வரலாறு, மொழி, கலை,
இலக்கியம், ஆன்மீகம்,
வேளாண்மை, பண்பாடு, பழமை,
செழுமை, இயற்கை ஆகிய
அனைத்து பெருமைகளையும்
உடையது தமிழகம். இத்தகைய
பெருமைமிகு தமிழகத்துக்கு
பெருமை சேர்ப்பது
மாநிலத்தில் மத்தியில்
உள்ள திருச்சி மாவட்டம்
என்றால் அதுமிகையாகாது.
திருச்சி மாவட்டம்
சுற்றுலாச் சிறப்புகள்
பெற்ற தனிப்பெருமை
கொண்டதாகும். தமிழகத்தின்
சுற்றுலா பெருமைகளில்
தனித்தன்மை வாய்ந்த
திருச்சி மாவட்டம்
புனிதநதி காவிரிக்கரையில்
அமைந்த தொன்மையான நகரம்.
பல்லவ மற்றும்சோழ
மன்னர்கள் திருச்சியை
ஆட்சிபுரிந்துள்ளனர்.
இங்கு கோயில்
கட்டிடக்கலையும், எழில்
நிறைந்த கோபுரங்களும்,
சிற்பங்களும், இயற்கை
வனப்பும் நிறைந்துள்ளது.
கி.மு. 300ம்
ஆண்டு முதல் உறையூர்
சோழர்களின் தலைநகரமாக இருந்தது.
உறையூர், தற்போதைய திருச்சி
நகரின் ஒரு பகுதியாகும். கி.பி.
300 முதல் 575 வரை உறையூர்
சோழர்களின் கட்டுப்பாட்டில்
இருந்தது. பின்னர் கி.பி.
590ம் ஆண்டில் உறையூர்,
திருச்சிராப்பள்ளி மற்றும்
அதனை சுற்றியுள்ள பகுதிகள்
முதலாம் மகேந்திர வர்ம
பல்லவரின் கட்டுப்பாட்டிற்கு
வந்தது. கி.பி. 880ம் ஆண்டு
வரை உறையூர் பல்லவர்கள்
மற்றும் பாண்டியர்களின் கையில்
இருந்தது. கி.பி. 880க்கு பின்
ஆதித்ய சோழர் பல்லவர்களை
வீழ்த்தி உறையூரை மீட்டார்.
அதன் பின்னர்
திருச்சிராப்பள்ளி மற்றும்
பிற பகுதிகளும் சோழநாட்டுடன்
இணைக்கப்பட்டது. கி.பி.1225ல்
இந்த பகுதி மீண்டும்
ஹொய்சாளர்களால்
ஆக்கிரமிக்கப்பட்டது.
தொடர்ந்து முகலாயர் வருகை வரை
பாண்டியர்கள் வசம் இருந்தது.
திருச்சிராபள்ளி சிலகாலம்
முகலாயர்கள் வசமும் இருந்தது.
பின்னர் விஜயநகர பேரரசர்கள்
வசம் மாறியது. கி.பி.1736 வரை
விஜயநகர பேரரசின்
பாதுகாவலர்களான நாயக்கர்கள்
இந்த பகுதியை ஆண்டனர். தற்போது
திருச்சியில் <உள்ள தெப்பகுளம்
மற்றும் கோட்டை விஸ்வநாத
நாயக்கரால் கட்டப்பட்டதாகும்.
ஆங்கிலேயர்களின் உதவியோடு
முஸ்லிம்கள் திருச்சியில்
ஆட்சி செலுத்தினர். சந்தா
சாகிப், முகமது அலி ஆகியோர்
சில காலம் திருச்சியை ஆண்டனர்.
இறுதியில் திருச்சி முழுமையாக
ஆங்கிலேயர்களின்
கட்டுப்பாட்டிற்கு வந்தது.
சுமார் 150 ஆண்டுகள் அதாவது
சுதந்திரம் கிடைக்கும் வரை
ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சி
செலுத்தினர்.