"இருப்பா. கொஞ்சம் பொறு...' என்று
மனசாட்சியுடன் மன்றாடினான் மஞ்சினி.
"எதுக்குப்பா பொறுக்கணும்? வாழப் போறியா? சொல்லு. நான்
உன் வழிக்கே வரலை. கடற்கரை காந்தி சிலைக்கு பின்னால
குதிச்சு தற்கொலை பண்ணிக்கறதுன்னு முடிவெடுத்துட்டே.
அதைச் செயல்படுத்த என்ன தயக்கம்? ஏன், மீனமேஷம்
பார்த்துகிட்டிருக்கே?'
"அது சரி. பின்னால குந்திகிட்டு குடிச்சிட்டிருக்குற
குமரவேல் யார் தெரியுமில்லே. பக்கத்து வீட்டுக்காரன்.
இப்ப நான் எழுந்து போனா, என்ன, ஏதுன்னு விசாரிச்சு
கிட்டுப் பின்னாலேயே வந்து உயிரெடுப்பான்!'
"ஏம்பா இன்னாபா சொல்றே? நல்ல விசியம் தானே! உயிரைக்கடல்
தண்ணி எடுத்தா என்ன? குமரவேல் எடுத்தா என்ன? எப்படியும்
சாகத் தானே போறே?'
"செத்துடறேன்பா, செத்துடறேன். இப்பத் தான் ரெண்டு
ரவுண்டு முடிச்சிருக்கானுக. இன்னும் ரெண்டு ரவுண்ட்ல
பிளாட்டாயிருவாங்க. உடனே,
எந்திரிச்சுப் போய் குதிச்சிடறேன்பா. ப்ளீஸ்!'
இப்படி தற்கொலை முடிவை மஞ்சினி எடுப்பதற்கான மூலகாரணமே
அண்ணி அங்கையற்கண்ணி தான்.
அண்ணி மட்டும் அப்படியொரு காரியத்தைச்
செய்யாமலிருந்தால், அவனுக்கு இப்படியொரு எண்ணமே
எழுந்திருக்காது.
மஞ்சினிக்கு அப்பா - அம்மா கிடையாது. அண்ணன் சம்பந்தம்
தான் அப்பா; அண்ணி அங்கையற்கண்ணி தான் அம்மா.
அப்பா, அம்மா இல்லையென்று மஞ்சினியும் கவலைப்பட்டதில்லை.
அண்ணனும், அண்ணியும், அம்மா, அப்பாவை விட அதிகமான
அன்பைச் சொரிந்து தான் அவனை வளர்த்தனர்; படிக்க
வைத்தனர்; பாசத்தைப் பொழிந்தனர்.
சம்பந்தனும், அங்கையற்கண்ணியும் பெற்ற பிள்ளைகளுக்குக்
கூட அந்த வீட்டில் அவ்வளவு உரிமையும், சுதந்திரமும்
கிடையாது. அவ்வளவு உரிமைகளோடும், சுதந்திரத்தோடும்
இருந்தான் மஞ்சினி.
எல்லாம் மூன்று வருடங்களுக்கு முன்பு வரை.
பட்டம் பெற்றிருந்த மஞ்சினியை தான் பணிபுரிந்து
கொண்டிருந்த மில் முதலாளியிடம் அழைத்துச் சென்று, தன்
தம்பிக்கு மில்லில் காலியாக இருக்கும் சூப்பர்வைஸர்
பணியைப் போட்டுத் தருமாறு கேட்டான் சம்பந்தம்.
மஞ்சினியை ஏற, இறங்கப் பார்த்தார் முதலாளி.
சம்பந்தனையும் பார்த்தார்... "இவனா உன் தம்பி?' என்றார்.
"ஆமாம், முதலாளி...' என்றான் சம்பந்தம்.
"உனக்கும் அஞ்சாறு வருஷம் சர்வீஸ் இருக்கும்ன்னு
நெனக்கிறேன். இந்த மில்லும் தொடர்ந்து நடக்கணும்ன்னு
விரும்பறேன்!' என்றார் முதலாளி.
புரியாமல் முதலாளியைப் பார்த்தான் சம்பந்தம்.
"என்ன புரியலைல்ல. இவனை இங்க வேலைக்குச் சேர்த்தா, ஒரே
வருஷத்துல மில்லை மூட வெச்சிருவான்யா. நீ மட்டும் இல்லே,
உன்னோட வேலை பாக்குற நானூறு தொழிலாளிகளும்
நடுத்தெருவுல நிக்கணும். தம்பி. சிவப்புக் கட்சி
ஆளுய்யா, சிவப்புக் கட்சி ஆளு!'
"நெஜம்மாவா சொல்றீங்க?' என்று கேட்டான் சம்பந்தம்,
முதலாளியைப் பார்த்து.
"என்னை ஏன் கேக்குறே? உன் தம்பிகிட்டேயே கேளேன்!'
"அண்ணே! இவரு எனக்கு வேலை கொடுக்க மாட்டாரு. வாங்கண்ணே
போலாம். இவங்களால் தொழிலாளிங்களோட
உழைப்பையும், உதிரத்தையும்
சுரண்டுற வர்க்கம்ணே...' என்றான் மஞ்சினி.
"பார்த்தியா! உம் முன்னாலேயே வர்க்கம்,
மூலம்ன்னு என்னென்னமோ சொல்றான். நான் மட்டும் இல்லே
சம்பந்தம். இந்த
பாண்டிச்சேரியில எந்த
முதலாளியும் உன் தம்பிக்கு வேலை கொடுக்க மாட்டான்.
ஊருக்கே தெரிஞ்ச விஷயம், உனக்குத் தெரியலையேங்கறது தான்
என் ஆதங்கம். போ! போ! போய் நீ உன் வேலையைப் பாரு. உன்
தம்பியை அவன் கடைபிடிக்குற, பின்பற்றுற சித்தாந்தமே
காப்பாத்தும்!'
மற்றவர்கள் தானே மஞ்சினிக்கு வேலை தரமாட்டார்கள். அவனே
நாலு பேருக்கு வேலை தரும் நிலைக்குக் கொண்டு
வந்துவிட்டால்?
பூரணாங்குப்பத்தில் பூர்வீகமாக இருந்த வீட்டை அடமானமாக
வைத்து ஐந்து லட்ச ரூபாய் கடன் வாங்கி மஞ்சினிக்கு
முதலியார் பேட்டையில் ஒரு கடை வைத்துக் கொடுத்தான்
சம்பந்தம்.
ஒரே வருடம். ஒரே ஒரு வருடத்தில், "கடை'யும் காலியானது;
வங்கியில் வாங்கியிருந்த கடனைத் திருப்பிக் கட்ட
முடியாமல் வீடும் பறிபோனது. ஒரு வார்த்தை கூட பேச இல்லை
சம்பந்தம்.
கடை காலியான பிறகு மஞ்சினிக்குக் கட்சி ஆபீஸே கதி என்று
ஆனது.
காலையில் எழுந்திருப்பான். குளித்து முடித்து அண்ணி
தரும் டிபனைச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பி விடுவான்.
இரவு எப்போது திரும்புவான் என்று அவனுக்கே தெரியாது.
வெறுமனே ஊர் சுற்றி வெட்டிக்கதை பேசி, ஊர்வலம்,
பொதுக்கூட்டம், மாநாடு, போஸ்டர் ஒட்டுவது என்று கண்ட,
கண்ட நேரத்தில் வந்து கதவைத் தட்டி சோறு போடு என்றால்,
ஒருநாள், இரண்டு நாள் என்றால் பொறுத்துக் கொள்ளலாம்.
அதுவே, வழக்கம் என்றால் யாரால் பொறுத்துக் கொள்ள
முடியும்?
அன்று வீடு திரும்பிய மஞ்சினி கதவைத் தட்டிய போது, கதவு
திறக்கப்படவில்லை; உள்ளே இருந்து குரல் மட்டும் வெளியே
வந்தது...
"திண்ணைல பாயும், தலைகாணியும், ஒரு தட்டுல சோறும்,
சொம்புல தண்ணியும் வெச்சிருக்கு. அப்படியை
சாப்பிட்டுட்டு, அங்கேயே படுத்துத் தூங்கு...' என்ற
அண்ணி அங்கையற்கண்ணியின் குரல் மட்டும் வெளியே வந்தது...
கவலைப்படவில்லை மஞ்சினி.
வழக்கம் போல ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தான் இப்படியே
ஒரு வருடம் ஓடியது.எதிர்பாராத திருப்பம் மூன்று நாட்கள்
முன் தான் மஞ்சினியின் வாழ்க்கையில் ஏற்பட்டது.
தோழர்களோடு, அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அளவளாவிவிட்டு,
அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவில் ஊடுருவதற்கு
சிஞ்சிற்றும் இடம் கொடுக்கக் கூடாது என அனல் தெறிக்கக்
கலந்துரையாடி விட்டு, மஞ்சினி வீடு திரும்பிய போது
நேரம் நள்ளிரவைத் தொட்டிருந்தது.
அடுத்த நாள் அதிகாலை ஆறு மணிக்கு மரக்காணத்தில் மஞ்சினி
இருந்தாக வேண்டும். அங்கு அன்று நடைபெறவிருந்த ஒருநாள்
அடையாள உண்ணாவிரதத்திற்கான சகல பொறுப்புக்களும்
மஞ்சினியின் தலை மீது சுமத்தி வைக்கப்பட்டிருந்தது.
நான்கு மணிக்குப் புறப்பட்டால் தான் சரியாக இருக்கும்.
வீட்டுத் திண்ணையில் மூடி வைக்கப்பட்டிருந்த தட்டைக்
கையில் எடுத்தான் மஞ்சினி. தட்டு லேசாக இருந்தது.
திறந்து பார்க்க தட்டு காலியாக இருந்தது திடுக்கிட்டான்
மஞ்சினி.
இங்கே சோறு வைக்கப்பட்டிருக்கும் விஷயம் தெரிந்த எந்தப்
பிச்சைக்காரனோ சோற்றைத் தின்று தட்டை காலி
செய்துவிட்டுச் சென்றிருப்பதாகக் கருதிக் கொண்டான். சரி.
தண்ணீரையாவது குடித்துவிட்டுப் படுப்போம் என்று சொம்பை
எடுத்தான். சொம்பும் காலியாக இருந்தது.
பாயை விரித்துத் தலயணையை வைத்துப் படுத்தான். தூக்கம்
வரவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது.
சோறு வேளைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் போது உணர
முடியாத பசியை, சோறு இல்லை என்ற போது மஞ்சினியால் உணர
முடிந்தது.
பாக்கெட்டிலிருந்து பேப்பரையும், பேனாவையும் எடுத்தான்.
"அண்ணி! நேற்று நீங்கள் வைத்திருந்த சாப்பாட்டை யாரோ
எடுத்து சாப்பிட்டு இருக்கின்றனர். இன்று முதல் வேறு
ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யவும், மஞ்சினி!' என்று
எழுதி நான்காக மடித்து தட்டில் மூடி வைத்துவிட்டு,
விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து போனான்.
மரக்காணம் நிகழ்ச்சியை முடித்து மஞ்சினி வீடு
திரும்பிய போது மணி 11.00. அதிசயமாக வாசலில் விளக்கு
எரிந்து கொண்டிருந்தது. திண்ணையில் பாயும், தலையணையும்,
தட்டும், சொம்பும் இருந்தன.
அவசர, அவசரமாக அகோரப் பசியோடு தட்டைத் திறந்தான்
மஞ்சினி. அதில் சோறு இல்லை; நான்காக மடிக்கப்பட்ட ஒரு
காகிதம் தான் இருந்தது.
திடுக்கிட்டான் மஞ்சினி. என்னடா இது. மஞ்சினிக்கு வந்த
சோதனை! நாம் நேற்று வைத்து விட்டுப் போன காகிதம்
தட்டில் அப்படியே இருக்கிறதே! கடிதத்தை அண்ணி
பார்க்கவில்லையோ, படிக்கவில்லையோ...
சிந்தனை சிக்கலாக சிறகடிக்க, தட்டில் இருந்த காகிதத்தை
எடுத்துப் பிரித்துப் பார்த்தான். அது அவன் எழுதி
வைத்து விட்டு சென்ற கடிதமல்ல; அதில் இருந்தது
அண்ணியின் கையெழுத்து.
அதில், "நேற்று சாப்பாட்டை யாரும் எடுத்து
சாப்பிடவில்லை; நானே சாப்பாடு வைக்கவில்லை. இனி ஒவ்வொரு
நாளும் இந்த தட்டில், நூறு ரூபாய் வைத்தால் தான்
அடுத்த நாள் சாப்பாடு கிடைக்கும்-அண்ணி...' என்று
எழுதப்பட்டிருந்தது.
நொறுங்கிப் போனான் மஞ்சினி. இனி வாழ்வதில் அர்த்தம்
இல்லை என்று தீர்மானித்தான். காந்தி சிலைக்குப்
பின்னால் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்வது என்ற
உறுதியான முடிவோடு இறுதியாக பார்க் பெஞ்சில் படுத்துக்
கொண்டிருந்தான். பக்கத்து வீட்டுக் குமரவேல், "பிளாட்'
ஆவதற்காகக் காத்துக் கொண்டிருந்தான்.
எப்போது உறங்கினானோ தெரியாது.
மஞ்சினியை ஒருவன் உலுக்கிக் கொண்டிருந்தான். எழுந்து
உட்கார்ந்து, ""யார்யா நீ? என்ன வேணும்? ஏன்யா என்னை
எழுப்பினே?
'' என்று கேள்விகளை அடுக்கினான்
மஞ்சினி.
""மிஸ்டர் உனக்கு ஆங்கிலம் தெரியுமா?'' என்றான் அவன்
பிரெஞ்ச் மொழியில்.
""ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், தமிழ் எல்லாம் தெரியும்.
அதுக்கு என்ன இப்போ?'' என்றான் மஞ்சினியும் பிரெஞ்ச்
மொழியில் வேதனை கலந்த வெறுப்போடு.
""நன்றி. தயவு செய்து இந்த தந்தி பாரத்தை ஆங்கிலத்தில்
பூர்த்தி செய்து கொடுங்கள். எனக்கு ஆங்கிலம் தெரியாது...''
என்றான் அந்த பிரெஞ்சுக்காரன் பிரெஞ்ச் மொழியில்.
அவனை ஆச்சர்யமாகப் பார்த்தான் மஞ்சினி.
சாவதற்கு முன் ஒரு நல்ல காரியத்தைத்தான் செய்து
விட்டுச் செத்துப் போடுவாமே என்று எண்ணி, அவனிடமிருந்து
தந்தி படிவத்தையும், பேனாவையும் வாங்கினான்.
அவன் பிரெஞ்ச் மொழியில் சொன்னதன் பொருளை உள்வாங்கி அதை
அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, தந்தி
படிவத்தில் பூர்த்தி செய்து
கொடுத்தான்.
படிவத்தை வாங்கிக் கொண்ட அந்த பிரெஞ்சுக்காரன் நன்றி
சொல்லிவிட்டு, மஞ்சினியின் கையில் நூறு ரூபாய் நோட்டைக்
கொடுத்தான்.
பரவசமானான் மஞ்சினி. தந்தி ஆபீஸ் வாசலில் அவனது
நண்பர்கள் நான்கு பேர் நின்று கொண்டிருப்பதாகவும்,
அவர்களுக்கும் இதுபோல தந்தி படிவத்தை ஆங்கிலத்தில்
பூர்த்தி செய்து கொடுக்க வருமாறும் வேண்டினான்.
மந்திரித்து விட்ட கோழி மாதிரி அந்த பிரெஞ்சுக்காரனின்
பின்னால் சென்றான் மஞ்சினி.
அரைமணி நேரத்தில் அவனது கையில் ஐந்து நூறு ரூபாய்
நோட்டுக்கள் சேர்ந்திருந்தன.
உற்சாகமானான் மஞ்சினி.
ச்சே! அநியாயமாக செத்துப் போக இருந்தோமே!
இனி நமது வாசம் தந்தி ஆபீஸ் வாசல் தான். நைட் டென் டு
மார்னிங் சிக்ஸ் டியூட்டி. ஒரு நாளைக்கு 50
கிடைச்சாலும் லாபம் தான். 500 கிடைச்சாலும் அதிர்ஷ்டம்
தான்; பொழுது விடிஞ்சதும் முதல் வேலையா அண்ணிகிட்ட
இந்த 500 ரூபாயைக் கொடுத்து அஞ்சநாள் சாப்பாட்டுக்கு
ஏற்பாடு பண்ணிக்கணும்.
இன்னும் யாராவது வருகின்றனரா என்று எதிர்பார்க்கத்
துவங்கினான் மஞ்சினி.
* * *
*********************************