"இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டா இது மாதிரி சந்தர்ப்பம் கெடைக்குமான்னு தெரியலை"பெண்ணே, உண்மையாகவே இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால், உங்கள் வாழ்க்கை சின்னாபின்னமாவதற்கு, வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்றே தோன்றுகிறது. அந்தப் பணக்காரப் பையனுக்கு, இவர் உடல்மேல்தான் நாட்டமே தவிர, அன்பு என்பது சிறிதளவும் இருப்பதாகத் தோன்றவில்லை. உண்மையான அன்பு, நாம் அன்பு செலுத்துபவர்களை, அவர்களுடைய நிறைகுறைகளுடன் அப்படியே ஏற்றுக் கொள்ளச் சொல்லுமே தவிர, அவர்களைக் காயப்படுத்தாது. அந்த நபர் உண்மையாக அன்பு செலுத்துவதாக இருந்தால், இந்தத் தாய், அந்தச் சிறுகுழந்தையின் மீது வைத்திருக்கும் பாசத்தை மதித்திருக்க வேண்டும். இவருடன் வாழ்க்கையைத் தொடர்ந்தால், இந்தப் பெண்மணிக்கு வாழ்க்கையே நரகமாகிவிடும். கைவிட்ட முதல் கணவனுடன், இனிமேல் மணவாழ்க்கைத் தொடர முடியாது எனில், முறையாக விவாகரத்துப் பெற்று, இவரை நன்கு புரிந்து கொண்டு, மணம் செய்ய விரும்பும் ஆண் கிடைக்கும் வரை காத்திருக்கலாம். அதுவரை சுயதொழில் செய்து வரலாம். எனக்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இவருக்கு, இன்னும் பெண்களின் அடிமைத் தளைகளை உடைத்தெறிய அவதாரம் எடுத்த யாரும் "நீ யாருக்கும் பயப்படவேண்டாம். உன் வாழ்க்கைதான் உனக்கு முக்கியம். பிள்ளையை விட்டுப் பிரியவேண்டாம் என்று இங்கு எழுதும் கேடுகெட்ட மடையர்கள் சொல்வார்கள். அதைக் கேட்காதே. குழந்தையைக் குப்பைத் தொட்டியில் கடாசு. உன் உணர்ச்சிகளை பொசுக்கிக் கொண்டு, இந்தக் குழந்தைக்காக வாழ்ந்தாலும், அது வளர்ந்து, நீ பட்ட கஷ்டத்தை நினைக்கப் போவதில்லை. அன்பு என்பது பெண்களை அடிமைப் படுத்தும் தளை. எனவே நீ அவனுடனே சென்று வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழ். அவனும் அவனுக்குப் பிறந்த குழந்தையுடன் உன்னைத் துரத்தி விட்டால், கலங்காதே. குழந்தையை எங்காவது வீசிவிட்டு வேறு யாராவது அழைத்தால் சென்று வாழ்க்கை நடத்து. இந்தச் சமூகத்துக்குச் சரியான பாடம் புகட்டு" என்று அறிவுரை கூறவில்லை என்பதே எனக்கு ஏற்பட்டுள்ள ஆச்சரியம்.- கண்ணன்
20-மே-2013 15:49:47 IST
"கொம்புள்ளதற்கு ஐந்து முழம், குதிரைக்கு பத்து முழம், வீம்புகாரிக்கு வேண்டுமே ஆயிரம்தான்" என்று ஆரம்பிக்கும் செய்யுள் ஒன்று இறுதியில் "துஷ்டனைக் கண்டால் தூர விலகு" என்று முடியும். அதாவது நாம் காயப்படாமல் தப்பிக்க, கொம்புள்ள விலங்குகளிடமிருந்து ஐந்து முழ தூரமும், குதிரையிடமிருந்து பத்து முழ தூரமும், யானையிடமிருந்து ஆயிரக்கணக்கான முழ தூரமும் விலகி இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு தூர அளவை நிர்ணயிக்கும் செய்யுள், துஷ்டனைக் கண்டால் வெகு தூரத்திலேயே விலகிவிட வேண்டும் என்கிறது. பெண்ணைப் பெற்றவர்கள், ஆண்பெண் நட்பை அந்த துஷ்டனைப் போல்தான் கருதுகிறார்கள். கண்ணாக வளர்த்த தன் மகள், ஏதாவது வேண்டாத நபரிடம் சிக்கிவிடக் கூடாதே என்ற பரிதவிப்பே அது. அப்படி பெற்றோர்களால் நினைக்கப்படும், ஆண்பெண் நட்பை சாதாரணமாக இல்லாமல், மிகவும் விரும்பி வளர்க்கும் மகளாக இருந்தால், அங்கேதான் உண்டாகிறது இந்த இரண்டு பிரிவினருக்கும் சிக்கல். மிகவும் கண்டிக்கிறோம் என்று இந்தப் பெற்றோரும் பிள்ளைகளை மிகவும் காயப்படுத்துகிறார்கள். பிள்ளைகளும் நம் நன்மைக்குத் தானே சொல்கிறார்கள் என்று நினைப்பது இல்லை. எதுவும் அளவுக்கு அதிகமாக ஆகும்பொழுது, அதுவே பிரச்சினைக்கு வழி வகுக்கிறது. பதின்ம வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு, அன்புடனும் அரவணைப்புடனுடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதை முதலில் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எவ்வாறு மெனோபாஸ் சமயத்தில், பெண்களுக்கு மனஇறுக்கம், எரிந்து விழுதல், அடிக்கடி கோபப்படுதல், அழுதல் ஆகியவை ஏற்படும்போது அதை புரிந்து ஆண் ஆதரவுடன் நடந்து கொண்டால் அந்த சிரமமான நேரத்தை அவர்கள், சற்று எளிதாக கடந்து விடுவார்களோ, அதுபோலவே தான் பதின்ம வயதும் என்பதை பெற்றோர்கள் அறிய வேண்டும். பதின்ம வயது பிள்ளைகளிடம், ஆதரவு காட்டி, பெற்றோர்களே தோழர்களாக நடக்கும்பட்சத்தில், இப்படிப் பட்ட குழப்பமான காலகட்டத்தை, பெற்றோர் மற்றும் பிள்ளைகள் இருவருமே, மனஉளைச்சல் இன்றி, ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு எளிதில் கடக்கலாம். -அன்புடன் கண்ணன்
13-மே-2013 10:59:10 IST
"எனக்கு என்ன வாங்கி கொடுத்தாலும், நான் என்ன சொன்னாலும், அதை அப்படியே அம்மாவிடம் போய் சொல்லி விடுவார்" என்ற இந்தப் பெண்ணின் வரிகள் அவரின் மன வேதனையை வெளிப்படுத்துகின்றன. என்னதான் பெற்ற தாயே ஆனாலும், கணவனுக்கும், மனைவிக்கும் இடையிலான அந்தரங்கங்களை வெளிப்படுத்தக் கூடாது என்றே எல்லா தம்பதிகளும் நினைப்பார்கள். அதோடு, திருமணம் ஆன புதிதில், புரியாமல் இதுபோன்று, தம் மாமியாரைப் பற்றிக் கணவனிடம் குறை கூறலாம். அப்போது, தன்தாயின் நற்குணங்களையும், தமக்காக அவர் பட்ட கஷ்டங்களையும் மனைவியிடம் சொல்லி, அவர் மனைதை மாற்ற வேண்டுமே தவிர, அதைத் தன் தாயிடம் அப்படியே சொல்வது, மாமியார் மருமகள் இருவரின் உறவுக்கும் இடையில் கணவனே நெருப்பு வைப்பது போன்றது. பாலுணர்வே வாழ்க்கை இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஒன்றை மட்டும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். பாலுணர்வு இல்லாமலும் வாழ்க்கை என்பது இல்லை. நம் மக்கள், பசி, தாகம் என்பது போல் பாலுணர்வும் உயிர்களின் நியாயமான தேவை என்பதை உணர வேண்டும். ஆண் தன் தேவைகள் அனைத்தையும் நன்கு நிறைவேற்றும், அழகிய மனைவி வீட்டில் இருக்கும்போதும், அடுத்த பெண் தேடுகிறான். ஆனால் ஒரு மனைவி தன் கணவனிடம் தனக்குத் தேவையான பாலுறவு கிடைக்கவில்லை என்று சொல்வதை மட்டும் நாம் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம். உள்ளபடியே அந்தப் பெண், அந்தக் கணவனின் அன்பு புறக்கணிப்பால்தான் அடிபட்டுக் கிடக்கிறார். அதனாலேயே உளவியல் அழுத்தம் ஏற்பட்டு, அவர் தாறுமாறாக நடந்து கொள்வதாகத் தோன்றுகிறது. இங்கு அந்தப் பெண், என் கணவர் என்னை சரியாக கவனித்துக் கொள்ளாததால், நான் பக்கத்து வீட்டு ஆளுடன் பழகி விட்டேன் என்று சொல்லவில்லை. மனம் நைந்து கிடக்கும் எனக்கு ஏதாவது நல்வழி கூறுங்கள் என்றுதான் கேட்கிறார், அந்த பரிதாபத்துக்குரிய பெண். இங்கு பதியப்பட்ட கருத்துக்கள் கூறுவதுபோல், மதுவின் காரணமாக, கணவரின் பாலுணர்வு அடைப்ட்டுப் போயிருந்தாலும் கூட, தன் மனைவியிடம் அந்தக் கணவர் அன்புடன் நடந்து, தன் நிலையைக் கூறி நடந்தால், இந்த மனைவியே அவருக்கு ஊன்றுகோலாக இருந்திருப்பார். காமத்தைப் புறம் தள்ளி, காதல் அங்கு நிலைத்திருக்கலாம். இதுபோன்ற, பெண்களின் கண்ணீர் கடிதங்கள், ஆண்‘ இன்னும், பெண்ணை தன் அடிமை என்று நினைப்பதை மாற்றிக் கொள்ளாமலே இருக்கிறான் என்பதற்கு சாட்சியாகவே உள்ளன. - அன்புடன் கண்ணன்
06-மே-2013 15:50:25 IST
சகோதரி உமா, தங்கள் வேதனை புரிகிறது. எப்பொழுது தங்கள் தந்தையார், தன் தாயாரை எதிர்த்து, வேற்று சாதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்தாரோ, அப்போதே தங்கள் தாயாரின் நலன்களைப் பாதுகாப்பதில் அவர் உறுதியாயிருந்திருக்க வேண்டும். திருமண விசயத்திலேயே அவர் தன் குடும்பத்தாரிடமிருந்து முரண்பட்டே திருமணம் செய்திருக்கிறார். அப்படி இருக்கும்போது, உங்கள் தாய்க்கு உரிய மதிப்பை, அந்த மாமியார் வழங்க மறுக்கும்பட்சத்தில், அவர் உறுதியாக அதை எதிர்த்திருக்க வேண்டும் அல்லது அந்தக் குடும்பத்திலிருந்து விலகி, தனிக்குடித்தனம் வந்திருக்க வேண்டும். அதை செய்யாமல் இருந்ததன் காரணமாக, உங்கள் அம்மாவுக்கு மிகுந்த மனவேதனை ஏற்படுத்தப் பட்டுள்ளது. குழந்தைகளான உங்களுக்கும் நிச்சய்ம் தாயின் மனவேதனை கண்டு, குழந்தைகளின் இயல்பை விட்டு, மகிழ்ச்சியை இழந்து, மன உளச்சல் ஏற்பட்டிருக்கும். குடும்பத்துப் பெரியவர்கள், குழந்தைகள் வளச்சிக்கு எதிரான செயல்களை நிறுத்தினார்கள் என்றால், அனைத்துக் குடும்பங்களிலும் நிம்மதியே நிறைந்திருக்கும். தங்கள் தாயைப் போன்ற பெண்கள் வணங்கிப் போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களால்தான் இங்கு குடும்பம் என்ற, குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மன நலம் காக்கும் அமைப்பு காக்கப் படுகிறது.
ஒன்று மட்டும் உண்மை. இங்கு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் அனைவருமே, யானையைப் பார்த்த குருடர்கள் போன்று, அவரவர் தடவிப் பார்க்கும் பகுதியை வைத்து, யானை தட்டையானது, யானை தூண் போன்றது என்று பலவிதமாக எண்ணிக் கொண்டு, கருத்துக்களை முன்வைக்கிறோம். ஆனால் பாதிக்கப்படும் சூழ்நிலையில் உள்ளவர்களுக்கே அந்த நிலையின் உக்கிரம் புரியும். வாணலியில் வறுக்கப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கத் தான், அந்தச் சூடு தரும் வேதனையின் உண்மையான அளவு தெரியும். மற்றவர்கள் அதை உணர்தல் கடினமே. இருப்பினும், பொதுவான சூழல் சார்ந்த அறிவுரைகள் முன்வைக்கப்படுதல் இயல்பே. ஆனால் கூட்டுக் குடும்பம் என்ற பெயரில் கூடிஇருந்து கொண்டு, ஒருவரை ஒருவர் சித்திரவதை செய்துகொள்வதை விட, பிரிந்து இருந்து, அவ்வப்போது சந்திக்கும்போது உண்மையான பிரியம் காட்டினால் அதுவே சிறந்ததாகும். -அன்புடன் கண்ணன்
10-ஏப்-2013 12:22:36 IST
"என் கணவர், அம்மா பிரியர் அல்ல வெறியர்' என்று சொல்லும் இந்தப் பெண், எதிர்காலத்தில் இவர் மகன் வளர்ந்து, இவர்மேல் பாசத்தைப் பொழியும்போது, எனது மகன் பாசக்காரப் பையன் என்பார். தனக்கென ஒரு அளவுகோலையும், தன் மாமியாருக்கு மற்றொரு அளவுகோலையும் பயன்படுத்தும் இவர் போன்ற பெண்கள் இன்றைய சமுதாயத்தில் மிக அதிகமாகி விட்டனர். ஒரு மகனை நன்கு வளர்த்து, வரைமுறைப்படுத்தி, திருமணம் செய்து இவர்களுக்குக் கொடுத்தபின், அந்த மகனைப் பெற்றவர்கள், எங்காவது முதியோர் இல்லத்தில் போய் கிடக்க வேண்டும் என்பதே இந்தக்கால பெரும்பான்மையான பெண்களுக்கு எண்ணமாக இருக்கிறது. ஒருவேளை, இவருக்கு ஒரு அண்ணன் இருந்து, இவர் தன் மாமியாரைத் தூக்கி எறியவேண்டும் என்று நினைப்பதைப் போல, அந்த அண்ணி எண்ணி நடந்தால், ஐயோ, ராட்சசி என் அம்மாவை என்ன பாடுபடுத்துகிறாள் என்று இவர் ஒப்பாரி வைப்பார். "தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போல சேலை' என்று ஒரு சொல் உண்டு. இவரைப் பெற்ற தாய்க்கே ஒரு சீரான மனநிலை இல்லாத போது, இவரிடம் நாம் நற்குணத்தை எதிர்பார்ப்பது எப்படி? இதற்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் தந்தை, மருமகனை வசைபாடி, மகளின் வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கி வைத்திருக்கிறார். தன் தாய் மேல் சற்று அளவுக்கதிகமாக பற்றுக் கொண்ட மகன் என்ற காரணத்திற்காகவே, அந்த நல்ல மனிதர் தன் வாழ்க்கையை இழந்து நிற்கிறார். உரலுக்கு ஒரு பக்க இடி. மத்தளத்திற்கு இரு பக்கமும் இடி என்பது போல் பாவம் அந்த மனிதர். அன்பு சாதிக்கும் செயலை எந்தக் காலத்திலும் மிரட்டல் சாதிக்காது என்பதை இப்பெண் உணர்ந்து கொள்ளவில்லை. தனிக்குடித்தனம் போகவில்லையென்றால் வரமாட்டேன் என்று சொல்லுவது ஆணவத்தின் உச்சம். அது அந்தக் கணவனின் பிடிவாதத்தை மீண்டும் உயர்த்திக் கொண்டுதான் போகும். அந்தக் கணவரும், இவருக்கு அனைத்து உரிமைகளையும், நன்மைகளையும் வழங்கி, இவரை மதித்து வந்திருப்பதையே கடிதம் சுட்டுகிறது. அந்த மாமியாரின் மேல் தவறு இருக்காது என்று சொல்ல வரவில்லை. அப்படி தவறு ஏதேனும் இருந்தாலும், தன்தாய் தன்னைத் திட்டும்போது எப்படி அனுசரித்துப் போகிறோமோ அதுபோல் மாமியார் வயதிற்கு மதிப்பு தந்து கொஞ்சம் சரிசெய்து சென்றிருந்தால், தற்போது கணவன் மனைவி இருவருக்கும் இந்தப் பிரிவுத் துயரம் வந்திருக்காது. இயல்பாகவே ஆண் தன்னிடத்தில், ஆண் எனும் அகங்காரம் கொண்டிருப்பவன். ஆனால் கணவர் தன் அகங்காரத்தை, உள்ளபடியே உள்ளத்தின் ஒரு மூலையில் பயன்படுத்தாமல் வைத்திருந்திருக்கிறார். அதை இந்தப் பெண் குத்திக் குதறி, அந்தக் கணவர் அதைப் பயன்படுத்தும்படி செய்து விட்டார். தாய் தந்தை பிரிந்து வாழ்ந்தால், அந்தச் சிறு குழந்தைகளின் மனநிலை எப்படி ஆரோக்கியமாக இருக்கும். அதையாவது எண்ணிப் பார்த்து, இந்தக கணவனும், மனைவியும் தமக்குள் மனம் விட்டுப் பேசி, மீண்டும் இணைந்து வாழ முயற்சிக்க வேண்டும். சொல்லப் போனால் இவர்களுக்குள் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை. பெரியவர்கள் இவர்கள் வாழ்க்கையில், தங்கள் சுமைகளை ஏற்றிவைத்து, இவர்கள் வாழ்க்கையின் முதுகெலும்பை ஒடிக்கப் பார்க்கிறார்கள். தம்பதியர் தம் அருமைக் குழந்தைகளின் நல்வாழ்க்கைக் காகவேனும், மனம்விட்டுப் பேசி, விட்டுக் கொடுத்து, அன்பான குடும்பமாக இணைந்து வாழவேண்டும் என்பதே நம் அனைவரும் விருப்பம். தமிழில் ஒரு சொல் உண்டு, "முன்கை நீண்டால்தான் முழங்கை நீளும்" என்று. நாம் விரல்கள் உள்ள முன்கையை முன்னோக்கிக் கொண்டு போகும்போதுதான், அதனுடன் இணைந்த முழங்கையும் முன்னோக்கி நகரத் துவங்கும். இங்கு முன்கையாக இருப்பவர் அந்த மனைவியே. தாம் பெற்ற பிள்ளைகள் எதிர்காலத்தில், மனச்சிதைவடையாத நல்ல பிள்ளைகளாக வேண்டும் என்று விரும்பினால், இவரே கணவனுடன் மனம் விட்டுப் பேசி சரிசெய்ய வேண்டும். இந்த உலகில், அன்பு, பாசம், மனிதநேயம் அனைத்தும் அடிப்படையிலேயே அமையப்பெற்றவர்கள் பெண்கள். அவர்களால்தான் இவ்வுலகில் முரட்டுத்தனம், கரடுமுரடான குணங்கள் மறைந்து ஆண் மென்மையடைகிறான். அப்படி இருக்கும்போது, அவனை மீண்டும் முரடனாக மாற்றும் செயல்களை இந்தப் பெண்கள் செய்யாமல் இருந்தால்தான் என்ன ? - அன்புடன் கண்ணன்
08-ஏப்-2013 11:23:10 IST
"எளிதில் சேர்ந்துவிடும் ஆண்கள் இருக்கும் வரையில், அவர்களை தங்களுக்கு சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பவாத பெண்களும் இருக்கத்தான் செய்வர்._சகுந்தலா அம்மையாரின் இந்தக் கருத்தை அப்படியே புரட்டிப்போட்டு, "ஆண்களைத் தங்களுக்கு சாதகமாக உரயோகப்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பவாத பெண்கள் இருக்கும்வரை, எளிதில் சேர்ந்து விடும் ஆண்களும் இருக்கத்தான் செய்வார்கள்" என்று சொன்னாலும, வரிகள் மிகப் பொருத்தமாகத்தானே இருக்கின்றன. கண்டிப்பதிலும் பெண்களின் தலைகோதி, நெற்றியில் முத்தமிடுவதைப் போல் உள்ளது. நெய்க்குத் தொன்னை ஆதாரமா அல்லது தொன்னைக்கு நெய் ஆதாரமா என்று ஒரு சொல் உண்டு. இவரால் அவர் கெட்டாரா அல்லது அவரால் இவர் கெட்டாரா. ஆகவே யார் செய்தாலும் தப்பு தப்புத் தானே. இதில் ஆண் என்ன, பெண் என்ன. இருவரிலும், நன்மையும் தீமையும் உண்டுதான். அன்பின் உருவான பெண்ணை, தன்னை அடிக்குமாறு பல காரியங்கள் செய்த அந்தக் கணவனின் செயல், உறுத்தவில்லை. ஒருதடவை, நம்பிக்கைத் துரோகத்தாலும், திருட்டுத்தனத்தாலும், வெகுண்டு புருசனை அடித்ததை வைத்து, அவள் மிகப்பெரிய ராட்சசி என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. கணவன் மற்றொரு பெண்ணைத் தேடிப்போனதால் தான், பாவம் அந்தப் பெண்மணிக்கு இந்த நிலை. அதிலும் பல தடவை மன்னித்தும் இறுதியில்தான் அடி கொடுத்திருக்கிறார்- அந்தப் பெண் அப்படி என்னதான் பலமாக அடித்திருக்கப் போகிறாள். கட்டிய மனைவியை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தில், மனைவி கணவனை அடித்தது, ஆணாதிக்க உணர்வுக்குக் கோபம் ஏற்படுத்துகிறது. இந்தப் பெண்ணின் தாலியை அறுத்து, விதவைப் பெண்ணுக்கு வாழ்வளிக்க விரும்புவதை நினைக்கையிலே என்ன சொல்வது என்ற புரியவில்லை. ஆனால் மனம் திருந்திய அந்தக் கணவனுக்கு, தற்சமயம் தேவை மனைவியின் அன்புதான் என்பதில் சந்தேகமில்லை. ஜுலியஸ் சீசரைக் கொன்றபின், புருட்டஸ் நிகழ்த்திய உரையில், சீசர் கொல்லப்பட வேண்டியவன் என்று அங்கிருந்த மக்களுக்கு தோன்றும் அளவுக்கு எண்ணத்தை ஏற்படுத்தினான் என்று படித்த நினைவு, இங்குள்ள சில பதிவுகளைப் படிக்கும்போது ஏற்படுகிறது. அதுபோன்று அப்பதிவுகள் நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துமாயின், டெல்லியில் ஒரு குழு நிகழ்த்திய வன்புணர்வைக்கூட, "பாவம் அந்த ஆறு ஆண்களும். அவர்கள்தான் என்ன செய்வார்கள். மது அருந்தியதால் ஏற்பட்ட மயக்கம், அவர்களைக் காமம் கொள்ளத் தூண்டியது. அதன் விளைவாகவே அந்தப் பெண்ணை தொடவேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பாவம் அவர்கள். அந்தப் பெண்தான் அவர்களை எதிர்த்துப் போராடி, அவர்களை மேலும் வெறி கொள்ளச் செய்துவிட்டாள். அவள் எப்படிப் போராடலாம் அந்த தன் நினைவு இழந்த அந்த அப்பாவி ஆண்களிடம். அதனால் தானே அவளைக் கெடுத்து, அவளையும் அவள் திருமணம் செய்துகொள்ள இருந்த நண்பரையும் கொலையும் செய்யும் நிலைக்கு அவர்களைக் கொண்டு போய் விட்டாள். அந்த அப்பாவிகள் தற்போது சட்டத்தின் பிடியில் தண்டனையை எதிர்நோக்கும், கொலைகாரர்களாய் நிற்கும் நிலைக்கு கொண்டு சென்ற, அந்தப் பெண்மணியை மன்னிக்கவே கூடாது. முடிந்தால் அதுபோன்ற சமுதாய உணர்வு அற்ற அந்த மகளைப் பெற்றதற்காக அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்கு வேண்டுமானால் தண்டனை வழங்கலாம். அந்த அப்பாவி காமுகர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் சொல்லும் மக்களே, அந்தப் பெண் செய்ததை ஏன் சுட்டிக் காட்ட மாட்டேன் என்கிறீர்கள்" என்று நியாயமான முறையில் யோசிக்க ஆரம்பித்துவிடுவோமோ என்று நினைத்தால், உண்மையிலேயே பயமாகத்தான் இருக்கிறது. - அன்புடன் கண்ணன்
26-மார்-2013 15:32:52 IST
"எல்லாக் கணவர்களும் மனைவிகளை ரசிப்பதில்லை.. ஹன்சிகாவாக சமந்தாவாகக் கூட ரசிக்க வேண்டாம், மனைவியாக, காதலியாக ரசித்திருக்கிறார்களா? என்றால் பெரும்பாலான இல்லங்களில் கிடையாது."-திருமதி காயத்ரி வெங்கட், இது மிகமிக உண்மையான வரிகள். தெரியாத ஊரில், பேருந்துநிலைய விசாரிப்பு இடத்தில், முன்பின் பார்த்திராத இனிமேலும் பார்க்க வாய்ப்பு இல்லாத பெண்ணிடம், முகமலர பேசும் கணவன், அடுத்த நிமிடத்தில், பேருந்தில் அமர்ந்திருக்கும் தன் மனைவியிடம், கடுகடுக்கிறானே. எவ்வளவு பெரிய முரண்பாடு. மிகச்சிறந்ததே நம் கைக்கு கிடைத்து இருந்தாலும், ஆண்களாகட்டும் அல்லது பெண்களாகட்டும் அவர்களுக்கு அதன் மதிப்பு தெரிவதில்லை. எல்லா மீன்வலைகளும், துவாரங்களால் ஆனவைதான் என்ற அடிப்படை உண்மையை மறந்து, பக்கத்து வீட்டுக்காரி / வீட்டுக்காரன் வைத்திருக்கும், மீன்வலையே மிகச் சிறந்தது. அதில் வடிகட்டி, கடுகுகளைக் கூட தனித்தனியாக பிரித்துவிடலாம் என்று ஒவ்வொருவரும், நினைப்பதுதான் உலகின் மிகச்சிறந்த வேடிக்கை. -அன்புடன் கண்ணன்
25-பிப்-2013 10:45:01 IST
"நான், 9ம் வகுப்பு படிக்கும் போதே என் அக்காவிற்கு கல்யாணம் நடந்து விட்டது. அப்போதிருந்தே, நான் அவனை விரும்பினேன். நானும், என் தோழியும் விளையாட்டாக அவனுக்கு போன் செய்து, "ஐ லவ் யூ' என்று சொல்ல, அதையே அவன் மனதில் வைத்துக் கொண்டு, என்னிடம் யாரும் இல்லாத சமயம் பேச முயன்றான். ஒரு நாள் என்னிடம், "ஐ லவ் யூ' என்றான். பிறகு, "என்னை லவ்வராக நினைத்தாலும் ஓ.கே., அண்ணனாக நினைத்தாலும் ஓ.கே.,' என்றான்."நம் பெண்குழந்தைகள் எந்த வழியில் செல்கிறார்கள். எதாவது அவர்கள் சிந்தனையில் நல்லது எது, கெட்டது எது என்று தோன்றுகிறதா என்ற சந்தேகம் இதைப் படிக்கும்போது ஏற்படுகிறது. பெண்களுக்கு இயல்பாகவே, தன்னை நெருங்கும் ஆணின் நோக்கத்தைக் கண்டுபிடிக்கும் சூட்சும புத்தி உண்டு. அப்படி இருந்தும், இதைப் போன்று குழப்பமடையும் நிலைக்கும் செல்கிறார்கள். நம் இளைஞர்களின் மனங்களை, கல்வியைத் தவிர மற்ற உபயோகமில்லாத, போலி மயக்க நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய எண்ணங்களை வளர்ப்பதில், நமது திரைப்படங்களும், ஊடகங்களும், விளம்பரங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒரு வகையில் இன்றைய இளைஞர்கள் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாகவே உள்ளது. இந்தவயதில் கல்வியில் முன்னேறி நல்ல நிலையை அடைதல் என்ற அவர்கள் நோக்கத்தை நெருங்க விடாமல், அவர்கள் மனதைக் குழப்பி, பல்வேறு திசைகளிலும் இழுத்துச் சிதறடிக்க, எத்தனை எத்தனை காரணங்கள் அவர்கள் முன்னே உள்ளன. திரைப்படம் அதில் மிக முக்கிய இடத்தில் உள்ளது. நிழலை, நிஜமாக நம்பி, தம் நிஜ வாழ்க்கையைத் தொலைப்பவர்கள் எத்தனையோ பேர். ஒரு காலத்தில், சினிமாக் காதலர்கள், தடித்தடியாக சிவாஜி கணேசன்களாகவும், ஜெமினிக் கணேசன்களாகவும், சரோஜாதேவிகளாகவும், தேவிகாக்களாகவும் இருப்பார்கள். அந்தக்காதலை, பள்ளிக்கூடத்திற்கு அழைத்துவந்து, பள்ளிசெல்லும் பிஞ்சுப் பிள்ளைகளை, காதலர்களாக்கி, முட்டாள்களாக்கி, காதல் மடையைத் திசை திருப்பி விட்டவர்கள் இந்த்த் திரைப்பட இயக்குநர்கள். புரியாத வயதில், தெரியாததை நம்பி, அதன்வழியே செல்ல ஆரம்பிக்கிறார்கள் இந்தக்குழந்தைகள். முடிவு, மொத்தக்குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் சீர்கேடு.
இதுபோன்ற குழப்ப நிலையில் உள்ள ஆண்களையும், பெண்களையும் ஒரு சமுதாயம் உள்ளடக்கமாகக் கொண்டிருந்தால், தெளிவு எங்கிருந்து கிடைக்கும். விலங்குகளின் கையில் எளிதாகச் சிக்கும் இரையாக, இங்கு பெண்கள் மாறினால், எப்படி இவர்கள் துணிவாக வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வது. பெற்றோர்கள் தங்கள் ஆண் பெண் குழந்தைகளை பயமுறுத்தி வளர்க்காமல், அவரவர்கள் என்னவெல்லாம் பிரச்சினைகளை, மற்ற ஆண் மற்றும் பெண்களால் சந்திக்க நேரிடும் என்று சொல்லி வளர்க்க வேண்டும். ஆண்குழந்தைகளுக்கு, பிற பெண்களை மதிக்கும் பழக்கத்தையும், இளமையிலிருந்தே பழகிக் கொடுக்க வேண்டும். தன் குடும்பத்தில், பெண்பிள்ளைகளை மதித்து வளரும் ஆண், சமுதாயத்தில் காலடி எடுத்து வைக்கும்போது, பிற பெண்களை மதிப்பதுடன், அவர்களுடன் நேர்மையான முறையில் பழகுவான். இரை தேடும புலியின் குணம் அவனிடத்தில் பெருமளவு குறைந்திருக்கும். -அன்புடன் கண்ணன்
13-பிப்-2013 09:32:18 IST
அன்பின் மீனவன், தாங்கள் மிக உயர்ந்த உள்ளம் கொண்டவர். திரு. ராஜு அவர்களின், "என்னை என் மனைவியுடன் வாழமட்டும் சொல்லிவிடாதீர்கள்" என்ற வரிகள், சென்ற வாரம் கருத்துரைத்த அனைவருக்கும், ஒரு தார்மீக கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் காரணமாகவே பெரும்பாலும் அனைவரும், வார்த்தைகளில் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் அந்த வரிகளின் பாச்சா தங்களிடம் பலிக்கவில்லை. தங்களின் வரிகள் ஒவ்வொன்றும், வாழ்க்கை என்ன வென்று விளக்கமாகச் சொல்கின்றன. வைரமுத்துவின வார்த்தைகள் என்று நினைக்கிறேன், "தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு, நந்தவனத்தில் நடந்துவந்த திருப்தி எனக்கு" என்று. அந்தத் திருப்தி உங்கள் எழுத்துக்களை படித்தவுடன் ஏற்படுகிறது. தம்பி ராஜு, திரு. மீனவனின் கருத்துக்களை தயவு செய்து, மனதில் நன்கு உள்வாங்குங்கள். இதற்கு மேலும் தங்கள் மனம் மாறவில்லை என்றால், உங்கள் மனைவி உங்களை விட்டுப் பிரிந்து சென்று வேறு நல்ல வாழ்கை அமைத்துக் கொள்வது நல்லது. மண் குதிரையை நம்பி வாழ்கை என்னும் ஆற்றைக் கடக்க முடியாதல்லவா. திரு மீனவன் அவர்கள் சொல்வதுபோல், முயற்சித்துத் தான் பாருங்களேன். மிக அதிக காதலுக்கும், மிகுந்த வெறுப்புக்கும் இடையே உள்ளது மிகச்சிறிய இடைவெளியே. வாழ்க்கையின் தாக்கம், அளவற்ற வெறுப்பை அன்பான காதலாக மாற்றவும் செய்யும் தன்மை கொண்டது. ஒரு சகோதரி சென்ற வாரம் எழுதியிருந்த்துபோல், இதில் சம்பந்தப்பட்ட நான்கு பெண்களுக்கும், அத்துடன் உங்களுக்கும் நன்மை ஏற்பட்டால் எங்களுக்கு மகிழ்ச்சியே. -அனபுடன் கண்ணன்
13-பிப்-2013 09:25:52 IST
தம்பி, தாங்கள் ஏன் ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பார்க்கக்கூடாது? அவர் உங்களுக்கு உதவலாம். நீங்கள் அதிக மன அழுத்தத்தில் உள்ளதாகத் தோன்றுகிறது. ஏழ்மை நிலையிலிருந்து, கற்ற கல்வியினால் நல்ல வேலையில் இருக்கும் உங்களைப் பற்றி உங்கள் வீட்டில் எத்தனையோ கனவுகள் இருக்குமல்லவா. விவசாயக் குடும்பத்தில் இருந்து, கல்வி கற்று உயர்தல் என்பது மிக நல்ல விஷயம். அவ்வாறு உயர்ந்த நீங்கள், அனைத்தையும் மீண்டும் அழிக்க நினைக்கலாமா? வாழ்வின் நெறிமுறைகள் என்பதே நம்மை நன்கு வழி நடத்தத் தான். தாங்கள் எழுதியுள்ள விதம், சொற் கோர்வை அனைத்தும் நல்ல கல்வியாளன் என்று உங்களை சொல்கின்றன. உங்கள் விருப்பங்கள் எதுவாயினும் இருக்கட்டும். தாங்கள் தயவு செய்து ஒரு நல்ல மருத்துவரை அணுகுங்கள். அதன் மூலம் நிச்சயம் பயன் கிட்டலாம். - அன்புடன் கண்ணன்
08-பிப்-2013 11:21:28 IST