பிறப்பால் மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள். ஆனால், நம்முடைய சமூகம் காலங்காலமாக ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்ற வழக்கத்தைக் கொண்டுள்ளது. கல்வி, தொழில்நுட்பம் என பல மாற்றங்களைத் தற்போது சமூகம் கண்டுள்ள நிலையில், நம்முடைய சமூகத்தில் ஆண்களும் பெண்களும் சரிசமமாக நடத்தப்படுகிறார்களா என்பதுபற்றி சென்னை, நீலாங்கரை, சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினார்கள். ஆண், பெண் சமநிலை பற்றி இளைய தலைமுறை என்ன நினைக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
சி.அபிநவ், 10ஆம் வகுப்பு
'எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண்' அப்படின்னு பாரதியார் பாடினார். ஆணுக்கு இருக்கிற எல்லாத்தகுதியும் பெண்ணுக்கும் இருக்கு. ஆனா, பெண்களை ஏன் சரிசமமா நடத்தறதில்லை, அவங்களை ஏன் தாழ்த்தியே வெச்சிருக்காங்க. அதுக்கு முக்கிய காரணம் சமூகம்தான். எல்லா விஷயத்திலயும் பெண்களை கட்டுப்பாடோட நடத்தறாங்க. அது அவங்களை தாழ்வுணர்ச்சி உள்ளவங்களா ஆக்கிடுது. வீட்டு வேலை செய்ய இயந்திரமா அவங்களை பாக்கறாங்க. பெண்களுக்கு சில சுதந்திரங்கள் கிடைச்சாலும், பாலின வேறுபாடுங்கறது இன்னும் இருக்கத்தான் செய்யுது.
செ.ஸ்ரீசக்தி, 10ஆம் வகுப்பு
குடும்பம், குழந்தை வளர்ப்பு, பொறுப்புன்னு பல வேலைகளை வீட்டில இருக்கற பெண்கள் செய்யறாங்க. சிலர் வேலைக்குப் போனாலும் பணிச்சுமை, வீட்டுச்சுமைன்னு எல்லாத்தையும் சுமக்கறாங்க. ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்யக்கூடாதுன்னு நினைக்கறாங்க? என்னைக்கு குடும்பப் பொறுப்புகளை பெண்கள் கிட்டயே கொடுக்காம ஆணும், பெண்ணும் பகிர்ந்து செய்யறாங்களோ அப்பதான் ஆணும் பெண்ணும் சரிசமமா நடத்தப்படறதா சொல்ல முடியும். நிறைய வளர்ச்சிகளைக் கண்டிருந்தாலும், ஆண்களும் பெண்களும் சரிசமமா நடத்தப்படல.
த.யஷ்வந்த், 8ஆம் வகுப்பு
இன்றைய சமுதாயத்துல ஆண்களும் பெண்களும் சமமாதான் நடத்தப்படறாங்க. இதுக்கு முக்கிய காரணம் பெண் கல்விதான். படிப்பு, சுயசிந்தனை உள்ள பெண்கள் தன்னம்பிக்கையோட சமூகத்துல வலம் வராங்க. அவங்களுக்கு எல்லா வேலை வாய்ப்புகளும் கிடைக்குது. அரசியல்லகூட பெரிய அளவில தலைவர்களா ஆகறாங்க. வீட்டில் இருக்கற பெண்களைப் பொறுத்தவரை அவங்களுக்கு பல பொறுப்புகள் இருக்கு. அது அவங்களுக்கு சுமையாத்தான் இருக்கு. ஆணும் பெண்ணும் சரிசமமா நடத்தப்படணும்னா, அது ஒவ்வொரு குடும்பத்துலயிருந்தும் ஆரம்பிக்கணும்.
கெ.ஐடா மெர்சி, 9ஆம் வகுப்பு
எங்க பாட்டி காலத்துலயிருந்து அதே நிலைமைதான், பேத்திகளான எங்களுக்கும் தொடருது. எல்லா துறையிலயும் பெண்கள் கால்பதிச்சு சாதிச்சிருந்தாலும், சரிசமமான நிலைக்கு வந்துட்டாங்கன்னு சொல்ல முடியாத சூழ்நிலைதான் இருக்கு. வெளியே போய்வர ஆணுக்கு இருக்கற சுதந்திரம் இப்பவும் பெண்ணுக்கு இருக்கறதில்லையே. சில இடங்களில பெண்ணுக்கு பெண்ணே எதிரியா இருக்காங்க. நம்மைப்போல சக உயிர்தானேன்னு பார்க்கற பார்வை ஆணுக்கும் வரணும், சமூகத்துக்கும் வரணும்.
ச.மோகன்ராஜ், 10ஆம் வகுப்பு
நம்ம சமூகம் முதல்ல தாய்வழிச் சமூகமாதான் இருந்தது. காலப்போக்கில மாறி ஆணாதிக்க சமூகமா மாறிடுச்சு. இதுக்கு ஆண் மட்டுமே காரணம் இல்ல. சமூகமும் பெண்களும்கூட ஒரு காரணம். கொஞ்சம் படிச்சா போதும்னு பெண்களை கல்யாணம் செய்து கொடுத்துடறாங்க. மாற்றம் ஏற்படணும்னா கல்வியறிவு பெண்களுக்கு அவசியம். சமமா நடத்தப்படறாங்களான்னா படிப்படியான மாற்றங்களை பெண் சமூகம் அடைஞ்சுட்டுத்தான் இருக்கு. இதையெல்லாம் பயன்படுத்திக்கிட்டு பெண்கள் தங்களை உயர்த்திக்கணும்.
தி.பவானி, 8ஆம் வகுப்பு
இன்னைக்கு பெண்கள் எல்லாத் துறையிலயும் இருக்காங்க. இது ஒரு பெரிய வளர்ச்சிதான். ஆனா ஆண்களுக்கு சரிசமமா நடத்தப்படறாங்களான்னா இல்லைன்னுதான் சொல்லணும். வெகுசிலருக்கு மட்டுமே சரிசமமா நடத்தப்படற உரிமை கிடைச்சிருக்கு. ஒரே மாதிரியான வேலையில் கூட சமமான சம்பளம் தரப்படறதில்ல. பெண்களை பலவீனமானவங்களா பார்க்கற பழக்கம் ஆண்கள் கிட்டயும் சமூகத்து கிட்டயும் இருக்கு. இது மாறணும். பெண்கள் சுயமா முடிவெடுக்கவும், சுதந்திரமா செயல்படவும் முடியறதில்ல. இந்த நிலை மாறணும்னா, மக்கள் மனத்துல மாற்றம் தொடங்கணும்.