பெண்ணே.. முள்ளில் சேலை...சேலையில் முள்ளென்று நான் கதை பேசப்போவதில்லை. சில மனமுதிர்ச்சிகளின் அவசியம் இங்கே உங்களுக்கும் உங்களின் தந்தைக்கும் அவசியமாகிறது. உங்களின் தந்தைக்கு சில வரிகள் முதலில்............பெற்றோரே, உங்களின் பாசமும் நம்பிக்கையும்தான் உங்களின் குழந்தைகளை கட்டிப்போடும் சத்தியக்கயிறுகள். அவற்றைக் கொஞ்சம் நம்புங்கள். அவற்றை போதித்து வளருங்கள் குழந்தைகளை.ஏமாற்றவேண்டும் என்ற முடிவு செய்தவர்கள் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றுவார்கள். அவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் சக்தி அவர்களின் மனச்சாட்சிகளுக்குத்தான் உண்டு. உங்களுக்கு இல்லை. மனச்சாட்சிகளை மதிக்கும் விதமாக குழந்தைகளை வளருங்கள்.தவறே செய்யும் குழந்தையாக இருந்தாலும் அவர்களிடம் பொறுப்பைக் கொடுங்கள். மீண்டும் ..மீண்டும்...மீண்டும்.ஒருவரை மீண்டும் மீண்டும் நல்லவர் என்று சொல்லும்போது "இன்னுமாடா இந்த ஒலகம் நம்மளை நம்புது?" என்ற கேள்வி அவருகுள் இருந்தாலும் அவர் நிச்சயம் நல்லவராவார். அதேபோல் ஒரு நல்ல மனிதனை பலமுறை கெட்டவர் என்று பழிக்கும்போது அவர் தவறு செய்யும் வாய்ப்புகளும் மிக அதிகம். குழந்தைகளிடம் ஒவ்வொரு முறையும் நீங்கள் வைக்கும் நம்பிக்கையை மட்டும் சொல்லுங்கள்.ஒரு தந்தையாய் நீங்கள் உங்கள் மகனிடமும் மகளிடமும் எதிர்பார்க்கும் ஒரு பெருமிதத்தை ஒரு தந்தையாய் நீங்கள் அவர்களுக்கு கொடுங்கள். "அவர்கள் கூறியவாறு ஓடிவிடலாம் என்றால், நான் யாருடனும் அந்த எண்ணத்தில் பழகவில்லை." என்ற வரிகள் தந்த வலி அதிகம்.பெற்றோரே கொஞ்சம் உணருங்கள்.அவர்களை கட்டவிழ்த்து விடச்சொல்லவில்லை. ஆனால் ஒரு சந்தேகப்பிராணியான பார்வை வேண்டாமென்றுதான் சொல்கிறேன்.....பெண்ணே..இது உங்களுக்கு, விரல் நுனிகளில் வாழ்க்கை விளையாடும் காலம் இந்த "ஐ"யுகம்.சில வரையறைகளுடன் வாழ்வதில் தவறுகளில்லைதான்.தான் உண்மையான நட்பாகப் பழகிய பெண்ணுக்கு பிரச்னை என்று தெரிந்தும், தன் தந்தை உங்களை குற்றம் சாட்டிய போது வாய் திறக்காமல் இருந்த ஒரு நட்பின் அவசியம் தேவையாகப் படவில்லை எனக்கு.தன் மகனைக் கண்டிக்காமல் உங்களைப் பழித்துப் பேசிய ஒரு ஆண் மேலாதிக்கத் தந்தை, அவரின் வாரிசாக தப்பாமல் வளர்ந்த ஒரு மகன்...இந்தப் 18 வயதில் உங்கள் வாழ்க்கையில் இவர்களுக்கு நீங்கள் இடமே கொடுத்திருக்கவேண்டாம் என்பது என் எண்ணம். முக்கியமான ஒன்று..மிக முக்கியமான ஒன்று, வாழ்க்கை இந்தக் கடிதங்களிலும் இந்த வார்த்தைகளிலும் அடைபட்டு அழிந்து போவதற்கல்ல பெண்ணே..... நம்பிக்கை வளருங்கள்..தந்தையிடமும் தாயிடமும் நேரடியாகப் பேசுங்கள். கண்களைப் பார்த்து பேசுங்கள். உங்கள் மனதின் உறுதியை அவர்களை உணரச் செய்யுங்கள். அதன் செயல்பாட்டை மதிப்பெண்களிலும் உங்களின் இன்ன பிற சாதனைகளிலும் காட்டுங்கள்.தயங்காமல் சொல்லுங்கள் நான் திருட்டுத்தனமாக எதுவும் செய்யமாட்டேன்.அப்படி யாரையும் பிடித்திருந்தால் காதலித்தால் நான் உங்களிடம் தயங்காமல் சொல்வேன் ஆனால் எனக்கு இன்று அந்த எண்ணங்களை விட கல்விதான் முக்கியம்.அதனால் நான் நினைக்க விரும்பாத விஷயங்களை நீங்கள் என்னை நினைக்கச் செய்துவிடாதீர்கள் என்று சொல்லுங்கள்.ஒவ்வொரு பெற்றோரும் கொஞ்சம் விபரம் தெரிந்த தங்களின் மகன் மகளிடம் தற்கொலை என்ற எண்ணத்திற்கு என் வாழ்வில் இடம் இல்லை என்ற ஒரு சத்தியத்தை வாங்கினாலும் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது. தற்கொலை என்பது ஒரு ஆப்ஷன் - ஒரு தெரிவு - என்ற ஒன்றே இருக்கக்கூடாது.பாரதியின் புதிய ஆத்திசூடியை ஒரு முறை வாசியுங்கள் பெண்ணே... நட்புடன் மீனவன்
13-மே-2013 10:06:45 IST
மனதைத் தொட்ட உங்களின் வரிகள் இவைதான்..."எந்தப் பெண்ணுடனாவது வாழ ஆசையிருந்தால் என்னிடம் சொல்லிவிடுங்கள்.சந்தோஷமாக விலகிவிடுகிறேன்" என்ற உங்களின் வலிகளில் தோய்த்த வார்த்தைகள்தான். அதில் சந்தோஷம் துளியுமில்லை என்பது தெளிவு.15 வருடங்கள் உடன் வாழ்ந்த உங்கள் கணவருக்கு புரிந்திருக்கும்.ஒரு அழகான ஆங்கில குறிப்பு நினைவுக்கு வருகிறது.." நீங்கள் நேசிக்கும் ஒன்றை உங்களிடம் வருமாறு வலியுறுத்தாதீர்கள்.அன்பைக்கொடுத்து அதை சுதந்திரமாக விடுங்கள். அது உங்களை நேசித்தால் உங்களிடம் வரும். வரவில்லை என்றால் அது என்றுமே உங்களை நேசித்ததும் இல்லை, உங்களிடம் வருவதற்காக விதிக்கப்பட்டதும் இல்லை " என்ற வரிகள். நீங்கள் சொன்ன வார்த்தைகளும் நீங்கள் அவரை உங்களை விட்டு விலக அனுமதித்ததும் அவர் என்றும் உங்களை விட்டு விலகாமல் கட்டிப்போடும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பற்றி அதிகம் எழுதவில்லை. சமுதாயத்தால் நல்ல மதிக்கப்படும் பணியில் இருப்பவர் என்று உங்கள் கணவரின் வேலையைப் பற்றிக் கூறியிருக்கிறீர்கள். உங்களுக்கு மகள் இருந்தால் அந்த மகள் உங்கள் கணவருடன் அதிக நேரம் செலவழிக்கட்டும். மகள்களின் நம்பிக்கையை ஒரு நல்ல தந்தை உடைக்கமாட்டார். குழந்தைகளிடம் எப்போதும் போல் தந்தையைப் பற்றி உயர்வாகப் பேசுங்கள். குழந்தைகளிடம் நல்லொழுக்கம் கற்பிக்கும் பணியை அவரிடம் ஒப்படையுங்கள். இன்றைய
பெற்றோர்களே...நமது பெற்றோர் நம்மை நம்பினர். மனைவிக்குத் துரோகம் செய்யாதே என்று நமது பெற்றோர் நமக்குச் சொல்லித்தரவில்லை. ஏனென்றால் அவர்களின் மகன்கள் அந்தத் தவறுகளைச் செய்யலாம் என்ற நினைப்பு அவர்களிடம் கனவில் கூட இல்லை.சமுதாயத்தின் பொதுத்தவறுகளான பொய் சொல்லக்கூடாது ...திருடக்கூடாது ...குடிக்கக்கூடாது என்றுதான் நமக்கு சொல்லிக்கொடுத்திருந்திருப்பார்கள். மாறிவரும் காலங்களிலும் அழிந்துவரும் சில கட்டமைப்புகளும் பெருகி வரும் இந்த நேரத்தில் அடுத்த தலைமுறைக்குக் கற்றுக் கொடுக்கவேண்டிய அடிப்படை ஒழுக்கங்கள் அதிகரித்துவருகின்றன.அவற்றில் ஒன்று இது........
அன்பியே... இன்னும் ஒரு அருமையான குறிப்பு இங்கே சொல்லவேண்டும். .." நான் உன் அன்புக்குத் தகுதியற்ற நிலையில் இருக்கும்போது என்மேல் அன்பு செலுத்து..ஏனென்றால் அப்போதுதான் எனக்கு அதன் தேவை அதிகம்(Love me when I deserve the Least,Because that's when I need it the most)"...உங்கள் கணவர் ஒரு குற்ற உணர்ச்சியில் இருக்கும் போது நீங்கள் அவர் மேல் வெறுப்பைக் காட்டாதீர்கள். நீங்கள் கை நீட்டி அடித்ததைவிடக் கண்ணீரால் அவரைத் தாரை வார்க்கத் தயாரானதும், நீங்கள் செல்லலாம் என்றதும்தான் சாட்டையடியாக அவரிடம் விழுந்திருக்கும். ஒருமுறை அவரிடம் பேசுங்கள்." நான் உங்களை மீண்டும் நம்புகிறேன். நீங்கள் என்னை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் செய்ய முடியும்.உங்களின் மனச்சாட்சிதான் உங்களைக் கட்டுப்படுத்தவேண்டும், எனது கட்டுப்பாடுகளல்ல.ஒவ்வொருமுறை உங்களைப் பற்றிக் குழந்தைகளிடம் பேசும்போதும் மனதெல்லாம் ஒரு பெருமிதமும், ஒவ்வொரு முறை உங்களை நினைக்கும்போதும் மனதெல்லாம் ஒரு காதலும் இருந்தது. அந்த உணர்வுகளை நான் மீண்டும் கொண்டுவரப் போராடுகிறேன்..இவற்றையெல்லாம் மீண்டும் என்னில் கொண்டுவரவேண்டி நான் மீண்டும் உங்களை நம்பப்போகிறேன். தவறுகள் செய்யத்தோன்றும் ஒவ்வொரு முறையும் அப்பழுக்கற்ற்வர் தனது தந்தை என்று நினைக்கும் குழந்தைகளையும், உங்களை நல்லவராய் வளர்த்ததாய் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கும் உங்கள் பெற்றோரையும் ஒரு நல்ல கணவன்,ஒரு நல்ல தந்தை என்று உங்கள் மேல் மதிப்புவைத்திருக்கும் இந்த சமுதாயத்தையும் ஒருமுறை நினைத்து விளைவுகளை யோசித்து செயல்படுங்கள். ஒரு போலீஸ்காரியாக நான் உங்களைக் கண்காணிக்கப்போவதில்லை." என்று சொல்லுங்கள். இந்த முறை நிச்சயம் அவரது சகோதரி அல்லது சகோதரரிடம், இந்த விஷயங்கள் பேசுவது அவசியம்.
உங்களின் இந்த வலிகளை நீக்குவதற்கு நீங்கள் போராடுவதைவிட அவர் போராடவேண்டும்.ஏமாற்றிவிட்டு மனம்திருந்திவரும் கணவர்கள்,மனைவியிடம் மனதாலும் உடலாலும் அதிக நெருக்கம் காட்டவேண்டும்.ஒரு மனைவி ஏமாற்றப்படும்போது அவளின் மனம் தான் ஏமாற்றப்பட்டதற்கான காரணம் தேடித் தடுமாறி அலைகிறது. தான் உடல் ரீதியாக அழகாக இல்லையோ என்ற எண்ணமும், தாம்பத்ய உறவில் கணவனின் எதிர்பார்த்தவிதங்களில் நடந்து கொள்ளவில்லையோ என்றும்தான் அவர்களின் மனம் எண்ணுகிறது.ஏமாற்றப்பட்ட மனைவியின் மனம் தன்னையும் கணவன் தவறான உறவுகொண்ட பெண்ணையும் பலமுறை ஒப்பிட்டு அந்தப் பெண்ணிடம் இருக்கும்,ஆனால் தன்னிடம் இல்லாத உடல் மன ரீதியிலான விஷயங்களை ஆலோசிக்கிறது.தன்னிடம் விடுபட்டு போன விஷயங்களை நிரப்பப் போராடுகிறாள் அந்த மனைவி.அவளை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள் கணவர்களே.ஆனால் நம்மைப்போன்ற ஆண்களுக்கு என்றோ அவர் செய்த சாம்பாரில் உப்புக்குறைவு என்ற ஒரு காரணம் போதும் என்பது புரியாத பேதை மனம் அது. ஒரு ஏமாற்றப்பட்ட மனைவி,பதிலுக்கு தானும் தன் கணவனை ஏமாற்ற வேண்டும் என்று நினைப்பதில்லை. ஆனால் இங்கே எழுதிய பெண்ணின் நிலைமையில் உள்ள பெண்கள் ஒரு சிறு அன்பில் மனம்தடுமாறி திசைமாறும் வாய்ப்புகள் அதிகம்.எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம். முன்பே எழுதியதுதான், மீண்டும் சொல்கிறேன். நான் தவறு செய்வதற்கு முழுக்காரணம் நாம் மட்டுமே. தயவுசெய்து சப்கான்ஷியஸ் மைண்ட், மனைவி/கணவன் சரியாக நடக்கவில்லை என்றோ சூழல்களையோ காரணமாகக் காட்டவேண்டாம். எந்த ஒரு காரணமும் நான் செய்யும் தவறுகளை நியாயப்படுத்திவிடாது.அப்படி செய்ய முயல்வது நாம் திருந்தும் வாய்ப்புகளை மிகவும் குறைத்துவிடும் என்பதைப் புரிந்துகொள்வோம். இந்தப் பெண் முதல் முறை பிரச்னை வெளிவந்த போது கணவனைக் கேள்விகேட்டதாகத் தெரியவில்லை. அது மிகப் பெரியதவறு.அப்போதே இதை அவரிடமும் பேசி,அவரது வீட்டாரிடமும் தெரிவித்திருக்கவேண்டும்.
மனைவிகளே எடுத்ததெற்கல்லாம் கணவர்களைச் சந்தேகப்படாதீர்கள்.ஆனால் கணவரின் தடுமாற்றங்கள் வெளிப்படும்போது அரசல் புரசலாக அல்லது ஒரு தெளிவான விதத்தில் கணவரின் குடும்பத்தாரிடம் சொல்லிவிடுங்கள்.அவர்கள் கணவரின் தந்தை தாயாக இருக்கட்டும் அல்லது சகோதரி அல்லது சகோதரனாக இருக்கட்டும். அந்த உறவுகள் பலம் வாய்ந்தவை.அந்த உறவுகள் என்றைக்கும் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கட்டும்.உங்களின் குடும்பத்தில் அக்கறை உள்ள உங்களின் கணவருடைய நண்பர்களும் உதவ இயலும்.அவருடைய இஷ்ட தெய்வக்கோவிலுக்கு அவருடன் சென்று இருவரும் ஒரு சத்தியப்பிரமாணம் எடுங்கள்.இனியிருக்கும் வாழ்க்கை முழுவதும் கனவில் கூட ஒருவருக்கொருவர் துரோகம் நினைக்க மாட்டோம் என்று. இதை ஒவ்வொரு திருமணநாளிலும் செய்வதை வழக்கமாக்குங்கள். அப்படிச் செய்யும் அந்த நாளில் உங்கள் நெருங்கிய உறவுகளுக்கும் நட்புக்கும் ஒரு சிறு விருந்தளியுங்கள். நீங்கள் பழைய நிலைக்குத் திரும்புவதும் அவர் உங்களுக்குத் துரோகம் செய்வதை மனதாலும் நினைக்காத உறவும் மீண்டும் விரைவில் மலரும்... நட்புடன் மீனவன்
24-மார்-2013 21:01:55 IST
அன்பின் கணபதி கண்ணன் : ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர்களிடம் பணமில்லாவிட்டாலும் நல்ல மனமிருக்கும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. தான் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் என்று சொல்லிவிட்டு ராஜூ எழுதிய விஷயங்கள் அந்த அடிப்படையை அசைத்துவிட அவர் ஒப்ப மாட்டார் என்ற ஒரு நம்பிக்கை இன்னும் பல நம்பிக்கைகள்.அதனால்தான் அவருக்கு இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன். அவர் நேரம் கிடைக்கும்போது சில ஆதரவற்ற குழந்தைகளுடன் பழக வேண்டும். ஒரு குழந்தையின் பார்வையில் இந்த உலகம் என்ன என்பதை அது அவருக்கு புரிய வைக்கும். ஒரு குழந்தையின் வாழ்க்கையில் தந்தையின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை இவர் உணரவேண்டும் என்பது எனது பிரார்த்தனை.இரண்டு முறை கண்ணுறக்கம் பெண்களுக்கு என்று எழுதினார் கண்ணதாசன்..... முதலுறக்கங்களுக்கு தலையணைகளும்,சிரிப்புகளும் கனவுகளும் தந்தையிடமும் தாயிடமும் இருந்துதான்...உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.....ராஜூவின் மனமாற்றம் கேட்கும்போது அந்த நந்தவனம் அந்த தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு நம் மனதில் ஒரு உலாவரும்... காத்திருப்போம்...
17-பிப்-2013 14:45:58 IST
மீண்டும் அன்பின் ராஜு அவர்களுக்கு....... 17 வயதில் தன் குடும்பம் வாடினாலும் இன்னொரு குடும்பம் கெடக்கூடாது என்று நினைத்த நீங்கள் 30 வயதில் தன் குடும்பம் கெட்டாலும் தான் வாழவேண்டும் என்று நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு மலையளவு இருக்கிறது. பல விஷயங்கள் இங்கே ஆலோசிக்க வேண்டும் ராஜூ. வலிப்பது அதிகம் உங்களின் குழந்தையை நினைக்கும்போதுதான்.எழுத்துகளை இங்கே நான் தட்டத்தொடங்கும்போது கண்ணீர் கண்களில் கொட்டத்தொடங்குகிறது. அந்தப் பிஞ்சு என்ன குற்றம் செய்தது? ஒவ்வொருமுறையும் யாரோ ஒரு அப்பா தான் பெற்ற குழந்தையை கொஞ்சுவதை பார்க்கும்போதும் விளையாடுவதைப் பார்க்கும்போதும் அந்த மனதில் ஒரு வெறுமையும் தனிமையும் எழுவது நிச்சயம். காரணங்கள் புரியாத வயது.வாழ்க்கை என்ன கொண்டுவரப்போகிறது அந்தக் குழந்தைக்கு என்பது யாருக்கும் தெரியாது.எங்கிருந்தெல்லாம் ஏமாற்றங்கள் வரும் என்பது தெரியாது.அந்த ஏமாற்றங்கள் தந்தையிடம் இருந்து தொடங்க வேண்டாமே ராஜூ....பலரின் வாழ்க்கையின் இனிமையான காலங்கள் தொடக்கங்கள் மட்டும்தான்.அந்தத் கொஞ்ச தொடக்க இனிமைகளையும் ஒரு தந்தையாய் நீங்கள் துடைத்தெறிய மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.சரியான விலாசத்துடன் தவறான முகவரிக்கு வந்துவிட்ட தபாலான என்று உங்களை சொல்லும் நீங்கள், ஒரு குழந்தையின் விலாசமே தொலைந்து விட காரணமாவது சரியா? அதுவும் அந்தக் குழந்தை நீங்கள் பெற்ற மகளெனும்போது..... ராஜூ: ஒருமுறை "கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே" என்ற பாடலைக் கேளுங்கள்.கேட்கும்போதெல்லாம் விழி நனைக்க வைக்கும் பாடல்.முடிந்தால் இந்த வாரம் ஆனந்த விகடனில் பொக்கிஷம் பகுதியை வாசியுங்கள்.காதல் நிறைவேறாத இரண்டு பெண்களின் கடிதங்களை மறுபதிப்பித்திருக்கிறார்கள் 1985 ஆம் வருட பதிப்பில் இருந்து. அந்தப் பெண்கள் அவர்களின் காதலில் வென்றிருந்தால் கூட அவர்கள் மேல் அவ்வளவு மதிப்பு வந்திருக்காது..........ஒரு காதல் மனதில் இருப்பது தவறில்லை...நினைக்குங்கால் ஒரு முறுவல் பூப்பதும் தவறில்லை... நிறையக் கணவர்களுக்கு அப்படி யாராவது மனதில் இருக்கலாம்..... நிறைய மனைவிகளுக்கு யாராவது அப்படி ஒருவரும் இருக்கலாம். நிறைய பேருக்கு அவர்கள் ஒரு முகமற்ற நிழல்கள்தான்....அந்த நிழலைத்தான் தன் துணைகளில் தேடுகிறார்கள். நிஜம் சுடும் ராஜூ...அந்தப் பெண்ணிற்கு ஒரு துணை தேட உதவுங்கள்.. தவறேயில்லை... ஒரு நடு நிலையில் யோசியுங்கள் ராஜூ...உண்மையில் அந்தப் பெண் (கணவனை இழந்தவர்)உங்களை மறுக்க வேண்டும், காரணங்கள் என்ன தெரியுமா? 1), இன்னொரு வாழ்வின் அஸ்தமனத்தில் என் வாழ்வு உதயமாக வேண்டாம் 2)இன்று மணந்த மனைவியையும் குழந்தையையும் சொந்தங்களையும் எனக்காக உதறும் நீங்கள், நாளை என்னை வேறு யாருக்காகவும் உதறி விடுவீர்களோ என்ற ஒரு ஆழ்மன பயத்துடன், சந்தேகத்துடன் ஒவ்வொரு பெண்ணுடன் நீங்கள் பேசும்போதும் ஒரு பதைபதைப்புடன் உங்களுடன் ஒரு நிம்மதியான வாழ்க்கை என்னால் வாழ இயலாது 3) மிக முக்கியமானது, தந்தையை இழந்த ஒரு குழந்தையில் மனமும், கணவனைப் பறிகொடுக்கும் ஒரு மனைவியின் மனமும் அவருக்கு புரிந்திருக்கும். தான் பெற்ற அந்த வலிகள் இன்னொரு பெண்ணுக்கு தன்னால் வரவேண்டுமா என்ற ஒரு யோசனை அவரிடம் வரவேண்டும்.......ஆனால் அந்தப் பெண் அப்படியெல்லாம் செய்வார் என்று நான் எதிர்பார்க்க மாட்டேன்.அதைத் தவறு என்றும் சொல்லமாட்டேன்..ஏனென்றால் கணவனை இழந்த ஒரு தாயின் பக்கம் விரல் நீட்டுவதை விட எல்லாம் இருந்தும் இல்லாதிருக்கும் ஒரு தந்தையின் பக்கம்தான் நான் விரல் நீட்டுவேன்.ராஜூ, நாளை என்ன என்பதை இயற்கையோ இறைவனோ தீர்மானிக்கட்டும்.இன்றைக்கு நீங்கள் வாழுங்கள்.ஒரு குழந்தையை குழந்தையாய் வாழவையுங்கள். நாளையை சிந்திக்கவேண்டாம். இரண்டரை வருடங்கள் உங்கள் வாழ்க்கையில் 2 வருடங்கள் உங்கள் மகளின் வாழ்க்கையில் - உங்களின் ஒவ்வொரு முத்தங்களும் எத்தனாயிரம் பூக்களை பூக்கச் செய்திருக்கும் தெரியுமா இத்தனை நாட்களில்.. நாளை நீங்கள் அவளின் வாழ்க்கையில் இருந்து விலகுவது நிஜமானாலும், இன்று அவளுக்குத் தந்தையாய் இருங்கள். உங்களின் நிம்மதி அங்கு கிடைக்கும். மதுவிலல்ல.உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையிலும் கண்ணீரிலும் தோய்த்து எழுதப்பட்டவை .உங்களை வெறுமனே வார்த்தைகளால் உற்சாகப்படுத்தவோ ஊக்கப்படுத்தவோ சொல்லவில்லை. உங்களில் இடத்தில் என்னை வைத்து சொல்கிறேன்.ஒரு நல்ல மனதின் தடுமாற்றமாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.ஒரு சில வார இறுதிகளுக்கு சில அனாதைக்குழந்தைகளின் ஆசிரமத்திற்கு சென்று வாருங்கள்.உதவுங்கள் உதவுங்கள் உதவுங்கள்.தயவுசெய்து செய்யுங்கள்.அது உங்களை உங்களுக்கு புரியவைக்கும்.....வாழ்வின் அர்த்தங்கள் வாழ்வு வாசல் தேடி வந்திருக்கும்போது புரிவதில்லை ராஜூ...அது புரியும்போது வாழ்க்கை வணக்கம் சொல்லி விடைபெறத்தயாராக இருக்கும்.வாழ்க்கையைப் புரியுங்கள் வாழுங்கள்...பொன்னுலகம் கண்ணில் காணும்வரை ஒரு பிஞ்சை கொஞ்சம் நிம்மதியாய் கண்ணுறங்க விடுங்கள்.... நட்புடன் மீனவன்
, .
17-பிப்-2013 11:02:40 IST
இது சென்ற வாரம் எழுதிய நண்பர் ராஜூவுக்கு........ராஜூ,வாழ்க்கை ஒரு தேடல்...ஒரு துரத்தல்....உடன் நடப்பதை விட்டுப் பறப்பதைத் தேடும்..பறப்பது கிடைத்தால் மிதப்பது தேடும்...மிதப்பது கிடைத்தால் மீண்டும் நடப்பதைத் தேடும்.....எத்தனையோ முறை யோசித்திருக்கிறேன்...ஒவ்வொருவரும் தனது அடையாளத்தை இந்த உலகில் விட்டுச்செல்ல முயல்கிறோம்...நான் வெந்ததைத்தின்று விதிவந்தால் மாளும் ஒரு சாதாரண மனிதப்பிறவியல்ல என்று புலம்புகிறோம்..உண்மை என்ன தெரியுமா? ஒரு சாதாரண வாழ்க்கையை குழப்பாமல் வாழ்ந்து விடை பெறும் மனிதர்களே சாதனையாளர்கள் என்று எனக்கு பலமுறை தோன்றும்.அரசியல்வாதிகளையும் பிரபலங்களையும் விமர்சித்து சாடும் சாதாரணர்களான நாம், நம்மிடம் கொஞ்சம் பணம் வந்தாலே மாறுகிறோமே.. கொஞ்சம் புகழ் சேர்ந்தாலே தலைக்கனம் பிடித்தாடுகிறோமே...பிறகேன் மற்றவர்களை சாட வேண்டும்.... நம்மில் ஒரு நல்லவன் ஒரு முறையாவது தலைகாட்டி இருப்பான் குரல் கொடுத்திருப்பான். வாழ்க்கையின் தேடல்கள் வெளியில் இல்லை.. நம்மில்.. அந்த நல்லவனை தேடி அவனை வெல்ல வைப்பதுதான் வாழ்க்கை...எளிதான காரியம் அல்ல அது... 17 வயதில் என் குடும்பம் வாடினாலும் இன்னொரு குடும்பம் கெடவேண்டாம் என்று சொன்ன அந்த ராஜூவைத் தேடுங்கள். ஒரு ஏழை விவசாயக்குடும்பம் நெஞ்சு நிமிர்த்தி சொல்ல வைத்த அந்த மனதைத் தேடுங்கள். ராஜூ...ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்ட உலகம் இது.....கொஞ்சம் பணம் சேர்ந்ததும் உங்கள் சிரிப்பினில் இருந்து அந்த இறைவனைத் துரத்திவிடாதீர்கள் ராஜூ.. உங்களுக்குள் இருக்கும் அந்த ஏழை என்றும் வாழட்டும்..அந்த ஏழை குணத்தில் ஒரு கோடீஸ்வரன்... குணமில்லாத பணக்காரனாக வாழ்வதைவிட, பணமில்லாத ஏழையாய் வாழலாம்......ஆயிரம் முறை எழுதி இருக்கிறேன்.காதலைப் புரிந்து கொள்ளுங்கள் ...புரிந்து கொள்ளாத காதல் வெறும் ஒரு இனக்கவர்ச்சியாகி விடுகிறது. உங்களது காதல் உண்மையாக இருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உங்கள் மனைவி குழந்தையின் சகிதம் அந்தப் பெண்ணுக்கு ஒரு நல்ல கணவனை அமைத்துக்கொடுங்கள்.அந்தப் பெண்ணைக்காதலியுங்கள் தவறேயில்லை..அவள் சந்தோஷமாக இருக்க விரும்புவதுதானே காதல்.. ஒரு சகோதரியாய் காதலியுங்கள் ஒரு நண்பியாய் காதலியுங்கள்... ஒரு தாயாய் காதலியுங்கள் அவளை.... உடல் கலந்தால்தான் காதல் என்று நினைத்தால் அது காதலல்ல.....அது பாசமல்ல.....நீங்கள் ஒருமுறையாவது உங்கள் மகளை எடுத்து அணைத்திருக்கிறீர்களா?அப்போது நெஞ்சில் பொங்கும் ஒரு அன்பையும் காதலையும் உணர்ந்து இருக்கிறீர்களா?.. இல்லையென்றுதான் தெரிகிறது... ஒருமுறை செய்யுங்கள்..உணருங்கள்...முடிந்தால் இதை மட்டும் செய்யுங்கள்..உங்கள் மனைவியிடம் சமாதானமாக போகவேண்டாம்.. அந்தப் பெண்ணை மறக்கவும் சொல்லவில்லை...ஒன்று மட்டும் செய்யுங்கள். உங்கள் மனைவியிடம் ஒரு ரூம் மேட்டாக வாழுங்கள் சில மாதங்களுக்கு. உங்கள் மகளிடம் ஒரு உண்மையான தகப்பனாய் வாழுங்கள் அந்த சில மாதங்களில் இதுவரை உங்கள் மகள் அனுபவிக்காத ஒரு தந்தையின் பாசத்தை மட்டும் கொடுங்கள். ஒரு சாயங்காலம் வீட்டினுள்ளே நீங்கள் அடியெடுத்ததும் துள்ளலுடன் ஓடிவந்து அணைக்கும் அந்த அணைப்பை முழுமையாக அனுபவியுங்கள்.உங்களின் பைக்கின் ஓசையை துல்லியமாய் அனுமானிக்கும் அந்த ஒரு மெல்லிய நெஞ்சோடு மட்டும் உறவாடுங்கள்....உறங்கும்போது அந்தக் குழந்தையை நெஞ்சின் மேல் போட்டு உறங்குங்கள்.கண்களைத் திறக்காமல் நடுஇரவிலும் தூக்கம் கலையும்போது விரல்களால் உங்களை அடையாளம் கண்டு அணைத்து தூக்கம் தொடரும் அந்தப் பிஞ்சோடு கொஞ்சம் நெஞ்சம் கரையுங்கள். நீங்கள் எழும்போது அவளின் தூக்கம் கலைந்து விடக்கூடாது என்று மெல்ல எழ முயன்று அவள் லேசாக அசைந்ததும் அப்படியே ஒரு சிலையாக சில நிமிடங்கள் இருந்து அவள் மீண்டும் ஆழ் உறக்கம் சென்றது எழும் ஒரு தந்தையாய் ஒருமுறையேணும் செய்த தந்தைகளை கேளுங்கள். மாறா ஒரு காதலை மறந்து விட்டு மாறும் சில மோகங்களின் பின் வாழ்க்கையைத் தொலைக்கவேண்டாம். காத்திருக்கும் அந்த உண்மைக் காதலை விட்டுவிட்டு கானலாய் ஒரு காதல் தேடி உங்களை கறை படுத்திக்கொள்ளாதீர்கள். உறவுகளும் உணர்வுகளும் நாம் நம்மில் ஏற்படுத்திக்கொள்வதுதான். கல்லென்று பார்த்தால் கல்.கலையென்று பார்த்தால் கலை.உங்களில் உறங்கிவிட்ட அந்த உண்மை உங்களை கொஞ்சம் உசுப்புங்கள். காரணம் உண்மைகளின் நீண்ட உறக்கங்கள் அவற்றை மரணித்துவிடலாம் ...நட்புடன் மீனவன்
10-பிப்-2013 12:11:42 IST
இந்தப் பிரச்னையை எழுதிய பெண்ணுக்கு அவரது வயதையொத்த ஒரு பெண் சொல்லிய தீர்வுகள். அவரது சமுதாய நலனுக்கும் மனமுதிர்ச்சிக்கும் ஆழ்ந்த நன்றிகளுடன் அவர் அனுப்பிய கருத்துகள் இங்கே.. ...1) இது ஒரு பிரச்னை என்று நினைப்பதை முதலில் நிறுத்த வேண்டும் 2) யோகா வகுப்புகளுக்கு செல்ல வேண்டும். 3)ஒவ்வொரு நாளும் முந்தைய நாளிலிருந்து வேறுபட்ட நடவடிக்கைகளுடன் ஒரு கால அட்டவணை தயார் செய்து பிஸியாக வேண்டும். 4) பிரார்த்தனை செய்யும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். மனம் தவறானவற்றை நினைக்காது. 5) எல்லோருடனும் குறிப்பாக உறவுக்காரர்களிடம் சகஜமாக பழகவேண்டும். 6) ஒரு செல்லப்பிராணி வளர்க்கவேண்டும்.நேரம் போவதே தெரியாது. 7) தனிமையைத் தவிர்க்க வேண்டும்.பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும். 8) நாட்குறிப்பில் (டைரி) மனதில் நினைப்பவற்றை எழுத வேண்டும். அது சஞ்சலமாக இருந்தாலும் சரி.இன்று சரி என்று தோன்றுவது நாளை தவறாகத் தோன்றி நானா இப்படி உணர்வுகளுடன் இருந்தேன் என்று உங்களை சிந்திக்கச் செய்யும். 9)"இந்த" உணர்வு தவறென்று நினைக்கக்கூடாது. 10) மணபந்தத்தால் அங்கீகரிக்கப்பட்ட காமம் ஒரு புனிதமான உணர்வு காதலைவிடக்கூட. அதை ஒரு கீழான உடல் சம்பந்தப்பட்ட உறவாக நினைக்கவேண்டாம் 11)முடிந்தால் "இந்த" உணர்வுகளைத் தூண்டும் சினிமாவோ காட்சிகளோ பார்ப்பதை தவிர்க்கவேண்டும். 12) கொஞ்சம் கடினமானாலும் சுயகட்டுப்பாடு அவசியம். 13) இது ஒரு மனம் மயங்கிய உணர்வு.அதிலிருந்து மனதை விழிக்கச் செய்ய மனதை உலுப்பி சிரித்தோ சிந்தித்தோ வெளிவரவேண்டும்.... நட்புடன் மீனவன்
01-பிப்-2013 12:04:54 IST
ஒரு சாதாரணமான ஆண் தன் மனைவியில் தன் மானசீகக் காதலியைத் தேடித் தேடிக் கண்டுபிடிக்கிறான்.ஒரு சாதாரணமான பெண் தன் கணவனில் தன் மானசீகக் காதலனை தேடித்தேடிக்கண்டுபிடிக்கிறாள்.ஒரு ஆணைவிட பெண் தனது மானசீகக்காதலனை மிக மிக எளிதாகக் கண்டுபிடிக்கிறாள். காரணம் பல சமயங்களில் அவளின் எதிர்பார்ப்பு அவனிடம் அவளைச் சுற்றியும் அவனைச் சுற்றியும் மட்டும்தான். அவளுக்குள் அவனது தொலைபேசி அழைப்புகள் உலகிலேயே உன்னதமான இசையாகிவிடுகிறது. அவனது சாப்பிட்டாயா என்ற கேள்வி ஒரு பிரமாதமான விருந்தாகி மனம் நிறைக்கிறது. அவனது உன்னைத் தேடுகிறேன் என்ற வார்ததை இதயம் நனைத்து கண்களில் நீராய் வழிகிறது. எப்பொழுது 5 மணியாகும் எப்பொழுது அவர் வருவார் என்று கண்கள் எங்கிருந்தாலும் காதுகளும் இதயமும் கதவுகளில் காத்துக்கிடக்கின்றன. அந்த நேரத்தில் வீரிடும் ஒரு அழைப்பு மணி ஓசைக்கும், ஒரு கர்ணகடூர பைக்கின் ஓசைக்கும் இந்த உலகின் எந்த ஒரு இசையும் ஈடாகாது.அந்தச் சாயங்காலப் பட்டாம்பூச்சிகள் இரவு முழுவதும் ஒரு மின்மினிப்பூச்சியாய் மனமெங்கும் மின்னும் அந்த அழகை அவளின் படபடக்கும் இமைகளிலும் மின்னும் அந்தக் கண்களிலும் காணலாம். கணவர்களே, அந்தப் பட்டாம்பூச்சிகளை பறக்கவிடுங்கள். இன்னும் சில நாட்கள் அவை பறக்கட்டும். சாயங்காலங்கள் தோளில் சாயுங்காலங்களாகட்டும், மாலைகள் மடிதேடும் தலைகளுக்காகட்டும்.மனைவிகளே,உங்களின் தலைகோதும் விரல்கள் முடிகளின் ஊடாய் மனங்களை வருடட்டும்.விரல்களும் கரங்களும் கதை பேச மௌனங்களே வார்த்தைகளாக ஒரு அந்தி நேரம் குறுநகை கூடிய குறுநடைகளாகும் அந்த மாலைகளில் மனங்கள் பேசட்டும், இரவுகளில் உடல்கள் உரையாடட்டும். இரவுகள் ஒரு இசைக்கச்சேரியாகட்டும்.இரவுகளின் இருட்டுகளும் உறவுகளின் மௌனங்களும் இளம் காலைகள்கூட கொஞ்சம் நீண்டு வெளிச்சமாகிப்போன இரவுகளாகட்டும்.காரணமில்லாத சில முத்தங்கள், மனங்கள் திட்டமிடா அணைப்புகள், தேவையில்லாத சில தீண்டி விலகல்கள்,உடல் கலக்கா சில உதடு சந்திப்புகள், சில செல்ல முடிபற்றியிழுத்தல்கள், பொறுக்கியாய் சில பின்பக்கத்தட்டல்கள், குளியலில் மறந்த துவாலைகளாய் மனைவிகள் ..இவையெல்லாம் அந்தப் பட்டாம்பூச்சிக்கு வண்ணம் சேர்க்கும் சிறகுகளை படபடக்க வைக்கும்.அவளின் மார்புகளிலும் தோளிலும் ஈரமுகம் பதித்து துடைத்துவிட்டு நீங்கள் செல்வீர்களே கணவர்களே, அந்த ஈரம் ஒரு துளிகுறையாது அவளின் மனம் இறங்கி குளிர்விக்கும்....அந்த குளிர்தடாகத்தில் மலராய் மனது மலர, சிறகடித்து வண்ணத்துப்பூச்சிகள் பறக்க ஒரு நந்தவனத்துச் சீதையாய் அவள் உங்களுக்காய் சிதையிறங்கவும் தயாராக இருப்பாள்.....அவற்றிற்கு காதல் வார்த்தைகள்தான் உணவுகள். காசு செலவில்லை காதல் தானே செலவாகும் போகட்டும்.அது ஒரு சாகா நதிதானே..கொஞ்சம் மொண்டு ஊற்றுங்களேன்.மல்லிகைப்பூவாய் இட்லிகளும் ருசியாய் சில சட்னிகளால் எண்ணிக்கையில்லாமல் இறங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் கொஞ்சம் தண்ணீர் குடிக்கும் இடைவெளியில் சொல்லுங்களேன் "அரிசியுடன் மல்லிகையைக் கலந்து அரைத்தாயா" என்று? (இல்லை பாக்கெட் மாவு போட்டவனைத்தான் கேட்கணும் என்று பதில் வந்தால் நான் ஜூட்)வாழ்க்கையில் கொஞ்சம் கவிதை சேருங்கள். காதலில் கொஞ்சம் பொய் சேருங்கள். பொய்யானாலும் வேண்டும் என்று கேட்கும் பெண்ணின் மனம். ஆனால் மறந்தும் பொய்யில் காதலை சேர்த்துவிடாதீர்கள். திருமணத்திற்கு முன்பிருந்த கவர்ச்சி நாணம் ஆசையெல்லாம் போவதின் முதல் காரணம் மேற்சொன்ன பலவற்றை மறப்பதுதான்.......(கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு நடுவுல கொஞ்சம் வழியை விட்டுட்டு வேற ரூட்ல போயிட்டேன்னு நினைக்கிறேன்..)சரி இந்தப் பெண்ணின் பிரச்னைக்கு அடுத்த பத்தியில் வருவோம்....நட்புடன் மீனவன்
30-ஜன-2013 08:46:35 IST
இன்னும் சில எண்ணங்கள். இப்படியும் பார்ப்போமே.அந்தப் பெண்ணின் கணவன் வெளி நாட்டில் சம்பாதிக்கிறார்..மனைவி இங்கே சம்பாதிக்கிறார்.இங்கு எழுதிய பெண்ணின் கணவனும் சம்பாதிக்கிறார். மனைவி ஊரில் இல்லாத போது வேறு ஒரு பெண் வந்தால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தெரியும் என்பதும் நிச்சயம் தெரிந்திருக்கும். அப்படி ஒரு தவறான உறவில் இருந்திருந்தால் ஓரிரவு தங்க வேறு இடமா கிடைக்காது அவர்களுக்கு? சரி, ஒரு அலுவலகத்தில் வேலைசெய்யும் தனது கணவனுக்கு ஒரு மனைவி போன் செய்து அவர் கிடைக்கவில்லை என்றால் அவரது உடன் வேலை பார்க்கும் நண்பரிடம் கேட்பார். நண்பர் சொல்லுவார் அவர் இங்கே இருக்கிறார் இன்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று.அந்த நண்பர் ஆணாக இருக்கும்போது பிரச்னையில்லை. அது ஒரு பெண்ணாக இருக்கும்போது மனைவிகளால் அதைப் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.இது அப்படியும் தெரிகிறது. அந்தப் பெண் ஒரு இரவில் இன்னொருவரின் கணவருடன் வந்து தங்கியது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறிதான்.குறிப்பாக இந்தப் பெண்ணின் மன நிலை பற்றி தெரியாமல். அதை மனைவியை புரியவைக்க முயலாத கணவனின் தவறும் உள்ளது. பொதுவாக ஒரு மனைவிக்கு ஒரு பெண்ணை எப்போது பிடிக்காமல் போகும் என்றால் அந்தப் பெண் தன்னைவிட தனது கணவனிடம் அதிகம் நட்பு பாராட்டும்போது. ஒரு நண்பி போன் செய்து போனை எடுக்கும் மனைவியிடம் உங்கள் கணவன் இருந்தால் பேசச் சொல்லுங்களேன் என்றாலே போதும் அந்தப் பெண்ணிற்கு இந்த வீட்டில் இடம் கிடையாது நட்பாகக்கூட. போனை எடுக்கும் மனைவியிடம் கொஞ்சம் வம்பளந்துவிட்டு அதன் பின் அவரது கணவனிடம் பேசினாலோ இல்லை பேச வேண்டிய விஷயத்தை மட்டும் அவரிடம் பேசிவிட்டு மற்றக் கதைகளை அவரின் மனைவியிடம் பேசினாலோ நட்பு பலப்படும். இது ஒரு நம்பிக்கை பிறக்கும் வரைதான். ஒன்று கணவன் மேல் நம்பிக்கை வேண்டும். இல்லை நண்பி மேல் நம்பிக்கை வேண்டும். இல்லாவிட்டால் நிம்மதி என்பது ஒரு கேள்விக்குறியாகிவிடும்..அழகான கருத்துகள் கணபதி கண்ணன். அந்தப் பெண்ணிடம் பேசவேண்டும் என்ற நான் மறந்துவிட்ட ஒரு முக்கியமான கருத்தையும் குறிப்பிட்டுவிட்டீர்கள்.அருமை...
23-ஜன-2013 11:05:43 IST
புரியவில்லை பெண்ணே... வாழ்க்கையிலிருந்து ஓட வழிகேட்கிறீர்கள். கூட வழி கேளுங்களேன். வாழும் வழிகள் எத்தனையோ இருக்கும்போது ஏன் அதை சிந்திக்க மறுக்கிறீர்கள்.ஒருவரைக் காதலித்து இன்னொருவரை மணந்து வாழும் எத்தனையோ பேரின் மத்தியில் காதலுக்கு மரியாதை கொடுத்து மணந்தீர்கள் இருவரும். முற்போக்கு சிந்தனைக்கார கணவர் உங்களை லிவிங் டுகெதர் முயற்சிப்போம் என்று சொல்லவில்லைதானே.. முறையாகத்தானே மணந்தார்.ஒரு பெண்குழந்தையின் பெற்றோர் நீங்கள்....சொந்தங்களை எதிர்த்து மணந்த மாதிரி தெரியவில்லை. ஏனென்றால் நீங்கள் உங்கள் அம்மா வீட்டிற்கு சென்று வந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மாமனார் மாமியாரையோ கணவரின் உடன் பிறந்தவர்களையோ பற்றிய வரிகள் ஒன்றும் இல்லையே. நீங்கள் கேட்டிருப்பது கணவனால் கைவிடப்பட்டோர் , மாதர் சங்கம் இவற்றின் முகவரிகள். தவறு செய்யும் ஒருவரை திருத்த வேண்டிய முயற்சிகள் அவசியம் என்பதில் ஒரு ஐயமும் இல்லை. ஆனால் தவறான ஒரு முயற்சி தவறை உணர மறுக்கச் செய்வதுடன் ஒரு வன்மத்தையும், பழிவாங்குவதாக நினைத்து மேலும் தவறுகளையும் செய்யத்தூண்டிவிடலாம். நீங்கள் மாதர் சங்கத்துக்குச் செல்வதோ கைவிடப்பட்ட பெண்கள் அமைப்புக்கு செல்வதோ முதல் கட்ட நடவடிக்கை அல்ல. நேரடியாக அவரிடம் பேசினீர்கள்...மீண்டும் ஒருமுறை பேசுங்கள்.சொல்லுங்கள் உங்களுக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தாலும் நீங்கள் அவரைப்போல செய்தால் அவர்மனம் ஒப்புமா என்று கேளுங்கள்.மகளை முன்னிறுத்தி பேசுங்கள் ஒரு தந்தையாய் அவரை பேசச் சொல்லுங்கள்.திருந்தவில்லையென்றால் தெள்ளத்தெளிவாகவும் உறுதியாகவும் சொல்லுங்கள் அவர் மாற மறுத்தால் இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்படலாம் என்று.இரண்டாவது கட்டம் அவருடைய நண்பர்கள் யாராவது தெரிந்தால் அவர்களிடம் விவாதிப்பது.அது மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தாரையும் அணுகுவது. தேவைப்பட்டால் உங்கள் உடன்பிறந்தவர்களில் மனமுதிர்ச்சியும் அணுகுமுறையும் தெரிந்த ஒருவரிடமும் விவாதிக்கலாம்.அவரது குடும்பத்தாரின் பங்கு இதில் அதிமுக்கியம்.அவர்களால் இதை நிறுத்த முடியவேண்டும்.அவர்களுக்கும் அவர் பணியவில்லையென்றால் அதற்கு அடுத்த கட்டம் அவரது அலுவலகம். ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் எவரும் திருமண பந்தத்திற்கு அப்பாற்பட்ட உறவை கொண்டிருப்பதை எந்த ஒரு அலுவலகமும் ஒத்துக் கொள்ளாது.நேரடியாக இல்லையென்றாலும் மறைமுகமான ஒருவழியில் இருவரில் ஒருவரையாவது வேலையை விட்டுத்தூக்கிவிடும்(சரிதானே ஹரிஹரன்?)இரண்டு பேருக்குமே வேலை போகலாம். வாழ்க்கை போவதைக் காட்டிலும் வேலை போகலாம்.இந்த நடவடிக்கையை நீங்கள் எடுக்கும்போது அவரைப்பிரிந்து சிலகாலம் உங்கள் வீட்டிற்கு செல்லவேண்டுமோ என்ற யோசனை தலைதூக்குகிறது. இதற்கிடையில் எத்தனையோ வழிகளில் அந்தப் பெண்ணின் கணவரின் தொடர்புகளை பெற இயலும். ஃபேஸ் புக் மூலமாகவோ, இல்லை உங்களுக்கு தெரிந்த ஒருவர் துபாய் செல்கிறார் அவருக்கு உதவி வேண்டும் என்றோ அந்தத் தகவல்களை பெற முயலுங்கள். அவருடன் நீங்கள் ஒருமுறை நலம் விசாரித்துப் பேசினாலே போதும் பலவிஷயங்கள் வழிக்கு வரும்.அப்படி அவருடைய கணவரின் தொடர்புகளை பெற முடியவில்லை என்றால், அந்த துபாய்க்காரரின் தாய் தந்தையரையோ உறவுகளையோ கண்டுபிடிப்பது பெரியவிஷயமல்ல. விஷயம் அவர்களுக்கு சென்றால் போதும் அவர்கள் கவனித்துக் கொள்வார்கள்.அதேபோல் அந்தப் பெண்ணின் தம்பி மூலம் அவரது பெற்றோரின் விவரமும் பெற்றுத் அவர்களிடமும் தெரிவித்து விடுங்கள்.தற்காலிகப் பிரிவு ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று. விவாகரத்து செய்வது என்பது கடைசி முடிவு. விவாகரத்துக்கான நோட்டீஸ் அனுப்பினால் கூட பலசமயங்களில் பிரச்னை கட்டுக்குள் வந்துவிடும். ஆனால் விவாகரத்து என்பதை மீண்டும் கடைசி ஒன்றாகத்தான் நான் சொல்வேன். இன்று உணராத சில தவறுகளை நாம் நாளை உணருவோம்.ஒரு பெண்குழந்தையின் தந்தையாய் அவர் அதை உணர்வார் என்ற நம்பிக்கை எனக்குண்டு.நிச்சயம் அவர் உங்களையும் உங்கள் மகளையும் விட்டுச் செல்லும் அளவுக்கு ஒரு மோசமான ஆளாக இருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை.இவையனைத்தும் செய்யுமுன் அவர்களின் உறவுகள் தவறானவையா என்று முடிவு செய்யுங்கள். தவறானதில்லை என்றால் கூட நிச்சயமாக உங்கள் கணவரின் வீட்டாரை தொடர்பு கொள்வதின் மூலம் பிரச்னைக்கு முடிவு கட்டுங்கள். இல்லையென்றால் அந்தப் பெண்ணின் கணவரோ அவரின் உறவினர்களோ மூலம் சரி செய்யுங்கள்.... நீங்கள் இத்தனை நடவடிக்கைகளுக்கு அப்புறம் விவாகரத்து என்ற முடிவை எடுப்பது உங்களின் வாழ்க்கையை மட்டுமல்ல நாளை உங்களின் இன்றைய கணவர் இன்னொரு பெண்ணிடம் இப்படி நடப்பதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும். இன்று நீங்கள் விலகி ஓடுவது என்பது அவரின் இந்த "முற்போக்கு நடவடிக்கையை" ஒரு தொடர்கதையாக்கிவிடும்...
21-ஜன-2013 11:39:55 IST
சென்றவாரம் எழுதிய வாசன் அவர்களுக்கு ஒரு சிறு கருத்து முதலில். என்னுடைய கருத்துப்படி முடிவெடுக்க வேண்டியது நீங்கள் அல்ல. உங்கள் மனைவியும் உங்கள் அம்மாவும். 3 மருமகள்களுடன் ஒத்து போகாத உங்கள் அம்மாவின் விடை முதல் தேவை. நீங்க ஒருவேளை திரும்பினால் உங்கள் அம்மாவுடன் ஒத்து வாழ முடியுமா என்ற தெரிவு உங்கள் மனைவியிடம். இல்லையென்றால் நீங்க எந்த கணக்கு போட்டு திரும்பி வந்தாலும் வாழ்க்கை வேதனையாகிவிடக்கூடும். தனது உடல் நிலையையும் உங்களது தந்தையின் உடல் நிலையையும் மகன்களின் வாழ்க்கையையும் நினைத்து தனது ஈகோ வை கொஞ்சம் விட்டுகொடுத்து உங்கள் அம்மா வாழ வேண்டும். உங்களது அம்மாவின் சில ஈகோ விஷயங்களை பொருள்படுத்தாமல் தனது ஒரு உறவினர் - அம்மாவோ அக்காவோ அப்படி இருந்தால் எப்படி விட்டுக் கொடுத்து செல்வார்களோ அதுபோல் மருமகள்கள் கொஞ்சம் பொறுத்து வாழ முயலவேண்டும். பணத்தையும் இழந்து நிம்மதியை இழந்து வாழும் வாழ்க்கை பாசத்தை வளர்க்காது - இல்லையா? நிம்மதிக்காக பணத்தை விடலாம். என்னுடைய தெரிவு உங்கள் பெங்களூரு சகோதரருடன் அவர் சென்று இருக்கட்டும். அவர்கள் ஒரு நல்ல அபார்ட்மெண்ட் காம்ப்ளக்சில் இருந்தால் (கேட்டட் கம்யூனிட்டி) உங்கள் அப்பாவுக்கு கொஞ்சம் பத்திரமாக இருக்கலாம்..கவனிக்க ஆள்கள் கிடைப்பதும் எளிதாகலாம்.. அவசர விஷேஷங்களுக்கு ஊருக்கு செல்வது எளிது. நீங்க கொஞ்சம் பண உதவிகள் செய்யுங்கள்.... உங்கள் ஒரு மாதம் முடிந்தால் விடுப்பு எடுத்து குடும்பத்துடன் உங்கள் அம்மாவுடன் இருங்கள். வருடத்திற்கு ஒரு சில மாதங்கள் உங்கள் மனைவியையும் குழந்தைகளையும் உங்கள் ஊரில் அம்மாவுடன் தங்கி இருக்க அனுப்புங்கள். மீண்டும் மீண்டும் பணத்தேவைகளில் மாட்டிக்கொள்ளாமல் , உங்களது தற்போதைய லோன்களில் 3 பங்கு முடிந்ததும் திரும்ப வர முயலுங்கள் - நட்புடன் மீனவன்
30-டிச-2012 04:41:02 IST