூறியும் உள்ளேன்...' என்று கூறியுள்ளார். அத்துடன், 'மிகவும் உருக்கமான நேரங்களில் திடீரென்று சிரிப்பார்; அதேபோல் சில நேரங்களில் அழுவார். சில சமயங்களில் சட்டைக் காலரை உயர்த்தி பிடித்து, 'ஐயம் பாபு...' என்று வல்லமை பேசுவார்...' என்று குறிப்பிட்டுள்ளார்.
'யாருக்காக அழுதான்' என்ற குறுநாவலை, 'ஆனந்த விகடன்' இதழில் எழுதினார், ஜெயகாந்தன்.
'இந்த கதையை எனக்காகத்தான் எழுதியிருக்கிறீர்கள் என நம்புகிறேன்...' என்றார், சந்திரபாபு.
'யாருக்காக அழுதான்' கதையை படமாக்குவது பற்றி சந்திரபாபு கூறிய யோசனைகள் மீது ஜெயகாந்தனுக்கு விருப்பம் இல்லாமல் போகவே, அந்த கதையை வேறு யாருக்காவது கொடுத்துவிட எண்ணினார்.
ஜி.என்.வேலுமணியிடம் அந்த கதையின் உரிமையை விற்றார், ஜெயகாந்தன்.
படம் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே, சிவாஜி கணேசன் நாயகனாக நடிக்க வளர்ந்தது. பின், நின்று போனது. ஸ்ரீதர் அந்த படத்தை இயக்கத் துவங்கினார். பின், அவரும் பல்வேறு காரணங்களால் விலகினார்.
இந்நிலையில், அந்த படத்தில் நடிக்க விரும்பி, ஜெயகாந்தனை தேடிப் போனார், சந்திரபாபு. அக்கதையை, 75 ஆயிரம் ரூபாய்க்கு கேட்டார்.
'மன்னிச்சுக்கங்க... நான், அதை ஏற்கனவே வேலுமணிக்கு கொடுத்துட்டேன்; நீங்கள் அதில் நடிக்கிறீர்கள். அப்படியிருக்க, இடையில் இந்த பேரம் எல்லாம் எதற்கு...' என்று சொல்லிவிட்டார், ஜெயகாந்தன்.
ஜி.என்.வேலுமணியும் சில லட்சங்களை செலவு செய்த பின், அந்த படத்தை எடுக்கும் திட்டத்தை கைவிட்டார்.
'வேலுமணி அதை எடுக்கப் போவது இல்ல; நானே அதை எடுக்கிறேன். நீங்க வேலுமணியிடம் சொன்னால், கதையின் உரிமையை நான் வாங்கிக்கிறேன்...' என சந்திரபாபு கேட்க, பிடிவாதமாக மறுத்து விட்டார், ஜெயகாந்தன்.
அதன் பின், அவர்கள் இருவருக்கும் இடையேயான நட்பின் வலு குறைந்து விட்டது.
பின், 1996ல், 'யாருக்காக அழுதான்' நாகேஷ் நடிப்பில் வெளி வந்தது. அதில், நாகேஷுக்கு வாய் பேச முடியாத பாத்திரம். அதேபோல் தானே ஒரு கதை அமைத்து, படம் தயாரித்து, இயக்கவும் முடிவு செய்தார். 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்ற பைபிளின் வாசகத்தை தன் படத்தின் தலைப்பாக வைத்தார்.
பொதுவாகவே, சந்திரபாபு தனக்காக செய்யப்படும் விளம்பரங்களில் ஏதாவது புதுமையை புகுத்துவது வழக்கம். அவ்வகையில், தட்டுங்கள் திறக்கப்படும் படத் துவக்க விழா அழைப்பிதழை விலை உயர்ந்த கிரீட்டிங் கார்டு போல் அச்சிட்டு அசத்தியிருந்தார்.
தொடரும்.

நன்றி:சிக்ஸ்த்சென்ஸ், சென்னை.

முகில்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
31-டிச-201707:13:46 IST Report Abuse
கதிரழகன், SSLC ஜெயகாந்தன் கதை எல்லாம் படமாக்க முடியாது. படிச்சாலே புரியாது நம்ம சனங்களுக்கு அதை எப்படி காமிராவில் காட்ட முடியும். வேஸ்டுதான். இவிங்க ரெண்டு பேருமே ரொம்ப அகம்பாவம் பிடிச்சவங்க. எப்படி இத்தனை நாள் தாக்கு பிடிச்சாங்க? ஜெயகாந்த ஓசியில தண்ணி கெடைக்குதுன்னு இருந்தாரோ என்னமோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.