நிலம்!
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2017
00:00

''நாளைக்கு ஊருக்கு போறேன் சார்...'' என்றார், ராமரத்தினம்.
''முக்கியமான அலுவலா?'' என்று கேட்டேன்.
''எல்லாம் நில விவகாரம் தான்,'' என்றார்.
''இந்த முறையாவது, நல்லபடியா முடிச்சுட்டு வாங்க சார்...''
''அந்த தீர்மானத்தோடு தான் கிளம்பறேன்; திரும்பி வர, ஒரு வாரமோ, 10 நாட்களோ ஆகலாம்,'' என்றார், ராமரத்தினம்.
''கூடுதலாக கூட ஆகட்டுமே... இப்ப தான் நீங்க, ரிடையராயிட்டிங்களே... இந்த சிட்டியில, காத்து இல்லாம, புழுங்கிட்டு கெடக்கிறதுக்கு ஊர் மேலல்லவா...''
''உண்மை தான்...'' என்றார்.
தனியார் கம்பெனியில், போர்மென் ஆக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர், ராமரத்தினம்; மனைவி, இரண்டு குழந்தைகள் என்று, அளவான குடும்பம்; வேலையில் இருக்கும் போதே, பெண்ணுக்கு திருமணம் முடித்து விட்டார்; மகன், ஐ.டி., கம்பெனியில் வேலை செய்கிறான்; அவனுக்கு பெண் பார்த்து வருகிறார்.
ரத்தினத்துக்கு பூர்வீகம், தமிழகத்தின் தென் கோடி மாவட்டம்; அண்ணன், தம்பிகளோடு பிறந்தவர்.
விவசாயமும், கால்நடை வளர்ப்பும் தான், குடும்பத் தொழில்; ரத்தினம் மட்டும், நாலெழுத்து படித்து, வேலை தேடி, சென்னை வந்து, இங்கேயே பெண் பார்த்து, மணம் முடித்து செட்டிலாகி விட்டார்.
எப்போதாவது, ஊருக்கு போகும் போது, நிலத்தில் விளைந்தது என்று, அரை மூட்டை அல்லது ஒரு மூட்டை தானியமோ, அவரையோ, துவரையோ கொண்டு வருவார்.
'இதோட விலை அதிகம் போனா, 200 ரூபாய்க்குள் தான் இருக்கும்; மெனக்கெட்டு, இத்தனை துாரம் சுமந்துட்டு வரணுமா...' என்றால், 'கால் காசா இருந்தாலும், நம்ம பூமியில் விளைஞ்சது மாதிரி வருமா...' என்பார்; மண் மீது, அத்தனை பற்று!
'வானம் பார்த்த பூமி சார்... ஊருக்கு அப்பால், தொலை துாரத்தில், மலையடிவாரத்தில் இருக்கு, எங்க நிலம். அங்க போறதே, ஒரு பயணம் மாதிரி தான்; காலையில கஞ்சி குடிச்சுட்டு, மத்தியானத்துக்கும் எடுத்துட்டு, மாடுகளை ஓட்டிகிட்டு கிளம்பிடுவோம்; காலையில, 7:00 மணிக்கு, ஏர் கட்டினால், மதியம் வரை உழுவோம்; மத்தியானம் சாப்பிட்டுட்டு, அப்படியே, புளிய மர நிழல்ல, ஒரு துாக்கம் போட்டு, 3:00 மணிக்கு எழுந்து, வரப்பு பிடிக்கறது, பரம்படிக்கறதுன்னு வேலை நடக்கும்; சாயங்காலம் இருட்டற நேரம், வீடு திரும்புவோம்.
'மழை பெய்ஞ்சு, ஏரி நிறைஞ்சால், நெல்லு பயிரிடுவோம்; மத்த பருவத்துல, ராகி, சோளம், தட்டப் பயறுன்னு விதைப்போம். ஒவ்வொரு வீட்டுலயும், குறைஞ்சது, 10 ஆடுகளாவது இருக்கும். விவசாயம் இல்லாத நாள்ல, அதுகள வளக்கறது தான் தொழில்; பொழுது போக்கு எல்லாமே! நாலு வீட்டுக்காரங்க ஒண்ணா சேர்ந்து, பட்டி போடுவோம்.
'இரவுக் காவலுக்கு, நாய்களோடு போவோம். திசைக்கொரு நாயை, காவலுக்கு வச்சிட்டு, கயித்து கட்டில் மேல், சோளத்தட்டைகள போட்டு, போர்வையால் மூடி, ஆள் இருக்கிறாப்ல செய்துட்டு, டவுனுக்கு போய், சினிமா பாத்துட்டு வருவோம். வீட்டுக்கு விஷயம் தெரியாது; கொஞ்ச நாள்ல, பேச்சு வாக்குல, நாங்களே உளறிடுவோம். 'ஏண்டா... உங்கள, காவலுக்கு அனுப்பினா, சினிமாவுக்கா போறீங்க...
நடு ராத்திரியில, நரிக்கூட்டம் வந்து, ஆடுகள கடிச்சு போட்டா, என்னடா செய்றது'ன்னு திட்டுவாங்க...' என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம், ஊர் நினைவை பகிர்ந்து கொள்வார்.
'நீங்க சொல்றத பாத்தால், 'ரிடையர்மென்ட்'டுக்கு பின், ஊர்ல போய் செட்டிலாயிருவீங்க போலிருக்கே...'
'அப்படி ஒரு எண்ணம் இருக்கு சார்... வீட்லயும் சொல்லிக்கிட்டிருக்காங்க. மகனுக்கு, கல்யாணத்த முடிச்சு வச்சிட்டு, கிராமத்தோடு போய், காடு, கழனின்னு இருந்துடணும்; அதுக்கு, அங்கே ஒரு வீடு கட்டியாகணும்...' என்றார்.
'ஏன்... உங்களுக்கு, அங்க வீடு இல்லயா?'
'இருக்கு; அப்பா காலத்துல கட்டிய வீடு. அப்பவே, மூணு பாகமா பிரிச்சு கட்டிட்டாரு. ஒண்ணுல அண்ணனும், இன்னொண்ணுல தம்பியும் குடும்பத்தோடு குடியிருக்காங்க; என் பங்கு வீட்டை பங்காளி ஒருத்தருக்கு விட்டிருந்தேன்; அதை, அவர் சரியா பராமரிக்கல; இடிஞ்சு போயிருக்கு...'
'பிரதர்ஸ் கண்டுக்கலயா...'
'நீ வர்ற நாள்ல சரி செய்துக்கலாம்ன்னு எங்கண்ணன் சொல்லிட்டாரு. நானும் விட்டுட்டேன். காடு கூட பொதுவுல தான் இருக்கு; வாய்மொழியா, 'இது உனக்கு, இது அண்ணனுக்கு, அது சின்னவனுக்கு'ன்னு அப்பா சொல்லிட்டு போனது தான். இது வரைக்கும், யாரும் அளவு போட்டு, பத்திரம் பதிஞ்சதில்ல; அண்ணந்தான் பொதுவுல கவனிச்சிட்டிருக்கார்...' என்று, ஒருமுறை சொன்னார்.
பின் வந்த நாட்களில், எதிர்பாராத விதமாக ரத்தினத்தின் சகோதரர்கள் ஒருவர் பின், ஒருவராக காலமாக, மிகவும், 'அப்செட்'டாகி போனார்.
'தம்பிகிட்ட கூட, அவ்வளவு ஒட்டுதல் இல்ல சார்... ஆனா, அண்ணனுக்கு நான்னா உயிர்... நான் சாப்பிட்ட பின் தான் சாப்பிடுவாரு; எனக்கு ஒண்ணுன்னா, அவரால தாங்க முடியாது. உடம்புக்கு முடியாம போச்சுன்னா, துாக்கி தோள்ல போட்டு, மைல் கணக்கா நடந்து, ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவாரு; என் வீட்ல, எந்த விஷயமுன்னாலும், அண்ணன் இல்லாம நடந்ததில்ல...' என்று, கண் கலங்குவார். சகோதரர்கள் மறைவுக்கு பின், ஊர் பக்கம் போகாமல் இருந்தார்; நானாக தான், ஒரு நாள், 'அண்ணன் இருந்தவர, நிலங்கள அவர் பாத்துகிட்டார்; இப்ப, யார் பொறுப்புல இருக்கு...' என்று, நினைவூட்டினேன்.
'அண்ணன் பையனும், தம்பி பையனும் தான் பாத்துட்டு இருக்கணும். வீட்லயும், இது பத்தி கேட்டுகிட்டிருக்காங்க... ஒருமுறை ஊருக்கு போய்ட்டு வரணும்...' என்று சொல்லிக் கொண்டிருந்தவர், ஒருநாள் போய் திரும்பி வந்தபோது, வருத்தமாக சொன்னார்...
'அப்பாக்கள போல இல்ல சார் பிள்ளைக... பொறுப்பில்லாம நடந்துக்கிறாங்க...'
'ஏன், என்ன செய்தாங்க...'
'எனக்கு தெரியாம, ரெண்டு ஏக்கர் நிலத்தை வித்திருக்காங்க... என்னை கலக்காம அவங்களே கையெழுத்து போட்டு, பத்திரம் பதிவு செய்து கொடுத்திருக்காங்க...'
'அடப்பாவமே...'
'கடுப்பா இருக்கு; சகோதரர்களுடைய பிள்ளைகளாச்சே... இப்ப, நாம தானே பெரிய தலை... அவங்களுக்கும், நாம தானே முன்ன நின்னு நல்ல காரியம் செய்யணும்ன்னு எவ்வளவோ, ஆசையாய் இருந்தேன். ஒவ்வொரு முறை, ஊருக்கு போகும் போதும், பெரியவங்களுக்கு, துணி எடுக்கிறேனோ இல்லயோ இவன்களுக்கு வாங்கிட்டு போவேன்; படிக்க சொல்லி ஊக்கப்படுத்துவேன். அவனுங்கள, சென்னைக்கு கூட்டி வந்து, வேலையில் வைக்கணும்னெல்லாம் நினைச்சிருந்தேன்; கெடுத்துக்கறாங்க...'
'அப்பாவ போல, பிள்ளைகளும் இருப்பாங்கன்னு சொல்ல முடியாது தான்; அதற்காக, உங்கள கேட்காம, நிலத்தை விற்கிறது, 'டூ மச்!' அவங்க, உங்க நிலங்கள விற்காம இருக்கணும்ன்னா, உடனே, முறைப்படி அளவு போட்டு, பத்திரம் பதிவு செய்துடுங்க...' என்றேன்.
சென்ற முறை, அதற்காக தான் போயிருந்தார்.
போகும் முன், 'அங்கே, ஒவ்வொண்ணுக்கும் அலையணும் சார்... தலையாரி, வி.ஏ.ஓ.,வை பாக்கணும்; சர்வேயரை தேடணும்; மூணு பேருக்கும் தேதி ஒத்து வரணும்; அவங்க வந்தா, அவங்களுக்கு சாப்பாடு, சிகரெட், கைச்செலவு, பெட்ரோல் செலவுன்னு செய்யணும். அவங்க பாத்து, அளந்து சொன்ன பின், பத்திரம் எழுதுறவரை பிடிச்சு, எழுதி வாங்கி, டவுனுக்கு போய் பதிவு செய்யணும்; சாட்சிகள வேற கூட்டிக்கிட்டு போகணும். பெரிய வேலை...' என்று சொல்லி போனவர், ஒரு மாசம் போல் இருந்து விட்டு, திரும்பி வந்து, 'வேலை ஆகல சார்...' என்றார்.
'என்னாச்சு...' என்பது போல் பார்த்தேன்.
'அவனுங்க கொஞ்சங் கூட, ஒத்துழைப்பு கொடுக்கல சார்... நாந்தான், அலைஞ்சு, திரிஞ்சு கை காசை செலவு செய்து, சர்வே போட்டேன். அவனுங்க வித்த நிலம் போக, மீதியுள்ளதை, மூணு பாகமா போட்டு, முதல் பகுதி அண்ணன் மகனுக்கு, இரண்டாவது பகுதி எனக்கு, தம்பி மகனுக்கு கடைசி பகுதின்னு, ஊர் பஞ்சாயத்துல தீர்மானம் செய்து, பத்திரம் எழுதி, பதிவு ஆபீசுக்கு போனால், அங்க வந்து, 'எனக்கு மேட்டு பூமிய கொடுத்து ஏமாத்த பாக்குறீங்களா... நடுப்பகுதிய மாத்தி எழுதினால் தான் கையெழுத்துப் போடுவேன்'னு தகராறு செய்துட்டான், அண்ணன் மகன்...' என்றார்.
எனக்கு கோபம் வந்தது.
'பத்திரம் எழுதி முடிக்கிற வரைக்கும் அவனுக்கு, கண்ணு முதுகிலா இருந்தது...' என்றேன்.
'அதை தான், அங்க இருந்தவங்களும் கேட்டாங்க... ஆனால், பிடிவாதமா இருந்தான். எழுதின பத்திரத்தை, கிழிச்சு போட்டு, இன்னொரு பத்திரம் வாங்கி, அவன் சொன்னபடி மாத்தி எழுதினேன். இப்ப, தம்பி மகன், 'எனக்கும், நடு பங்கு தான் வேணும்'ங்கிறான்...'
'பொளேர்ன்னு கன்னத்துல, ஒண்ணு வைக்கிறது தானே...'
'எனக்கும் அப்படி தான், கோபம் வந்துச்சு; கை நீட்டிட்டால், அதையே பெரிய பிரச்னையாக்கிடுவாங்க; பிறகு பாத்துக்கலாம்ன்னு வந்துட்டேன்...' என்றவர், பின், பல மாதங்களாக, அது பற்றி பேசவில்லை.
இப்போது, மீண்டும் படையெடுப்பு!
'பத்து நாளாகும்; அதற்கு மேலும் ஆகலாம். இரண்டில் ஒன்று பாத்துட்டு தான் வர்றது...' என்று சொல்லி சென்றவர், இரண்டு நாளில் திரும்பி, ''பிரச்னை தீர்ந்தது...'' என்றார்.
வியப்புடன், ''இப்ப மட்டும், எப்படி சரிப்பட்டு வந்தாங்க?'' என்று கேட்டேன்.
''எங்க சரிப்பட்டு வந்தாங்க... போலீசோடு தான் ஊருக்குள்ளே போனேன்; அரண்டுட்டாங்க. நான் போலீசுக்கு போவேன்னு அவங்க எதிர்பாக்கல... 'அப்படி என்ன, கொலை, குத்தமா செய்துட்டோம்; போலீசோடு வர்றீங்க; அந்த வானம் பாத்த பூமிக்கு, நீங்க இப்படி மல்லு கட்டணுமா... நீங்க, சென்னையில சவுக்கியமா தானே இருக்கீங்க; உங்க மகன், இன்ஜினியராகி, மாசம், 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறார்ல... நாங்க அப்படியா, மழை பெஞ்சா பொழப்பு; இல்லன்னா, கடனுக்கு வாங்கி தின்னுக்கிட்டிருக்கோம். இதுக்கு போட்டியா வரணுமா, பெருந்தன்மையா விட்டுத் தர கூடாதா'ன்னு கேட்டாங்க.
''இந்த புத்தி, முதல்ல எங்க போச்சு, என்னை அலைய விட்டு, பதிவு செய்ற நேரத்துல முரண்டு பண்ணினீங்களேன்னேன். 'அறியா புள்ளையங்க; தெரியாம செய்ஞ்சுட்டோம்'ன்னாங்கா. 'பிழைச்சு போங்கடான்'னு வந்துட்டேன்...'' என்றார்.
''அப்ப உங்க நிலம்...''
''பையன் கூட கேட்டான்... 'தாத்தா சொத்துல எனக்கு பங்கு இல்லையாப்பா... அதெப்படி விட்டு கொடுத்துட்டு வரலாம்'ன்னு... இப்ப கூட ஒண்ணும் கெட்டு போகல; போய் கேட்டு வாங்கிடலாம்... அப்புறம் அவங்களுக்கும், நமக்கும் என்ன வித்தியாசம்... அவனுங்க சண்டைக்கு வந்து, நீயா, நானான்னு நின்னிருந்தா, போராடி வாங்கலாம்; மன்னிப்பு கேட்டு நிக்கிறாங்க. எப்படி வாங்க முடியும்... நல்லாவா இருக்கும்... அவனுங்களுக்கு, நான் விட்டுக் கொடுத்த பின், மனசுல ஏமாத்தமோ, கோபமோ இல்ல; திருப்தியா தான் இருந்தது. போய்ட்டு போகுதுன்னு சொன்னேன்; சமாதானமாயிட்டாங்க...'' என்றார்.
அவர் முகத்தில், நிம்மதியை பார்க்க முடிந்தது.

படுதலம் சுகுமாரன்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
omar - DXB,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஜன-201816:14:15 IST Report Abuse
omar அண்ணன்தானே , தம்பிதானே என விட்டு கொடுத்து வாழ்ந்தால் குடும்பத்தில் நிம்மதியை பார்க்கமுடியும்.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
04-ஜன-201815:35:45 IST Report Abuse
Cheran Perumal பிறருக்கு கொடுப்பதின் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடையாது என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.