சுதந்திர போராட்ட
காலத்தின்போது, சேலம்
வளர்ச்சியடைந்த கிராமமாக
இருந்தது. 1801ல்
சேலத்தின் மக்கள் தொகை 10
ஆயிரம். சேலத்தின்
சுகாதார பணிகளை கவனிக்க,
ஆங்கிலேயர்களால் 1857ல்
சுகாதார சபை என்ற 16 பேர்
கொண்ட குழு அமைக்கப்பட்டு,
அந்த அமைப்பின் மூலம்
சுகாதார பணிகள் மட்டும்
கவனிக்கப்பட்டன.
அதன்பின் 1886 நவ., முதல்
தேதியன்று நகராட்சியாக,
சேலம் அறிவிக்கப்பட்டது.
சேலம் நகராட்சியின் முதல்
கூட்டம், ஆங்கிலேயே
கலெக்டர் அர்பத்நட்
தலைமையில் நடந்தது. அவர்
உட்பட 12 பேர் கலந்து
கொண்ட நகராட்சி கூட்டம்,
"கமிஷனர்கள் கூட்டம்'
எனப்பட்டது.
நகராட்சியின் முதல்
தலைவராக, கலெக்டர்
அர்பத்நட் இருந்தார்.
அப்போது சேலம் நகராட்சி
ஒன்பது வார்டுகளை மட்டுமே
கொண்டிருந்தது. சுதந்திர
போராட்ட தலைவர்களில்
முக்கியமானவரான ராஜாஜி,
1917- 1919ல் சேலம்
நகராட்சி தலைவராக
இருந்தார்.
சேலம் நகராட்சி
படிப்படியாக விரிவடைந்து,
பெரிய நகராட்சியாக மாறியது.
1972 ஏப்., முதல்
தேதியன்று சேலம், சிறப்பு
நிலை நகராட்சியாக
உயர்த்தப்பட்டது. மொத்தம்
20.02 ச.கி.மீ., பரப்பளவு
கொண்டிருந்த சேலம்
நகராட்சி 44 வார்டுகளாக
பிரிக்கப்பட்டிருந்தது.
1991ம் ஆண்டு மக்கள் தொகை
கணக்கெடுப்புபடி சேலம்
நகராட்சியில் மூன்று
லட்சத்து 66 ஆயிரத்து 712
பேர் வசித்தனர். சேலம்
நகராட்சியின் கடைசி நகர
மன்ற தலைவராகவும்,
மக்களால் முதன் முதலாக
தேர்ந்தெடுக்கப்பட்ட
நகராட்சி தலைவராகவும்
இருந்தவர் தி.மு.க.,வை
சேர்ந்த டாக்டர் சூடாமணி.
நகராட்சியாக இருந்த சேலம்,
1994 ஜூன் முதல் தேதியன்று
மாநகராட்சியாக தரம்
உயர்த்தப்பட்டது. அதன்படி
சேலம் மாநகராட்சியின்
பரப்பளவு 91.34 ச.கி.மீ.,
மொத்த வார்டுகளின்
எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது.
சேலம் மாநகராட்சி
சூரமங்கலம், அஸ்தம்பட்டி,
அம்மாபேட்டை,
கொண்டலாம்பட்டி என
மண்டலங்களாக
பிரிக்கப்பட்டுள்ளது.
* சேலத்தில் இரண்டாயிரத்து
168 வீதிகள், நான்கு
வாரச்சந்தைகள், 10 தினசரி
மார்க்கெட்டுகள் உள்ளன.
தாதாகாப்பட்டி,
அம்மாபேட்டை, சூரமங்கலம்
உழவர் சந்தைகள் உள்ளன.
சேலம் மாநகராட்சியில்,
"ஏ' கிரேடு அந்தஸ்துடன்
வெளியூர் பஸ்களுக்கான
புதிய பஸ் நிலையமும்,
"பி' கிரேடு அந்தஸ்துடன்
டவுன் பஸ்களுக்கான பழைய
பஸ் நிலையமும் உள்ளன.