அன்புள்ள சகோதரருக்கு-
உங்கள் கடிதம் கிடைத்தது. படித்தேன்... ஆன வயசுக்குக்
கொஞ்சம் கூட அறிவே இல்லாமல் ஒரு பெண்ணிடம் மனசையும்,
உடம்பையும் கொடுத்து விட்டு, இப்போது அவளை நினைத்து,
நினைத்து தூக்கமில்லாமல் தவிப்பதாக எழுதியிருக்கிறீர்களே...
இது உங்களுக்கே நியாயமாய் படுகிறதா? இப்போது தான் மனைவி
நல்லவள் என்பதும் அவளுடன் வாழ்ந்த வாழ்க்கையின் மதிப்பும்
புரிகிறதா?
உங்களுடைய மன நிம்மதியை எவளோ ஒருத்தி வந்து சிதைக்கவில்லை.
உங்கள் வேதனைக்கு நீங்களே தான் காரணம். இல்லையா பின்னே?
ஏதோ, மாமன் மகள், தன் கணவரின் மரணத்துக்குப் பின், வர
வேண்டிய பொருளாதார விஷயங்களுக்காக உங்களை நாடினாள். நீங்கள்,
உறவு முறையைக் கருத்தில் கொண்டு, அவளுக்கு வேண்டிய
உதவிகளைச் செய்து விட்டு ஒதுங்க வேண்டியது தானே... ஏன்,
அவள் விரித்த வலையில் விழுந்தீர்கள்?
யோசித்துப் பாருங்கள். உங்களுக்குள் அந்த, "உறவு'
இருந்ததினாலேயே, அவளுக்கு வேண்டிய உதவிகள் வேகமாகக்
கிடைத்தது. யாரைப் பார்க்க வேண்டுமோ பார்த்து, பேப்பரை
எங்கே நகர்த்த வேண்டுமோ நகர்த்தி, "அவள் உங்களை
கருவேப்பிலையாக உபயோகப்படுத்திக் கொண்டாள்!' எனப் புலம்பும்
உங்களுக்கு, "ஏமாளி' பட்டம் கட்டியது அவள் இல்லை சகோதரரே...
ஏமாறத் தயாராக நீங்கள் இருந்தது தான் காரணம்!
தாலிகட்டிய மனைவி, உங்களை உயிரினும் மேலாக நேசித்துக்
கொண்டு, உங்களுக்காக பூஜைகள், விரதங்கள் செய்து, உங்கள்
வாய்க்கும், உடம்புக்கும் ஏற்ற வகையில் சமைத்துப் போட்டு
அப்பிராணியாக வீட்டில் வளைய வந்து கொண்டிருக்க-
என்றைக்கோ ஆசைப்பட்டவள் இன்றைக்கு ஆறிய பழங்கஞ்சியாக,
திரிந்த பாலாக எதிரில் வந்து நின்றால், வயசு, அனுபவ ஞானம்
சகலத்தையும் உதறி விட்டு அவளை உயிருக்கு உயிராக நேசிப்பதா?
இப்போதும் சொல்கிறேன்... உங்கள் மாமன் மகள் உங்களுக்கு
துரோகம் புரிவதற்கு முன், நீங்கள் உங்கள் மனைவிக்கு துரோகம்
புரிந்தீர்கள். அதன் பயனை இப்போது அனுபவிக்கிறீர்கள். இதை
எப்படி சரி செய்வது என்று வேறு கேட்டிருக்கிறீர்கள்.
மனைவியைக் காதலியுங்கள். அவளை உட்கார வைத்து ஒரு காபி
போட்டுத் தாருங்கள். சமையலறையில் அவள் வியர்த்து வழிய
சமைத்துக் கொண்டிருக்க, ஹாலில் உட்கார்ந்து கற்பனையில்
மாமன் மகளுடன் நீங்கள் சல்லாபிக்காதீர்கள். மனைவிக்கு
உதவியாய் காய் நறுக்குவது, தேய்த்த பாத்திரங்களை எடுத்து
அடுக்குவது, துவைத்த துணிகளை மடித்து வைப்பது, தனிமை
கிடைத்தால். மனைவியின் பாதங்களை இதமாய் பிடித்து அமுக்குவது...
அவளை வெளியே அழைத்துச் சொல்வது, இரவில் அவளை அணைத்து ஒரு
குழந்தை போல உறங்குவது... செய்யுங்கள். மாமன் மகளை
மறுபடியும் பார்க்கவோ, பேசவோ செய்யாதீர்கள். நமக்கு உரியது
எதுவோ, அதன் மீதே அன்பு செலுத்துங்கள்.
—
இப்படிக்கு, அனுராதா ரமணன்.
|