Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்(திருப்பதி பிரம்மோற்சவம்)

திருப்பதி பிரம்மோற்சவம்

 

BACK NEXT

 

07. மலைப்பாதையில் செல்வோமா?

திருப்பதியில் இருந்து பஸ்களில் திருமலைக்குச் சென்றால் போக வர கட்டணம் ரூ.48 ஆகிறது. இதுதவிர, ஏழு மலைகளைக் கடந்து, 3ஆயிரத்து 600 படிகளில் ஏறியும் திருமலையை அடையலாம்.

இது மிகுந்த புண்ணியத்தை தரும். அலிபிரி என்னும் அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு 11 கி.மீ., தூரம் உள்ளது. திருப்பதியில் இருந்து டவுன் பஸ்சில் அலிபிரிக்கு செல்லலாம். "அலிபிரி' என்றால் "அடிப்படி' என்று பொருள். அலிபிரியில் கம்பீரமாக இரு சிறகுகளை விரித்த நிலையில் பெருமாளை வழிபாடு செய்யும் நிலையில் கூப்பிய கைகளுடன் மிக உயரமான கருடாழ்வார் காட்சி தருகிறார்.மலைப்பாதை வழியாகத்தான் ஆழ்வார்களும், முனிவர்களும், யோகிகளும், மாமன்னர்களும் மலையேறி ஏழுமலையானைத் தரிசிக்க சென்றுள்ளனர். இதை உணர்ந்து மலையேறினாலே, மலைப்பாதையில் செல்வதற்கு சிரமம் தெரியாது. இந்த மலையடிவாரத்தில் தேங்காய் உடைத்து வழிபாடுசெய்து தங்கள் பயணம் நல்லமுறையில் அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். சில பக்தர்கள் முதல் படியிலிருந்து கடைசி வரை எல்லாப்படிகளிலும், மஞ்சளும், குங்குமம் இட்டு "கோவிந்தா' என முழங்கியபடியே செல்வர். சிலர் படிகளில் கற்பூரம் ஏற்றி படி வழிபாடு செய்கிறார்கள். மொத்தமுள்ள 3 ஆயிரத்து 600 படிகளில், 2ஆயிரத்து 500 படிகள் வரை ஏறுவதற்கு சற்று சிரமமாக இருக்கும். காலிகோபுரம் என்னும் இடத்தை அடைந்தவுடன் நடக்க எளிதாகி விடும் .

ஸ்ரீபாத மண்டபம்

மலைப்பாதையில் நாம் முதலில் அடைவது ஸ்ரீபாத மண்டபம். தன் வாழ்நாளை ஸ்ரீமந்நாராயணனுக்கே அர்ப்பணித்த ராமானுஜர் திருப்பதியில் தங்கி இருந்த போது அடிவாரத்தில் ராமாயண சொற்பொழிவு நடத்துவது வழக்கம்.அவரது மாமனான திருமலைநம்பி, அடிவாரத்தில் இருந்து தண்ணீர் சுமந்து சென்று, மலையப்பசுவாமிக்கு பூஜை செய்து விட்டு கீழே இறங்கி வருவார்.ஒருமுறை இப்படி ராமாயணம் கேட்டுவிட்டு, உச்சிகால பூஜை நேரத்தை தவற விட்டு விட்டார். பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யாமல் ராமாயணம் கேட்டு நேரத்தை கழித்துவிட்டோமே என்று வருந்தினார். திருமலைநம்பிகளின் வருத்தத்தைப் போக்க வேங்கடவன் அடிவாரத்தில் அவர்முன் காட்சி கொடுத்தார். அவ்வாறு தரிசனம் கொடுத்த இடத்தில் இரண்டு திருப்பாதங்களை காணலாம். அதில் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதுவே ஸ்ரீபாத மண்டபம்.


ராமானுஜர் ராமாயணம் சொன்ன இடம், தற்போது அழகிய கோயிலாக காட்சிஅளிக்கிறது.  எளிமையான கோலத்தில் வேங்கடேசன் காட்சி தருகிறார். ஆண்டாள் சன்னதி ஒன்றும் இருக்கிறது. இங்கு பக்தர்களுக்கு பெருமாளின் பித்தளை பாதுகைகளை ஐந்து ரூபாய் டிக்கட் கட்டணத்தில் தருகிறார்கள். அவற்றைச் சுமந்துகொண்டு ஆண்டாள்சன்னதியைச் சுற்றி வர வேண்டும். பெருமாளை சிரமமின்றி வழிபாடு செய்ய அருள்செய்ய வேண்டி பாதுகைகளைச் சுமந்து ஆண்டாளைப் பிரார்த்தனை செய்கின்றனர். மலை யாத்திரையை இக்கோயிலிலிருந்து முறையாகத் தொடங்குகிறார்கள்.

தலையேறு குண்டு

பாத மண்டபத்தை அடுத்துள்ள பகுதி தலையேறு குண்டு பாறை. இப்பாறையில் ஆஞ்சநேயரின் திருவுருவத்தைப் பார்க்கலாம். இவரிடம் தலை பதித்து வணங்கினால், திருமலை யாத்திரை சென்று சேரும் வரையில் தலைவலி, கால்வலி, உடல்வலி போன்ற எந்த உபாதைகளும் இல்லாமல் சென்று வரலாம் என்று நம்பிக்கை. இதுபோல் தலையேறு குண்டு ஆஞ்சநேயர் உருவங்கள் மலைப்பாதையில் மூன்று இடங்களில் அமைந்துள்ளன. புதியவீடு கட்ட ஆசைப் படுபவர்கள் சிறு கற்களை அடுக்கி இங்கு வேண்டுகின்றனர்.

குருவமண்டபம்
.......
தலையேறு குண்டுவைத் தொடர்ந்து சிதிலமடைந்த நிலையில் உள்ள மண்டபத்தை "குருவ மண்டபம்' என்கின்றனர். குருவநம்பி என்னும் குயவர் குடிசையிட்டு இங்கு தங்கியிருந்தார். மலையப்ப சுவாமியின் மரச்சிலையை வடித்து, அதன் பாதங்களில் தான் செய்த மண்மலர்களால் பெருமாளைப் பூஜித்து வந்தார். அப்போது திருப்பதியை ஆண்ட தொண்டைமான் சக்கரவர்த்தி மலைஉச்சியில் பெருமாளை தங்கமலர்களால் பூஜித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். "தான்' என்ற அகந்தையுடன் பொன் மலர்களால் வழிபாடு செய்த மன்னனுக்கு பாடம் புகட்ட பெருமாள் விரும்பினார். மன்னன் பூஜித்த மலர்கள் அனைத்தையும் மறையச் செய்தார். குருவநம்பியின் மண்மலர்களை தன் பாதத்தில் கிடக்கும்படி செய்தார். பொன் மலர்களைக் காணாமல் மன்னன் தவித்தான். அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய ஏழுமலையான், குருவநம்பியின் உண்மையான பக்தியையும், மன்னனின் செருக்கினையும் உணரச் செய்தார். அடுத்தநாள் மன்னன் குருவநம்பியின் பாதங்களை வணங்கி, அவருக்கு ஒரு மண்டபத்தை ஏற்படுத்தி கொடுத்தான். இந்த மண்டபமே குருவ மண்டபம் எனப்படுகிறது.

காலி கோபுரம்

மலைப்பாதையில் மொத்தம் மூன்று கோபுரங்கள் அமைந்துள்ளன. அலிபிரியில் முதல் கோபுரம் அமைந்துள்ளது. 2ஆயிரத்து100 படிகளைக் கடந்தவுடன் குருவமண்படத்தை அடுத்து "காலி கோபுரம்' உள்ளது. 17ம் நூற்றாண்டில் மட்லகுமார அனந்தராயன் என்னும் மன்னனே இந்த மலைப் பாதை கோபுரங்களை கட்டியவன். இக்காலி கோபுரத்தை அடைந்து விட்டாலே திருப்பதி மலையில் பாதி ஏறிவிட்டது போலாகி விடும்

செங்குத்தாக இருக்கும் படிகள் காலி கோபுரத்துடன் முடிவடைகின்றன.இக்கோபுரத்தில் நாமம், சங்கு, சக்கரம் ஆகிய திருச்சின்னங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளன. இரவு நேரத்தில் தொலைவிலிருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் இவ்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இக்கோபுரம் உள்ளது. இனி மலைப்பாதையில் சரிவான படிகளே பெரும்பாலும் இருப்பதால் நடப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது. முற்காலத்தில் காலிகோபுரத்தில் மலையேறும் பக்தர்களுக்கு தண்ணீர்பந்தல் இருந்ததற்கான அடையாளம் இங்கு தெரிகிறது. தற்போது பெரிய கடைத்தெருவாக காட்சி தருகிறது. சகல பதார்த்தங்களும் கிடைக்கின்றன. இங்கு பக்தர்கள் சற்று இளைப்பாறி பயணத்தைத் தொடர் கின்றனர்.

லட்சுமி நரசிம்மர் கோயில்

காலிகோபுரத்தை அடுத்து சற்று தொலைவில் நரசிம்மர் கோயிலைத் தரிசனம் செய்யலாம். நரசிம்மர் கோயில் அமைந்துள்ள இடம் தபோவனம் என்று அழைக்கப்படுகிறது. ரிஷுபமுனிவர் இத்தபோவனத்தில் தவம் செய்த போது நரசிம்மர் காட்சி தந்ததாக தல வரலாறு கூறுகிறது.

யோகநரசிம்மர் சுயம்பு வடிவத்தில் நெடிய மூர்த்தியாக காட்சி தருகிறார். பிற்காலத்தில் இவ்விடத்தில் லட்சுமிநரசிம்மருக்கு கோயிலை எழுப்பியுள்ளனர். இத்தபோவனம் மரங்கள் சூழ்ந்து பசுமையாக காட்சி தருகிறது. தியான பயிற்சி செய்பவர்கள் இக் கோயிலின் முன்மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்து மனஅமைதி பெறுகிறார்கள்.
...............

முழங்கால் முறிச்சான்

நரசிம்மர் கோயிலைக் கடந்து, இயற்கை அழகு பச்சைப்பசேல் என்று எங்கும் நிறைந்திருக்கும் மலைப்பாதையில் சேஷாத்ரி மலையைக் கடக்கும்போது, "மோக்காலு மிட்டா' என்னும் இடம் வருகிறது. இப்புனிதமலையின் மீது பாதம் பதித்து நடந்தால் பாவம் உண்டாகும் என்று எண்ணிய ராமானுஜர் முழங்கால் களாலேயே ஊர்ந்து மலையேறினார். அவ்வாறு ஏறும்போது ஓரிடத்தில் ராமானுஜரின் கால் எலும்பு முறிந்துவிட்டது. அதனால் அந்த இடத்துக்கு "முழங்கால் முறிச்சான்' என்ற பெயர் ஏற்பட்டது. தெலுங்கில் இதை "மோகாலு மிட்டா' என்கிறார்கள். அவ்விடத்தில் ராமானுஜருக்கு கோயில் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அன்னமய்யா என்ற சிறுவன் ஏழுமலையானின் மீது ஈடுபாடு கொண்டு மலையேறி வந்தான். அவனுக்கு பசிதாகம் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். பத்மாவதி தாயார் அச்சிறுவன் முன்தோன்றி அமுதளித்தாள். அன்னையின் அருள்பெற்ற அன்னமாச்சார்யா நூறு பாடல்களைப் பாடி போற்றினார். பின்னாளில் பெருமாளின் மீது ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அன்னமய்யாவின் அருள்வாழ்க்கை இம்முழங்கால் முறிச்சானில் தான் ஆரம்பமானது.

வரவேற்கும் வேங்கடாத்ரி



முழங்கால் முறிச்சானிலிருந்து சற்று தூரம் நடந்தால் வேங்கடாத்ரி மலை வருகிறது. இங்கு பரமனுக்கு பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரும், பாவை பாடிய கோதையும் தனித்தனி மண்டபங்களில் காட்சி தருகின்றனர். இத்துடன் மலைப்பாதை நிறைவுபெற்று, சாலை வழியே வரும் பாதையைச் சந்திக்கிறோம். திருமலையை எட்டிவிட்டோம். சுப்ரபாத ஒலி தெருவெங்கும் முழங்குகிறது. படியேறி களைப்பை மறந்து திருமலை வேங்கடத்தானின் ஆனந்த நிலையத்தை காணும் ஆர்வம் எழுவதை நம்மால் உணரமுடிகிறது.

இசைகுயிலுக்கு சிலை

திருப்பதி என்றதுமே சுப்ரபாதத்தை நம்மை அறியாமல் நம் வாய் முணுமுணுக்கும். மொழி தெரியாதவர்கள் கூட, இதை ரசிப்பர். அந்த ஈர்ப்பை தன் இனிய குரலால் நமக்கு வழங்கியவர் எம்.எஸ். சுப்புலட்சுமி.  "கவுசல்ய சுப்ரஜா...' என்று தொடங்கும் சுப்ரபாதத்தை அவரது இனிய குரலில் கேட்காதவர்களே இருக்க முடியாது. இந்த இசையரசிக்கு மதிப்பளிக்கும் விதத்தில் திருப்பதி பஸ் ஸ்டாண்டிலிருந்து அலிபிரி செல்லும் வழியில் அவருக்கு சிலை அமைத்துள்ளனர்.

BACK NEXT

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        | 
  மின்னஞ்சல்  |   | 



முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in