இட்லிக்கடை மீனாட்சி!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 மார்
2018
00:00

அன்று, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நாள்... விழாக்கோலம் பூண்டிருந்தது, கூடல் மாநகர்.
நகரின் மையப் பகுதியான முத்துப்பிள்ளை சந்து முனையில், இட்லி சுட்டு விற்றுக் கொண்டிருந்தாள், 70 வயது மீனாட்சி கிழவி. உலக நடப்பு பற்றி எந்தவித அக்கறையும் கொள்ளாது, இட்லி வியாபாரத்தில் முனைப்புடன் இருந்தாள்.
''ஏத்தா... இன்னைக்கு மீனாட்சி திருக்கல்யாணம்; மீனாட்சின்னு பேர் வச்சிட்டு, திருவிழாவுக்கு போகாம, இப்படி இட்லி கடையே கதின்னு கிடக்கறியே....'' இட்லி வாங்கிய செல்லத்தாயி, சும்மாயிராமல், கிழவியின் வாயை கிண்டினாள்.
''அடி போடி பொசகெட்டவளே... நான், அந்த மீனாட்சிய பாக்கப் போயிட்டா, அவளா இன்னைக்கு எனக்கு கஞ்சி ஊத்துவா... இல்லன்னா நீ ஊத்தப் போறியா... இந்த மீனாட்சி பாடு பட்டாதாண்டி கஞ்சி...'' என்று செல்லத்தாயியை ரெண்டு விரட்டு விரட்டவும், அவள், ''கிழவிக்கு ரோஷத்த பாரு,'' என்று சொல்லி, சிரித்தவாறு சென்று விட்டாள்.
தன், 30 வயதில், இந்த இடத்தில் இட்லி கடை போட்டவள், மீனாட்சி. தானும் ஜீவித்து, தன் இரண்டு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்து, இன்றும் யாருக்கும் பிடி கொடுக்காமல், கடன் இல்லாமல், காலந்தள்ளுகிறாள்.
இட்லி கடையின் ஆவிதான் அவள் விடும் மூச்சுக்காற்று; இட்லி கடை மீனாட்சி என்றால், அந்த ஏரியாவில் உள்ள சின்னப் புள்ளைக்கும் தெரியும்.
பரபரப்பாக அவள் இட்லி வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மீனாட்சி கிழவியின் தங்கை மகன் கருப்பையாவும், அவன் மனைவி ஈஸ்வரியும், அவளிடம் அந்த விஷயத்தை எப்படி சொல்வதென்று தெரியாமல் தயங்கி நின்றனர். ''ஏண்டி... புருஷனும், பொண்டாட்டியும் ஒண்ணும் பேசாம நிக்கறீங்க... என்ன விசயம்?'' என்றவாறு, ஆவி பறக்கும் இட்லியை, வெந்து விட்டதா என்று விரலால் குத்திப் பார்த்தாள், கிழவி.
''பெரியம்மா... அரசரடியில, பெரியப்பன் சாகக் கிடக்கறாராம்; போன் வந்திருக்கு. ஒருமுறை போய் பாத்துட்டு வந்துடலாம்; கடையை எடுத்து வை,'' என்று பயந்தபடியே சொன்னான், கருப்பையா.
''ஆமா அத்தை... உங்க மக்கமாறு ரெண்டு பேரும் அப்பனை பாக்க போறாங்களாம், போன் வந்துச்சு,'' என்றாள், ஈஸ்வரி.
எந்த பிரதிபலிப்பையும் காட்டாமல், இட்லி சுடுவதில் கவனமாக இருந்தாள், மீனாட்சி கிழவி.
மனதிற்குள் எண்ண ஓட்டங்கள், பின்னோக்கிப் போயின...
மீனாட்சியின் கணவன் ராசு, கொத்தனார்; கட்டுமானப் பணியில் கை தேர்ந்தவன். இரண்டு பெண் குழந்தைகள் நண்டும் சிண்டுமாய் இருக்கையில், தன்னுடன் வேலை பார்த்த சித்தாள் மாயா மீது காதல் கொண்டு, அவளுடன் ஓடிப் போனான், ராசு. கடைசி வரை மீனாட்சியையும், குழந்தைகளையும் எட்டிப் பார்க்கவே இல்லை.
புருஷன்காரன் ஓடிவிட்டதால், இரண்டு குழந்தைகளுடன் நிர்கதியாக நின்றாள், மீனாட்சி. வாழ்ந்தாக வேண்டும், இரு பெண் பிள்ளைகளையும் கரை சேர்க்க வேண்டுமே என்ற கவலையில், அன்று போட்ட இட்லி கடைதான், இன்றும் மீனாட்சிக்கு உயிர் கொடுக்கிறது. 40 ஆண்டு காலம் நாய் படாத பாடு... புருசன் என்ற நினைப்பே அவளுக்கு அற்றுப் போனது. கழுத்தில் தொங்கும் தாலியில்லாத மஞ்சள் கயிறு ஒன்று தான் அவள் சுமங்கலி என்பதற்கான ஒரே அடையாளம்!
கட்டுமான கான்ட்ராக்டில் பணம் தாராளமாக வரவே, மாயாவிற்கு ஆண், பெண் என்று இரண்டு பிள்ளைகளை கொடுத்து, அவளையும் விட்டு, கமலவள்ளி என்பவளுடன் சென்று விட்டான், ராசு.
மீனாட்சி மற்றும் மாயா போன்று ஏமாளி இல்லை, கமலவள்ளி. ஏற்கனவே ரெண்டு பெண்டாட்டி கட்டி, அவர்களை விட்டு, தன்னிடம் வந்தவன், தன்னை விட்டுப் போக மாட்டான் என்பது என்ன நிச்சயம்... என்று கருதி, அகப்பட்டதை சுருட்டுடா ஆண்டியப்பா... என்ற பாணியில், ராசுவிடமிருந்த நகை, பணம், வீட்டுப் பத்திரம் என, அனைத்தையும் சுருட்டி, எங்கோ ஓடி விட்டாள்.
பணம் மற்றும் பெண் துணையின்றி தவித்தான் ராசு. வயதும், 60ஐ, நெருங்கி விடவே, முன்னைப் போல், வேலை செய்ய முடியாமல், மதிப்பற்று, வாழ்க்கையில் சாரமற்று போனான். குடிக்க கஞ்சியின்றி, ஊத்துவார் கஞ்சிக்கு உட்காரும் நிலை ஏற்பட்டது. இரண்டாவது மனைவி மாயாவின் மகள் தான், இரக்கப்பட்டு, கஞ்சி ஊற்றினாள். ராசுவின் இந்நிலையை கேள்விப்பட்டாலும், அதைப் பற்றி கவலைப்படவில்லை, மீனாட்சி.
''கிழவிக்கு என்னா வைராக்கியம் பாரு... என்னதான் இருந்தாலும், தாலி கட்டின புருசன் சாகக் கிடக்கிறான்; போய் பாக்காம இருக்கலாமா,'' என்றாள், செல்லத்தாயி.
''எந்த ஆம்பிள ஒழுங்கா இருக்கான்... இம்புட்டு வயசாச்சு, ஆனாலும் கிழவிக்கு இவ்வளவு வைராக்கியம் இருக்கக் கூடாது,'' என்றாள், இன்னொருத்தி.
இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரி, ''எந்த ஆம்பிள தப்பு பண்ணாம இருக்கான்னு, ஒரு தப்பை நியாயப்படுத்தி பேசுறீகளே... மீனாட்சி அத்தை, 40 வருஷமா ஒத்தையாயிருந்து மல்லாடிக் கிட்டிருக்கே... இதே தெருவில் பல வருஷமா குடியிருக்கிற உங்களுக்கு தெரியாதா... ஒரு கெட்ட சொல் வாங்கியிருக்குமா... இந்த காலத்தில, புருசன் சரியில்லன்னா, இன்னொருத்தன தேடிக்கிறாளுக... யாருக்கு பயந்து, கிழவி ஒழுக்கமா வாழ்ந்தா... மனசுக்குள் இருக்கற வைராக்கியத்தால தானே வாழ்ந்தா... அதை குறைச்சு பேசுறீங்களே...'' என்றாள்.
புரணி பேசிய பெண்கள் பேச்சடங்கினர்.
அன்று மாலை, ராசு இறந்து விட்டார் என்ற செய்தி, மீனாட்சி கிழவிக்கு வந்தது.
'இப்பவாவது, புருசன் செத்த எழவிற்கு கிழவி போகுதான்னு பார்ப்போம்...' என்று, மீனாட்சியின் வீட்டிற்கு வேவு பார்க்கச் சென்றனர், அத்தெரு பெண்கள் இருவர். புருசன் செத்தது அறிந்து, ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை மீனாட்சி கிழவி. எண்ணெய் தேய்த்து தலை முழுகியவள், என்ன நினைத்தாளோ, கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிற்றை கழற்றி, வெறுப்புடன் வீசியெறிந்தாள்.
குளித்து, தலை முடியை அள்ளி முடித்து, சுங்குடி சேலையொன்றை கட்டி, வெளியே கிளம்பினாள். மவுனமாக, கிழவியை வேடிக்கை பார்த்தனர், தெருவாசிகள். மாசி வீதியை நோக்கி அவள் வந்த போது, திருக்கல்யாணம் வைபவம் முடிந்து, நகர்வலம் வந்து கொண்டிருந்தாள், அன்னை மீனாட்சி. மீனாட்சியம்மையின் தரிசனத்திற்காக, கூட்டம் அலை மோதியது. அந்த கூட்டத்திற்குள் செல்லாமல், ஒரு கணம் நின்றவள், அம்மன் வரும் திசையை நோக்கி, கையெடுத்து கும்பிட்டு, கடை வீதியை நோக்கி, திரும்பி நடந்தாள்.
மஞ்சள், குங்குமம், மாங்கல்ய பாக்கியத்துடன் நகர்வலம் வரும் மீனாட்சியை அவள் தரிசிக்க விரும்பவில்லை.
மளிகைக் கடையில், இட்லிக்கான அரிசி, உளுந்து, பலசரக்கு சாமான்களை வாங்கியபடி வீட்டிற்கு நடையை கட்டினாள்.
மறுநாள் காலை, எவ்வித பிரதிபலிப்பையும் வெளிப்படுத்தாமல், வழக்கம் போல் இட்லி கடையை திறந்தாள். 40 ஆண்டுகள் நெறி பிறழாது வாழ்ந்து காட்டிய மீனாட்சி கிழவி, ஒவ்வொரு பெண்ணிற்கும் சுய சார்பை, தன்னம்பிக்கையை கற்றுக் கொடுத்து விட்டாள். இளமையானாலும், முதுமையானாலும், ஒரு பெண்ணிற்கு தேவையான வலிமையும், உதவியும் அவளுக்குள்ளேயே உள்ளது என்பதை, தன் வாழ்க்கையின் மூலம் சக பெண்களுக்கு உணர்த்தி விட்டாள், மீனாட்சி கிழவி!

மு.சுந்தரம்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-மார்ச்-201811:34:49 IST Report Abuse
D.Ambujavalli என் உறவினர் ஒருவரின் கணவர் பதினெட்டு வயது மூத்த மகள் முதல் நான்கு பிள்ளைகளை விட்டுவிட்டு வேறொரு குடும்பம் அமைத்து வாழப்போய்விட்டார். அந்தப் பெண்மணி அரும்பாடுபட்டு மக்களை முன்னேற்றி, அனைவரும் பெரும் குடும்பமாக வாழ்கின்றனர். இந்நிலையில் மரணித்த கணவனுக்காக மகன்களை விட்டுக் கருமங்கள் செய்வித்தார். ஆனால் எந்த நல்ல விசேஷத்துக்கு அவரை அழைத்ததில்லை
Rate this:
Share this comment
Cancel
navasathishkumar - MADURAI,இந்தியா
04-மார்ச்-201808:07:29 IST Report Abuse
navasathishkumar மதுரை மீனாட்சி பாட்டியின் வைராக்கியம் சரி தான்.கணவன் பல பெண்களை மணப்பவன் என்று ஆண்களை குறை சொல்லி உருவாக்கப்படும் கதைக்கருவில் உள்ள ஓட்டைகள் 1.பாட்டிக்கு ராசு கொத்தனார் (கணவன்) கட்டிய தாலியை அன்றே கழற்றாமல் இறந்த அன்று கழற்றியது.தாலி என்பது பாதுகாப்பு வேலியாய் மீனாட்சி பாட்டி சுமக்கவில்லை கணவனின் நினைவை சுமந்திருக்கிறாள் அதனால் தான் 70 வயதில் கணவன் இறந்ததும் கழற்றி எறிந்திருக்கிறாள். 2.எந்த பெண்ணும் சுகத்திற்காக மறுமணம் செய்ய துணை தேடுவது இல்லை.இட்லி செய்யமுடியாத சுய தொழில் தெரியாததால் தான்.பாட்டிக்கு சொந்த காலில் நிற்க தெரிந்ததால் அடுத்தவன் தயவு தேவை இருக்கவில்லை. 3.ஆண் என்றால் பல மலர் தாவும் வண்டு என்பதெல்லாம் ராசா காலத்து கதை. இந்த கதையில் கூட மூன்றாம் தாரம் சொத்தை சுருட்டி இருக்கிறாள். பாட்டி அவன் தாலியை சுமக்கும் நேரத்தில் அவனை கண்டித்திருந்தால்,மன்னித்திருந்தால் சொத்திற்கும் அதிபதியாகி இருப்பாள். என்ன பாட்டி கதைக்காக உங்க தியாகம் பெரிதாக்கி நடைமுறையிலும் பெண் சட்ட அறிவு இல்லாமல் இட்லி போட வைத்து விட்டார்களே சாகும் வரை இந்த பெண் பெருமை எழுத்தாளர்கள்.
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
04-மார்ச்-201805:53:50 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே ஒவ்வொரு பெண்ணிற்கும் சுய சார்பை, தன்னம்பிக்கையை கற்றுக் கொடுத்து , இது போன்ற கதைகளை , கருத்துரைகளை முன்வைக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X