வாலிப வயதில் வண்ணங்கள் சிறகடிக்கும். இவர்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும் சரியாக இருக்குமென்று சொல்ல இயலாது. உதாரணமாக 9ஆம் வகுப்பு படிக்கும் அல்லது +2 படிக்கும் பெண்ணிற்குத் தனக்குள் உண்டாகும் பருவ மாறுதல்களைப் பற்றிய அறிவு இருக்காது, அவ்வேளையிலே தான் எடுக்கும் முடிவுகளே சரியென்று மனதிற்குப் படும். எதிர்பாலார் மேல் தோன்றும் ஈர்ப்பை உண்மையான காதலாகவும் பெற்றோரை எதிரியாகவும் பார்க்கத் தோன்றும், காரணங்கள், ஊடகங்களும் சில நண்ப/ நண்பி சகவாசங்களும். தொலைத் தொடர்பு சாதனங்கள் நல்லனவற்றுடன் கெட்டதையும் சேர்த்து போதிக்கும் தொல்லை தொடர்பு சாதனங்களாகி விட்ட போது வயது வந்த பிள்ளைகள் தடம் மாறி வாழ்வைத் தொலைக்கும் அபாயங்கள் அதிகம். மீனவன் குறிப்பிட்டுள்ளது போல் நட்பாகப் பழகிய பெண்ணிற்குப் பிரச்சினை என்ற போது அமைதியாக இருந்த அந்தப் பையனின் நட்பு இந்தப் பெண்ணிற்குத் தேவையா? அந்தப் பையன் ஏன் அப்படி செய்தான் என்று புரியாமல் தவிக்கிறாள் இந்தப் பெண், 'அலை பாயுதே' பார்த்து விட்டு அதே போல் வீட்டிற்குத் தெரியாமல் காதல் திருமணம் செய்து ஈர்ப்பைக் காதல் என நம்பி இப்போதும் எத்தனை ஜோடிகள் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்கள்? பெற்றோரை எதிர்த்து உன் கனவுகளுக்கு உயிர் கொடு, உன் தனித்தன்மையை இழந்து விடாமல் உன் விருப்பத்திற்கு ஏற்ப முடிவெடுத்துக் கொள் என்பது மிகவும் தவறான யோசனை., பெற்றவர்கள் பிள்ளைகள் கெட்டுப் போக வேண்டும் என்று ஒரு போதும் நினைப்பதில்லை. அவர்களின் கண்டிப்பை ஒரேயடியாகத் தவறென்றும் நிராகரிக்க முடியாது. நாளை அந்தப் பெண்/ஆணிற்கு ஒன்று என்றால் பெற்றோர்களே முன்வந்து நிற்பார்கள். மற்றவர்களுக்காக வாழ வேண்டாம், மற்றவர் தூற்றும் படியும் வாழ வேண்டாமே.. மனிதன் சமூக விலங்கு, எப்போதும் பிறரைச் சார்ந்தே இருக்கும் ஒட்டுண்ணியே.அளவுக்கதிகமான கண்டிப்பும் தவறு, கண்ணை மூடிக் கொண்டு நம்புவதும் தவறு. பெற்றோர் மூலம் கல்வி பெறுங்கள்,வளரும் வரை அண்டி இருங்கள், பிறகு கூட்டை விட்டுப் பறந்து போங்கள், கண்ணை மூடிக் கொண்டு பிறக்கப் போகும் பெண்ணை நம்புங்கள் என்பது தவறான வழிகாட்டுதல்.பள்ளி/ கல்லூரி/வேலைக்குப் போகும் போது என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் கிடைக்கும் அனுபவம் வித்தியாசப்படும், பக்குவம் பிறந்திருக்கும், படித்து வேலைக்குப் போய்ச் சொந்தக் காலில் நிற்கும் போது ஓரளவிற்குத் தெளிவு கிடைக்கலாம். நாளையே இவர்கள் தன்னிச்சையாக எடுக்கும் முடிவில் வில்லங்கம் ஏற்பட்டால் யார் துணையிருப்பார்கள்? பெற்றோரின் சம்மதத்துடன் எடுக்கும் முடிவுகளே பிள்ளைகளுக்குப் பெருமை சேர்க்கும்,பாதுகாப்பானதும் கூட.
16-மே-2013 01:09:42 IST
வயதுப் பெண், பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு,
வயது வந்த குழந்தைகளை வளர்ப்பது அழகான சிற்பக்கலை. .அழகான சிற்பத்தை உருவாக்கி அவசரத்தினால் ஏதேனும் உறுப்பைச் செதுக்கும் போது கெடுத்து விடக் கூடாது.. சிற்பத்தைச் செதுக்கும் சிற்பியின் கவனத்தைப் போல டீன் ஏஜ் குழந்தைகள்பால் ஒவ்வொரு பெற்றோரின் அக்கறையும் கவனிப்பும் இருக்க வேண்டும்..கள்ளம் கபடமில்லாமல் பழகும் பிள்ளைகளின் மனதில் திட்டிக் காயப்படுத்தி அவர்களுக்குத் தோன்றாத எண்ணங்களை வரவழைத்து விடாதீர்கள், எதை வேண்டாம் என்று வலியுறுத்துகிறோமோ அதைச் செய்து பார்த்தால் என்ன? என்று பரிக்ஷித்துப் பார்க்கும் வயது இது. அன்பால் வழி நடத்துங்கள். வார்த்தைகளிலும் செயல்களும் நம்பிக்கைகளை நிரப்புங்கள். எங்கோ ஏதோ ஒரு பெண்ணோ ஆணோ படிக்கும் காலத்தில் செய்த செய்த தவறுகளுக்காக உங்கள் வீட்டிலும் அப்படி நடக்குமோ என்று பயப்படாதீர்கள், பயமுறுத்தாதீர்கள். உங்கள் ஆழ்மன அச்சங்கள் அவர்கள் மனதில் ஆறாத அச்சுக்களாய் ஏறாமலிருக்கட்டும். உங்கள் கவலைகளைக் கனிவாகவும் அக்கறையாகவும் அவர்களிடத்தில் சேர்ப்பியுங்கள், சந்தேகக்கண் கொண்டு பார்க்காமல் நீங்கள் அவர்கள் மேல் கொண்ட நம்பிக்கையை எடுத்துக் காட்டுவதாய் உங்கள் சொற்களும் செயல்களும் அமையட்டும்.தோளிற்கு மேல் வளர்ந்து விட்டால் பெண்ணானாலும் ஆணானாலும் தோழன்/தோழியே. நட்புடன் பழகுங்கள்., உங்களிடம் தனக்கு வந்தக் காதல் கடிதத்தைக் காட்டி என்ன செய்யலாம் என்று கேட்குமளவிற்கு நட்பும் வழிகாட்டுதலும் அமையட்டும். உங்களுக்குப் பருவ வயதில் ஏற்பட்ட மாற்றங்களையும் நீங்கள் எப்படி கடந்து வந்தீர்கள் என்ற அனுபவ அறிவையும் பகிருங்கள். மதில் மேல் பூனையாக இரண்டுங்கெட்டான் பருவத்தில் நீங்களே தவறான பாதையில் தள்ளி விடாதீர்கள். தந்தை, தாயில் இருவரும் சேர்ந்து பெண்ணைக் கண்டிப்பதற்குப் பதில் ஒருவர் ஆறுதலாக இருந்தாலே போதும், வேறு எங்கும் ஆறுதல் தேடிப் போகத் தோன்றாது, தன்னை அப்பாவாவது நம்புகிறாரே என்று நினைப்பார், உங்கள் விழிகளைக் கடந்து வழிகள் மாறும் வாய்ப்புகள் குறைவு.அளவுக்கு மீறிய நம்பிக்கையும் சுதந்திரமும் தவறு..அதே போல அளவுக்கு மீறிய கட்டுப்பாடும் அவநம்பிக்கையும் சுடுசொற்களும் சந்தேகமும் மிகவும் தவறு. சுரப்பிகள் சுரக்கும் ரெண்டுங்கெட்டான் வயதில் உங்களின் அருகாமையும் அரவணைப்பும் வயது வந்தப் பிள்ளைகளுக்கு நிச்சயம் தேவை. மிகவும் கவனமாக வளர்க்க வேண்டிய பருவமிது. கஷ்டப்பட்டுப் பெற்றதை விடப் பல மடங்கு கவனமாக வளர்க்க வேண்டிய பருவத்தில் உங்கள் உயிரான மகள்/மகனின் எதிர்காலத்திற்கு நீங்களே தவறான பாதைக்குச் செல்ல அடிகோலிடாதீர்கள்.
12-மே-2013 04:18:15 IST
பள்ளியோ கல்லூரியோ படிக்கும் வயதில் பெரும்பாலான பெண்களும் ஆண்களும் கடந்து வரும் பருவம் தான் இது. இன்றைய ஆண்-பெண் நட்பும் பள்ளிப்பருவத்திலே காதலித்து ஊர் சுற்றுவதாய்க் காட்டும் திரைப்படங்களும் தொலைக்காட்சி, செய்தித்தாள், வானொலி போன்ற ஊடகங்களும் ஆணும் பெண்ணும் பழகினாலே காதலில் தான் விழுவார்கள் என்று எண்ணச் செய்ததின் விளைவே உங்களைப் பாடாய்படுத்தியது. உங்கள் பெற்றோர் மேலும் தவறில்லை. உங்களைக் கண்டிப்பாக நம்புகிறார்கள், ஆனால் உங்கள் வயதை நம்ப மாட்டார்கள், ஒன்றிற்கு இரண்டு பெண்களை எந்த அவப்பெயரும் ஏற்படாத வகையில் படிக்க வைத்துக் கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. எச்சரிக்கை மணி மனதிற்குள் அடித்துக் கொண்டே இருப்பதாலே அவர்களின் வேண்டாத எண்ணங்களே உங்கள் மேல் நம்பிக்கையின்மையைக் கொண்டு வரச் செய்து கண்காணிக்கச் செய்திருக்கிறது. வார்த்தை வீச்சுக்களையும் பரிசளித்திருக்கிறது. தவறுகளே செய்யாமல் அதற்குத் தண்டனைகள் பெறும் வலி எவ்வளவு கொடுமையானது என்பதை நன்றாக அறிந்தவள். தற்கொலை எண்ணம் மிகவும் தவறு. எக்காலத்திலும் தற்கொலைக்கு முயலாதீர்கள். அவ்வழி எதற்கும் தீர்வாகாது. பெண்ணின் உடலில் உள்ள கருமுட்டையில் கணவரின் லட்சக்கணக்கான உயிரணுக்கள் ஒன்று சேர்ந்து முட்டி மோதிப் போராடி அதில் ஒன்று போய்ச் சேர்ந்து கருவாக உருவாகி உடலாகி ..உயிராகி..வெற்றி வாகை சூடியவர்கள் நாம். ஒரு வேளை நாம் மோதாமல் வேறு உயிரணு சேர்ந்திருந்தால் அது நம் அண்ணணாகவோ அக்காளாகவோ இருந்திருப்பார்கள். அப்படி அங்கே வென்றவர்களால் இந்த வாழ்க்கையில் வெல்ல முடியாதா? கஷ்டப்பட்டு சுமந்து பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் சாதித்துப்பெருமை சேர்த்து இந்தப் பெண்ணையா நாம் சந்தேகித்தோம் என்று தலையைக் குனியவும் உங்கள் வளர்ச்சியால் தலை நிமரவும் வையுங்கள். தற்கொலை எண்ணங்கள் மேலோங்கி இருந்தால் நல்ல பெண் நட்பு வட்டத்துடன் பழகி அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆறுதல் சொல்லக் கூட வேண்டாம். கேட்பதற்குப் புரிந்த தோழி இருந்தாலே போதும். நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் இஷ்டதெய்வத்தின் சன்னிதியில் தற்கொலைக்கு எந்தக் காலத்திலும் முயற்சிக்க மாட்டேன், வாழ்ந்து சாதித்துக் காட்டுவேன் என்று சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக உங்களுக்கு உண்டான ஆண்கள் நட்பு வட்டத்தைக் குறைத்துக் கொள்ளவோ கத்திரித்துக் கொள்ளவோ செய்வது, படிப்பில் நன்றாகக் கவனம் செலுத்துவது, சொந்தக் காலில் நிற்கும் அளவிற்குத் தகுதிகளை வளர்த்துக் கொள்வது, தைரியத்தை வளர்த்துக் கொள்வது, உங்கள் குறிக்கோள் ஆண் நண்பர்களைத் தேடிப் பிடிப்பதில் அல்ல, படிப்பில், சாதிப்பதில் என்பது நிரூபித்துக் காட்டுங்கள்...வீழ்ந்தன்று. ..வாழ்ந்து...உங்கள் நோக்கம் இதில் இருப்பதைக் கவனிக்கும் பெற்றோர் உங்களைப் பற்றிய பயமில்லாமல் இருப்பார்கள். கவனமாக வண்டியை ஓட்டச் சொல்லி அறிவுறுத்துவது உங்கள் மேல் இருக்கும் சந்தேகத்தினால் மட்டும் அல்ல, எதிராளிகள் மேல் இருக்கும் பயத்தினாலும் கூட. அதுவே வாழ்க்கைக்கும் பொருந்தும். உங்களின் பெற்றோரைப் பற்றிய இயலாமையும் தற்கொலை எண்ணங்களுமே பலவீனமாகி நீங்கள் எந்த ஆணின் வலைக்குள்ளும் விழுந்து விடக் கூடாது. ஆண்/பெண் எவ்வகை நட்பிலும் கவனம் இருக்கட்டும். மனதை அலைபாய விடாதீர்கள். படித்து வேலைக்குச் சென்று பக்குவம் வந்த பிறகு நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்லவையாக அமையும். அது வரை எவரானாலும் எச்சரிக்கையுடன் பழகுதல் நலம்.
12-மே-2013 04:10:42 IST
அன்புத்தம்பி பச்சி அவர்களுக்கு, நீங்கள், குடும்பத்தினர் நலமா? செல்ல மகள் எப்படி இருக்கிறாள்? நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவென்று நினைக்கிறேன். மனைவி, குழந்தையுடன் நலமுடன் வாழப் பிரார்த்தனைகளுடனும் வாழ்த்துகளுடனும்.....
12-மே-2013 03:08:27 IST
தோழி அமுதா, பெண்கள் அதிர்ஷ்டசாலிகள், எப்படி என்று கேட்டால் அவர்களுக்கு பிறந்தகம், புக்ககம் என்று இரண்டு வீடுகள், பிறந்த வீட்டில் தொப்புள் கொடி மற்றும் ரத்த சம்மந்தமென்றால் புகுந்த வீட்டில் தாலிக்கொடி, கணவரை வைத்துக் கிடைக்கும் உறவுகள் என்று அமையும். உங்களுக்கு மட்டுமில்லாமல் அனேகம் பேருக்கு அம்மா, அக்கா, தங்கை மேல் பாசம் கொண்ட கணவரே கிடைத்துள்ளனர். சமீபத்தில் என் தோழியை அடிக்கும் கணவரிடம் மனைவி கணவரையோ கணவர் மனைவியையோ அடிப்பது சரியா? தவறா என்பது குறித்த விவாதம். கணவர் மனைவியை அடிப்பது தவறு, திருப்பி அடித்தால் உங்கள் நிலைமை? ஆணுக்கு எதிலும் பெண் இளைத்தவரில்லை,ஏனடிக்கிறீர்கள்?என்றதற்கு,பின்னே என்னங்க, நாக்கா அது? சுழட்டி சுழட்டி அடிக்கிறா..அதான் இந்த பஞ்ச் கொடுத்தால் அந்த நாக்கோட இஞ்ச் குறையும் என்று சொன்னார். சில வீடுகளில் மனைவியின் வாயை அடக்கக் கூடக் கணவர்கள் அடிப்பதுண்டு. ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது தவறான செயல். முதலில் உங்களை அடிக்கும் அளவிற்கு நிலைமையைக் கொண்டு செல்லாதீர்கள். அடித்தால் பதிலுக்குத் திருப்பி அடியுங்கள்................அன்பால்.....மெளனத்தினால்....பொறுமையால்.....பக்குவமான அணுகுமுறையினால்....ஆண்கள் உருவத்தில் பெரியவர்கள், உள்ளத்தில் குழந்தை மனதுக்காரர்கள். கொடுமைக்காரக் கணவரையும் அன்பால் திருத்த முடியும். மீசையை முறுக்கிக் கொண்டு , பார்ப்பதற்குக் கரடு முரடாக, வல்லினமாய் இருக்கும் ஆணினம், அன்பு காட்டும் பெண்ணினம் முன்பு தோற்று விடுவது கண்கூடு. கணவரது பலவீனம் எது என்பதைப் பார்த்து அங்கே அன்பாலே தட்டுங்கள். அன்பு, புரிதல், மதித்தல்,அனுசரித்தல் போன்றவை எளிய சூத்திரங்கள்...ஆத்திரங்கள் சாதிக்காததை இந்தச் சூத்திரங்கள் சாதிக்கும்.. இடி வீட்டில் விழப் போகிறது என்ற சூழலைத் தவிர இடித்துரைத்தல்,அதிர்ந்து பேசுதல் வேண்டாமே. பணிவது பெண்ணியமா? நிச்சயமாக. சூறாவளிக் காற்றில் வேரோடு சாயும் மரங்களின் நடுவில் வளைந்து கொடுத்து நாணல் வாழவில்லையா?எங்கள் வீடு, உங்கள் வீடு என்று எப்போதுமே பிரித்துப் பார்க்க வேண்டாம். நம் வீடு என்று சொல்லுங்கள், செயலிலும் நிரூபியுங்கள்.அவர் உங்கள் வீட்டு விசேஷத்திற்கு வரவில்லையென்றாலும் நீங்கள் உங்கள் விசேஷமாக அவர் வீட்டு விசேஷத்தில் அன்புடன் வேலை செய்யுங்கள். முதலில் உங்கள் விரிசல்களைப் பேசியோ அன்பு காட்டியோ சரி செய்யுங்கள். இடைவெளி குறையும் போது இடையில் வந்தவர்களும்(பக்கத்து வீட்டு அக்கா) விலகும் வாய்ப்பு இருக்கிறது. 'ஒரு கை ஓசை தராது', வாக்குவாதத்தின் போது மெளனம், தவறுகள் தன்பால் இருந்தால் ஏற்றுக் கொள்ளுதல், அடுத்த முறை மீண்டும் அவ்வாறு நடக்காமல் பார்த்தல், நிதானம், தன்மையாகப் பேசுதல், உணர்வுகளைப் புரிந்து மதித்து நடத்தல் ஒவ்வொரு கணவரும் மனைவியும் கடைபிடிக்க வேண்டிய நல்ல பண்புகள். முடிந்தால் புகுந்த வீட்டு உறவுகளிடம் மனம் விட்டுப் பேசி அன்புடன் பழக முயற்சியுங்கள். மிரட்டியோ தட்டியோ அன்பைப் பெற முடியாது., தானாகப் பூத்து வர வேண்டும், கேட்டு வாங்கும் பொருளல்ல காதல். மனதார உணர்ந்து பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வேண்டியது நேசங்கள். அதற்கு உங்கள் அன்பான நடவடிக்கைகள் அடித்தளம் அமைக்கட்டும்.அதிகாரம் 'அதி' காரமாகாமல் அன்பு ஆதாரமாகட்டும். புரிதல் பிறந்தால் தெளிவு பிறக்கும், பக்குவமாகப் பிரச்சினைகளைக் கையாளலாம்.
10-மே-2013 07:04:18 IST
ஜாய் அவர்களுக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரியே, முன்பெல்லாம் நிறைய பேர் கருத்துக்களைத் தெரிவித்தார்கள், இப்போது அதிகம் காண முடிவதில்லை. ராமன், அந்தப் பெண்ணிற்குத் திணிக்கப்பட்ட பிடிக்காத வாழ்க்கையாகவே இருக்கட்டும், அதற்காகத் தவறுகள் செய்யலாம் என்பது எந்த விதத்தில் நியாயம்? முறையாக விவாகரத்து பெற்று அவருக்குப் பிடித்த வாழ்வை வாழ வேண்டியது தானே. இதே போல ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த ஆண் இப்படி செய்திருந்தால் பெண்ணின் நிலை? ஆண்- பெண் என்ற பாரபட்சமின்றிச் சிந்திக்க வேண்டும். ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகாது. தீர்வுமாகாது. இந்தப் பெண்ணிற்கு வயது வித்தியாசத்தில் திருமணம் செய்விக்கும் போதே தவிர்த்து வேறு துணையை மணந்திருக்கலாமே. அப்போது இவரின் வேலையோ பணமோ ஏதாவது ஒன்று இவருக்கோ குடும்பத்திற்கோ கிடைத்து 'காம்பிரமைஸ்' செய்திருக்கலாம். அப்போதெல்லாம் விட்டு விட்டு பாதை மாறியது தவறு தானே. கணவருடன் மனம் விட்டுப் பேசி, தன் ஆசைகளையும் தேவைகளையும் புரிய வைக்காதது இந்தப் பெண்ணின் தவறு தானே(இல்லை, இவர் பேசி இந்த வாசகர் மறைத்திருக்கலாம்). இந்தப் பகுதிக்குக் கணவரும் மனைவியுமே சேர்ந்து எழுதி குற்றப்பட்டியலை வாசிக்கலாம். அப்போது தான் இருபக்கக் குட்டுக்களும் வெளிச்சத்திற்கு வரும். நாம் எவ்வளவு தான் வாதித்தாலும் உண்மை நிலவரம் சம்மந்தப்பட்ட இருவருக்குமே தெரியும்.எந்த உறவானாலுமே ஒளிவுமறைவின்றி மனம் விட்டு வெளிப்படையாகவும் தைரியமாகவும் பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது உறவைப் பலப்படுத்தும், தேவையற்ற கற்பனைகளை வளர்க்காது, பரஸ்பர நம்பிக்கை வலுக்க வைக்கும். அடுத்த அடி என்ன எடுக்கலாம் என்பதற்கு அடித்தளம் அமைக்கும்.
01-மே-2013 18:38:10 IST
திரு. ராமன் அவர்களுக்கு, 'Marriage for convenience' திருமணத்திற்கு மட்டுமில்லாமல் வாழ்க்கைக்கும் பொருந்தும். உங்களின் கருத்துக்களில் உண்மை இருந்தாலும் நம் இந்தியர்களுக்கென பண்பாடு இருக்கிறது. நீங்கள் சொல்வது படி பார்த்தால் எவர் மனதுக்குப் பிடித்த எவருடனும் வாழலாம், பொருளாதார சுதந்திரம் இருந்தால் போதும் என்பது போல் இருக்கிறது, ஒரு ஆணிற்கு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வரும் வேளையிலே இன்னொரு பெண் மேல் ஈர்ப்போ மோகமோ காதலோ வரலாம், அப்போது உடன் இருப்பவரை விட்டு விட்டு மலர் விட்டு மலர் மாறும் வண்டைப் போல் தாவிக் கொள்ளலாம். ஆணிற்கு ஒரு பெண்ணிடமோ பல பெண்களிடமோ காதல் வரலாம், குழந்தை பெற்றதால் அழகு குறைந்து விட்டாள், படிப்பில்லை, பணமில்லை, வேலையில்லை. ஏன் மனைவி செய்த சாம்பாரில் புளிப்பு, உப்பு, காரமில்லை என்ற சப்புக் காரணங்கள் கூடக் கிடைக்கலாம். இதே போல் பெண்ணிற்கும் வேறொரு ஆணின் மேல் காதல் ஏற்பட்டு இருக்கும் வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்ளலாம், விட்டு விலகிப் பிடித்த வாழ்வைத் தொடரலாம். அவரவர் நியாயங்களும் வாதங்களும் சிந்தனைகளும் அவரவருக்குப் பெரிது தானே. நீங்கள் குறிப்பிடும் மேலை நாட்டுக் கலாச்சாரத்தில் நடப்பது என்ன? 'My kids and your kids are playing with our kids'என்ற கொள்கை. இங்கு படிப்பு, சபை நாகரிகம், பணம் என்று அனைத்து விதங்களிலும் தரமான வாழ்க்கை வாழும் பிள்ளைகளுக்கு முக்கியமாகக் கிடைக்க வேண்டிய அன்பு? ஒரு குழந்தைக்குப் பெற்ற தந்தை, தாய் செலுத்தும் அன்பை வளர்ப்புத்தந்தையாலோ தாயாலோ நூறு சதவிகிதம் கொடுக்க முடியாது. பெற்றவரால் மட்டுமே தரக் கூடிய அன்பில்லாமல் ஏனோ தானோவென்று வளர்ந்து புகைக்கும் போதைக்கும் அடிமையாகும் நிலை. பெண்ணிற்குப் பெற்ற தாயே பாதுகாப்புப் பொருளைக் கொடுத்துச் செல்லும் அவல நிலை. அன்பு கிடைக்காமல் தனித்து ஏமாந்து வளரும் குழந்தைகள் பின்னாளில் துப்பாக்கிச் சூடு செய்யுமளவிற்கு மதம் பிடித்தவர்களாக மாறும் சூழல். குடும்பம் என்ற நல்ல அமைப்பிலிருந்தே நல்ல பிள்ளைகள் பிறக்கிறார்கள். அங்கு தவறும் போது சமுதாயத்திற்கு மோசமான குடிமக்களாய் மாறும் அவல நிலைக்குப் பெற்றவர்களே உடந்தையாகின்றனர். இங்கு தொலைக்காட்சியில் ஒரு அலைவரிசையில் அப்பா முறையைச் சேர்ந்தவரே பெண்ணுடன் உறவு வரை சென்று கர்ப்பம், அண்ணன் - தங்கை உறவு முறை என்று தெரியாமலே குடும்ப வாழ்க்கை என்று சண்டை போட்டுக் கொள்வார்கள். பார்க்க வேடிக்கையாகவும் சில நேரங்களில் பரிதாபமாகவும் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கற்பனைகள், ஏக்கங்கள், ஆசைகள், அவை வயது ஏற ஏற மாறும், பக்குவம் பிறக்கும். அதற்கேற்பப் பிடித்த துணையை மாற்றிக் கொண்டே போனால் என்னாகும் நிலை? காதல் என்பது அற்புதமான உணர்வு, மலர் மலர்வதைப் பார்ப்பது கடினமோ அவ்வளவு நுட்பமானது. யாருக்கு எப்போது எந்த சூழலில் காதல் பிறக்குமென்பது அனுமானிக்க முடியாத ரகசியம்.காதல் என்பது தானாக வர வேண்டியது, வரவழைக்க முடியும் என்பது கனவு என்ற கூற்றிலிருந்து மாறுபடுகிறேன். வரவைக்கவும் முடியும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்களை முன்வைக்க முடியும்.என் உறவினர் ஒருவருக்குப் பிடிக்காத,அழகில் இணையில்லாத துணை. தொடக்கத்தில் வெறுத்தார். ஆனால் அந்தப் பெண்ணின் அன்பான குணத்தாலும் சகிப்புத்தன்மையாலும் இன்று அந்த ஆணிற்கு அந்தப் பெண்ணை விடப் பேரழகி உலகில் இல்லை எனும் அளவிற்கு அன்பு செலுத்துகிறார். இப்போது இருக்கும் சிந்தனைகள் மாறலாம்.குழந்தைக்கு மிட்டாய் தந்து ஏமாந்த நேரத்தில் ஊசி போடுவது குழந்தையின் நலனிற்காக, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போல் தோன்றும் சில பல விஷயங்களும் சில நன்மைகளுக்காய்...விஜய், அஜீத், ரவி, விஷால் போலக் கணவர் வேண்டும் என்று நினைப்பது தான் கனவு. அதே போல அசின், ஹன்சிகா, தமன்னா போல மனைவி வேண்டும், ஏன் அந்த நடிகைகளே மனைவியாக வர வேண்டும் என்று நினைப்பது தான் கனவு. கிடைக்காத ஒரு பொருளிற்காகக் கையில் கிடைத்ததன் பலன் தெரியாமல் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்வதை விட சில பல 'காம்ப்ரமைஸ்' தவறில்லை என்றே தோன்றுகிறது. அதற்காக நரகமாய் வாழ்க்கை அமைந்தால் சகித்துக் கொண்டு வாழ வேண்டுமென்று சொல்ல வரவில்லை. அப்படி சூழல் வரும் போது சட்டத்தின் உதவியுடன் பிரிந்து புரிந்த துணையுடன் முறையாகத் திருமணம் செய்து வாழலாம். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது வாழ்க்கையா?? நான் சொன்ன கருத்துக்கள் கனவு போலத் தோன்றினாலும் யதார்த்தத்தில் கனவை நனவாக்குவதில் பிழையில்லையே. நல்ல முறையில் வளர்க்கப்படும் பிள்ளைகளே எதிர்கால நாட்டை உருவாக்குகிறார்கள், குடும்பம் என்ற அமைப்பு சிதையாமல் இருக்கவும் நான் சொல்லும் கருத்துக்கள் உதவும்.பெண்ணானாலும் ஆணானாலும் தனிமனித ஒழுக்கத்துடன் இணையுடன் காதலாய் வாழ்வதே யதார்த்த வாழ்விற்கு நல்லது.
01-மே-2013 18:25:30 IST
உங்களின் பதிவில் நடுநிலையான விவரங்கள் இல்லாமலிருப்பது போல் தோன்றுகிறது. அழகான மனைவி, அன்பான குழந்தைகள் என்று தொடக்கத்தில் அமைதியாகவே வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. உங்கள் வேலைப்பளு வார இறுதி நாட்களிலும் அதிகம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதன் நிமித்தமாக மனைவியைக் கண்டு கொள்ளாமல் விட்டிருந்தீர்களா? 'கிணற்றுத்தண்ணீரை ஆற்று வெள்ளமா கொண்டு போகும்' என்று வெள்ளந்தியாய்ச் சில கணவர்கள் மாடாய் உழைக்க கணவரிடமிருந்து கிடைக்காத ஏதோ ஒரு மகிழ்ச்சிக்காக தடுமாறும் மனைவி அதிகமாகிக் கொண்டிருக்கும் சூழல்.உங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ மனைவி அடுத்த ஆண்களை ரசிக்கிறார் என்ற குற்றச்சாட்டு. ஒவ்வொரு ஆணிற்கும் திரிஷா, அசின் என்று கனவு நாயகி இருப்பது போல ஒவ்வொரு பெண்ணிற்கும் விஜய், அஜீத் என்று மனதில் இருக்கலாம். தவறில்லை. அதே போல சில மனைவிகள் பெருந்தன்மையாகப் பழகும் கணவரிடத்திலேயே அந்தப் பையன் ஹீரோ மாதிரி இருக்கான் பாருங்க என்று வெளிப்படையாகப் பேசிப் பார்த்திருக்கிறேன். அடுத்த ஆணைப் பார்ப்பதே தவறு என்றால் யாரும் யாரையும் பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். சிலர் வெளிப்படையாகக் கூறுவார்கள், சிலர் மனதிற்குள்ளேயே ரசிப்பார்கள்.சிலர் அசடாட்டம் சொல்லி விட்டு கணவரிடம் வாங்கிக் கட்டியும் கொள்வார்கள்.உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தோ அவர் எதையோ எதிர்பார்த்தோ பார்த்திருக்கலாம்.சில கணவர்களுக்கு கண்ணே மணியே என்று கொஞ்சி தங்கள் பாசத்தைப் பகிரத் தெரியாது. ஆனால் மனைவிக்கு அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருந்து பொய்த்துப் போயிருக்கலாம்.ஆனால் உங்களுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்காமல், இதை வளர விடாமல் மனைவியிடம் பேசி அவருக்குப் பிடித்தது போல தோற்றத்திலும் செயல்களிலும் மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தால் இவ்வளவு தூரம் ஆகியிருக்காது.அடுத்த ஆணைப் பார்ப்பதோடு இல்லாமல் உறவு வரை சென்றிருக்கிறார் என்றால் நீங்கள் கண்டிக்கவில்லையா? குழந்தைகளுக்காகப் பொறுத்தீர்களா? இருவருக்குமே பரிசோதித்துப் பார்த்தீர்களா? மனைவியின் நலம்விரும்பியிடம் விஷயங்களைச் சொல்லித் திருத்த முற்பட்டீர்களா? மனைவியிடம் இது குறித்துப் பேசினீர்களா? 'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' போல பிரச்சினைகளை வளர விட்டு வழி கேட்டிருக்கிறீர்கள்.இரண்டே வழிகள், ஒன்று மனைவியிடம் மனம் விட்டுப் பேசி அவர் குற்றங்களை உணர்ந்து திருந்தி வந்தால் ஏற்றுக் கொண்டு, இருவரும் சிகிச்சை எடுப்பது. இல்லையா? பெரியவர்கள் வரை விஷயத்தைக் கொண்டு சென்று மனைவியைப் பிரிவது. ஆனால் இரண்டாம் வழியைத் தேர்ந்தெடுத்தால் நாளை குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். இவர் குறிப்பிடுவது உண்மையாக இருக்கும்பட்சத்தில் மனைவி செய்தது மன்னிக்க முடியாத துரோகம், அதற்குக் கடவுள் நிச்சயம் தண்டனை கொடுப்பார். அப்பாவிகளை அழ வைக்கும் இணைகளுக்குக் கடவுளின் சன்னிதியில் நரக வேதனைகள் நிச்சயம்.
30-ஏப்-2013 08:04:34 IST
அன்புடன் அந்தரங்கத்தில் இது வரை எத்தனை எத்தனை கடிதங்கள்..குமுறல்கள்..விடை தேடும் வினாக்கள். வடுக்களாய் ஆறாத ரணங்களுக்கு மருந்தைத் தேடி விழி நனைக்கும் புலம்பல்கள் என்று எவ்வளவு விதங்கள். சிறிய விஷயங்கள் பெரிய மாற்றங்களை உண்டு பண்ணும். திருமணமான ஆணும் சரி, பெண்ணும் சரி. தங்கள் இணையைக் அன்பாலும் அரவணைப்பாலும் அன்னியோன்னியத்தாலும் நட்பாலும் காதலாலும் காமத்தாலும் அணைத்துக் கொள்ள வேண்டும். இது எவர் மனதிலும் சலனத்தை ஏற்படுத்தாது.பரஸ்பர நம்பிக்கை, ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அளவு கடந்த நிபந்தனையற்ற அன்பு, புரிதல், அனுசரித்தல், நட்பு பாராட்டுதல் தம்பதியருக்குள் அவசியம் தேவை.ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன? ஒரு குழந்தை பிறந்த பின்பு பிடியிடையாள் 'பிடி'யிடையாளாக உடல் பெருத்து, தன் உடலையோ அழகையோ பேணாது அழுக்கு ஆடையுடன் வீட்டு வேலைகளே கதியென்று இருக்கிறாள். கணவரைச் சம்பாதிக்கும் இயந்திரமாகக் கருதி அது வேண்டும், இது வேண்டும் என்ற நச்சரிப்பிலும் பாதி ஆயுளைக் கழிக்கிறார். சதா சர்வமும் குழந்தைகளையே பேணிக் கணவரைக் கண்டுகொள்ளாமல் விடும் போது மனத்தடுமாற்றங்கள் கணவருக்கு ஏற்படுகிறது. இதே போல் தன் உடலைப் பேணாத, ஆடைகளில் கவனம் செலுத்தாத எப்போதும் சிடுசிடுவென இருக்கும் கணவர், அடிப்படை அன்பும் மனிதாபிமானமுமின்றி வீட்டு வேலைகளுக்கும் தன் வயதான பெற்றோரைக் கவனிக்கவும் மட்டும் பயன்படுத்திக் கொண்டு உடல் அளவிலோ மனதளவிலோ அரவணைப்பு செலுத்தாத வேளைகளிலே தடம் மாறும் அப்பாவிப் பெண்களும் இருக்கிறார்கள். தவறு செய்வதாகச் சித்திரிக்கும் பெண்களில் உடல் சுகத்திற்காக, சிலர் மன சுகத்திற்காக, சிலர் மன அமைதிக்காக என்று செல்கிறார்கள். அந்தக் காதல் இணையிடம் குளிரக் குளிரக் கிடைத்திருந்தால்...அள்ளிக் கொடுக்க முடியா விட்டாலும் கிள்ளியாவது கொடுத்திருந்தால் பாதை மாறி இருப்பாரா? என்பது சந்தேகம் தான். சரி, தவறு என்ற வாதத்திற்கு வரவில்லை. தவறுகளுக்கான காரணங்கள் ஆராயப்பட்டுக் களையப்படுவது தம்பதியர் தடம் நிலை தடுமாறாமலிருக்க உதவும்.ஒரு ஆணிற்குப் பெண்ணிடமிருந்து உடல் சுகத்துடன் உள்ள சுகமும் தேவைப்படுவது போல ஒரு பெண்ணிற்குக் கோடி கோடியாய்ப் பணமோ நகைகளோ சொத்துக்களோ மகிழ்ச்சியைக் கொடுத்திடாது. கணவரின் அன்பான பேச்சு, அக்கறை, காதல், கனிவான அணுகுமுறையே அதிக சந்தோஷத்தைக் கொடுக்கும்.வெளிநாடுகளில் முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் கூட பார்த்தவுடன் முகமலர்வுடன் 'எப்படி இருக்கிறாய்?' என்ற கேள்வி முன்வைக்கப்படும், எத்தனை கணவர் மனைவியைக் கேட்டிருக்கிறார்? எத்தனை மனைவி கணவரிடம் கேட்டிருக்கிறார்? அது கேட்கக் கூடாத கேள்வி இல்லை தானே.. நம் குடும்பத்திற்குத் தானே கணவர் சம்பாதிக்கிறார், தன் இல்லத்திற்காகத் தானே ஷரீர ரீதியில் மனைவி பாடுபடுகிறார். 'சாப்பிட்டாயா? வர வர உன்னைக் கவனிச்சுக்க மாட்டேங்கிறியே?' இந்த அக்கறையான கேள்வி மனைவியிடம் கேட்கப்படுகிறதா? மனைவி என்ன ஆடை அணிகிறார்? எந்த விதமான கூந்தல் அலங்காரம் செய்திருக்கிறார்? எந்த நிறம் பிடிக்கும்? எது பிடிக்காது? எந்த உணவு மிகவும் பிடிக்கும்? பிடித்த பத்து என்னென்ன? எத்தனை பேருக்குத் தெரியும். அதே போல் கணவரின் திறமைகள் என்ன? எந்த நேரத்தில் என்ன மன நிலை? பிடித்தது என்ன? பிடிக்காதது என்ன? உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கப்படுகிறதா? கணவர்களே உடற்பயிற்சி செய்து நன்றாக உண்டு உடலைப் பேணி, முடி திருத்தி, ஆடைகளில் அக்கறை செலுத்தி, கூலிங் கிளாஸ் போட்டு ஹீரோவாக மாறுங்கள். முகத்திலும் அகத்திலும் வித்தியாசம் காட்டுங்கள். துணையைப் புரிந்து ரொமான்டிக்காக நடந்து பாருங்கள், மனைவியின் அழகை, செய்யும் சிறிய நல்ல செயல்களையும் அவ்வப்போது பாராட்டுங்கள், குற்றங்களையும் விரலை நீட்டிச் சுட்டிக் காட்டாமல் அக்கறையுடன் பொறுமையாய் அன்புடன் நண்பனாய் இருந்து விளக்கிப் பாருங்கள். மல்லிகைப்பூவும் அல்வாவும் மனைவிக்கு இனிப்பதில்லை, அதை வாங்கித் தர வேண்டும் என்று தோன்றிய கணவரின் அன்பே அவர் இதயத்தை மணக்கவும் ருசிக்கவும் செய்திருக்கிறது. மனைவிக்குப் பிடித்த நாயகனாய் மாறுங்களேன். தவறில்லையே. மனைவியும் கணவரிடத்தில் அன்புடன் பழகுவதோடு மட்டுமில்லாமல் குறிப்பறிந்து பழகலாமே. மனைவியும் உடல் அழகையும் உள்ள அழகையும் மேம்படுத்தி...கணவருடன் அன்னியோன்னியமாக இருக்க வேண்டும். யாருமில்லாத கடற்கரையில் கைகள் கோர்த்து அலைகள் கால்களை நனைக்க,காதல் இதயங்களை நனைக்க அங்கே ஒரு காதல்புரி உருவாகட்டுமே. குறுகுறு பார்வைகள், செல்லக் குறும்புகள், மின்சாரத் தீண்டல்கள், எதிர்பாராத முத்தங்கள், பின்னாலிருந்து கட்டியணைத்தல், தோளோடு சாய்ந்து பள்ளி, கல்லூரி கால பசுமையான நினைவுகளை அசை போடுதல், அலுவலகத்தில் பிரச்சினையென்றால் மடியோடு கிடத்தி இதுவும் கடந்து போகும் என்று கண்ணீரைத் துடைத்தல், விழி நனைக்கும் அன்பு வழிகள். உங்களுக்குள்ள விரிசல்களை இந்த உரசல்கள் சரிசெய்யட்டும். இரவுகளில் பத்து நிமிட உரசல்களில் இயந்திரத்தனமாய் செலுத்தும் அன்பை விடக் காதலாய் ஈருடல் ஓருயிராய் வாழ்வது எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் வராது. இயந்திரமயமான உலகிலே பணம் சம்பாதிப்பதும் சொத்துக்கள் சேர்ப்பதும் குழந்தைகளைப் படிக்க வைப்பதுமே வாழ்க்கையில்லை. அவை வாழ்வின் இன்றியமையாதவை என்றால் கணவர் மனைவி உறவு அதை விட இன்றியமையாதது. வயதானாலும் மனதிற்கு என்றும் இளமை தான். ஒவ்வொரு நாளும் இணையை உயிருக்குயிராய்க் காதலியுங்கள்.
30-ஏப்-2013 07:41:20 IST
அன்புத் தோழிக்கு,
நீங்கள் ஒருவரை விரும்புகிறீர்கள், அவர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று காலத்தின் கணக்கு இருந்தால் நீங்கள் நேசித்தவரை வாழ்த்தி விலகினாலும் சேருவீர்கள், விரும்பியவரைச் சேரும் விதியில்லை என்றால் எவ்வளவு பழகினாலும் சேர முடியாது. இது கடவுள் போடும் முடிச்சு. முதலிலிருந்தே உங்கள் மாமாவின் மனதில் நீங்கள் இல்லை, அவர் திருமணத்திற்கு முன்பு வேறொரு பெண்ணைக் காதலிப்பதாகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதை மீறிப் பிடிவாதம் பிடித்துத் திருமணம் செய்தது தவறு. நீங்கள் தொடக்கத்திலேயே பிரியமானவருக்காக, பிரியமாய், நல்ல புரிதலுடன் பிரிந்திருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. தான் நேசித்தவர் எங்கிருந்தாலும் பிரியமானவருடன் மகிழ்வுடன் வாழட்டும் என்றே காதல் உள்ளம் விரும்பும். "பிரிவு என்பது யாராலும் மறுக்க முடியாத வலி, நினைவு என்பது யாராலும் திருட முடியாத பொக்கிஷம்", ஆனால் வாழ்த்தி விடை பெறவில்லை. அடுத்தத் தவறு மாமனுடையது.மணமாகியும் மனைவியிடம் பாசமில்லாமல் உடல்சுகத்திற்கு மட்டும் பழகிக் கொண்டு அந்தப் பெண்ணுடன் இன்னொரு ஊரில் குடித்தனம் நடத்தும் போக்கு கண்டிப்பிற்குரியது. மூன்றாவது அந்தப் பெண், என்ன தான் காதலித்திருந்தாலும் மணமான, இன்னொரு பெண்ணிற்குச் சொந்தமானவருடன் வாழ்ந்து வருவது தவறானது.. ஆக மூவரும் தவறுகள் செய்திருக்கிறார்கள். வாசகியின் சுயநலத்திற்காய் மணம், மனைவி வந்த பின்பும் காதலியுடனும் சேரத் துடிக்கும் கணவர், காதலித்தவருக்கு மணமாகி விட்டது, நன்றாக வாழட்டும் என்று வாழ்த்தி விலகாமல் அடம் பிடித்து இடம் பிடிக்கத் துடிக்கிறாள் இன்னொரு பெண். உங்கள் மூவரிடமும் காதலைத் தேடிக் களைத்து விட்டேன். முதலில் தவறு செய்திருந்தாலும் மாமனின் மகிழ்விற்காகத் தன் வாழ்க்கையையே பங்கு போடத் துணிந்த இந்தத் தோழி காதலைப் புரிந்து கொண்டிருக்கிறார். கணவர் இருவரில் ஒருவருடன் வாழ முயற்சிப்பது தான் யதார்த்த வாழ்க்கைக்கு நல்லது. உங்கள் திருமணத்தைப் பதிவு செய்திருந்தீர்களா? என்று குறிப்பிடவில்லை. அவர்கள் காதலித்து ஒன்றாகக் குடித்தனம் நடத்துகிறார்கள் என்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய் உங்களுக்கு முன்பு அவர்கள் ஊரறிய மணமுடிக்காமல் பதிவுத்திருமணம் செய்திருக்கிறார்களா? என்ற விவரங்கள் அவசியம். இல்லை உங்களைத் தான் முதலில் மணமுடித்துப் பதிவும் செய்திருக்கிறார் என்றால் சட்டப்படி நீங்கள் தான் முதல் மனைவி, கணவர் சம்பாதிக்கும் அனைத்திலும் உங்களுக்கும் உங்களுக்குப் பிறக்கும் வாரிசுக்கும் தான் அனைத்து உரிமைகளும் உண்டு. இதை எல்லாம் அந்தப் பெண் யோசிக்காமல் இருந்திருப்பாரா? மணமான போதும் தன் காதலரை விட்டுத் தராத பெண் தன் உரிமைகளை எப்படி விட்டுக் கொடுப்பார்? தன் பாதுகாப்பிற்காய் துணிச்சலாய் இறங்குவார். கூடிய சீக்கிரமே உங்களை விவாகரத்து செய்யச் சொல்லி நச்சரிப்பார், அதில் வெற்றியும் பெறுவார். இரட்டைக் குதிரையில் சவாரி செய்யலாம் என்று நினைக்கும் மாமனது எண்ணம் சாத்தியமில்லாதது. சுயநலமானது. வாழ்க்கை விளையாட்டல்ல. இரு பெண்களுக்குமிடையில் போராட வேண்டி இருக்கும். உரிமைச்சிக்கல், உணர்வு ரீதியான போராட்டங்கள் என்று சந்திக்க வேண்டி வரும். உதாரணமாக மூத்தாருக்குப் பிறக்கும் பிள்ளையை வெளியில் கூட்டிக் கொண்டு போவாரா? இளையாள் பிள்ளையுடன் சுற்றுவாரா? வெவ்வேறு ஊரில் தங்கிக் கொண்டாலும் நாளை பெண் என்றாலோ பையன் என்றாலோ வளர்ப்பிலும் எதிர்காலத்திலும் பிரச்சினைகள் தோன்றும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள், படிப்பு, வாழ்க்கைக்கான செலவு. இப்படி நிறைய. அவர்கள் திருமணப்பேச்சு எழும் வேளையிலே இவர் அப்பாவிற்கே இரண்டு மனைவிகள், இந்த வீட்டில் எப்படி பெண் கொடுப்பது? எடுப்பது போன்ற சிக்கல்கள். உங்களுக்கு உங்கள் மாமனுடன் வாழ வேண்டும், வாழ்க்கையை இன்னொருத்தியுடன் பங்கு போட விருப்பமில்லை என்றால் சட்டத்தின் உதவியை நாடலாம். அப்படி இல்லை என்றால் விவாகரத்து செய்து விட்டு தனியே செல்வது உத்தமம். குழந்தை இல்லாததால் புரிந்த துணையை மறுமணமும் செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அதனால் விலகுவது புத்திசாலித்தனம். காதலி, மனைவி இருவரில் ஒருவருடன் மட்டுமே வாழ வேண்டும். அதைக் கணவரும் முடிவு செய்ய வேண்டும், அதை விட்டு விட்டு இருவருடன் சேர்ந்து வாழலாம் என்று சொல்வது அபத்தம். ஒரு புடவையைச் சொந்த அக்கா, தங்கைக்கே விட்டுக் கொடுக்காதது பெண் மனம், நாத்தனார், மாமியாருக்குள்ளே உரிமைப் போராட்டங்கள் வரும், எப்படி இந்தப் பெண்ணால் தன் கணவரைச் சொந்தம் கொண்டாடுபவரை அனுசரித்துக் கடைசி வரை வாழ முடியும்? இரு தார மணம் சட்டம் அங்கீகரிக்காத ஒன்று. இரண்டு பேரைத் திருமணம் செய்தால் அதற்கே வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பலாம். நல்ல வழக்கறிஞரைப் பெரியவர்கள், நலம்விரும்பிகளுடன் சந்தித்து என்னென்ன செய்யலாம் என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்பாவியாய் இருக்காதீர்கள். பெண்களுக்குச் சட்ட விழிப்புணர்வு அவசியம். உணர்ச்சிவயப்படாமல் அழாமல் நிதானமாகச் சிந்தித்து அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள்.
24-ஏப்-2013 01:15:03 IST